படித்ததில் பிடித்தது (2)


புத்தகம் – ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
ஆசிரியர் – இந்திரா பார்த்தசாரதி
வகை – குறு நாவல்
வெளியான ஆண்டு – 1971

இப்போது மீள் பதிப்பாக கிழக்கு மூலம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி நாட்களில் எங்கள் மாவட்ட மைய நூலகத்தில் படித்த நூல். அநேகமாய் நான் படித்த இரண்டாவது இ.பா நாவல். முதன்முறையாக படித்தது – வேர்ப்பற்று. நல்ல காட்டமான அரசியல் வாசனை வீசும் நாவல். இதுவோ காதல், அது சம்பந்தமான மனோரீதியிலான குழப்பங்கள் என்று போகும் கதை. அட, இவர் நல்லாவே எழுதுகிறாரே என்ற ஆச்சரியத்தை அளித்த நாவலிது. பிறகுதான் இவரது புத்தகங்களனைத்தையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய கடைசி புத்தகமான கிருஷ்ணா கிருஷ்ணா வரை ஒரளவு இவரது எல்லா புத்தகங்களையும் படித்தாயிற்று. நாவல்கள் மட்டுமல்ல அவுரங்கசீப், ராமானுஜர் போன்ற சிறந்த நாடகங்களையும் எழுதியிருக்கும் இவர் வைணவத்தில் தமிழின் பங்கு குறித்து ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் பங்களித்து வருகிறார்.

இந்த நாவலின் முதல் பதிப்புக்கு முன்னுரை எழுதியவர் தி.ஜா. இதோ அவரது முன்னுரை.

*********************************************
தி.ஜாவின் முன்னுரை.
********************************************

இந்த கதையை படித்து முடித்தவுடன் ஆசிரியர் ஏன் ஜெட் விமானங்கள் தரை இறங்கி விட்டன என்று தலைப்பு வைக்கவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அமிர்தத்தை போன்ற மனிதர்களுக்கு கோழி பறக்கும் உயரம்தான் பறக்க முடியும். டில்லியில் பெரிய ஆபிசராக இருக்கிறாரே என்பதற்காக ஹெலிகாப்டர் என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.

அமிர்தத்தின் தர்மசங்கடம் அல்லது அதர்மசங்கடம், முக்காலே மூணுவாசி ஆண்களுக்கு ஏற்படுவதுதான். இது, பெண்களுக்கும் உண்டு. ஆனால் நான் பெண்ணாக இல்லாததால் சதவீதக் கணக்கு சரியாக தெரியவில்லை. இது புதிய சங்கடமும் இல்லை. திலகம் சொல்கிற நாற்பது வயதில் நாய் குணம் என்பது பழமொழியாக ஒலிப்பதால், இந்த சங்கடமும் பழையது. அதை மனிதர்கள் புரிந்துகொண்டிருப்பதும் பழையதுதான் என்பது புரிகிறது.

ஆனால், இந்த காலத்து ஆணும் பெண்ணும் அசுர வேகத்திலும், மேலைநாடுகள் சுதந்திரத்தை பற்றி தந்துள்ள புதிய சிந்தனை மரபுகளிலும், தொழில் நாகரீகம் வளர்ந்துள்ள வசதிகளிலும், தான் உண்டு தன் காரியம் உண்டு என்ற பெருநகர்களுக்கு உரித்தான சுயேச்சைகளிலும் வாழ்ந்து வருவதால் இந்த பழைய சங்கடம் ஆத்மிக சுதந்திரம், தனிமனித சுதந்திரம் முதலிய பல புதிய பெயர்கொண்ட போர்வைகளை போர்த்து இந்த காலத்து மனிதர்களை அலைக்கழிக்கின்றன. அமிர்தம் டெல்லி சமூகத்தின் விழிகளை கற்பனை செய்து, கோழையாகி விடுகின்றான். அதாவது டில்லியில் கூட சுயேச்சை பலிக்காது. கோழை என்று பானு சொல்கிறாள். ஆனால், கோழைத்தனம், தைரியம் என்ற இரண்டும் என்ன என்று கருக்காகத் தீர்மானிப்பது கஷ்டம்.

இந்த உளைச்சல்களை அப்படியே வரைந்திருக்கிறார் ஆசிரியர். கோழையா, தைரியசாலியா என்ற சந்தேகத்தின் சின்னமாக, கதையின் கடைசி வரியில் டெலிபோன் ஒலிக்கிறது. அதை யார் அடித்திருப்பார்கள்? பானுவா, அவள் அம்மாவா, திலகமா? பிரமையா? – நமக்கு தெரிய வேண்டியதில்லை. இந்த சந்தேகம்தான் சரியான விடை. எது தைரியம், எது கோழைத்தனம் என்ற சந்தேகத்துக்கு ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விடை கிடைக்கும்.

தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும், எழுத்து ஜெட் வேகத்தில் பாய்கிறது. 1960க்கும் பிறகு வாசகர்களுக்கு அறிமுகமான சில முண்னணி படைப்பாசிரியர்களில், இந்திரா பார்த்தசாரதிக்கே உரிய தனி வேகமிது. அழுத்தமும் சிந்தனையாழமும் கலந்த வேகம் அபூர்வமான சேர்க்கை. சிந்தனையாழம் என்றால், படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரளமாக வாசிப்பது, கட்டாயம் கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இந்திரா பார்த்தசாரதியை படிக்கும் போது இது புரியும். இதற்காக அவரை இன்னொருமுறை வாழ்த்த வேண்டும்.

புதிய யுகத்தின் சவால்களை தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கவில்லை என்று எத்தனையோ பேர் குறை சொல்கிறார்கள். புதிய மாறுதல்களின் புற வடிவுகளை காண்பதைவிட அகவடிவங்களை கண்டு படைப்பாக மாற்றுவது சிரமமான காரியம். இந்திரா பார்த்தசாரதி, அகவடிவங்களை காண்கிறார். அதன் ஆழங்களையும் கண்டு கலை உருக்கொடுக்கிறார்; அபார வெற்றியுடன் கொடுக்கிறார். எதையும் தொழ மறுக்கும் அவருடைய கிண்டலும் தனித்து நிற்கிற போக்கும் அந்த வெற்றிக்கு உதவுகின்றன.

************************************

அமிர்தம் கதாநாயகன். மொத்தம் 3 பெண் பாத்திரங்கள். அவர்களுடனான அவனது உறவுதான் கதையே. முதல் பெண் நித்யா. முதல் காதலி. தன்னம்பிக்கை மிக்க துடிப்பான பெண். அழகான பெண்ணும் கூட. சற்றே தாழ்வு மனப்பான்மையும் கூச்ச சுபாவமும் உடைய அமிர்தத்தால் அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அப்பா சொல்லை தட்ட முடியாமல் தன் முறைப்பெண் திலகத்தை மணந்து கொள்கிறான். ரொம்பவே சராசரித்தனமான எதிர்பார்ப்புகளும் ரசனைகளுமுள்ள பெண்மணி திலகம். அவளுடனான வாழ்விலும் அவனுக்கு நிறைவில்லை. பழைய காதலியை எண்ணி ஏங்குகிறான். இதற்கு நடுவில் இன்னொரு பெண் – பானுவை சந்திக்கிறார். பழைய காதலி நித்யாவை நினைவுபடுத்தும் அழகு, வசீகரம், துள்ளல் , தன்னம்பிக்கை மிக்க பெண். இப்போது ஒரு திருப்பம். அமிர்தத்தின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்,

“என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்… அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல்துடிப்பை மீண்டும் நடைமுறையாக்கி வாழமுடியுமா என்பதுதான் என் பரிசோதனை… கடந்து போன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கிறான்..”

இந்த முயற்சியில் அவன் பரிதாபமாக தோற்கிறான். இப்போது கடைசியில் அவனுக்கு யார் கைகொடுக்கப் போகிறார்கள் – திலகமா இல்லை பானுவா என்பதை நம் அனுமானத்திற்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். அதுதான் தி.ஜா தன்னுடைய முன்னுரையில் சொல்லியிருக்கும் டெலிபோன் சஸ்பென்ஸ்.

என்னடா விமர்சன உலகின் விதிகளுக்கு மாறா முழு கதையையும் சொல்லிவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா? இதொன்றும் திரில்லர் கதை கிடையாது. நான்கு வரிகளுக்குள் முடிந்துவிடும் இந்த கதைய இ.பா சொல்லியிருக்கும் விதம்தான் அழகே. அதுனால கதை தெரிஞ்சு போனால் சுவாரசியம் போயிடும் என்கிற சால்ஜாப்பெல்லாம் சாத்தியமேயில்லை. அமிர்தம் – நித்யா/பானு இடையிலான அறிவார்ந்த வார்த்தை விளையாட்டுக்களாகட்டும் அமிர்தம் – திலகம் இடையிலான அறிவுஜீவி Vs ரசனையற்ற மனைவி ரக உரையாடல்கள் என்று எல்லா இயல்பு மாறாத, அதே சமயம் கவிதைத்தனம் விரவிய நடை.

ஒரு அபத்தமான தமிழ் நாடகமொன்றுக்கு தன்னை அழைத்துச்செல்லக் கோரும் மனைவியின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பின் செல்லும் போது அமிர்தம் எண்ணுவது இது.

“என்ன அப்படி பாக்கறீங்க? புறப்படுங்க, நாடகத்துக்கு நேரமாச்சு.”

கிளம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னாலும் அவள் விடமாட்டாள். நாடகம் எப்படியிருக்குமென்பது அவன் அறிந்ததுதான். ஒரு ரசனையற்ற மனைவிக்கு கணவனாக இருப்பது என்பது பெரிய தியாகம்!திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம். திலகத்தை கேட்டால், ஒரு மூச்சில் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிடுவாள். “ஒவ்வொருத்தர் மாதிரி நீங்க இருக்கீங்களா? எனக்கு பிடிச்சது எதுவும் உங்களுக்கு பிடிக்காது. எப்போ பார்த்தாலும் மௌனச்சாமியார் மாதிரி ஒரு புஸ்தகத்தை வச்சுகிட்டு உக்காந்துடறீங்க. எங்கயாவது கூட்டீட்டு போங்கன்னா பலி பீடத்துக்கு போற ஆடு மாதிரி கூட வர்றீங்க…. ஒரு சந்தோஷம், பொண்டாட்டியோட வெளில போறோமேன்னு ஒரு உற்சாகம், உஹூம்….”

தன்னுடைய பிரச்சனைகளை பற்றி அமிர்தம் தன் நண்பன் பானர்ஜியிடம் விவாதிக்கும் போது நடக்கும் உரையாடல் இது.

பானர்ஜி சொன்னான் “இன்னும் எனக்கு உன் பிரச்சனை புரியவில்லை.”

“பார்க்கப்போனால் நான் உன்னை கேட்கலாமென்றிருந்தேன், என் பிரச்சனை என்னவென்று…”

“உன் பிரச்சனை நீதான்…” என்றான் பானர்ஜி, நிதானமாக.

“எனக்கு புரிகிறது. ஒவ்வொருவருடைய குணச்சித்திரமும் அவருக்கு விதியாக அமைவதை யாராலும் மாற்ற முடியாது.”

“ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் போல தனி மொழியில் பேச ஆரம்பித்துவிடாதே. ஒரு பெண்ணை காதலித்தாய். கை விட்டாய். இன்னொரு பெண்ணை மணந்தாய். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, போலி வாழ்க்கை அது இது என்று வேறொருத்தியை கண்ட அனுபவமாகிய போதி மரத்தடியில் உனக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. உன் பலஹீனத்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தீர்மானம் செய்யமுடியாத கையாலாகாத்தனத்துக்கு குணசித்திரம், விதி என்றூ ஏதேதோ சொல்லி மனச் சமாதானம் அடைகிறாய்… உன்னை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது” என்றான் பானர்ஜி.

இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் – இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம்(சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)

யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று – கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in படித்ததில் பிடித்தது and tagged , , , . Bookmark the permalink.

25 Responses to படித்ததில் பிடித்தது (2)

 1. Radha Sriram says:

  //தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள்//அருமையான அறிமுகம் லக்ஷ்மி..கண்டிப்பாக வாங்கி படிக்கிரேன்!! அழகாக தெளிவாக இருக்கிறது உங்கள் எழுத்து!

 2. அபி அப்பா says:

  .

 3. லக்ஷ்மி says:

  நன்றி ராதா, வருகைக்கும் என் வார்த்தைய நம்பி வாங்கி படிக்கறதா சொன்னதுக்கும்.அபி அப்பா, என்னாதிது?!?!?! உங்களை கும்முறதுக்குன்னே ஆளுங்க திரியறப்போ இப்படியெல்லாம் கமென்ட் போட்டு நீங்களாவே மாட்டிக்கிறீங்களே, நியாயமா?

 4. அய்யனார் says:

  எளிமையான தரமான புத்தகங்களா அறிமுகம் செய்து வைப்பதற்க்கு நன்றி லகஷ்மி..இந்த நாவல் இ.பா வோட முக்கியமான நாவல் எனக்கு மிகவும் பிடித்ததும் கூட.குருதிப்புனல்,ஏசுவின் தோழர்கள் இவரது மற்ற சிறந்த படைப்புகள்.இந்த தலைப்பை ஒத்த தரையில் இறங்கும் விமானங்கள் னு இந்துமதியோட ஒரு நாவல் படிச்சிருக்கிங்களா? என்னோட all time fav. ரமேஷ் ப்ரேம் ,ஓரென் பாமுக் னு வாசிப்பு விரிவடைஞ்சாலும் இன்னும் மனசு நெகிழ வைக்கும் இந்த புத்தகம் முடிஞ்சா அந்த நாவல் பத்தியும் எழுதுங்க

 5. நொந்தகுமாரன் says:

  ..– இது அபி அப்பாவுக்காக.அவர் ஒரு புள்ளி வைச்சா, நான் ரெண்டு புள்ளி வைப்பேன்.நான் விடாது கருப்பு. படிச்சுட்டு, கருத்து சொல்லுற வரைக்கும், விடமாட்டேன்.

 6. அபி அப்பா says:

  ஹய்யோ! நொந்தகுமாரன் அய்யா, கஷ்டப்பட்டு ஒருத்தவங்க ஒரு பதிவு போட்டா அவங்க 4 பேர் வந்து ந்ம்ம பதிவை படிக்கனும்ன்னு எதிபார்ப்பாங்க. நான் இங்கே மல்டி டாஸ்க்லே படிச்சுடுவேன். ஆனா பின்னூட்டம் போட டைம் இருக்காது. அதனால “லெஷ்மிங்க லெஷ்மிங்க நான் படிச்சுட்டேன் இப்போ டைம் இல்ல பின்னூட்டம் போட பின்ன வர்ரேன்”ன்னு அர்த்தம் அந்த புள்ளிக்கு…

 7. நந்தா says:

  இந்திரா பார்த்தசாரதி. எனக்குப் பிடித்த எழுத்தாளார்களில் ஒருவர். அவரது குருதிப் புனல், வேர்ப்பற்று, தந்திர பூமி ஆகியவை எனக்குப் பிடித்தவைகளில் ஒன்று. அவரது நாவல்களில் எனக்குப் புரியாதது ஒன்றுதான். அவரது எல்லாக் கதாபாத்திரங்களும் ஒரு மிகைப் படுத்தப் பட்ட அறிவு ஜீவித்தனமான கதாபாத்திரங்களாகவே இருப்பது போலத் தோன்றும்.அய்யனார் சொல்வது போல தலைப்பைக் கேட்டவுடன், இந்துமதியின் புத்த்கம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிய வில்லை.

 8. லக்ஷ்மி says:

  நன்றி அய்யனார், நொந்தகுமாரன், நந்தா.அய்யனார், இந்துமதியோட நாவலை பற்றியும் எழுத முயற்சிக்கிறேன். குருதிப்புனல், எழுதப்பட்ட விதத்தினால் மட்டுமல்லாது எழுதக்காரணமாயிருந்த நிகழ்வு காரணமாவுமே சிறப்பான நாவல்தான். அதை அடிப்படையா வச்சு ஒரு சினிமா கூட வந்தது, பேர் மறந்து போச்சு – கன்றாவியா இருந்தது படமாக்கிய விதம். ஒரே ஒரு பாட்டு ரொம்ப நல்லா இருக்கும் – மனிதா மனிதா அப்படின்னு ஆரம்பிக்கிற பாட்டு. அது மட்டுந்தான் நினைவிலிருக்கு.நந்தா, நீங்கள் சொல்வது உண்மையே. ஒரு அதீதமான அறிவுஜீவித்தனம் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்திலேனும் இருக்கும். அதோடு மத்திய வர்க்க பிராமண குடும்பங்களின் மதிப்புகள், நம்பிக்கைகள் இவற்றின் மீது அவருக்கு இருக்கும் எள்ளலும் தவறாம இருக்கும். இந்த இரண்டாவது பாதிப்பு சுஜாதா கிட்டயும் கொஞ்சமிருக்கும் – அவரோட மத்யமர் சிறுகதை தொகுப்புல இதை கவனிக்கலாம். நீங்க சொல்ற அந்த அறிவுஜீவித்தனம்தான் இவரது கதைகளின் மெலிதான செயற்கைத்தனத்துக்கு காரணமோன்னு தோணும் எனக்கு.நொந்தகுமாரன், பத்தீங்களா, அபி அப்பா நீங்க வச்ச புள்ளிக்கும் சேர்த்து கோலம் போட்டுட்டு போயிட்டார்? அது சரி, எப்போ பார்த்தாலும் அவரை குத்தம் சொல்லிட்டே இருக்கீங்களே தவிர பதிவை பத்தின உங்க கருத்தை பத்தி மட்டும் வாயே திறக்க மாட்டேங்கறீங்களே, நியாயமா?

 9. நொந்தகுமாரன் says:

  //ஹய்யோ! நொந்தகுமாரன் அய்யா,//நான் அவ்வளவு வயசானவனில்லை. அபியை விட இரண்டு மாதம் சின்னவன் தான்.பிறகு, ஞாபகப்படுத்துறேன். இன்னும் நீங்க கருத்து சொல்லல!//பதிவை பத்தின உங்க கருத்தை பத்தி மட்டும் வாயே திறக்க மாட்டேங்கறீங்களே, நியாயமா? //நான் என் கருத்தை சொல்லிகிட்டுத்தான் இருக்கேன் வேறு பெயரில். நான் யார்? என்பது என் பிளாக்கை படியுங்கள். நான் நந்தாவாகவும் இருக்கலாம். கவிஞர் அய்யனாராகவும் இருக்கலாம். ஒருவேளை லட்சுமியாகக் கூட இருக்கலாம்.நான் ஒரு ஸ்பிளிட் பர்சனாலிட் ஆன ஆள். ஸ்பிளிட் ஆனாலும், அதுக்கு ஒரு கருத்து இருக்கும்ல! இப்பத்தான் படிச்சேன். சொல்றேன். காத்திருங்க!டிரைலர் : கீழ் வெண்மணியில் 44 மனித உயிர்களை, கோபால நாயக்கர் என்ற பண்ணையார் தலைமையில் ஒரே வீட்டில் உயிரோடு கொளுத்திய சம்பவப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் குருதிப்புனல் படிச்சுட்டு, பிடிக்காமல் போன எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. தமிழக கம்யுண்டிஸ்டுகள் இவரது நாவலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மேற்குவங்கம் கம்யுனிஸ்ட் அரசாங்கம் பாராட்டி விருது கொடுத்ததாய் நினைவு.

 10. நந்தா says:

  ஆமாம் லட்சுமி. அவருடைய்ய கடையின் பெரும்பாலான் கதாபாத்திரங்கள் பிராமண வகுப்பைச் சார்ந்ததாகவே இருக்கும். அதுவும் தந்திர பூமியில் பார்த்தீங்கன்னா எல்லா கேரக்டருமே intellectual டைப்லயே இருப்பாங்க. உண்மையை சொல்லப் போனா அதுல முட்டாளை மாதிரி காண்பிக்கற கேரக்டரே ரொம்ப அறிவாளியாதான் இருக்கும். தந்திர பூமி விஜயன், மீனா போன்ற கேரக்டர்கள் அதற்கு எடுத்துக் காட்டு. 20 வயசு பையன் தஞ்சாவூர்ல இருந்துகிட்டு, ஜெர்மனியோட பிரச்சினைகளையும், அமெரிக்காவோட வெளியுறவுக் கொள்கையைப் பற்றியும் விமர்சனம் பண்ற மாதிரி ஒரு முரண் இருக்கும்.இந்த முரண்பாடுகள் இருந்தாலும், அந்த விசாலமான பார்வைக்காவே அவரது நாவல்களைப் படிக்கத் தவறுவதில்லை.

 11. காளி says:

  இயலாமையை…முகத்தில் அறையற மாதிரி..சொன்ன நாவல்..என்னுடைய Favourite கூட..அடுத்து எதை பற்றி எழுதுவீர்களோ என்று யோசிக்க வைக்கிறது…லட்சுமி..பாராட்டுக்க்ள்நண்பர்கள் சொன்ன இந்துமதியோட நாவல்…Additional information..Thanks for sharing.

 12. செல்வநாயகி says:

  நொந்தகுமாரன் சொல்வது சரியே. குருதிப்புனல் எழுதப்பட்டதில் இருந்த பிழைகள் காரணமாகவே இதற்குப் பதிலடியாய் “செந்நெல்” நாவல் எழுதப்பட்டது. அதை எழுதியவர் பெயர் இப்போதைக்கு நினைவுக்கு வரவில்லை. கம்யூனிஸ்டு அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர் “செந்நெல்” ஆசிரியர்.குருதிப்புனல் படித்திருக்கும் நீங்கள் “செந்நெல்” லும் கிடைக்கிறபோது படித்தால் இரண்டு நாவல்களும் முன்வைக்கும் விசயங்களில் உள்ள வேறுபாட்டைப் புரியமுடியும்.

 13. அய்யனார் says:

  இந்த அறிவுஜீவித்தன கதாபாத்திரம் ஒண்ணு நினைவுக்கு வருது .இ.பா நாவல் தான்னு நெனக்கிறேன் .ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வீணை கலைஞன் அவனோட சிக்கலான அனுகுமுறை தான் மொத்த நாவலும் அவனுக்கும் அவன் அம்மா விற்க்கும் திடீர்னு அவன் காதல் வயப்படுற ஏழைப் பெண் ஒருத்திக்கும் ஏற்படுகிற சிக்கல்கள் தான் நாவல் ( அந்த பெண் பேர் ஜானகி 🙂 பொண்ணுங்க பேர மட்டும் மறக்கிறதே இல்ல )நாவல் பேர் என்னன்னு சொல்லுங்க மக்கா

 14. காளி says:

  //குருதிப்புனல், எழுதப்பட்ட விதத்தினால் மட்டுமல்லாது எழுதக்காரணமாயிருந்த நிகழ்வு காரணமாவுமே சிறப்பான நாவல்தான். அதை அடிப்படையா வச்சு ஒரு சினிமா கூட வந்தது, பேர் மறந்து போச்சு – கன்றாவியா இருந்தது படமாக்கிய விதம். ஒரே ஒரு பாட்டு ரொம்ப நல்லா இருக்கும் – மனிதா மனிதா அப்படின்னு ஆரம்பிக்கிற பாட்டு. அது மட்டுந்தான் நினைவிலிருக்கு.//அந்த படம்….‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’??பாடல்…‘மனிதா மனிதா ..இனி உன் விழிகள் “….தூதர்ஷனில் எப்போதோ பார்த்தது…பாடல் வைரமுத்து…பாட்டு நல்லா இருக்கும்…

 15. லக்ஷ்மி says:

  அய்யனார், இ.பா நாவலேதான் அது. எனக்கும் நாவல் பேர் நினைவில்லை. ஆனால், கதை நினைவிலிருக்கு. அவன் காதலிக்கறது ஏழைப்பெண்ணை இல்லை – ஜானகின்ற அறிவு ஜீவிப்பெண்ணைத்தான். அவ பேர் ஜானகி. ஆனா ஒரு சலிப்பில அவன் ஒரு ஏழைப்பொண்ணை – அவ பேர் கோகிலா கல்யாணம் பண்ணிப்பான். அவன் வீணை வித்வான் மட்டுமில்லை – எந்த கலையையும் குறுகிய காலத்தில் கற்று தேர்ந்துவிடும் ப்ராடிஜி அதே சமயத்தில் அவனோட நிபுணத்துவம் எப்போ முழுமையடையுதோ அந்த நிமிஷத்திலேயே அந்த ஆர்வம் அவனை விட்டு போயிடும். இந்த உளவியல் சிக்கல்தான் நாவலோட கருவே. அருமையான நாவல். பேர் யாருக்காவது நினைவு வந்தால் பகிரலாமே? தேட உதவியா இருக்கும். ஆமாம் நந்தா, அந்த அதீத அறிவுஜீவித்தனமே ஒரு விதத்தில் ஈர்ப்பை தருது. அவரோட இன்னொரு வழக்கம் என்னன்னா, கதையோட முடிவுன்னு ஒன்னு – கல்யாணம் பண்ணிக்கொண்டு சுகமாக வாழ்ந்தார்கள், இல்லை அவன் அவள் நினைவுலேயே வாழ்க்கையை கழிக்கறதுன்னு முடிவு பண்ணினான் போன்ற அபத்தமான சுப/அசுப முடிவுகள் இருக்காது. சில கதாபாத்திரங்களோட வாழ்வை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு படம் பிடிச்சுட்டு வந்து நமக்கு காட்டற தோரணைலதான் இருக்கும். இவரோட கதை முடிவுக்கப்புறமும் அவங்க வாழ்க்கை அது பாட்டுல போயிட்டிருக்கும். இந்த வகை முடிவுகள்தான் எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே.நொந்தகுமாரன், டிரைலரே ரொம்ப தகவல்களோட இருக்கே. உங்களோட முழு கமென்ட்டையும் ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

 16. லக்ஷ்மி says:

  நன்றி காளி. எனக்குமே இயலாமையை ஒப்புக்கறதுல இருக்கற தைரியம் ரொம்ப பிடிக்கும்.//அடுத்து எதை பற்றி எழுதுவீர்களோ என்று யோசிக்க வைக்கிறது..// யோசிச்சுகிட்டேயிருங்க, விரைவில் வரேன்.

 17. அய்யனார் says:

  ஞாபகம் வந்திடுச்சி..:)ஆகாயத் தாமரை அந்த நாவல் பேரு..ஆமாமில்ல கோகிலா ..ஆனா கல்யாணம் பண்ணிக்கிறானா?எல்லாம் ரெடியாகும் பட் பண்ணிக்க மாட்டான்னு நினைவு..மறந்திடுச்சி 🙂அசோகமித்திரன் இதே பேர்ல ஒரு நாவல் எழுதியிருப்பர் (ஆகாயத் தாமரை எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்ச நாவல்) அந்த நாவலோட ஆரம்ப வரிகள் இன்னும் ஞாபகமிருக்குபழசல்லாம் ஞாபகப்படுத்தற உங்களோட பதிவுக்கும் பகிர்தலுக்கும் நன்றி

 18. நந்தா says:

  //அவன் வீணை வித்வான் மட்டுமில்லை – எந்த கலையையும் குறுகிய காலத்தில் கற்று தேர்ந்துவிடும் ப்ராடிஜி அதே சமயத்தில் அவனோட நிபுணத்துவம் எப்போ முழுமையடையுதோ அந்த நிமிஷத்திலேயே அந்த ஆர்வம் அவனை விட்டு போயிடும். இந்த உளவியல் சிக்கல்தான் நாவலோட கருவே. அருமையான நாவல். பேர் யாருக்காவது நினைவு வந்தால் பகிரலாமே? தேட உதவியா இருக்கும். //எனக்கு இந்த நாவல் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் இதைப் படித்தவுடன் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது. எண்டமூரியின் காஸனோவா என்று ஒரு நாவல். அதன் ஹீரோ ஸ்வப்ன மித்ரா க்கும் ஏறக்குறைய இதே போன்று ஒரு வியாதி இருக்கும்.பெண்களிடம் தேடித் தேடிப் போய் பழக்கம் செய்து கொள்வான். ஆனால் எந்த பெண்ணாவது அவனைத் திருப்பிக் காதலிக்கத் தொடங்கி விட்டால், அவனுக்கு அந்த பெண்ணின் மீதுள்ள ஈர்ப்பு போய் விடும். இந்த உளவியல் பிரச்சினைக்கு காஸனோவா என்று ஆசிரியர் சொல்வார். அப்புறம் கீழ வெண்மணியில் நடந்த கொடுமைகளைப் பற்றிய ஒரு ஆவ்ணப் படம் கூட எடுத்தார்கள். அது க்குட DVD யாக கைவசம் இருக்கிறது. //யோசிச்சுகிட்டேயிருங்க, விரைவில் வரேன். //காத்துட்டிருக்கோம். எவ்வளவு பேசினாலும் புத்தகங்களின் மீதுள்ள ஈர்ப்பு மட்டும் அட்ங்க மாட்டேங்கிறது.

 19. லக்ஷ்மி says:

  மேலதிக தகவலுக்கு நன்றி செல்வநாயகி. தேடிபிடித்து வாங்கி விடுகிறேன் செந்நெல் நாவலை. கரெக்டா பேரை கண்டுபிடிச்சுட்டீங்களே அய்யனார், நன்றி. அவன் அந்த பெண்ணை திருமணம் செஞ்சுப்பான் ஆனா அவளால அந்தவீட்டு நடைமுறைகளேற்படுத்தும் மன அழுத்தம் தாங்க முடியாம போயிடும். தற்கொலை செஞ்சுப்பா அந்த பொண்ணு. 😦ஆமாம், நந்தா. புத்தகப்பிரியர்களுக்கு அதை பத்தி பேசறது கூட ஒரு போதைதான் – என்ன ஒன்னு ஆரோக்கியமான போதை.

 20. குருத்து says:

  நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துகிற, உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.கடந்த 7,8 வருடங்களாக, திருமணம், மற்றும் எந்த விழாவுக்கு சென்றாலும், புத்தகங்கள் தருவதைத் தான் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.சந்திக்கும் பொழுது, என்ன புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் வழக்கமாக்கி கொண்டிருக்கிறேன்.உங்களுடைய கனிமொழி அரசியல் பிரவேசம் குறித்தானக் கட்டுரை பூங்காவில் வெளிவந்திருக்கிறது. பார்த்தீர்களா? பாராட்டுக்கள்.தமிழ்மண பதிவுகள் தொடர்பான கட்டுரையில், உங்களைப் பற்றி செல்வநாயகி அவர்கள் சிறப்பான முறையில் குறிப்பிட்டு இருக்கிறார்.//கம்யூனிஸ்டு அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர் “செந்நெல்” ஆசிரியர்//புத்தகத்தின் பெயர் செந்நெல் ஆசிரியர் சோலை சுந்தரபெருமாள் வகை நாவல் பதிப்பகம் வண்டல்/கமலம் பதிப்பகம் பக்கங்கள் 208 விலை ரூ.45 முதல் பதிப்பு 1999 விற்பனை நிலவரம் – விற்பனையிலுள்ளது சோலை சுந்தரபெருமாள் – மக்கள் கலை இலக்கியம் சார்ந்தவர் அல்ல!

 21. குருத்து says:

  //ஆமாம் நந்தா. புத்தகங்களின் மேல் காதல் கொண்டவர்களுக்கு அது ஒரு வெளிவர முடியாத போதைதான் //வெளிவர முடியாதுதான். ஆனால், தொடர்ச்சியான படிப்பு நம்மை புத்தகப்புழுவாய் மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.புத்தகங்களின் மீதான நேசிப்பு, சமுகத்தின் மீதான நேசிப்பாய் மாறி, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடிய மனிதனாய் நம்மை உருமாற்றி கொள்ளவேண்டும்.

 22. லக்ஷ்மி says:

  தகவல்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி சாக்ரடீஸ். பூங்கா இதழை நீங்கள் சொன்னபின்புதான் கவனித்தேன். அதற்கும் ஒரு நன்றி. புத்தகங்கள் என்று நான் வெறும் பொழுதுபோக்கு சமாச்சாரங்களை மட்டுமே குறிப்பிடவில்லை. சமூக பொறுப்புணர்வு கொண்ட நூல்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஆனால் போராளியாக மாறுவது எல்லோருக்கும் சாத்தியமில்லையல்லவா? ஈடுபாடு – அல்லது ஆர்வம் என்கிற நிலை தாண்டி செயலில் ஈடுபடுதலென்பது வெறும் புத்தகங்களால் வந்துவிடாது என்பது என் எண்ணம்.

 23. Deepak Vasudevan says:

  லக்ஷ்மி: உங்கள் வலைப்பூக்கள் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கமும் மெல்ல மெல்ல பெருகும். ஓர்குட் (Orkut) போன்ற உபயோகமற்ற குழு அமைப்பு தளங்களில் (Social Networking Community) நேரத்தை வீணடிக்காது, புத்தகம் படிப்பது நல்லதல்லவா?

 24. Dubukku says:

  நல்ல ஆய்வு. தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.http://www.desipundit.com/2007/06/07/indiraparthasarathy/

 25. லக்ஷ்மி says:

  தீபக், அதிலேதும் சந்தேகமில்லை – புத்தகங்கள் நல்ல நண்பர்கள் . டுபுக்கு, பதிவுகளை படித்து பாராட்டுவதோடு அதை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்வதற்கும் நன்றிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s