அழகுகள் ஆயிரம் – அதில் சில…


ஆட்டத்துக்கு சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க மங்கை. என் வரையில் அழகு என்பது எப்பவுமே ஒரு வரையறுக்கப்பட்ட விஷயம் இல்லை. அது ஒரு மனோபாவம். ஒருத்தருக்கு வானம் அழகுன்னால், பக்கத்திலிருப்பவருக்கு பூமிதான் அழகாத்தெரியும். சோ… நான் அழகுன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கும் அழகாத்தெரியணும்னு அவசியமில்லைதான். இருந்தாலும் ஆட்டம்னு வந்துட்டதால எனக்கு அழகுன்னு தோணற சில விஷயங்களை இங்கே பட்டியலிடறேன்.

ஊர்ல எங்க வீடு ரொம்ப பழைய காலத்து மாடல்ல இருக்கும். நாட்டு ஓடுதான் கூரை. தரைக்கு மட்டும் எங்க அப்பா பெரிய மனசு பண்ணி சிமென்ட் போட்டு அதுல சிவப்பு கலர் சிங்குச்சா நீலக்கலர் சிங்குச்சான்னு கலர் வேற போட்டு விட்டிருக்கார். வீட்டுக்கு நடுவுல திறந்தவெளியா கொஞ்ச இடம் இருக்கும் – முற்றம்ன்னு சொல்வோம் (பேச்சுவாக்கில் மித்தம்னுதான் பெரும்பாலானவங்க சொல்வாங்க.) இந்த இடம்தான் வீட்டுலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். இது ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அழகை தொடர்ந்து வெளிப்படுத்திக்கிட்டே இருக்கற இடம். எங்க வீட்டு முற்றத்தில் இரும்புக்கம்பிகளை பாதுகாப்புக்காக போட்டு வைத்திருப்போம். மழை நின்ற பின் அந்த கம்பிகள்ள தொங்கும் நீர்த்திவலைகள் அப்படியே முத்துக்களை கோர்த்தாற்போல இருக்கும். அப்போ சூரிய வெளிச்சம் மேல பட்டால் அப்படியே ஜொலிக்கும். அப்போ பார்த்து லேசான காற்று அடிச்சு அதுல அந்த நீர்த்துளிகள் மெதுவாய் ஆடினால்… எப்படி சொல்றதுன்னு தெரியலை. வைத்த கண் வாங்காம பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் இந்த முற்றத்தை சுற்றியுள்ள பகுதியில்(தாழ்வாரம் என்போம் இதை) வந்து எல்லோரும் அமர்வோம். சுத்தமாய் மின்சாரமே இல்லாததால் இருள் இன்னும் அடர்த்தியாய் தெரிய, நிலாக்காலமெனில் நிலவொளியும் அது இல்லாத நாளில் நட்சத்திரங்களின் ஜொலிப்புமாய் வானம் பாரதியின் ‘பட்டுக்கருநீலப்புடவை, பதித்த நல்வயிரங்கள்’ அப்படின்ற வரிகளை நினைவுபடுத்தும். சிறு வயதில் தினமுமே இரவு சாப்பாடானதும் அப்பா என்னை தாழ்வாரத்தில் உட்கார வைத்து தான் முற்றத்தில் ஒரு ஈஸிச்சேரில் அமர்ந்த வண்ணம் தினம் ஒரு கதை சொல்வார் (அப்பா ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் – அதுவும் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வேலையில் சேர்ந்த நாள் முதல் தலைமை ஆசிரியராவதற்கு முன்வரை தொடர்ந்து ஒன்றாம் வகுப்புக்கே ஆசிரியராய் இருந்தவர். ஆகையினால் எனக்கும் தினம் ஒரு கதை கிடைக்கும் சின்ன வயசில்). கதை மட்டுமில்லைங்க, பாரதியார் பாடல்கள், குறள் , கம்பரின் பாடல்கள் அப்படின்னு எனக்கு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ததும் என் அப்பாதான். செய்த இடம் இதே முற்றம்தான். பாரதியாரோட எங்கிருந்தோ வந்தான் பாடலை கேட்டிருப்போம். அப்பா அந்த பாடலின் துவக்கத்திலிருந்து சொல்வார். அது ‘கூலிமிகக்கேட்பார்’ அப்படின்னு வேலையாட்கள் சிலர் செய்யும் அடாவடித்தனங்களை பற்றி புலம்பியபடி ஆரம்பித்து பின் கண்ணன் கிடைத்ததும் எவ்வளவு சவுகரியங்கள் கிடைத்ததுன்னு சொல்லும் பாடல் – ஒரு கதை போல இருக்கும். இப்படி பல அற்புதமான பாடல்கள், ராமாயண மகாபாரத கதைகள் (அதுலயும் இந்த மகாபாரதம் இருக்கே அது ஒரு கதைச்சுரங்கம். கதைக்குள்ள கதைக்குள்ள கதைன்னு போயிகிட்டேயிருக்கும். பெரியவங்க எல்லாம் எப்படித்தான் கதாபாத்திர பெயரிலிருந்து சகலத்தையும் நினைவு வச்சுக்கறாங்களோ தெரியலை. அது தெரிஞ்சிருந்தா ஒழுங்கா படிச்சு கிழிச்சிருக்க மாட்டோமா நாம…) எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த முற்றத்தில்தான். நிமிர்ந்து பார்த்தால் எங்கள் தோட்டத்து தென்னையும் பக்கத்து வீட்டு தோட்டத்து வேப்பமரமும் தெரியும். இன்னும் சற்று நிமிர்ந்தால் வயிரம் பதித்த கருநீலப்பட்டுப்புடவை – அதான் நம்ம வானம் தெரியும். எல்லரையும் போல எனக்கும் குழந்தைப்பருவம்தான் வாழ்வின் பொற்காலம் இப்போ வரை.

அடுத்த அழகு எங்க அம்மாவோட சுங்கடி புடவைகள். அம்மா நல்ல நிறம். அதுலயும் கொஞ்சம் அடர் வண்ணங்களில்தான் சுங்கடி வகை காட்டன் புடவைகள் வாங்குவார். அதுல சிலதுல நல்ல ஜரிகை வேலைப்பாடு இருக்கும். தினப்படிக்கு சாதாரண டிசைன் கொண்ட புடவைகள், விசேஷங்களுக்கு ஜரிகை வேலைப்படுகள் கொண்ட புடவைகள்ன்னு வைத்திருப்பார். மற்ற பெண்கள் பட்டிலும் வைரத்திலும் மின்ன நடுவில் அம்மா இந்த வகையிலான சுங்கடி புடவைகளில் அசத்துவார். புடவையின் அழகும் அம்மா அதை உடுத்தும் பாங்கும் இந்த புடவைக்கு பல புது வாடிக்கையாளர்களை உருவாக்கியதென்றால் அது மிகையல்ல. அதிலும் அம்மாவிடம் அரக்கு வண்ணத்தில் கருப்பு கரை வைத்த புடவை ஒன்று உண்டு – கரையில் மட்டும் ஜரிகை வேலை செய்தது. எனக்கு மிகப்பிடித்த புடவை அது. கல்லூரிக்கு நானும் அந்த புடவையை சில சமயம் கட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது அம்மாவுக்கு அந்த புடவை எப்படியிருந்தது என்று ஒப்பிட்டுக்கொள்ளத்தோன்றும் – அது கான மயிலாட பாடலை வேறு நினைவு படுத்துமா, எனவே அந்த புடவையை மட்டும் சுடும் எண்ணத்தை கைவிட்டு விட்டேன். மற்றபடி சிந்தடிக் புடவை என்றால் அம்மாவே எனக்கென எடுத்து வைத்து விடுவார்(ச்சோ ஸ்வீட் 🙂 ).

அடுத்த அழகு எங்க அம்மாவோட குங்கும பொட்டு – நல்ல பெரிய வட்டமாய் நெற்றியிலும், சிறிது உச்சி வகிட்டிலும் இட்டுக்கொள்வார். சுகந்தா குங்குமமும் Eyetex – இன் ஆஷா எனப்படும் மெழுகும் உபயோகிப்பார். முதலில் ஆஷாவினால் சிறிய வட்டம் வைத்து அதன் பின் அதன் மேல் குங்குமம் வைப்பார். விரலில் மிச்சமிருக்கும் குங்குமம் உச்சி வகிட்டிற்கு. எப்படித்தான் அப்படி சிறு பிசிறு கூட இல்லாமல் வட்டமாய் வைப்பாரோ தெரியாது. பல நாள் பக்கத்திலிருந்து பார்த்திருந்தாலும் என்னால் செய்ய முடிந்ததில்லை.

சரி. விட்டால் இந்த பட்டியல் முடிவே இல்லாமல் நீளும் அபாயமிருப்பதால், இங்கே ஒரு பிரேக் அடிக்கறேன். அப்புறமா சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீதியை பார்க்கலாம். இப்போ இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பது மதுரா அக்காவையும் ,செல்வ நாயகி அவர்களையும், மகா அவர்களையும்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

22 Responses to அழகுகள் ஆயிரம் – அதில் சில…

 1. துளசி கோபால் சொல்கிறார்:

  முற்றம் வச்ச வீடுதான் என் கனவு வீடு. எங்க பாட்டி வீடும் இப்படித்தான் இருக்கும். அதுபோலஒண்ணு கட்டணுமுன்னு கனவு. இந்த ஊரில் அது நிறைவேறாத கனவுதான்(-:நானும் அண்ணனும் மாடியில் இருந்து தாழ்வார ஓட்டில் இறங்கி அந்தக் கம்பியின் மீது நடப்போம். அது ஒரு கனாக் காலம்.நல்ல அழகு லக்ஷ்மி. கொஞ்சம் கொசுவர்த்தி ஏத்திக்கிட்டேன்:-)

 2. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  ஆகா என் முற்றம் வச்ச வீடு ஆசை கரையடங்காம போய்க்கிட்டிருக்கு. இங்க என்னடான்னா எல்லாரும் அதப்பத்தி பதிவெழுதி வெறுப்பேத்தறாங்க..அழுகையா வருது.அழகெல்லாம் அழகா சொல்லிட்டீங்க.வாழ்த்துக்கள் லக்ஷ்மி.துளசி ஓட்டுல ஏறுனதெல்லாம் அந்தகனாக்காலம்தான்.இப்ப ஏறினா..அவ்வொளோதான். 🙂

 3. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  ஆஹா! நல்ல சூப்பர் அழகுகள் போங்க. அதுவும் மித்தம் தாழ்வாரம் அதுல கம்பி, நீங்க எங்க கல்லிடைக்குறிச்சிக்குப் பக்கமா? இருக்கட்டும். முதலில் நான் எங்க டீச்சரைப் பார்க்கப் போகணும். அவங்களுக்கு உடம்பு சரியில்லை. எப்படி தெரியுமா? புடவை பத்தி அவ்வளவு எழுதி இருக்கீங்க, பார்ட்டி (ஹலோ, ‘ர்’ இருக்குங்க) ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. பின்ன உடம்பு சரியில்லாம என்னவாம்.சீயூ!! (செல்வநாயகியக்காவை தென்றல் கூப்பிட்டாச்சு. வேற யாராவது இருந்தா மாத்திடுங்க.)

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  துளசி மேடம், முத்து லெட்சுமி, கொத்தனார் எல்லோருக்கும் நன்றி.முத்துலெட்சுமி, உங்கள் கனவு இல்லத்தை கூடிய சீக்கிரம் நீங்கள் கட்டி முடிக்க என் வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார், நான் தஞ்சாவூர் பக்கம். அங்கயும் பழைய வீடுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். துளசி மேடம், கொத்தனாரோட ஐயம் நியாயமானது. எப்படி நீங்க புடவை பத்தி கவனிக்காம விட்டீங்க?????? உங்க சிறுவயது சாகசங்களை கேட்கும்போது புல்லரிக்குது போங்க. 🙂எல்லாரும் பாராட்டற இந்த முற்றம் வைத்த வீடுகளில், சில பிரச்சனைகளும் இருக்கு. வெயில் காலத்துல சூடு பயங்கரமா வீட்டுக்குள்ள வரும். சரின்னு கீத்து போட்டுட்டா, வத்தலோ வடாமோ போட முடியாம போயிடும். கோடை நாட்களில், வடாம் போடலைன்னா அப்புறம் முற்றம் இருந்தென்ன, இல்லாமல் போனாலென்ன? சோ, வெயில் முழுசையும் பொறுத்துகிட்டாகணும். அப்புறம் காத்து நாட்களில், ஊர் புழுதி முழுக்க நம்ம வீட்டு கூடத்துலதான் இருக்கும். நடந்தால் பாதச்சுவடு அப்படியே தரைல தெரியற அளவு புழுதி படிஞ்சவண்ணமிருக்கும். பெருக்கி பெருக்கி கையெல்லாம் வலி கண்டு போகும். கூட்டிக்கொண்டே வரும்போது ஒரு காற்று வந்து அதை வீடு முழுக்க தூத்தி விளையாடும். மனசே உடைஞ்சு போயிடும். முத்துலெட்சுமி, வீடு கட்டும்போது இதெல்லாமும் நியாபகம் வச்சுகோங்க. வேணும்னா, அந்த கம்பிகளுக்கு பதிலா, கண்ணாடி தடுப்பு போட்டுட்டால், இந்த பிரச்சனையெல்லாம் போயிடுமோ? தெரியலைங்க. மத்தபடி மழை நாட்களில் அது சொர்க்கம். இரவுப்போதுகளிலும்தான்.

 5. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  எனக்கும் அதே யோசனைதான். ஆசைக்கு நடுவில் இடம் விட்டுட்டு அதுல பெரிய கண்ணாடி சன்னல் கதவாட்டம் வச்சு சாயங்காலம் கொஞ்சம் கொசுவர நேரம் மூடி வைக்கரமாடல்…க்கும் …கட்டிக்கொடுக்கறதுக்குள்ள இஞ்சினீயர் மண்டைய பிச்சுக்குவார்.

 6. மங்கை சொல்கிறார்:

  நல்லா இருக்கு லக்ஷ்மி..அப்பாவுடன் நீங்க பாலத்துல போய் ரயில் பார்த்த சம்பவத்த எழுதினதே ஒரு அழகான அனுபவம்..நான் ரொமப் ரசிச்சேன்…முற்றம் வீடு நிறைய பேருக்கு பிடிச்சு இருக்கு..ஹ்ம்ம்..ஆனா அது ‘கணவு இல்லமா’கவே தான் இருக்கும் போல இருக்கு,..பார்க்கலாம்..சுங்கடி சீலை எனக்கு..ஐயோ பைத்தியம் லக்ஷ்மி… பார்சல்ல ஆன் தி வே இப்ப…:-)))நீங்க அம்மா பத்தி சொன்னதும் எனக்கும் அம்மா நியாபகம் வந்துடுச்சு..அம்மா புது சீலை கட்ட மாட்டாங்க, நான் கட்டின அப்புறம் தான் கட்டுவாங்க…இங்க வந்த அப்புறம் தான் அந்த வாய்ப்பு இல்லாம போச்சு..

 7. தென்றல் சொல்கிறார்:

  உங்கள் வீட்டு முற்றம் …. படங்களில் மட்டுமே பார்த்த நினைவு..உங்கள் நினைவலைகள் அழகு.சின்ன paragraphஆ போட்டிருந்தா, படிக்க எளிதாக இருந்திக்கும் 😉அட..டா.. நான் ஏற்கனவே செல்வநாயகி அவர்களை மாட்டி விட்டேனே!?

 8. காட்டாறு சொல்கிறார்:

  முற்றம் பத்தின அழகுல, இன்னுமொரு அழகு எழுதியிருக்கீங்களே!//கதை மட்டுமில்லைங்க, பாரதியார் பாடல்கள், குறள் , கம்பரின் பாடல்கள் அப்படின்னு எனக்கு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ததும் என் அப்பாதான். //அப்பாவின் இந்த அழகை மிஞ்ச யார் இருக்காங்க சொல்லுங்க. அவர் தானே நமக்கு புதல் ஆசான். யாராவது அப்பாவ பத்தி அழகுல எழுதுவாங்களான்னு காத்திருந்தேன் போங்க.மொத்தத்துல உங்க அழகு ரொம்ப அழகுங்க!

 9. லக்ஷ்மி சொல்கிறார்:

  மங்கை, காட்டாறு, தென்றல் – அனைவருக்கும் நன்றி. நிச்சயமா இனி பிரிச்சு எழுதறேங்க தென்றல். பார்சல் கூடிய சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள் மங்கை. காட்டாறு, நீங்கள் சொல்வது போல் எல்லாருக்குமே அப்பாதான் முதல் ஆசான். அதிலும் அம்மா அல்லது அப்பா தொழில் முறை ஆசானாகவும் இருந்துவிட்டால் நமக்கு இளம் வயதில் மிகச்சிறந்த வழிகாட்டுதல் கிடைத்துவிடும். என் வீட்டிலும் சரி, நான் பார்த்த வரையும் சரி இதுதான் நடைமுறை. ஆயினும் வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்றாங்களே, அது ஏன்னு யாராச்சும் கொஞ்சம் விளக்கினால் தேவலாம்.

 10. மகா சொல்கிறார்:

  முற்றம் வச்ச வீடு பற்றி நீங்க எழுதி, மாட்டு வண்டி போனதை செல்வநாயகி எழுதி – ஒரு ஏக்கத்தை உண்டாக்கிட்டீங்க. அழகு விளையாட்டுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி.நகரத்தில் பிறந்து, வளர்ந்தேன். எனக்கு பிடித்த ‘எங்கள் தெரு’ பற்றி கவிதை மாதிரி எழுதியுள்ளேன். படித்து பாருங்கள்.

 11. மகா சொல்கிறார்:

  மறந்துட்டேன். வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்றாங்களே! எதனால்? என நான் உங்களிடம் கேட்கலாம் என நினைத்தால், அப்பாவியா நீங்க கேட்கிறீர்கள்.

 12. செல்வநாயகி சொல்கிறார்:

  லட்சுமி,அழகு பற்றிய நல்ல குறிப்புகள் உங்களுடைய இந்தப் பதிவு.நான் இப்பத்தான் கிறுக்கு ஆட்டத்து வேலையையே முடித்திருக்கிறேன். என் சோம்பலை இதன்மூலமே புரிந்திருப்பீர்கள்:))அழகு ஆட்டத்தில் முடிகிறபோது இணைய முயற்சிப்பேன். புரிதலுக்கும், உங்கள் அழைப்புக்கும் நன்றி.மகா,///முற்றம் வச்ச வீடு பற்றி நீங்க எழுதி, மாட்டு வண்டி போனதை செல்வநாயகி எழுதி – ஒரு ஏக்கத்தை உண்டாக்கிட்டீங்க///கடந்துபோன வாழ்வின் ஞாபக நறுமணங்களாய் மட்டுமே இப்போது அவை எனக்கும்.

 13. லக்ஷ்மி சொல்கிறார்:

  உங்க கவிதை பார்த்தேன் மகா. அருமையா இருக்கு. செல்வா, நிதானமா எழுதுங்க. நம்மையெல்லாம் யாரு என்ன கேட்டுடப்போறாங்க சொல்லுங்க. மக்களே, என் கேள்விக்கென்ன பதில்? யாராவது சொன்னால் தேவலாம். துளசி டீச்சர், எதுனா விளக்கமிருக்கா கைவசம்?

 14. மகா சொல்கிறார்:

  //’எங்கள் தெரு’ பற்றி கவிதை மாதிரி எழுதியுள்ளேன். படித்து பாருங்கள்.// படித்துவிட்டு, கவிதைன்னு ஏத்துகிட்டீங்க. நன்றி. //செல்வா, நிதானமா எழுதுங்க. நம்மையெல்லாம் யாரு என்ன கேட்டுடப்போறாங்க சொல்லுங்க. //என்ன இப்படி சொல்லிபுட்டீக! எனக்கெல்லாம் மறதி ஜாஸ்தி. அதனால் செல்வா! விரைவில் எதிர்பார்க்கிறேன்.

 15. துளசி கோபால் சொல்கிறார்:

  //மக்களே, என் கேள்விக்கென்ன பதில்? யாராவது சொன்னால் தேவலாம். துளசி டீச்சர், எதுனா விளக்கமிருக்கா கைவசம்?//நானே ‘வைத்தியர் பிள்ளை நோயாளி’ன்ற நிலையில் இருக்கேன்.முதல்லே அதுக்கு விளக்கம் தெரிஞ்சுக்கிட்டு வரட்டா?

 16. லக்ஷ்மி சொல்கிறார்:

  ஆஹா, டீச்சர் உங்களுக்கே சந்தேகமா?மாணவர்களுக்கு சந்தேகம் வந்தா டீச்சர் கிட்ட கேட்கலாம். டீச்சருக்கே சந்தேகம்னா யாருகிட்ட போய் கேக்கறது டீச்சர்? (தங்கபதக்கம் ஸ்டைலில் படிக்கவும்).

 17. அய்யனார் சொல்கிறார்:

  /நிலாக்காலமெனில் நிலவொளியும் அது இல்லாத நாளில் நட்சத்திரங்களின் ஜொலிப்புமாய் வானம் பாரதியின் ‘பட்டுக்கருநீலப்புடவை, பதித்த நல்வயிரங்கள்’ அப்படின்ற வரிகளை நினைவுபடுத்தும்./ அழகான பார்வைங்க ..பாரதிய வச்சி ஒரு கூட்டம் தாறுமாறா எழுதினத தெரியாத்தனமா படிச்சி நொந்த மனசுக்கு இதமா இருந்தது இந்த வரிகள்🙂

 18. மகா சொல்கிறார்:

  “பாரதிய வச்சி ஒரு கூட்டம் தாறுமாறா எழுதினத தெரியாத்தனமா படிச்சி நொந்த மனசுக்கு”தமிழ்நாட்டில் பாரதிய யார் திட்டுவது?கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் அய்யனார்!

 19. லக்ஷ்மி சொல்கிறார்:

  அய்யனார் எந்த கும்பலை பற்றி குறிப்பிடரார்னு எனக்கு தெரியலை. ஆனா அப்படிப்பட்ட குழுக்கள் நிறையவே இருக்குங்க இங்கே.//தமிழ்நாட்டில் பாரதிய யார் திட்டுவது?//ரொம்பத்தான் உலகம் தெரியாத அப்பாவியா இருக்கீங்க மகா நீங்க.

 20. அபி அப்பா சொல்கிறார்:

  சூப்பர்! நம்ம தஞ்சாவூர் காரங்களுக்கு இருக்கும் ரசனையே தனிதான் போங்க. இந்த முற்றம் இருக்கே என் வாழ்விலே என் கூட கலந்துவிட்ட ஒரு விஷயம். நான் பிறந்ததே முற்றத்தில்தான். எங்க வீட்டுலே 3 முற்றம். அதிலும் அந்த பெரிய முற்றம் இருக்கே அதுல தான் எங்க வீட்டு குழந்தைகள் அத்தனை பேர் ஜனனமும். வீட்டுக்கு நேர் எதிர்தான் பிரசவ ஆஸ்பத்திரி என்றாலும் எங்க அம்மாவுக்கு அங்கே பிரசவித்துக் கொள்வதில் இஷ்டம் கிடையாது.சிறுவனா இருந்த போது அந்த கம்பியை பிடிச்சு தொங்குவது ஆடுவது பின்பு தொங்கி கொண்டிருக்கும் போது கால்கள் இரண்டையும் தூக்கி கை நடுவே விட்டு பல்டி அடித்து கை திருகி கீழே விழுவது…கொஞ்சம் வளர்ந்த பின் கம்மி மேல் உள்ள சிந்தெக்ஸ் டேங் திறந்து விட்டு ஷவர் பாத் எடுப்பது..பின்ன்ய் அங்கேயே காலை முற்றத்தில் தொங்க போட்டுகிட்டு தாழ்வாரத்தில் உக்காந்து சூடான இட்ட்லி+மிளகாய் பொடி+தக்காளி கார சட்ட்னி சாப்பிடுவது,வாவ்…இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.அது போல அம்மாவின் பெரிய வட்ட பொட்டு, சுங்குடி சேலை எல்லா அழகும் எனக்கும்….அதே அதே..சூப்பர் அழகு எல்லாம்!!!

 21. லக்ஷ்மி சொல்கிறார்:

  வாங்க அபி அப்பா. நீங்களும் அந்த முற்றத்துல எல்லா லூட்டியும் அடிச்சிருகீங்களா? நானும் தொங்கியிருக்கேன் அந்த கம்பில. அதுக்கு நிறைய திட்டும் வாங்கியிருக்கேன்.

 22. Deepak Vasudevan சொல்கிறார்:

  திண்ணை வைத்த வீடு என்றென்றும் அழகு. இன்றளவிலும் செங்கல்பட்டு அருகில் உள்ள பொன் விளைந்த களத்தூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆண்டு உத்சவற்றிருக்கு செல்லும் போதும், திண்ணை வைத்த எங்கள் உற்வினர் வீடு மிகவும் வசீகரிக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s