அன்பு மிகவுமுடையான்


கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது.

குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.

நல்ல குடும்பத்துல பொறந்தவனாட்டமா இந்த கண்ணன் பய நடந்துக்கறான்? என் பொண்ணை கூட்டிட்டுப் போய் அவள வெண்ணை கடைய வச்சுருவானோ? கயிற்றை பிடித்து மத்தால் கடைந்து என் பொண்ணு கையெல்லாம் காய்ச்சுப் போயிடாதா?

இந்தப் பாடலைப் படித்தவுடன் எப்போதும் கோகுலாஷ்டமிக்கு இரண்டொரு நாள் முன்பு ஊரிலிருந்து அப்பாவிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரே டயலாக்தான்.

“கிருஷ்ணருக்கு அவல், நாகப்பழம், கொய்யா, வெண்ணை இதெல்லாந்தான் ரொம்ப ப்ரீதி கண்ணம்மா. நகைய கழட்டி போட்டு அவர் பழம் வாங்கற கதையெல்லாம் உனக்கு சொல்லிருக்கேந்தானே? அதுனால நீ என்ன பண்ணு, இதெல்லாம் மட்டும் வாங்கி நைவேத்தியம் பண்ணிடு. எண்ணயெல்லாம் அடுப்புல வச்சு சிரமப்படாதே. அதுலயும் இந்த சீடைலாம் வெடிச்சுடும் (சில பத்து வருடங்களுக்கு முன் எங்கூரில் யாரோ ஒரு அரை சமத்து அப்படியான ஒரு விபத்தை உண்டாக்கினதா செவிவழிச் செய்தி) அதுனால பட்சணம் வேணும்னா கடைல வாங்கிக்கோ, இல்லாட்டா இங்க வந்தா பண்னித்தர சொல்றேன். நீ இழுத்து விட்டுக்காதே.”

எங்கப்பா மட்டும்தான் அப்படின்னு நினைச்சால் பொண்ணை பெத்த அப்பாக்கள் எல்லாருமே அப்படித்தான் போல இருக்கு.

பி.கு: அப்பாவின் நினைவு மலருக்காகத் தேடியபோது புகைப்படங்கள் எதுவுமே தேறாத நிலையில் அழகிய ஓவியமாய் அப்பாவை வரைந்து தந்த கார்டூனிஸ்ட் பாலாவுக்கு நன்றிகள் பல.

 

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், அப்பா, மலரும் நினைவுகள், Uncategorized and tagged , , . Bookmark the permalink.

Leave a comment