இதுவும் ஒரு வன்முறையே.


நேற்று சிவராத்திரியை முன்னிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இரவு 5 கால பூஜை நடைபெற்றது. பூஜையெல்லாம் சரிதான். அதற்கு வந்திருந்த பக்தகோடிகள் இரவு கண்முழிக்க செய்த உபாயமிருக்கிறதே, அதுதான் இப்போ நம்மோட பேசுபொருள். கண்முழிப்பதற்காய் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வதாய் முடிவு. இதில் கூட ஒன்றும் பிரச்சனை இல்லைதான். அதற்கு ஒருவர் முதலில் பாட பிறகு மற்றவரனைவரும் பின்பாட்டு பாடவேண்டுமல்லவா? இந்த மெயின் பாடகர் அந்த கோவிலின் ஆஸ்தான பாடகர். பொதுவாக எந்த விசேஷத்திற்கும் இவர் வந்து மைக்கை பிடித்து விடுவார். அதே வழக்கத்தில் அவர் இன்றும் மைக் கேட்க அவருக்கு மட்டுமின்றி அவரது வாத்திய கோஷ்டிக்கும் சேர்த்து மைக் கொடுக்கப்பட்டது. இரவு முழுதும் அவரது கான மழை ஒரு இரண்டு தெருக்களுக்கேனும் கேட்கும் வண்ணம் பொழிந்தபடியிருந்தது. அக்கம்பக்கத்திலிருக்கும் அனைவரையும் வலுக்கட்டாயமாக சிவராத்திரி விரதம் இருக்கச்செய்த புண்ணியத்தையும் சேர்த்து கட்டிக்கொண்டனர் அந்த பாடகரும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும். இதே கதை மார்கழி மாதத்து காலை வேளைகளிலும் நடந்தது. தினமும் நாங்களும் காலையில் வலுக்கட்டாயமாக பள்ளியெழுப்ப பட்டு பாவை நோன்பையும் நோற்கும்படி நிர்பந்திக்கப்பட்டோம். இத்தனைக்கும் அந்த குடியிருப்பு முழுக்க முழுக்க கல்வியறிவுடைய நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி. இதே இந்நேரம் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி கூட்டம் 10 மணிக்குமேல் ஒரு 5 நிமிடம் நடந்திருந்தால் போதும் ஏக அமர்க்களமாயிருக்கும். யாரேனும் ஒருவர் ஆசிரியருக்கு பகுதிக்கு கடிதம் எழுதுவார். தெருவுக்குத்தெரு 4 பேர் கூடும் இடங்களில் எல்லாம் இதே பேச்சாயிருந்திருக்கும். புலம்பித்தள்ளியிருப்பார்கள் எல்லோரும். ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே. இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம். அதை தவிர்க்க இவ்வகையான வன்முறைகளோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இதுவும் ஒரு வன்முறையே.

 1. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  பழகிவிடாதீர்கள். இதுவும் தவறுதான். இதனை எதிர்த்தும் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுங்கள்.

 2. தங்கவேல் சொல்கிறார்:

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள் லஷ்மி. இதே பொருள் குறித்த எனது பதிவையும் http://puliamaram.blogspot.com/2006/12/blog-post.html பார்க்கவும். நன்றி

 3. பத்மா அர்விந்த் சொல்கிறார்:

  லஷ்மிஒரு குறிப்பிட்டா டெசிபல்களுக்கு மேல் போனால் இது noise pollution ஆகும். சப்தமாய் பாடினால்தான் இறைவனுக்கு கேட்டு தூக்கத்தில் இருந்து எழுவார் என்ற நம்பிக்கையோ என்னவோ. இங்கே அமெரிக்கா வந்தும் நவராத்த்ரியின் போது கர்பா நிகழ்ச்சி என்று 9 வார இறுதிகல் பாட்டும் நடனமுமாய் இருக்கும். அபோது ஒரு நாள் இரவு 1 மனிக்கு கேட்ட சப்தத்தில் தன் 10 மாதக்குழந்தை தூங்கவில்லை என்று ஒருவர் புகாரிட்டிருந்தார். அதன்பிறகு ஒவ்வொருவருடமும் முதல் 911 காலுக்கு ஒரு எச்சரிக்கையும் இரண்டாவது 911 காலுக்கு 60000$ தண்டனையும் என்றூ சொல்லி லைசென்ஸ் வாங்கும் போது சொல்லி இருந்தார்கள். 9 மணிக்கு பிரகு சப்தம் வெளியே கேட்க கூடாது என்ற அளாவில். உடனே பிரதீப் கோத்தாரி என்ற இந்திய சங்க செயல் 60000$ முனபணமாக கட்டி அரசாங்க வழகறிஞரை எரிச்சலைடய வைக்க, உடனே மிடில்செக்ஸ் அரசாங்கம் ஒருநாளைக்கு 60000$ ஆக 10 நாளைக்கு 600,000$ கட்டினால்தான் லைசென்ஸ் என்றூ சொல்ல, கடைசியில் பொது இடத்தில் இருந்து மாறி இப்போது ரரிடன் செண்டர் என்ற இடத்தில் நடத்துகிறார்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு. வீட்டிலும் கூட அதிக சபதம் இருப்பது காதுகலின் கேட்கும் திறனை குறைத்துவிடும் அபயம் உள்ளதால் இது போல கோவில்களில் சப்தம் அதிகமாக இருந்தால் புகாரிடுங்கள்.

 4. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  இப்படி எல்லாம் யோசிச்சதில்லீங்க.எங்க வீட்டு எதிர்லயே கோயில். பண்டிக விசேசம்ன்னு கேட்டே பழக்கப்பட்டுட்டோம் அதுகூடயே பரிச்சைக்கு படிச்சு, பாஸ் பண்ணீட்டோம்.வீட்டுக்கு பின்னாடி மசூதி தினம் எத்தனை முறையோ தொழுகையும் சில சமயம் அவங்க மத சொற்பொழிவுகளோ கூட கேட்டு இருக்கோம். தெருவில் கிறித்துவ போதனை செய்ய சைக்கிள் மைக் வச்சு பேசிட்டு வருவார், தினமும் காலையில் கோலம் போட ற நேரம். எல்லாம் எங்க வாழ்க்கையோடு ஒரு அங்கமா சேர்ந்து போச்சு . அதான் இப்படி எல்லாம் யோசித்ததே இல்லைன்னேன்.

 5. கனவின் பயணம் சொல்கிறார்:

  எங்கே செல்லும் இந்த பாதை??????????“இத்தனைக்கும் அந்த குடியிருப்பு முழுக்க முழுக்க கல்வியறிவுடைய நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி”…..“இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம். அதை தவிர்க்க இவ்வகையான வன்முறைகளோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.”உங்களது இந்த பிறவி சந்தோசமா? நீங்கள் வேறு எங்காவது நாகரிகமான சமுதாயத்தில் பிறந்து இருக்க வேண்டுமென்று எண்ணுவதுண்டா? என்னுடைய பார்வையில் நான் இந்த சமுதாயத்தில், இந்த நேரத்தில் வாழ்கிறேன் என்பதில் சந்தோஷம்.முன்னர் ஒரு காலத்தில் இன்றைய ஆப்ரிக்கர் போல் நாமும் இருந்திருக்கலாம், வழிபாடு என்ற பேரில் ஆப்ரிக்கர் ஆடிப் பாடி உண்ர்ச்சிகளை வெளிப்படுதுவதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.என்னுடைய சிறு வயது ஞாபகங்களில் இறுந்து, நானறிந்த தமிழ்/இந்திய சமுதாயத்தின் சிறப்பு அம்சமாக நான் கருதுவது இந்த “உணர்ச்சி வெளிப்படுத்துதல்” தான்.தடை/சட்ட்ங்கள் மூலம் நாம் இந்நாளைய மேலை நாடுகள் போல், தனி மனித சுதந்திரத்த்ற்கு முக்கியத்துவம் அளித்தால், நாம் நம்மை இழக்கிறோம் அல்லவா? எது மனதுக்கு இன்பம் அளிக்கிறது? கூடி வாழ்வதா? தனித்து வாழ்வதா?என்னை கேட்டால், உங்களது ரசனைக்கு ஏற்ற சமுதாயத்தில் வாழ்வது உங்களுக்கு நல்ல்து.MGR நினைவு நாள் அன்று மதுரையில் ஐந்து நிமிடம் நடந்தால் ஐந்து பாடல்கள் கேட்கலாம், மார்கழி மாதம் , “ஒம் சக்தி ஒம் பராசக்தி ஒம் சக்தி ஒம்” சொல்லும் நேரம் அதிகாலை ஐந்து மணி என்று.அமெரிக்காவில் செயற்க்கை மனிதர்களின் மத்தியில், அமைதியான வீட்டு தொகுப்புகளில் இருந்து இருக்கின்றேன். அது எனக்கு சிறை போன்ற் ஒரு உணர்வை தந்ததே அன்றி மன் அமைதியோ , மன மகிழ்ச்சியோ என்றும் தந்ததில்லை. நம் தமிழ் சமுதாயம் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட்டத்துடன் இருக்கலாம் என்பது என் ஆசை.

 6. தமிழ்நதி சொல்கிறார்:

  உண்மையிலேயே பெரிய கொடுமைதான். எங்கள் உறவுக்காரர் ஒருவர் நகரத்தில் இருக்கிறார். அங்கு ஏதாவது வேலையாகப் போய்த் தங்குபவர்கள் தொலைந்தார்கள். காலை 5:00 மணிக்கே சுப்ரபாதம் ஆரம்பமாகிவிடும். அவர் விழித்தால் எல்லோரும் விழிக்க வேண்டும். அப்படியொரு மனோபாவம்.கடும் விரதமிருந்து தன்னைத்தானே வருத்துவது,வயதான போதிலும் சிவராத்திரியென்று கண்விழிப்பது இவையெல்லாம் கூட ஒருவகையில் வன்முறைதான். உணவைப் பார்த்து ஏங்கி ஏங்கி விரதம் இருப்பதை விட இருக்காமல் விடலாமல்லவா? சொன்னால் புரிவதில்லை. என்ன செய்ய?

 7. லக்ஷ்மி சொல்கிறார்:

  பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இலவச கொத்தனார் அவர்களே, போலீஸ் கம்பெளெயின்ட் எனுமளவுக்கு போக வேண்டுமா என்று சிறு தயக்கம். ஏனெனில் சம்பந்தப்பட்டவர்களனைவரும் அக்கம்பக்கத்தவர். மேலும் தனியாக வசிக்கும் என் போன்றோர்க்கு அக்கம்பக்கத்தவர் ஆதரவு பலவிதங்களில் தேவைப்படும் நிலையில் இதனை சற்றே மென்மையாக கையாள உத்தேசித்துள்ளேன். அடுத்த முறை குடியிருப்போர் சங்க கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்துரைக்கவுள்ளேன். எனினும் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை சாமி.பத்மா, இந்த செய்தி மிகவும் வருந்ததக்கது. பிழைக்க வந்த இடத்திலும் அடுத்தவரை துன்புறுத்துதல் எனது பிறப்புரிமை என்ற மனோபாவத்துடன் அபராதத்தொகையை முன்பணமாகவே தருதல் எத்தகைய ஆணவத்தின் வெளிப்பாடு. அங்கேனும் முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமிருப்பது ஒன்றுதான் ஆறுதல். இங்கேயென்றால் உடனே சிறுபான்மையினரது உரிமை பறிபோகிறதென்ற கூக்குரல் காதை துளைத்திருக்கும்.தூங்காத கண்ணென்று ஒன்று(கொஞ்சம் சின்னதா பேரை வச்சுக்ககூடாதோ)வில் எழுதும் நண்பருக்கு, நான் வேறுவொரு சமுதாயத்தை பார்த்து அதில் பிறந்திருக்கலாமே என்றெண்ணவில்லை. அங்கிருக்கும் நல்ல விஷயங்களை என்னைச்சுற்றியிருக்கும் சமுதாயம் என்று கற்றுக்கொள்ளப்போகிறது எனும் ஆதங்கமே இப்பதிவு. உணர்ச்சி வெளிப்படுத்துதல் வேறு. மிகையுணர்ச்சியை வாரியிரைத்து அதில் அடுத்தவரையும் வலுக்கட்டாயமாக மூழ்க அடித்தல் வேறு என்று உங்களுக்கு புரியவில்லையா? உங்களுக்கு எதையும் கொண்டாட உரிமையுண்டு நண்பரே. ஆனால் என் தூக்கத்தை கெடுக்கும் உரிமையுமா உண்டென்று நினைக்கிறீர்கள்? ஏதோ அமெரிக்கர்கள் வாழ்வை கொண்டாடதவர்கள் அல்லது சமூக நடவடிக்கையற்றவர்களென்பது போல் நீங்கள் பேசுவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அவர்களும் பார்ட்டிகள் நடத்துவது உண்டு. ஆனால் ஒலிபெருக்கி கட்டி ஊரையெழுப்பாமல் அதை செய்வார்கள். அவ்வளவுதான். முன்பின் தெரியாதவரைக்கண்டாலும் ஹாய் என்று ஒரு புன்னகையை உதிர்த்து போகும் அவர்களது சமூக வாழ்வு உங்களுக்கு புரியாததில் ஆச்சரியமொன்றும் எனக்கில்லை. நம்மைப்போல் ஒருவனை பார்த்தவுடன் அவனது சாதியைக்கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் உரையாட வேண்டிய அளவை நிர்ணயிக்கும் அவசியமெல்லாம் அவர்களூக்கு கிடையாது பாருங்கள், அதனால் சற்றே மேம்போக்காகத்தான் ஆரம்பத்தில் பேசுவார்களாயிருக்கலாம். அதற்காகவெல்லாம் அவர்களின் சமூக நடவடிக்கைகளையே சுருக்குவதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க. மேலும் முத்துலெட்சுமி அவர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயத்தையும் யோசிச்சு பாருங்க, படிக்கற பிள்ளைங்க இந்த உணர்ச்சி வெளிப்பாட்டுல மூழ்கினா அவங்க எதிர்காலம் என்னாவது? பொதுவாவே நம்ம ஊர்ல ஒரு வழக்கம் – மேல்நாட்டுலயெல்லாம் பாசமே கிடையாது. அப்பா அம்மாவெயெல்லாம் பார்த்துக்க மாட்டாங்க. அங்கெயெல்லாம் காதல், கல்யாணமெல்லாம் கிடையாது. யாரும் யாரோடயும் போவாங்கன்னெல்லாம் நிறைய வதந்திகளுண்டு நம்ம நாட்டுல. இதுவும் அதுல ஒண்ணு போல. நீங்க முதல்ல இந்தியர்கள் அதிகமிருக்கிற இந்திய உணவகங்களுக்கும் இந்திய பல்பொருள் அங்காடிக்கும் பக்கத்துல இருக்கற அபார்ட்மென்ட்டுக்கு போய் குடியேறி நம்மவர்களோடயே சுத்தி சுத்தி வராமல் திறந்த மனதோடு அவர்களோடு பழகிப்பாருங்களேன். அப்புறமாய் இதை முடிவு செய்து அவர்கள் மேல் முத்திரை குத்தலாம். சரியா?

 8. Madura சொல்கிறார்:

  //ஆனால் கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே. இதை விமர்சித்தால் உடனே நம்மை எதிர்கொள்ளப்போவது ஒரு விரோத பாவம்//உண்மைதான் லஷ்மி. கடவுளுக்கு குடுக்கும் மரியாதையில் நாம் யாருக்கும் அதிகம் சோகம் இல்லை, அது அவரவர் விருப்பம், ஆனால் கடவுளுக்கு மரியாதை குடுக்கிறேன் என்று சக மனிதர்களின் வாழ்கையை மதிக்காமல் இருக்கும் பக்தியை தான் பார்த்து சோகமாகிறோம், கேள்விகள் கேட்கிறோம்! புனிதத்தின் தேடலில் மனிதத்தை இழந்தவர்களை என்னவென்பது!அருமையான பதிவு. அழகான பின்னூட்ட பதில்கள்!

 9. செல்வநாயகி சொல்கிறார்:

  ///கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே///உண்மை. இதை இந்த சிவராத்திரி மட்டுமில்லாது வேறுபல தளங்களுக்கும் நீட்சியாகப் பொருத்திப்பார்க்கலாம்.லட்சுமி,வித்தியாசமான அவதானிப்புகளும் எண்ணங்களும் உங்கள் எழுத்தில் தென்படுவது மகிழ்வாக இருக்கிறது. தொடருங்கள்.

 10. நந்தா சொல்கிறார்:

  ///கடவுள் பெயரால் நடக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது இங்கே///சரியான வார்த்தைகள். இவை இந்து மதம் தான் என்று இல்லை. பெரும்பான்மையான மதத்தினராலும், தயவு தாட்சண்யமின்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதில் என்ன பிரச்சினை என்றால், சாதாரண மனிதனாக இருந்து இதை எதிர்த்து குரல் கொடுத்தாலே, நாத்திக முத்திரையோ அல்லது உணர்வுகளை புரிந்து கொள்ளாதவன் என்ற அடை மொழியோ வந்து விழுந்து விடுகிறது.இதை விட மோசமான விஷயம் என்னவென்றால், இந்த தவறுகளைச் செய்வோர், இதே தவறை வேறு மதத்தவரோ அல்லது வேறு கூட்டத்தினரோ செய்யும் போது, தனக்கு இடையூறாய் இருக்கும் போது மட்டும், அவர்களை வசை பாட தயங்குவதில்லை.இதன் மூலம், இவ்வாறு செய்பவர்கள் எல்லோரும் காட்டு மிராண்டிகள் என்று நான் சொல்ல வரவில்லை. கடவுளை பாடி,பஜனை செய்து, தொழுதல் மூலம் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்குமானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதை அடுத்தவர்க்கு இடயூறோ, தொந்தரவோ இல்லாமல் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் லஷ்மி. உங்களது உணர்வுகள் நியாயமானவையே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s