அடங்க மறு


“அடங்க மறு – இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அநேகமாகத் தீவிரவாதியென்று – இல்லையா? அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால்???!?!?! அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா? ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் – அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.

http://archives.aaraamthinai.com/women/apr2000/apr18c.asp

http://bsubra.wordpress.com/2006/08/20/international-woman-of-the-year-vasantha-kandasamy/

இத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார்? சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார்? அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.

அடங்க மறு’! – எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது!’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.

நாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும்! இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க!’’

ஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா! வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்!

ஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை! ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..

‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.

வீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.

‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.

அதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது!’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.

‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.

அது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..

‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.

இவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை! அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்!

‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துடிக்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’

தீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.

மீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ்! அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.

மீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா!

‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக!

சரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா? எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.

நன்றி – அவள் விகடன்.
Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அடங்க மறு

 1. கையேடு சொல்கிறார்:

  பகிர்ந்ததற்கு நன்றி – பல புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்.

 2. ராஜ நடராஜன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் புதுயுகப் பெண்களே!அப்புறம் எனக்கு ஐ.ஐ.டி ல தெரிந்ததெல்லாம் ஒரு காலத்துல குட்டிக்கரணம் போட்ட அந்த நீச்சல் குளம்தான்.

 3. PPattian : புபட்டியன் சொல்கிறார்:

  இளவயதிலேயே நிரம்பிய தெளிவுடன் இருக்கிறார் மீனா. வாழ்த்துக்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி லக்ஷ்மி.

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  கையேடு, நட்டு, புபட்டியன் – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 5. டிசே த‌மிழ‌ன் சொல்கிறார்:

  வாசித்தேன். நன்றி லக்ஷ்மி.

 6. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கு நன்றி டி.சே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s