கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்


பெரும்பாலான தமிழ் படங்களுக்கு கதாநாயகி எனும் பாத்திரமே ஆறாவது விரல் போன்று ஒரு தேவையற்ற உறுப்பேயாகும். எனது இந்த நம்பிக்கையை நான் முந்தாநாள் பார்த்த லீ படமும் உறுதி செய்தது. படம் உண்மையிலேயே நல்ல வித்தியாசமான கதையமைப்போடிருந்தது. வழக்கமான மசாலாத்தனங்களும் உண்டென்றாலும் கூட புது விதமான கதையமைப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. படத்தின் முக்கிய குறைபாடுகள் இரண்டு – பொருத்தமற்ற இசை மற்றும் தேவையற்ற வசனங்கள். இப்போது இவற்றை விடுங்கள். நான் படத்தை முழுமையாக விமர்சிப்பதாயில்லை. படத்தில் கதாநாயகியாக கருதப்பட வேண்டியவர் நிலா. சற்றே அரை லூசுத்தனமான இவரது கதாபத்திரம் படத்திற்கு எந்த விதத்திலும் தேவையானதல்ல. கவர்ச்சிக்காக என்று சொன்னாலும் கூட அதற்கெனவே தனியாக 2 குத்துப்பாட்டுக்களும் குமட்ட வைக்கும் நடன அசைவுகளும் படத்திலிருக்கின்றன. அதுவே போதுமே? நகைச்சுவைக்காகவென்றால் ஒரு நகைச்சுவை நடிகை போதுமே. எதற்காக கதாநாயகி என்று ஒருவர்?

படத்தின் மையக்கதை இதுதான் – ஒரு லட்சியத்துடிப்புள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். இவர் சமூகத்தில் கீழ்த்தட்டிலிருந்து ஆர்வமும் திறமையுமுள்ள இளைஞர்களைத்தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர்களில் முதன்மையானவன் கதாநாயகனான லீ என்கிற லீலாதரன்(ஈ என்கிற ஈஸ்வரனின் வெற்றியைத்தொடர்ந்து இப்போது லீ. ஹ்ம்ம்.. தமிழ் சினிமாவை ஆண்டவன் தான் காப்பாத்தணும் போல). மொத்தக்குழுவும் தத்தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும் லட்சியதாகத்தாலும் கால்பந்தில் சர்வதேச அளவில் சாதிப்பதை குறிக்கோளாக கொண்டவர்கள். ஆனால் இந்த குழுவின் கனவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தாலும் வர்க்க மற்றும் சாதித்திமிரினாலும் சிதைக்கப்படுகிறது. அத்தோடு நண்பர்கள் சிலரையும் தங்கள் வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் பிரகாஷ்ராஜையும் இழக்கிறார்கள். மிச்சமிருக்கும் நண்பர்கள் பழிவாங்க சபதமேற்கிறார்கள். இரவுபகலாக உழைத்து(வழக்கம் போல காலையில் பால் பாக்கெட் போடுவது, பேப்பர் போடுவது, மூட்டைதூக்குவது என்று எல்லாமும் செய்து ஒரு சில நாட்களில் லட்சக்கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்) துப்பாக்கி ஒன்றை வாங்கி தெளிவான திட்டமிடலுடன் வில்லனை கொலை செய்ய நெருங்குகையில் புல்லட் புரூஃப் கண்ணாடி உபயத்தில் அவன் தப்புகிறான். தொடர்ந்த முயற்சிகளில் அவன் தப்பிப்பதோடல்லாமல் இந்த நண்பர் குழுவினை கூலிப்படையென அடையாளப்படுத்துகிறான். எனவே அவனை கொல்வதை விட முக்கியமாக செய்யவேண்டியது அவனை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதுதான் என்று உணர்ந்து சன் டி.வி மூலமாக தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் முன் வைக்கிறார்கள். பிறகு வழக்கம் போல் மக்கள் விழிப்புணர்வு பெருகி, அந்த வில்லன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதல் தொடுக்கிறான். மேலும் ஒரு நண்பனை பலிகொடுக்கும் லீ வீறுக்ண்டெழுந்து வில்லனை ஓட ஓட விரட்டி ஒரு சரியாக ஒரு காலந்தாட்ட மைதானத்திற்கே கொண்டு சென்று அடித்து துவம்சம் செய்கிறான்.

சரி, இந்த கதையில் நிலா எங்கு வருகிறார் என்கிறீர்களா? ஆரம்பத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் தோன்றுகிறார். உண்மையிலேயே நிலாவும் அந்த சைதை பட்டாபியும் வரும் நகைச்சுவைக்காட்சிகள் அருமை. பிறகு நாயகனுடன் நட்பாகிறார். அவரே அதை காதல் என்று நினைத்துக்கொண்டு பார்த்த 4வது நிமிடம் நாயகனுடன் ஒரு கனவுப்பாடலுக்கு ஆடிவிட்டு காணாமல் போய்விடுகிறார். பிறகு நாயகன் வில்லனை கொல்லும் தன் முயற்சியில் தோல்வியடைந்து ஒரு மறைவிடத்தில் பதுங்குகிறான். அதுவரை அரைலூசுத்தனமாய் திரிந்த நாயகியோ போலீசாலும் கண்டுபிடிக்க முடியாத அந்த இடத்தை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து அங்கே பிரசன்னமாகி நாயகனை கண்டு கோபித்து குமுறி பின் அவனது முன்கதைச்சுருக்கம் கேட்டு நெகிழ்ந்து திருந்தச்சொல்லி கெஞ்சி பின் காணாமல் போகிறார். மையக்கதையில் நாயகியின் பங்களிப்புத்தான் என்ன? ஒன்றுமேயில்லை. பின் எதற்காக இந்த அழகுப்பதுமைகள் வந்து போகிறார்கள்? எனக்கு தெரிந்தவரை 10க்கு 8 படங்களில் நாயகிகளின் நிலை இதுதான். இது தவிர ஒரு அம்மா நடிகை, கற்பழிக்கப்பட்டு இறந்து போகக்கூடிய ஒரு தங்கை மற்றும் நகைச்சுவை நடிகருக்கான ஜோடி(தனிப்பட்ட நகைச்சுவை நடிகையல்ல) இவ்வளவுதான் சராசரி தமிழ் சினிமாவில் அதிக பட்ச சாத்தியமான நடிகைகள் பட்டியல். பானுமதி, சாவித்திரி தொடங்கி சரிதா, சுகாசினி , ரேவதி என்று ஒரளவுக்கேனும் முக்கிய கதாபத்திரங்களில் தொடர்ந்து நடித்த நடிகைகள் வெகு சொற்பம். தமிழ் சினிமாவிற்கு தேவைதானா இந்த ஆறாவது விரல்?

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்

 1. இ.சி.ஆர் சொல்கிறார்:

  வணக்கம்!தமிழி சினிமாவுக்குன்னே இருக்கக்கூடிய சில அனாவசியங்களில் கதாநாயகி(கதைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும்)யும் ஒன்று.அதற்காக சுகாசினியை இந்த லிஸ்டில் கொண்டு வருவதற்கு முன் அவர் நடித்த தெலுங்கு படங்களை பார்க்கவும்.மும்தாஜ், நயன்தாரா போன்ற கவர்ச்சி நடிகைகளே வெட்கப்படும் அளவிற்கு ஆபாசத்தை கடை விரித்திருப்பார்.

 2. Amar சொல்கிறார்:

  ஹை…. இது ரொம்ப நல்ல இருக்கே. எந்த தமிழ் படத்துல பாட்டு அவசியம்னு சொல்லுங்க? நமக்கு பிடிக்கவில்லைனா யாருக்குமே புடிக்காத? கதாநாயகி, அம்மா, தங்கச்சி எல்லாம் ரொம்ப முக்கியம். அப்புறம் வில்லன் யாரது கற்பை அழிப்பது ஹீரோ DUET யாரோட ஆடுவார். சும்மா விவரம் இல்லாமே இருக்கீங்களே. கவலை படாதீங்க, இப்போ புதுசா வாரவுங்க ஏதாவது பண்ணுவாங்கணு எதிர்பார்க்கலாம்.

 3. தமிழ்நதி சொல்கிறார்:

  அண்மையில் ஒருவர் சொன்னார் பருத்திவீரன் படத்தில் நரிக்குறவர்கள் தரக்குறைவாகப் பேசப்பட்டிருப்பதால் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதாம் என்று.(உண்மையோ தெரியாது) அதை உண்மையாகக் கொண்டால், தமிழ் சினிமா மீது பெண்களெல்லோரும் சேர்ந்து வழக்குப் போடுவதுதானே நியாயம்…? ஓரிரு படங்களைத் தவிர எஞ்சியவற்றில் பெண்கள் நீங்கள் சொன்ன ‘ஆறாம் விரல்களாக’த்தானே காட்டப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் கேவலமில்லையா என்ன…? ம்… கடவுள் என்றொருவர் இருந்தால் அவர்கூட காப்பாற்ற முடியாது.

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  வந்து கருத்து சொல்லியிருக்கும் அனைவருக்க்ம் நன்றி.என்ன செய்ய தமிழ்நதி, குறவர்களைப்பொறுத்தவரை அவர்கள் கேவலப்படுத்தப்பட்டது அந்த ஒரு படத்தில்தான். எனவே அதை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியும். ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய நினைத்தால், ஏஏஏஏஏஏஏஏஏஏ…யப்பா. யாரைன்னு சொல்ல யாரைன்னு விட. இந்த லீ படத்தைக்கூட ஒரு எடுத்துக்காட்டாதான் சொல்லி இருந்தேன். வெளியாகற 99% படங்கள் மேல நாம வழக்கு தொடர வேண்டியிருக்கும். நம்ம பொழைப்பை அப்புறம் எப்போ பார்க்கறது. அதுனால அப்பொப்பொ இந்த மாதிரி நம்ம ஆதங்கத்தை கொட்டிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இ.சி.ஆர், சுகாசினி மட்டும் இல்லை நான் குறிப்பிட்டிருக்கற எல்லா நடிகைகளுமே கூட மேலாடை விலகாம நடிச்சவங்கன்னு நான் சொல்ல வரலை. அவங்க சில பல படங்கள்ள ஆபாசமாக்கூட நடிச்சிருக்கலாம். ஆனால், மற்ற நடிகைகள் மாதிரி பணம் மட்டுமே குறிக்கோளா இல்லாம கொஞ்சமாவது தங்களோட கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கறா மாதிரி பார்த்துகிட்டாங்கன்னுதான் நான் சொல்ல வரேன். அதுலயும் பானுமதி அம்மாவும் சுகாசினியும் படங்களை இயக்கவும் செய்தார்கள். பானுமதியவங்க இயக்கின படமெதுவும் நான் பார்த்ததில்லை. ஆனா சுகாசினியின் தொலைக்காட்சித்தொடரும் சரி திரைப்படமும்(இந்திரா) சரி நான் பார்த்து ரசித்திருக்கிறேன். இந்திரா எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல ஒன்னு. அதை பத்தி ஒரு தனி பதிவே போடலாம்ன்னு இருக்கேன். கூடிய சீக்கிரம் போட முயற்சிக்கிறேன்.

 5. மகா சொல்கிறார்:

  திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கான தகுதிகளே கோளாறு தான். சிவப்புத் தோலா இருக்கனும். கவர்ச்சியாய் நடிக்க மன்னிக்கனும் காட்ட தயாராய் இருக்கனும். தமிழ் தெரியக்கூடாது.இன்றைக்கு, தியேட்டர் கட்டண உயர்வு, பணப்பிரச்சனை, கேவலமான தியேட்டர்கள் என பல காரணங்களால், இளைஞர்கள் மட்டும் தான் திரைப்பட பார்வையாளர்கள். அவர்களை இழுக்கிறேன் பேர்வழி என மோசமாய் படம் எடுக்கிறார்கள்.10 போட்டு 100 எடுக்க நினைக்கிற சூதாட்டத்திலிருந்து திரைப்படம் தப்பிக்கனும்.படம் இருக்கட்டும். காலை தொடங்கி, இரவு 12 மணி வரை தொட்டுத் தொடரும் மெகா சீரியல்களில் தான் பெண்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

 6. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  லக்ஷ்மி, கோபமாத்தான் வரது. என்ன செய்ய. பானுமதி ரேஞ்சுக்கு இவங்களால போக முடியாது.காரணம், அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுக்க ஆள் இருந்தார்கள். பணபலம், மன உறுதி,ஆளுமை எல்லாம் ஆணுக்கு நிகராகப் பெற்றிருந்தார்கள்.இப்போது பணத்துக்காக மட்டுமே வரும் மாடல்கள், நடிப்புக்கு வரும் காலம். இது இன்னுமொரு முதலீட்டு நிறுவனம்.அவ்வளவுதான். கலையாவது, கதையவது.

 7. லக்ஷ்மி சொல்கிறார்:

  மகா, வல்லி அம்மா இருவருக்கும் நன்றி – பழைய பதிவொன்னை தூசி தட்டி எடுத்து படிச்சு கருத்து சொல்லியிருக்கறதுக்காக. மகா, சீரியல் மோகம் பத்தி ஒரு பதிவெழுதணும்னுதான் இருக்கேன். ஆனா நான் கொஞ்சம் எழுத சோம்பல் படற ஆசாமி. 10 விஷயம் நினைச்சால் அதுல ஒரு 2தான் வணங்கி உட்கார்ந்து எழுதுவேன். அவ்ளோ சோம்பல் எழுத மட்டும். இதே பேச விட்டு பாருங்க, ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேன். 🙂 ஆனா கண்டிப்பா எழுத வேண்டிய விஷயம்தான் அது. ம.செந்தமிழன் என்பவரின் டிராகுலாவின் காதலிகள் என்னும் புத்தகம் பற்றி கேள்விப்பட்டீர்களா? அது குறித்த விமர்சனம் < HREF="http://www.thozhi.com/issue35/vaasippu3.php" REL="nofollow"> இது<>. படித்து பாருங்கள். புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. அதை படித்த பிறகு எழுதலாம் என்று இருக்கிறேன்.

 8. மகா சொல்கிறார்:

  சீரியல் குறித்தான தங்கள் கட்டுரையை ஆர்வமாய் எதிர்பார்க்கிறேன். இளமதி- எழுதிய கட்டுரை படித்தேன். நல்ல விவாதத்திற்கான தொடக்கம். இளமதியை நான் அறிவேன். நேரில் விவாதிக்க வேண்டும்.நந்தவனத்துக்குள் வந்து போனதற்கு நன்றி.

 9. அய்யனார் சொல்கிறார்:

  /தமிழ் சினிமாவிற்கு தேவைதானா இந்த ஆறாவது விரல்?/அப்படி போடுங்க.!!:)தமிழ் சினிமாக்கள் மேல வருத்தமிருக்க எவ்வளவோ பேர்ல நானும் ஒருத்தன்அதனாலதான் பெரும்பாலான படங்களை தவிர்திடுறது ..உலக சினிமா பக்கம் வாங்க 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s