முற்றுப்புள்ளி


வாரந்தோறும் வந்து போகும்
வெள்ளி மாலை குதூகலமும்
திங்கள் காலை சிடுசிடுப்பும் போல
நம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்
பிரக்ஞையில் பதிந்து போயாகிவிட்டது.
பிரியப்போகிறோமென்றோ இணைந்துவிட்டோமென்றோ நண்பர்களிடை சொல்கையில் அவர்களின் இதழோரத்தில் நெளியும் குறுநகையில் தெரிக்கும் ஏளனம்
என்னுள் இறக்கும் ஊசிகளின் வலியறிவாயா நீ?
இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தை
மீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.
எப்படி நிறுத்த என்றுதான் புரியவில்லை.
நசுங்கிய நம்பிக்கைகளும்
சிதைந்த எதிர்பார்ப்புகளும்
அவமான அமிலங்களால் பொசுங்கிய தழும்புகளும்
எனக்கு மட்டுமென்றால் கூட பரவாயில்லை
என்னிலிருந்து எழும் அதிர்வுகள்
என் வீடு முழுவதும் பரவி அடங்குவது அறிவாயா நீ?
எத்தனை முறைதான் சுற்றியிருப்பவர் பதறி விடாமலிருக்க
ஒன்றுமே நடக்காதது போல நான் நடிப்பது?
ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பதும்
அதே இடத்தில் வந்து முடிப்பதும்
இனியும் என்னாலாகாது.
போதுமென்னை விட்டுவிடு.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கவிதை and tagged . Bookmark the permalink.

8 Responses to முற்றுப்புள்ளி

 1. லக்ஷ்மி சொல்கிறார்:

  மகா, இப்போது பின்னூட்டமிட வழி செய்துவிட்டேன். தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம். முன்பெல்லாம் பின்னூட்டப்பெட்டி தன்னியல்பாகவே திறந்திருக்கும். இப்போது அந்த அமைப்பில் ஏதோ மாற்றம் போலிருக்கிறது. அதுதான் இந்த சிக்கல். இது என் தனி வாழ்வின் வலி பற்றியது என்றாலும் கூட ஒரு படைப்பாக மற்றவர்களின் விமர்சனத்துக்குட்பட்டதே. உங்களது ஆதரவான மடலுக்கு நன்றி மகா.

 2. மகா சொல்கிறார்:

  உங்களின் பின்னூட்டம் பார்த்ததும், சந்தோசமாயிருக்கிறது.விமர்சனமெல்லாம் பிறகு எழுதுகிறேன்.

 3. அய்யனார் சொல்கிறார்:

  நல்லாருக்குங்க..:)கவிதை வடிவம் வேணுமின்னா சில வார்த்தைகளை அப்படி இப்படி மாத்திபோடனும் சிலது கழட்டி விடனும் அவ்வளவுதான் ..கருத்து முக்கியம்னா இது நல்லாத்தான் இருக்கு.விமர்சிக்க என்னங்க இருக்கு சொந்த வலின்னிட்ட பிறகு. பெட்டர் இதெல்லாம் பகிர்ந்துக்க வேணாம் ஏன்னா கவிதை படிக்கும்போது உங்களை முன்நிறுத்துவதை தவிர்க்கனும்.

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  நன்றி அய்யனார், மகா. அய்யனார், பின்னூட்டப்பெட்டி மூடியிருந்ததால நான் இந்த படைப்பை பத்தி மத்தவங்க கருத்தை விரும்பலையோன்னு நினைக்க கூடாதுங்கறதைத்தான் சொல்ல வந்தேன். மொத்த கவிதைல என்னோட வலியும் ஒரு சொட்டு கலந்திருக்கு. மத்தபடி அது பொதுமைபடுத்தப்பட்ட ஒரு படைப்பு. So, விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் நான் என் வழமையான கவிதைகளிலிருந்து ஒரு மாற்றமும் இதில் செய்திருக்கிறேன். எனவே யாராவது கண்டுபிடிக்கிறீர்களா என்றும் தெரிந்துகொள்ள ஒரு ஆவல்.

 5. ஆழியூரான். சொல்கிறார்:

  வழமையிலிருந்து விலகி நீங்கள் கவிதையில் செய்திருப்பதாக சொல்லும் மாற்றத்தை புரிந்துகொள்ள இயலவில்லை. மற்றபடி உணர்வுகளை கடத்துகின்றன வார்த்தைகள்.

 6. குருத்து சொல்கிறார்:

  உறவுகளில் கணவன் – மனைவி பந்தம் நுட்பமானது. உணர்ச்சிமயமானது. நம் நாட்டில் சிக்கலானதும்.இந்த உறவில், சம்பந்தப்பட்ட நபர்களின் ஆளுமை தான், சரியாகவோ, தவறாகவோ வழிநடத்தும்.இந்த கவிதையில், பிரிவதும், சேர்வதும் என்ற நிகழ்வில்“போதுமென்னை விட்டுவிடு” வார்த்தைகள் தரும் உணர்வு, மீண்டும் இணைவார்கள் என்றே எனக்குப் படுகிறது.

 7. லக்ஷ்மி சொல்கிறார்:

  சாக்ரடீஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //நம் நாட்டில் சிக்கலானதும்.// ரொம்பவே சரிதான் – அதுவும் சுற்றியிருப்பவர்களின் கைவண்ணம் இந்த சிக்கல்களில் அதிகம். சிக்கலை எடுப்பதாய் சொல்லியே அதை அவர்கள் செய்வதுதான் இன்னும் கொடுமை. ஆழியூரான், வழக்கமாய் எனது கவிதைகள் வெறும் உவமைகளாலேயே நிரப்பப்படுவதாய் என் நண்பர்களிடையே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே அதை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கிறேன் இப்போதெல்லாம். ஆனால் இங்கேயும் ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதை வலுக்கட்டாயமாய் நீக்க வேண்டாமேயென்று விட்டுவிட்டேன். அதனால்தான் யாருக்குமே எதுவுமே வித்தியாசமாய் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். 😦

 8. காயத்ரி சித்தார்த் சொல்கிறார்:

  //இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தைமீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.//மன்னிச்சுக்குங்க லக்ஷ்மி.. ரொம்ப லேட்டா வந்திருக்கேன் உங்க பதிவுக்கு! செமயா இருக்குங்க உங்க கவிதை!! (நல்லாயிருக்குன்னு அர்த்தம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s