ஏக் காவ் மே

பள்ளி நாட்களில் ஒருவர் எங்கள் ஊரில் இந்தி பிரச்சார் சபா தேர்வுகளுக்கான வகுப்பை ஆரம்பித்தார். அவர் தாராசுரத்திலிருந்தோ சுவாமிமலையிலிருந்தோ எங்கள் ஊருக்கு வந்து போனதாக நினைவு. முதலில் சில பையன்கள் சேர்ந்துவிட, அதற்குப் பிறகு விசாரிக்கப் போன எல்லா பெண் குழந்தைகளின் அப்பாக்களும் தயங்கினர். எல்லாம் பசங்களா இருக்காங்க, பொம்பளப் புள்ளைங்கள எப்படி அனுப்பறது என்பதே அந்த சிற்றூர்வாசிகளின் தயக்கம்.

ஆனால் என் அப்பாவோ என்னை சேர்ப்பதற்காக வகுப்பு நேரம் தொடங்கி தேர்வு எப்படி, எப்போது இருக்கும் என்பது வரை விசாரித்துக் கொண்டு வந்துவிட்டார். ஆனால் வேறு பெண் குழந்தைகள் இருக்கிறீர்களா என்ற கேள்வியே அவருக்குத் தோன்றவில்லை.

அதற்குள் தெருப் பெண்களின் உபயத்தில் அம்மா இந்த விஷயத்தில் அப்டேட்டாகி இருந்தார். ஒரே தடிப் பசங்களா இருக்கற எடத்துக்கு பொண் குழந்தைய அனுபலாமோ மாமி என்று கவிதா அக்கா ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாரத்திற்கு குறைந்தது எட்டு முறையாவது சண்டை போட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு அன்னியோன்யம். அந்த வாரத்தில் எட்டு சண்டைக்கும் இந்த ஒரே விஷயம் காரணமாகிப் போனது.

தஞ்சாவூர், கும்பகோணம் போலெல்லாம் நம்மூரில் வசதி வாய்ப்புகள் கிடையாது. ஏதோ ஒரு பையன் ஆர்வமா ஒரு விஷயத்தை ஆரம்பிக்கறான், குழந்தைக்கு(என்னைத்தான்) கத்துக் கொடுக்கலாம்னு பாத்தா, இப்படி ஆஷாடபூதியா இருந்தால் எப்படி என்பது அப்பாவின் ஆதங்கம்.

இருக்கற ஸ்கூல் புக்கையே கையால தொடாம அலையறா, இவளுக்கு ஹிந்தியும் பூந்தியும்தான் இப்ப குறைச்சல். பசங்களா இருக்கற எடத்துக்கு இவள மட்டும் தனியா அனுப்பினா ஊரே வழிச்சுண்டு சிரிக்காதோ என்பது அம்மாவின் வாதம்.

இதில் தனியா என்ற வார்த்தையை அப்பா பிடித்துக் கொண்டார்.

“இப்ப அவள மட்டும் தனியா அனுப்பக் கூடாதுன்றதுதானே உன் பாயின்ட். சரி, நானும் அவளோட சேர்ந்து கிளாஸ் போறேன்.” என்று கிளம்பினார். யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் அது வரை தயங்கிக் கொண்டிருந்த இன்னும் சிலரும் சாரே ஹிந்தி கிளாஸ் போறாராம் என்று உற்சாகமாக தத்தம் பெண் குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்தனர்.

அப்பாவுக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும் என்பதால் தேவநாகிரி லிபியில் சுலபமாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார். எனக்குத்தான் முதல் தேர்வான பிராத்மிக்கை பார்டரில் பாஸ் செய்யவே வாயில் நுரை தள்ளியது. அத்தோடு இதுக்கு மேல என்னால முடியாது என்று கும்பிடு போட்டுவிட்டேன்.

கற்றுக் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருப்பாரோ, அதே அளவுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் துளியும் வற்புறுத்திவிடக் கூடாது என்பதிலும் அதே அளவு உறுதியானவர். எனவே என்னை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

தேர்வு முடிவுகள் வந்த பின்னர் ஒரு சின்ன பார்ட்டி வைக்கலாம் என்று அந்த ஆசிரியர் முடிவு செய்தார். பார்டி என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் – கேசரியும், மிக்சரும் தின்று தேநீர் குடிப்பதற்குத்தான் எங்கள் ஊரில் பார்ட்டி என்று பெயர். அன்று எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல, மீண்டும் பெண் குழந்தைகளையெல்லாம் போட்டோ எடுக்க அனுப்ப மாட்டோம் என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். அப்பாவோ இதிலென்ன இருக்கு, படிக்கற இடத்துல எல்லாரும் ஒரு சின்ன ஞாபகார்த்தமா போட்டோ எடுத்துக்கறது ஒரு சந்தோஷம்தானே, நாங்க வந்துடறோம் என்றார்.

12வது, இளங்கலை, முதுகலை என்று ஒவ்வொரு மைல் கல்லிலும் அம்மாவும், சுற்றத்தாரும் திருமணத்தை நோக்கி என்னைத் தள்ளியபோது ஒற்றை விரலால் அனைவரையும் தடுத்து என்னை என் போக்கிலேயே முன்னேற அனுமதித்தவர். நான் மென்மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், உருப்படியான விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

திருமணம், குழந்தை என்றெல்லாம் ஆன பின்னரும் நான் சிறப்புக் கல்வியில் பி.எட் சேரப் போவதை சொன்ன போது மிகவும் மகிழ்ந்தார். தனது ஆசிரியர் பயிற்சிக் காலத்தைப் பற்றிய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

அவரது காலத்திற்குப் பின்னரும், சென்ற ஆண்டில் முதுகலை கவுன்சிலிங்க் & சைக்கோதெரபியை கற்றுத் தேர்ந்திருக்கிறேன். கற்றல் இனிது என்பதையும், அதன் பின் அதற்குத் தக நிற்றல் அதைவிடவும் முக்கியம் என்பதையும் தன் வாழ்வின் மூலம் உணர்த்திய அவரை நினைத்துக் கொள்ள, எனக்குத் தனியாக நாளும், பொழுதும் வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணம் பற்றி அவரைக் குறிப்பிடாது நான் இருந்ததில்லை.

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

நீரளவே ஆகுமாம் நீராம்பல்

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு

என்கிறது மூதுரை. அறிவு என்பது நாம் வாசிக்கும் நூல்களைப் பொறுத்தது. வயிற்றுப் பசியும், காமப் பசியும் விலங்குகள் எல்லாவற்றிற்கும் பொதுவானவை. மனிதனை விலங்குகளிலிருந்து தனித்துவப்படுத்துவது அறிவுப் பசி ஒன்றுதான். புத்தகங்களே அப்பசிக்கான உணவு.

டான் குயிக்ஸாட் போன்ற ஆக்கங்களைத் தந்த செர்வண்டிஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், பெருவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான இன்கா கார்சிலோசோ ஆகியோரின் நினைவு நாளான ஏப். 23, யுனெஸ்கோவால் ஆண்டு தோறும் புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிச்சயமின்மை கூத்தாடும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் புத்தக வாசிப்பே நம்பிக்கையைத் தரும் என்று ஐநா நம்புகிறது. நாமும் அப்படியே நம்புவோம்.

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் மன்னார்குடி அருகிலுள்ள மேலவாசல் கிராமத்தில்தான் தன் பயணத்தை துவங்கியது. நூலகத் துறையின் தந்தையென கருதப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதனும், மன்னார்குடி கனகசபையும் இணைந்து உருவாக்கிய அற்புதம் இந்த மாட்டு வண்டி நூலகம்.

72 கிராமங்களுக்கு 275 முறை சென்று நான்காயிரம் நூல்களை 20 ஆயிரம் தடவைகளுக்கு மேல் மக்களிடம் வாசிக்கக் கொடுத்த இந்த வண்டி இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஓய்வெடுத்து வருகிறது. அதன் புகைப்படங்களே பதிவிலுள்ளவை.

வசதி வாய்ப்புகள் குறைந்த காலத்தில் நாம் வியக்கும் வண்ணம் அருஞ்செயல்களைப் புரிந்த முன்னோடிகளின் சேவை நெகிழ வைக்கிறது. அந்த அளவெல்லாம் இயலாவிடினும் நம்மளவில் சூழ உள்ளோருக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தவும், தூண்டவும் முயற்சிப்போம்.

#உலகபுத்தகதினம்

#worldbookday2022

Posted in எண்ணம், கட்டுரை, சமூகம் | Tagged | Leave a comment

கட்டணக் கொள்ளை

மருத்துவர் தி.சி. செல்வவிநாயகம், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்களின் ஆட்டிச விழிப்புணர்வு செய்தி இது.

எளிய மொழியில் ஆட்டிசத்தின் அறிகுறிகள், அதற்குத் தேவைப்படும் சிகிச்சை முறைகள், அரசு சார்பில் இலவசமாக தெரபிகள் கிடைக்குமிடம் போன்ற முக்கியமான தகவல்களைச் சொல்வதோடு இறுதியில் பெற்றோருக்கான நம்பிக்கையூட்டும் சொற்களோடு முடிக்கிறார்.

இந்த வீடியோவில் ஒரு இடத்தில் ஒவ்வொரு தெரப்பிக்கும் ஆகக் கூடிய கட்டண விவரப் பட்டியல் ஒன்று வருகிறது. அதைப் பார்த்ததும் எனக்கு நெஞ்சு வலி வராத குறையாக இருந்தது. எனக்கு என்றல்ல, எந்த சிறப்புக் குழந்தையின் பெற்றோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நாங்கள் கனிக்காக தெரபி வகுப்புகளை நோக்கி ஓடத் துவங்கி ஒரு தசாப்தம் கடந்து விட்டது. இந்த உலகிற்குள் வந்த நாள் முதல் இன்றுவரை நான் இந்த மாதிரியான கட்டண விகிதத்தை கேள்விப்பட்டது கூட இல்லை. 2011லியே இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் கொடுத்தோம். நாள் செல்லச் செல்ல தொகை ஏறிக் கொண்டே வந்தது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா புண்ணியத்தில்(அல்லது பாவத்தில்) எந்த வகுப்புக்கும் செல்வதில்லை என்பதால் தற்போதைய நிலவரம் தெரியவில்லை. இன்னமும் பன்மடங்கு அதிகரித்திருக்குமே ஒழிய, குறைந்திருக்கப் போவதில்லை.

ஒரு தெரபிஸ்ட் குழந்தைகளுக்கு ஹோம் விசிட் செய்வார். ஒரு மணி நேரத்திற்கு என அவர் விதிக்கும் கட்டணமே ஒரு பகல் கொள்ளை. அது போதாதென அவரது தங்குமிடத்திலிருந்து குழந்தையின் வீட்டிற்கு கிளம்பிய மணித் துளியிலிருந்தே அவரது நேரத்தைக் கணக்கிட்டு, அத்தனை மணி நேரத்திற்கும் அதே கட்டணம் தர வேண்டும் என்பார். இது போக போக்குவரத்து செலவும் பெற்றோர் தலையில்தான். கேட்டால் பயண நேரமும் நான் உங்களுக்காக செலவிடுவதாகத்தானே கணக்கு என்பாராம்.

இப்படியான பகல் கொள்ளையர்கள் பலரும், உண்மையான, நேர்மையான தெரபிஸ்டுகள் சிலருமென பல்கிப் பெருகியிருக்கும் நிலையில், அரசு துறை சார்ந்த வல்லுனர்களையும், பெற்றோரையும் கலந்தாய்வு செய்து ஒரு நியாயமான கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அத்தோடு தெரபி நிலையங்களை கண்காணிக்கவும் தனியானதொரு வாரியம் அமைக்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இப்படியோர் வாரியத்தை அமைத்து, தெரபி வகுப்புகளை முறைப் படுத்தினால் சுங்கம் தவிர்த்த சோழனைப் போல் கொள்ளை தவிர்த்த கோமகனாக கொண்டாடப்படுவார் என்பதில் ஐயமே இல்லை.

Posted in அனுபவம், அரசியல், குழந்தை வளர்ப்பு, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் | Tagged , , | Leave a comment

முன்னேறத் துடிக்கும் இளைஞனின் கதை

உடல் வடித்தான் நாவலின் களம் தமிழுக்குப் புதிது. மனித உடல் நலத்தின் அடிப்படையான உடலைப் பேணி வளர்க்கும் சூழல் குறித்து நானறிந்தவகையில் புனைவு ஏதும் படித்ததாக நினைவில் வரவில்லை. இந்த நாவலில் கதையினூடாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் உடற்பயிற்சிக் களங்களைப் பற்றிய நுண் தகவல்களை சிறு குறிப்புகளாகக் கொடுத்துச் செல்கிறார் ஆசாத். இது வாசகர்களுக்கு அந்த உலகைப் புரிந்து கொள்ள மேலும் உதவும்.

நூலாசிரியர், சார்பட்டா பரம்பரையில் அடிப்படை சிலம்பப் பயிற்சி பெற்றவர். உடற் பயிற்சியிலும், குத்துச்சண்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர் எனும் விவரங்கள் ஆசாத் பற்றிய குறிப்புகளில் உள்ளன. இந்தப் பின்னணி நாவலின் நம்பகத் தன்மைக்கு மேலும் வலுசேர்க்கிறது.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடல் என்பது ஒரு கருவி. அதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். உடல் அழிந்துவிட்டால், உயிரும் அழிந்துவிடும். பின்னர் மெய்ஞானம் அடைவது எப்படி? எனவே உடல் வளர்க்கும் வழிகளை அறிந்துகொண்டு, உடலை வளர்த்து அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்கிறார் திருமூலர். அவருக்கு உடல் என்பது மெய்ஞானம் பெறுவதற்கான கருவி.

நாவலின் நாயகனான அப்துல் கரீம் இந்த உடலெனும் கருவியை தனக்கு நல்லதொரு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரக்கூடியதாகப் பார்க்கிறான். பத்தாம் வகுப்பு தேற முடியாத அப்துலுக்கு, அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை உண்டு என்கிற தகவல் நம்பிக்கையூட்டுகிறது. உடற்பயிற்சிகளின் மூலமாக போட்டிகளில் ஜெயித்து, அந்த அடிப்படையில் ஏதேனுமொரு அரசுப் பணியில் சேர்வதுதான் அவனது லட்சியம்.

அப்துலின் பயணம் இந்தப் புள்ளியில் தொடங்கினாலும் நேர்கோட்டில் செல்லவில்லை. வாழ்கை என்பது எப்போதுமே அப்படித்தானே? எங்கோ ஆரம்பித்து, எதிலெதிலோ முட்டித் திரும்பி எண்ணியே பார்த்திராத இலக்குகளில் சென்று நின்று ஏங்குவதுதான் இங்கு பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கிறது. ஆனால் வெள்ளத்தின் எதிர்விசையால் எவ்வளவு தூரம் தள்ளிப் போய் கரையேறினாலும் கரை சேர்ந்துவிடுதல் முக்கியம். அப்துலுக்கு அதுவேனும் வாய்க்கிறதா என்பதுதான் கதை.

அப்துல்லின் வாழ்கைப் பயணம் ஆட்டோ ஓட்டியாக இருந்தவனை ஆணழகனாக, பயிற்சியாளராக மாற்றுகிறது. இடையில் சின்னதாக ஒரு ஈர்ப்பு, பிறகு திருமணம், குழந்தை எனவும் ஒரு இழை உண்டு. அவன் வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முன்வைக்கிறது இந்நாவல்.

அப்துல் எப்படிப்பட்டவன் என்பதை நாவலின் முதல் அத்தியாயத்திலேயே, அவனை அறிமுகப்படுத்தும் போதே சொல்லிவிடுகிறார் ஆசாத். அவனது  முழுப் பெயர் அப்துல் கரீம். ஆரம்பத்தில் அவனை கரீம் என்றுதான் சுருக்கமாக அழைக்கிறார்கள். ஒரு வளைகுடாவாசிக்கு ஆட்டோ ஓட்டப் போகையில் அப்துல் தனது பெயரைக் கரீம் என்று சொல்ல, அவரோ அதனை ஒரு மார்க்கப் பிரச்சனையாக்குகிறார். கரீம் என்பது இறைவனின் பெயர். அப்துல் கரீம் என்றால் இறைவனின் அடியவன் என்று பொருள் வரும். அப்படியிருக்க நீ கரீம் என்று உன் பெயரை சுருக்கிக் கொண்டால், இறைவனின் திருப் பெயரால் உன்னை அழைத்துக் கொள்வதாகாதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். பொதுவாகவே விவாதங்களைத் தவிர்ப்பவனான அப்துல், உடனடியாக அக்கருத்தை ஏற்றுக் கொண்டு தன் பெயரை அப்துல் என்றே சுருக்கிக் கொள்கிறான். அன்று மட்டுமல்ல, அதற்குப் பின்னர் புதியவர்கள் யாருக்கும் அவன் அப்துல்தான். இப்படி அவன் உள்வாங்குவதற்கு அந்த வளைகுடாவாசி மூலம் கூட தனக்கு ஒரு வேலை வாய்ப்பு தகையக் கூடுமே என்ற நப்பாசையும் பின்னணியில் உண்டு.

இந்த ஒரு சம்பவம் மொத்த நாவலின் திசையையும் முன்னறிவித்துவிடுகிறது. வாழ்வின் பொருளாதார ஏணியில் ஏற நினைக்கும் அப்துல், உழைக்கத் தயங்காதவன், ஆனால் பிரச்சனைகளைத் தவிர்ப்பவன். இந்த அடிப்படையான கோட்டுச் சித்திரத்தை மீறாத கதாபாத்திரமாக அவனை செதுக்கியிருக்கிறார் ஆசாத்.

பரமேஸ்வரன், முக்த்தார் பாய், பார்த்திபன், தாஸ், உதயகுமார் என அவனுக்கு வழிகாட்டவும், தடுமாறுகையில் தாங்கிப் பிடிக்கவும், நல்லுள்ளம் கொண்டோர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஓடும்போது காலைத் தட்டி விடுபவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து ஒதுங்கியோ அல்லது அவர்களை அனுசரித்தோ போகும் அப்துலின் நல்லியல்பு அவனை காத்து நிற்கிறது.

அவன் கொஞ்சமேனும் எதிர்ப்பவர் என்றால் அவனது மாமா மட்டும்தான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் சொல்வதற்கு நேர்மாறாகவே அவனது மனம் சிந்திக்கிறது. மற்றபடி அவன் நாணல் போல் வளைந்து கொடுத்தே வாழ்பவனாக இருக்கிறான். உடற்பயிற்சியென்பது ஒருவனின் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் வலிமையாக்கக் கூடியது. ஆனால் உள்ளும் புறமும் வலிமை பெற்ற பின்னும் அப்துல் தனது அடிப்படைக் குணத்திலிருந்து அதிகம் விலகிவிடுவதில்லை. அடக்கமான, அமைதியான, ஒதுங்கிப் போகும், சக்திக்கு அதிகமான ஆசைகளை துளிர்க்கும்போதே கிள்ளி எறிந்துவிடுமளவு நிதானமான ஆளுமையாக அப்துல் தன்னை வடித்தெடுத்துக் கொள்கிறான்.

உலக அழகிப் போட்டி என்பது ஆரம்பத்தில் பிகினி உடையைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகத்தான் அறிமுகமானது. ஆணோ பெண்ணோ உடலழகை வெளிப்படுத்துவது என்று வந்துவிட்டால், உடைக் குறைப்பையும் தவிர்க்க முடியாததுதானே? அப்துலுக்கு அதுவும் ஒரு சிக்கலாகிறது. இஸ்லாம் உடலை, குறிப்பாக இடுப்பிலிருந்து முட்டி வரையிலான பாகத்தை மறைக்கச் சொல்லுகிறது என்று அவனது மாமா வாதிடுகிறார். இதற்கு உறுதியான மறுப்பெதுவும் இல்லையென்றாலும் நம்மைவிட மார்க்க விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றும் சவுதி, துபை, எகிப்து போன்ற நாடுகளிலேயே ஆணழகர்கள் இருக்கிறார்கள் என்ற வலுவற்ற வாதத்தை வைத்தே அந்த ஆட்சேபனையைத் தாண்டுகிறான் அப்துல். ஆனால் இதை ஆசாத் விவரித்திருக்கும் பாங்கு அழகாக வந்திருக்கிறது.

குறிப்பாக முக்தார் பாயிடம் அப்துல், முதலில் விஷயத்தைச் சொல்லாமல் முஸ்லீம்களில் பாடி பில்டர் உண்டா எனும் கேள்வியை முன்வைக்கையில் அவர் கொள்ளும் சீற்றம்- எந்தவொரு தொழில் நேசிப்பாளனுக்கும் உரிய அடிப்படை இயல்பு. பின்னர் அப்துல் வேலைவாய்ப்புக்காக பாடி பில்டர் ஆக விரும்புவதைத் தெரிவிக்கும் போதும் முக்தார் பாயும் சரி, தாசும் சரி வேலைவாய்ப்புக்காக என்று மட்டும் உள்ளே நுழையாதே என்று தெளிவாகவே சொல்கிறார்கள். இதில் ஈடுபாட்டோடு உழைக்க வேண்டுமானால் அடிப்படையில் உடற்பயிற்சிகளைக் காதலிக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ அதைப் பொருட்படுத்தாமல் பேஷனைத்(Passion) தொடரும் மனநிலையை அப்துல் வளர்த்துக் கொண்டபின்னரே வெற்றி அவனைத் தேடி வருகிறது.

உடலை முறுக்கிக் காட்டுகையில் அரங்கில் ஏற்படும் கரவொலி, கண்ணாடியில் நின்று பார்க்கையில் விரியும் தசைக்கட்டுகள், பட்டுக் கயிறென நெளிந்து செல்லும் நரம்புக் கூட்டம் போன்ற உடற்பயிற்சியின் ஆதாரப் புள்ளிகளில் இன்பம் காண்பவனாக, வெற்றி தோல்வியை இரண்டாவதாகவும், வேலைவாய்ப்பை மூன்றாவதாகவும் மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் அப்துல்.

செல்வியின் மீது அப்துலுக்கு ஏற்படும் பிரமிப்பு மெல்ல மெல்ல ஈர்ப்பாக மாறுமிடங்கள் அழகாக வெளிப்பட்டிருக்கிறது, ஆனால் வாழ்கைச் சூழலின் பேதங்களைக் கணக்கிட்டு அதை கசியவிடாமல் வைத்துக் கொள்ளும் அவனது மென்மைக்கு வாழ்கை ஈடு செய்துவிடுகிறது – தெளிவும், அடக்கமுமான ராபியாவை அவனுக்குரிய வாழ்கைத் துணையாக அளிப்பதன் மூலம்.

ஆசாத்தின் முந்தைய நாவலான மின் தூக்கியையும் நான் படித்திருக்கிறேன். அதுவும் இதே போல் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதைதான். மின் தூக்கியின் பாட்ஷாவும் சரி, உடல் வடித்தானின் அப்துலும் சரி, இருவருமே மிக எளிய பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து புறப்பட்டு, தனக்கென ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, மெல்ல மெல்ல தங்களைத் தாங்களே வடிவமைத்துக் கொண்டு முன்னகர்பவர்கள்.

பள்ளியில் படிக்கும்போதே ஐஐடி பற்றிய திட்டமிடல்களை கைக்கொண்டு, கல்லூரியில் காலெடுத்து வைக்கையிலேயே., வளாகத் தேர்வுக்கென அங்கு வரும் நிறுவனங்களின் பட்டியலை சீர் தூக்கிப் பார்த்து, வேலைக்கு சேரும் போதே.. விசா கனவுகள் கண்டு, அன்னிய மண்ணில் காலெடுத்து வைக்கும்போதே… கிரீன் கார்டுக்கான திட்டமிடல்களோடு இறங்கும் மேல் நடுத்தரவர்க்கத்து இளைஞர்களோடு போட்டியிட்டு, முட்டி மோதி, அப்பாவிகளாலும் தங்களுக்கென ஒரு ஆசனத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை விதைப்பதில் ஆசாத் வெற்றி பெற்றிருக்கிறார்.

புதியதொரு கதைக்களத்தில், ஒரு தெளிவான வாழ்கைப் பார்வை கொண்ட நாவலைப் படிக்க விரும்புபவர்களுக்கு உடல் வடித்தான் நல்லதொரு தேர்வாக இருக்கும்.

++++

நூலின் பெயர் : உடல் வடித்தான்

ஆசிரியர்: அபுல் கலாம் ஆசாத்

பதிப்பகம்: எழுத்துப் பிரசுரம் வெளியீடு

விலை: 270 | பக்கங்கள்: 221

மார்ச் 2022 புத்தகம் பேசுது இதழில் வெளியான கட்டுரை

Posted in இலக்கியம், நாவல், படித்ததில் பிடித்தது, விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

தொடரும் பெண்ணடிமைத்தனம்

நன்றி தமிழ் இந்து.

புகைப்பட தந்து உதவிய தோழர் Muthusamy Jeya Prabakarக்கு ஸ்பெஷல் நன்றி.

புத்தகக் கண்காட்சியில் F4 அரங்கில் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க https://thamizhbooks.com/product/anandhavalli/

Posted in ஆனந்தவல்லி | Tagged , | Leave a comment

தமிழே தவமாய்

கும்பகோணம் கல்லூரியில் உ.வே.சா பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். உ.வே.சா பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதையும், அதில் அவருக்கு வருவாய் ஏதுமில்லை, கைச்செலவே அதிமாகிறது என்றும் உணர்ந்திருந்தார் அக்கல்லூரி முதல்வரான ராவ்பகதூர் நாகோஜிராவ்.. அதனால் எப்படியாவது அவருக்கு நல்ல முறையில் வருவாயை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற எண்ணம் கொண்டு, ஒரு பணியை ஏற்பாடு செய்கிறார். அதைப் பற்றி உ.வே.சாவிடம் தெரிவித்தபோது அவர் சொன்ன பதில் இது.

“நான் தங்களுடைய அன்பைப் பாராட்டுகிறேன். எனக்குள்ள துன்பங்களை எல்லாம் தாங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவே எனக்குப் போதுமானது. தாங்கள் மாத்திரம் அல்ல. வேறு சில அன்பர்களும் பாடப் புத்தகங்களை நான் எழுத வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். எனக்குப் பணம் முக்கியம் அல்ல. என்னுடைய நேரம் முழுவதும் இப்போது கல்லூரியில் பாடம் சொல்வதிலும், தமிழ் நூல்களை ஆராய்வதிலும் கழிகிறது. தமிழ் நூல் ஆராய்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும் போதாது. நான் வேறு துறையில் இறங்கினால் நூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய பொழுது கிடைக்காது. அது மாத்திரம் அல்ல, அதிக அளவுக்கு பணம் வந்து, செல்வ ஆசையும் பிறந்துவிட்டால், பழைய நூல்களை எல்லாம் அச்சிட வேண்டுமென்ற உயர்ந்த கருத்தை நான் மறந்து விடும்படி நேரிடலாம். நானும் மனிதன்தானே? தயை செய்து தாங்கள் இதை என்னை ஏற்கும்படி வற்புறுத்த வேண்டாம். என்னை என்னுடைய பழைய சுவடியோடு இருக்கும்படி விட்டுவிடுங்கள். தாங்கள் சொல்வதை நான் அவமதிப்பதாக நினைக்கக் கூடாது. பழைய நூல்களின் ஆராய்ச்சிக்கு எத்தனை நேரம் இருந்தாலும் போதாது. இந்த நாட்டில் தோன்றிய பழைய நூல்கள் எத்தனையோ இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு நூலை ஆராய்கிறபோது அதன் உரையில் குறிப்பிடப்பெற்றிருக்கும் வேறு பல நூல்கள் கண்ணால் பார்ப்பதற்குக்கூட கிடைக்கவில்லையே என்ற துக்கம் என்னை வாட்டுகிறது. கிடைப்பனவற்றை நல்ல முறையில் அச்சிட்டுவிட வேண்டும் என்று இருக்கிறேன். இந்தத் தொண்டுக்குத் தடை வராமல் இருக்கத் தாங்களும் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். இதைவிடப் பெரிய காரியங்கள் உலகத்தில் இருக்கலாம். ஆனால் இதுதான் எல்லாவற்றையும்விடச் சிறந்த பணியாக எனக்குத் தோன்றுகிறது.”

மேற்கண்ட செய்தி கி.வா.ஜகந்நாதன் எழுதிய ‘என் ஆசிரியப் பிரான்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’தவம் போல உழைப்பது’ என்ற சொற்றொடர் இன்று ஒரு தேய்வழக்காகி விட்டது. ஆனால் உண்மையில் வேறெந்த பற்றுக்கும் இடம் கொடுக்காது, தன் ஆழுள்ளம் வேரூன்றத் தகுந்த பணியெதுவெனத் தேர்ந்து அதில் மட்டுமே ஈடுபட்டு, தன்னிறைவு பெற்ற தமிழ் தாத்தாவைப் போன்ற சாதனையாளர்கள் மட்டுமே அப்பதத்திற்கு பொருத்தமானவர்கள்.

உ.வே.சாவின் பிறந்தநாள் இன்று. அவரது தன்னலமற்ற சேவையை என்றும் நினைவில்கொள்வோம்.  

.

Posted in இலக்கியம், சான்றோர், தமிழ் | Tagged , , , , , | Leave a comment

ஆனந்தவல்லி – வாசிப்பு அனுபவம் – கோவை பிரசன்னா

அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது.

ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் எழுதாப் பயணம் என்ற நூலை (ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் வளர்ப்பு பற்றிய அனுபவங்கள்) எழுதியவர். இந்த நூலை மூல மராட்டி மொழி ஆவணங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளார். மராட்டிய மன்னர்களின் ஆட்சி தஞ்சை, திருவையாறு பகுதிகளில் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளின் ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதை அமைத்தது கூட சரபோஜி மன்னர், மராட்டிய மன்னர்களின் கடைசி அரசர். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடங்கி, பெயருக்கு மன்னனாக இருந்தார்கள் தங்கள் இறுதி காலங்களில்.

நாவல் ஆனந்தவல்லி என்ற, அரண்மனைக்கு விற்கப்பட்ட பெண்ணின் கதை. அவளுடைய தந்தை பெரிய கொத்தன் தன் 12 வயது மகளை, காசுக்கு ஆசைப்பட்டு விற்று விடுகிறான். அவள் 5 வயதாய் இருக்கும் போது மணம் புரிந்த சபாபதி, அரசு ஊழியன் வந்து கேட்கும் போது விற்கப்பட்ட சேதி அறிகிறான். பெரிய பெண் ஆனவுடன் தங்கள் ஊருக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொன்னதை, மீனாட்சியின் அப்பா மறைத்ததை அறிகிறான். அவளை மீட்க போராடுகிறான்.

விற்கப்பட்ட அடிமைகள் அரண்மனையின் பணிப்பெண்களாக நியமிக்கப்பட்டு, அரசரின் கத்தி மனைவிகள் ஆக்கப்படுவார்கள். கத்தி மனைவிகள் எனில் அரசருக்கு பதிலாக அரசரின் கத்தியை சாட்சியாக வைத்து, தாலியை அதில் வைத்து, கட்டிக் கொள்ளுதல். இவர்களுக்கு அரசரின் மனைவி என்ற அந்தஸ்தைத் தவிர அனைத்து வசதிகளும் கிடைக்கும். அரசரின் ஆலோசனை மையங்களாகவும், அவர்களின் பாலின வேட்கையை தணிப்பவர்களாகவும் நடக்க வேண்டும். இவ்வாறு வந்து சேர்ந்த ஆனந்தவல்லி என்று பெயர் மாறிய மீனாட்சி, ஒரு நாள் போன்ஸ்லே வம்சத்தின் கடைசி மன்னர் அமரசிம்மனுடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தனக்கு அடைக்கலம் கொடுத்த ருக்மணி பாய் சொல்லுக்கு அடங்கி, இசைகிறாள். அந்த ருக்மணி பாய் அமரசிம்மன் காலமான போது உடன்கட்டை ஏறுகிறார். உடன் கட்டை ஏறும் காட்சிகள்(அரசரின் மனைவி பவானி பாய் மற்றும் கத்தி மனைவி ருக்மணி பாய்) பிரமாண்டமாய் விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ் நாட்டிலும் உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடுமை இருந்தது என்று தெரிகிறது.

உடன் கட்டை ஏறுதலின் அவசியம் பற்றிய உரையாடல்கள், அதைத் தடுக்க ஆங்கிலேயர்கள் முயற்சிகள், ஏறாதவர்கள் வாழக்கூடிய வாழ்வு போன்றவை நாவலில் ஆங்காங்கே வருகின்றன.

இறுதியில் தன் அம்மாவைக் காண ஆசைப்பட்ட ஆனந்த வல்லியின் ஆசை நிறைவேறியதா, அவள் கணவன் மீனாட்சியை மீட்க முடிந்ததா என்பதை நூலில் காண்க. மனைவி விற்கப்பட்டதை அறிந்தும், அவள் மீது தவறில்லை, அவளை மீட்டுவருவேன் என்று கிளம்பும் சபாபதி பாத்திரம் அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் அந்தக் காலத்திற்கேயுரிய வார்த்தைகளை உபயோகித்துள்ளார் லஷ்மி பாலகிருஷ்ணன்.

அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நாவல். எப்படி பெண்கள் அந்தக் காலத்தில் நடத்தப்பட்டுள்ளார்கள், எதையெல்லாம் கடந்து வரவேண்டியிருந்தது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவேண்டியுள்ளது.

இந்த வருட புத்தாண்டுப் பரிசாக Priyadharshini Gopal கொடுத்த இந்த நூலை, ஒரு உரை நிகழ்விற்காக படிக்கவேண்டியிருந்தது. வருட ஆரம்பத்திலேயே ஒரு நல்ல நூலை வாசிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்.

-கோவை பிரசன்னா.

வாசிப்பை நேசிப்போம் குழுவில் வெளியானது

Posted in ஆனந்தவல்லி, கட்டுரை, தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், வரலாறு, விமர்சனம் | Tagged , , | Leave a comment

ஆனந்தவல்லி – அகிலா அலெக்சாண்டரின் பார்வையில்

வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டிய புனைவு.

வரலாறு என்றால் நம் பள்ளி கல்லூரி பட புத்தகங்களிலோ அல்லது அரசாங்க தேர்வுகளுக்கு படிக்கும் பாடத்திட்டங்களை ஓட்டிவரும் தரவுகளின் வழியோ நன்கு அறியப்பட்ட நிகழ்வுகளோ, போர்களோ, படைகளோ, நாயகர்களோ இல்லை.

சோழர்கள் கொடி கட்டி ஆண்ட தஞ்சைத் தரணியில் சோழர்களுக்குப் பின் வந்த மராத்தியர்களின் ஆட்சி.  பெண்கள் ஜாதி மற்றும் பொருளாதாரத்தின் எந்த படிநிலைகளில் இருப்பவர்களானாலும் சரி, எந்த வகையில் அடிமைப்பட்டு கிடந்தார்கள் என்பதை காட்டும் நாவல்.

பொட்டு கட்டிவிடப்பட்டு தேவதாசிகளாக, தாசிகளாக,  நடனப்பெண்டிராக வாழ்ந்து கோலோச்சிய அல்லது வீழ்ந்தவர்கள் கதைகளை படித்ததுண்டு. அவ்வாறாக இல்லாமல் அவர்களுக்கு அடுத்த படிநிலையில், மன்னர் மற்றும் மகாராணியர்களின்  அனைத்து தேவைகளையும் தீர்த்து வைக்கும் சேவைகளை செய்யும் பெண்களின் கதை ஆனந்தவல்லியில் வாழ்க்கையின் ஊடக நாவலில் விரிகின்றது.

பெற்றவர்களே பணத்தேவைக்காக தம் மகளை தாசியாக, பணிப்பெண்ணாக விற்ற, அதிலும் மணமுடித்து தந்த மகளை தந்தையே விற்ற அதிர்ச்சியூட்டும் உண்மை ஆனந்தவல்லியினுடையது.

’12 years a slave’ , ‘ஆஸ்திரேலியா’ போன்ற திரைப்படங்களை பார்த்து குறிப்பிட்ட இனத்தினர்  மட்டுமே அடிமைச்சங்கிலிகளால் பிணைக்க பட்டிருந்தனர் என்ற என் குறுகிய அறிவிற்கு விழுந்த பெரிய அடி.

தமிழ் நாட்டிலும் குறிப்பாக பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய நேரும் பொழுது முதுகுத்தண்டில் சிலிர்க்கிறது. இதற்கு மரத்தியர்களையோ, பஞ்சத்தையோ காரணம் கூறி சமாதானம் செய்துவிட முடியாது. அடிமைகளாய் இருக்கிறோம் என்றா உணர்வில்லாமை, பிள்ளைகளின் அருமை தெரியாமை, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தன்மை, பெண் தானே என்ற அலட்சிய போக்கு இப்படியாக பல காரணங்கள்.

பெண் அடிமையாக விற்கப்பட்ட சம்பவத்தை அடிப்படியாக கொண்டு தனது முதல் நாவலை கட்டமைக்க நிறையவே தைரியம் வேண்டும். நாடகத்தன்மையோ மிகையான உணர்வுகளோ இல்லாமல், அரசாங்க இயந்திரம் அதன் இயக்கத்திற்கு தடையாக எது வந்தாலும் நசுக்கிவிட்டு முன்னேறி செல்லும் என்பதை  தெளிவாகக் காட்டிய  லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

சபாபதியின் பற்றி நினைக்கையில் மனதை ஏதோ ஒன்று பிசைகிறது.

*******************

நன்றி அகிலா

Posted in ஆனந்தவல்லி, இலக்கிய விமர்சனம், இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், நாவல், பெண்ணியம், மராட்டிய மன்னர் வரலாறு, வரலாறு | Tagged , , , , | Leave a comment

ஜீவன் உள்ள எழுத்து – மாலன் நாராயணன்

ஆனந்தவல்லி – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் -பாரதி புத்தகாலயம் -தொலைபேசி044-24332424 – விலை ரூ 230

வரலாற்று சாட்சியம்-1

“ ஒரு கிருகஸ்தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள்.அக்கம் பக்கம் யாருமில்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், ’உன் புருஷன் சாகுந் தறுவாயில் இருக்கிறான். உடனே வா!” என்றிருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு முன் பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள்.

அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். “கப்பலுக்கு எதற்கு வந்தார்?” என்று கேட்டாளாம். “ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார். கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும் போது தலைசுற்றி விழுந்து மண்டை உடைந்தது என்றானாம் அவன். அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் மாடிக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டு விட்டது.

அங்கே இவளைப் போல அநேகம் பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழுதார்களாம். ஏன் என்று இந்தப் பெண் கேட்க, “நாம் அடிமைகள்!.பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!” என்று கதறினார்களாம். இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!”

– பாரதி சொன்னதாக யதுகிரி – (யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள், சந்தியா பதிப்பகம், சென்னை பக்.34)

வரலாற்று சாட்சியம் -2

1662ல் மதுரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வேலை தேடி வந்த ஒரு தமிழனின் கதை டச்சுக்காரர்களின் ஆவணங்களில் விவரிக்கப்படுகிறது. மதுரையில் மனைவி மக்களை விட்டுவிட்டு நாகப்பட்டினம் வந்த அவன் வேலை கிடைத்ததும், ஒரு மாதம் கழித்து. அவர்களை அழைத்துவர மதுரைக்கு வந்தான்.

வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவனது பக்கத்து வீட்டுக்காரன், பணத்திற்கு ஆசைப்பட்டு, அந்த மனைவியையும் குழந்தைகளையும், டச்சுக்காரர்களிடம் விற்று விட்டான். மதுரைத் தமிழன் பதறி அடித்துக் கொண்டு தரங்கம்பாடிக்கு ஓடினான். அதற்குள் அதிக விலை வைத்து அந்த அடிமைகளை டச்சுக்காரர்கள் போத்துக்கீசியருக்கு விற்று விட்டார்கள். எனவே இவன் அவர்களைத் தன்னுடன் அனுப்பக் கோரிய போது போர்த்துக்கீசிய பாதிரி மறுத்துவிட்டதோடு அல்லாமல், இவனையும் பிடித்து வைத்துக் கொண்டார்.

அவன் பெரும் போராட்டத்திற்குப் பின் தன்னை விடுவித்துக் கொண்டு மயிலாப்பூர் பிஷப்பிடம் தன் மனைவி மக்களை விடுவிக்குமாறு மனுக் கொடுத்தான். மனு நிராகரிக்கப்பட்டது. சரி என் மனைவியை நான் மறுபடி மணம் செய்து கொள்கிறேன், அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தான். பாதிரி விலைகொடுத்து வாங்கிவிட்டதால் மனைவியும் மக்களும் அவரது உடமை. அவர் சம்மதிக்காமல் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் தன் மனைவியையே மறுபடி மணக்க விரும்பிய அவன் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவன் தீவிரமாக இருப்பதைக் கண்ட பாதிரி, அந்த அடிமைகளைக் கூடுதலாக விலை வைத்து ஒரு இந்து வியாபாரியிடம் விற்றுவிட்டார். அவன் மறுபடியும் இந்து மதத்திற்குத் திரும்பினான்.19

– Nicolao Manucci, Storio de Mogur Vol III Page 128-129 ( எஸ்-ஜெய்சீல ஸ்டீபன் எழுதியுள்ள காலனியத் தொடக்கக் காலம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்)

வரலாற்று சாட்சியம் -3

17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. கிருஷ்ணப்ப நாயக்கரது மறைவுக்குப் பின் விஜயநகர அரசின் பெரும்பகுதி மராத்தியர் கைக்கு வந்தது. தேவனாம்பட்டினம், கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பழவேற்காடு ஆகிய இடங்களிலிருந்து செயல்பட்டு வந்த டச்சுக்காரர்களின் அடிமை வியாபாரத்தை சிவாஜி தடை செய்தார். டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியை மூடச் செய்தார். அவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு மசூலிப்பட்டினத்திற்கு நகர்ந்தார்கள்

– K.A. Nilakanda Sastri, Shivaji’s Charters to the Dutch on the Coromandel Coast, Proceedings of the Indian History Congress Calcutta, 1936

ஐரோப்பியக் காலனியத்தால் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்ட நம் பெண்களின் துயர்களைச் சூட்டுக் கோலால் நம் இதயத்தில் எழுதியவர் பாரதி. ” பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தி”யை வாசிக்கும் ஒருவர் உள்ளம் நொறுங்கி ஒரு நிமிடமாவது உறைந்து போகாமல் இருக்க முடியாது (வாசித்தால்தானே?)

அயலகத்திற்கு அனுப்பப்பட்ட அடிமைப் பெண்களைப் பற்றி பாரதியாவது எழுதினார். ஆனால் உள்ளூர் அடிமைகளின் துன்பங்கள் பற்றி தமிழில் எழுதியவர் அதிகம் இல்லை.

பன்னெடுங்காலமாக, சங்ககாலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்து வந்திருப்பதால் அதைக் குறித்த சிந்தனை அற்றுப் போயிருக்கலாம் சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை .பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரிபூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதை “கொண்டி மகளிர் என்று ‘பட்டினப் பாலை’ குறிப்பிடுகிறது. ( இது குறித்து விரிவாகப் பேச இங்கு இடமில்லை.புலம் பெயர்தலும் இலக்கியமும் என்று சாகித்ய அகாதெமியில் ஒரு முறை விரிவாக உரையாற்றினேன். அந்தக் கட்டுரையை வாசிக்க விரும்புகிறவர்கள் தகவல் பெட்டிக்கு செய்தி அனுப்புங்கள்)

இந்த நெடும் மரபிலிருந்து விலகியவராக, லக்ஷ்மி பாலகிருஷ்ணன், பெற்ற தகப்பனாலேயே அரசுக்கு அடிமையாக விற்கப்பட்ட இளம் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கும் நாவல்தான் ஆனந்தவல்லி.அதிலும் டச்சுக்காரர்களின் அடிமை வணிகத்தைத் தடை செய்த சிவாஜியின் வழித்தோன்றல்களாலேயே வாங்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறார்.’உண்மைச் சமபவத்தின் மீது எழுந்து நிற்க்ம் புனைவு’ என்று அவர் குறிப்பிடுவதாலும் அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட்டிருப்பதாகக் கூறுவதாலும் எனக்கு அதைக் குறித்த சந்தேகங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தப் புனைவின் பாத்திரமான கும்பகோணம் சபாபதிப் பிள்ளையினுடைய போராட்டம் மேலே வரலாற்று சாட்சியம்-2 ல் குறிப்பிட்டுள்ள மதுரைத் தமிழனின் வாழ்க்கை போலவே இருப்பது எனக்கு வியப்பும் மகிழ்சியும் அளித்தது. வியப்பு அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை. மகிழ்ச்சி புனைவு வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதால்.

உண்மையில் இது ஆனந்தவல்லியின் கதையல்ல. அந்த சபாபதியின் கதைதான். நாவலின் பிற்பகுதி வரை அதிகம் விவரிக்கப்படவில்லை என்றாலும் வியக்க வைக்கும் பாத்திரமது. ஏமாற்றி, அவனது ஜாதிக்கு வெளியே, ஐந்து வயதுக் குழந்தைக்கு மணம் செய்வித்து வைக்கப்படும் அவன், அவள் பூப்பெய்தும் முன்னரே பிரிந்து விடும் அவன், அவளோடு ஒரு முறை கூட உடலுறவு கொண்டிராத அவன், மறுமணம் செய்து கொள்ளும் யோசனைகளைப் புறந்தள்ளி, அவளை மீட்பதற்காக அதிகாரங்களோடு நயந்தும் மோதியும் போராட்டங்கள் மேற்கொள்ளும் ஆண் மகன் அவன். அவனை செலுத்துவது எது? ‘அவள் என் சொத்து’ என்கிறான் ஓரிடத்தில்.அது மாத்திரம் காரணமாக இருந்திட முடியாது. ஏனெனில் அது ஈடு செய்யமுடியாத சொத்து அல்ல.

அந்த உந்து சக்தியைப் பற்றி லக்ஷ்மி விளம்பப் பேசவில்லை. அவனுடைய பாடுகளை சித்தரிக்கும் அவர் ஓரிடத்தில் கூட ஆனந்தவல்லி அவள் விலை போய்விட்ட பின்னரோ, அதன் முன்னரோ, அவனைப் பற்றி சிறு கீற்றுப் போலக் கூட நினைப்பதாகக் காட்டவில்லை

அவரின் நோக்கங்களில் ஒன்று உடன்கட்டை ஏறுவதைப் பற்றிய சிந்தனைகளை உசுப்புவது. குடிப்பெருமையை நிலைநாட்ட உயர்குடிப் பெண்களிடம் கணவனின் சிதைக்குள் தீப்பாயும் மனநிலை கட்டமைக்கப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிநிலையில் இருக்கும் பெண்கள் அத்தகைய அழுத்தங்களுக்கு உள்ளாவதில்லை என்பதைப் பாத்திரங்களின் வழி நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். சதி குறித்தும் தமிழில் அதிகம் எழுதப்பட்டதில்லை. பிரபல மராத்தி எழுத்தாளர் ரஞ்சித் தேசாய் மராட்டியத்தில் பிரபலமான ரமாபாய் (மாதவராவ் பேஷ்வாவின் மனைவி) பற்றி எழுதிய ‘ஸ்வாமி’ எண்பதுகளின் பிற்பகுதியில் பிரபலமடைந்ததைப் போல இதுவும் புகழ் பெறட்டும் என வாசிக்கும் போது வாழ்த்தினேன்

இந்த நாவலின் சத்தான அம்சங்கள் பல. மூன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பாத்திரப் படைப்புகள் நாச்சியார்கோயில் வெண்கல வார்ப்புப் போலிருக்கின்றன. அத்தனை அழுத்தம். நயம். நுட்பம். (நாச்சியார் கோயில் வார்ப்பைப் பார்க்க வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள்.ஏதோ வேலையாகக் கும்பகோணம் போன போது நாச்சியார் கோயிலிருந்து ஒரு குழலூதும் கிருஷ்ணன் வாங்கி வந்தேன். ஒரு காலை ஒயிலாக மடித்துக் கொண்டு வேய்குழல் வாசிக்கும் வேணு தன் வாசிப்பில் தானே கிறங்கி நிற்பதை ரசித்து அனுபவித்து வார்த்திருந்தார் சிற்பி. நானும் கிறங்கிப் போய்த்தான் வாங்கினேன். ஊதுகிற கிருஷ்ணனை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்கள் அடப் போங்கய்யா என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்)

இரண்டாவது செறிவான மொழி. “தைலத்த தேச்சு தலையெழுத்தை அழிக்க முடியுமா?’ ‘சமயக் கட்ட மாடு கன்னு போட்ட எடமாட்டம் ஆக்கி வைச்சிருப்பா’ ஆசிரியர் விரிவாக வாசிக்கும் வழக்கமுள்ள படிப்பாளி என்பதையும் ஊகிக்க அவரது நடை இடமளிக்க்கிறது.’ கண்டனன் கற்பினுக்கு அணியை என்பதைப் போல அரசருக்கு ஆசுவாசமளித்தார்’ ‘சிருங்கார மாளிகையில் இருந்தாலும் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ எனும்படிக்கு கெட்ட பெயரெதுவும் எடுக்காமல்’ தஞ்சை வழக்கு தாரளமாகப் புழங்குகிறது. என்றாலும் சில சொற்கள் (எ-டு: தோஷோரோபம்,தேசஸ்த பிராமணர், ராஜகோரி, தர்ஜமா) இளந்தலைமுறைக்கு அந்நியமாக இருக்கும். அவற்றின் தலையில் நட்சத்திரமிட்டு, காலடிக் குறிப்பில் அவற்றை விளக்கியிருக்கலாம்

மூன்றாவது கதை சொல்லும் விதம். பெண்கள் ஜடை பின்னிக்கொள்ளும் வழக்கமிருந்த காலத்தில் கூந்தலை மூன்றாக வகிர்ந்து கொண்டு ஒவ்வொரு காலையும் மற்றொன்றின் மீது மாற்றி மாற்றிப் போட்டு சரசரவென்று பின்னலை வளர்த்தெடுப்பார்கள். லக்ஷ்மியும் கால இழைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு வந்தாலும் வாசிப்பவனுக்கு குழப்பமில்லாமல் இட்டுச் செல்கிறார்

நிறைய வாசித்திருப்பார், நிறைய உழைத்திருக்கிறார். தி.ஜானகிராமனுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயம் நல்ல சங்கீதம் பற்றிப் பேச்சு வந்தது. “பாட்டில ஜீவன் தெரியணும். சிரமம் தெரியக் கூடாது” என்றார் அவர். பின் ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் “எழுத்திலும்தான்” என்றார் புன்னகைத்தபடி.

“சிரமம் இல்லாவிட்டால் ஜீவன் இல்லை” என்றேன். அதற்கு வார்த்தையாக பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அதைப் புன்னகையால் அங்கீகரித்தார்.

இது ஜீவன் தெரியும் எழுத்து.

**********************

நன்றி மாலன் நாராயணன் சார்.

#ஆனந்தவல்லி_நாவல்

#ஆனந்தவல்லி

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு, விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

ஊரும் பேரும்

ஏகோஜி தஞ்சையை கி.பி.1676ல் கைப்பற்றியது முதல் 1855ல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான இரு நூற்றாண்டு கால தஞ்சை மராட்டிய வரலாற்றின் பதிவேடுகள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப் படுகின்றன. இக்கையெழுத்துச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய மராட்டி மொழியை அறிந்தவர்களாலும் கூட இச்சுவடிகளை படித்துவிட முடியாத அளவுக்கு பழைய நடையிலும் வேறுபட்ட லிபியிலும் அமைந்தவை இச்சுவடிகள்.

இச்சுவடிகளில் சிலவற்றை சரஸ்வதி மகால் நூலகத்தினர் மோடி மொழி வல்லுனர்களைக் கொண்டு மொழிபெயர்த்தனர். பின்னர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இந்த பெரும் பணியில் பங்கெடுத்துக் கொண்டது.இந்த ஆவணங்களின் தொகுப்பை குறிப்புரையோடு மூன்று தொகுதிகளாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதற்கான குறிப்புரைகளை அளித்தவர் அரிய கையெழுத்துச் சுவடித் துறையின் சிறப்பு நிலைப் பேராசிரியராக இருந்த கா.ம.வேங்கடராமையா என்பவர். அவரே, இந்த ஆணங்களை அடிப்படையாகக் கொண்டு, தஞ்சை மராட்டிய அரச வம்ச வரலாற்றையும், அக்காலத்து சமூக அரசியல் நிலையையும் பற்றியும் இரண்டு ஆய்வு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மோடி ஆவணத் தொகுப்பை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவே இவ்விரு ஆய்வு நூல்களையும் கொள்ளலாம்.

ஆனந்தவல்லியை எழுதிய காலகட்டம் மிகுந்த உழைப்பைக் கோரியது. சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கையில் அம்மா எழுதித் தந்த குறிப்புகளையோ அல்லது மீனாட்சி அம்மாளின் புத்தகத்தையோ எப்படி அடிக்கடி புரட்டுவோமோ அப்படித்தான் இந்த மோடி ஆவணத் தொகுப்புகளை நினைத்து நினைத்து புரட்டிக் கொண்டிருந்தேன். நாவலில் புதியதாக ஒரு கதாபாத்திரத்தை நுழைப்பதென்றால் கூட இந்த நூலைத் திறப்பேன். என் நாவலின் அந்த பாத்திரத்தை ஒத்த மனிதர்களின் பெயர் ஏதேனும் ஆவணத்தில் கிடைக்குமா என துழாவுவேன். அரண்மனையில் ரஜா(விடுப்பு) கேட்டு விண்ணப்பித்த ஊழியரோ அல்லது நியாயசபையில் புகாராளித்த மனுதாரரோ மாட்டினால் உடனே எனது பாத்திரத்திற்கு நாமகரணம் முடிந்துவிடும்.

ஏனென்றால் இரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்களுக்கு நம் மனம் போன போக்கிலெல்லாம் பெயர் வைத்துவிட முடியாது. பழங்காலத்து மனிதர்களின் பெயரிலேயே அவர்களது ஜாதகமிருக்கும். தாத்தன் பெயர், பாட்டி பெயர்களைத் தாண்டி புதிதாகப் பெயர் தேடுவதெல்லாம் அன்று கிடையாது. நியூமராலஜியோ, பெயரில் தொனித்தாக வேண்டிய நளினமோ அன்றைய பெற்றோர்களுக்குத் தெரியாது. எனவே மீண்டும் மீண்டும் ஜாதிவாரியாக, பகுதி வாரியாக சில பத்து பெயர்கள்தான் புழங்கும்.

அரச குடும்பத்தவர் தவிர நாவலில் வரும் அடிப்படையான கதாபாத்திரங்களான ஆனந்தவல்லி, சபாபதி, சோலையாப் பிள்ளை, பெரிய நாயக் கொத்தன் ஆகிய நால்வர் மட்டுமே சரித்திரத்தில் இருந்த மனிதர்கள். மற்ற அனைவரும் கற்பனை பாத்திரங்கள்தான். ஆனால் அவர்கள் அனைவரையும் இருந்திருக்க சாத்தியமுள்ளவர்களாகக் காட்ட மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கான பெயர் தேடல் துவங்கி அவர்களின் மொழி வரை அனைத்தையும் கூடுமானவரை நம்பகத்தன்மையோடு கட்டமைக்கத் தேவையான சொல்வளத்தை வாரி வழங்கியது அந்த மோடி ஆவணக் குறிப்புகள்தான்.

பழங்காலத்தில் இந்த மண்ணில் நடந்த சிறந்த, பெரிய நற்காரியங்களுக்கு மட்டுமே இங்கே கல்வெட்டோ செப்பேடோ பதிவாகக் கிடைக்கும். கோவில் திருப்பணிகள், நிவந்தங்கள், போர் வெற்றிகள் போன்ற பெரிய விஷயங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் கல்லில் செதுக்கவோ செம்பில் பொறிக்கவோ அதிக உழைப்பும், பணமும் செலவிட வேண்டும். ஆனால் காகிதங்கள் வந்த பின்னர் ஆவணப்படுத்துதல் என்பது ஓரளவு இலகுவானது. அனந்தரங்கப்பிள்ளை போன்ற வசதி வாய்ந்த தனிநபர்களும், அரசுகளும் தினசரி நடவடிக்கைகள், வரவு செலவு கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள் போன்றவற்றை பதிவு செய்ய ஆரம்பித்ததாலேயே அந்த காலகட்டத்து சமூகத்தின் இருண்ட பகுதிகளும் வரலாறாகப் பதிவாகும் போக்குத் தொடங்கியது.

சரஸ்வதி மகால் நூலகத்தின் மூட்டைகளில் அடைபட்டுக் கிடக்கும் மொழிபெயர்க்கப்படாத மோடி ஆவணங்கள், அனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள், கர்னல் மெக்கின்சியின் தொகுப்புகள் போன்ற காலனி ஆதிக்க காலகட்டத்து பதிவேடுகளில் இன்னமும் எத்தனையோ ஆனந்தவல்லிகளும், சபாபதிகளும் காத்திருக்கிறார்கள்.

ஆனந்தவல்லியை ஆன்லைனில் வாங்க – https://thamizhbooks.com/product/anandhavalli/

Posted in ஆனந்தவல்லி, இலக்கியம், தஞ்சை மராட்டிய மன்னர்கள், மராட்டிய மன்னர் வரலாறு | Tagged , , | Leave a comment