இன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி?


‘ஏண்டா நாயே இப்படி பண்ணே?’னு கேட்டதுக்கு, ‘மூணாவதா பையன் பொறப்பான்னு காத்திருந்தேன். ஆனா மூதேவி இல்ல பொறந்திருக்கு. அதான் கொன்னுட்டேன்’னு சொல்றான்’’

‘‘ஏற்கெனவே எனக்கு ஏகப்பட்டகடன். இதுல இந்தப் பொட்டச்சியையும் எப்படி வளர்க்கறதுனு தான் கொன்னுட்டேன்…’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி அதிர வைத்தான்.

சாதி ஒழிப்புப் பற்றியும் பெண்ணுரிமை பற்றியும் பேசப்படும் போதெல்லாம் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும் ஒரு கேள்வி இது – “எவ்வளவோ பேர் முன்னேறிட்டாங்க. இன்னமும் எதுக்குங்க இதையெல்லாம் பத்திப் பேசிகிட்டுத் திரியறீங்க நீங்க? உங்களை மாதிரி ஆளுங்கதான் இல்லாத ஒரு விஷயத்தை இன்னமும் எடுத்து வச்சுப் பேசறீங்க.” நல்ல வேளையாக இந்தப் புண்ணியவான்கள் ஏழ்மை ஒழிப்புக்கும் இதே வகையான வசனங்களைச் சொல்ல முடியவில்லை. அதுவே பெரிய விஷயமாக்கும்….

இதில் சாதிப் பிரச்சனை பற்றி பேச வேண்டியதின் அவசியத்தை இன்னமும் இருக்கும் இரட்டைக் குவளை முறையிலிருந்து திண்ணியம் சம்பவம் வரை எத்தனையோ விஷயங்கள் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் நான் பேச ஆரம்பித்தால் உடனே அகவாழ்வியலிலிருந்து புறவாழ்வியல் வரை புடலங்காய்ப் பொரியல் உட்பட சகல இயக்கவியல்களையும் கரைத்துக் குடித்த அதிமேதாவிகள் ஓடி வந்து அதைப் பற்றிய உனது பேச்செல்லாம் வெறும் பரிதாபம் காட்டும் பேச்சாய்தானிருக்குமென்று ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சரி, பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்ட காரணத்தால் நான் பெண்ணியம் பேச வேண்டியிருப்பதின் அவசியத்தையாவது சொல்லிவிட்டுப் போகிறேன் சாமி என்றாலும் கூட இதற்கும் ஒரு குதர்க்கம் சொல்லிக்கொண்டுதான் திரியப்போகிறார்கள். எனினும் மனதில் பட்டதைச் சொல்லாது விடும் கோழைத்தனம் எனக்கு வாய்க்காததால் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேனாக்கும். 🙂

இந்த வார ஜூ.வியில் ஒரு செய்தி – பெண் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் குழந்தையின் தந்தையே ஈவு, இரக்கம் இல்லாமல் அந்தப் பிஞ்சின் முகத்தில் தலைய ணையை அழுத்திக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான். தமிழ்நாட்டிலேயே பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இச்செய்தியின் தொடர்ச்சியாகத்தான் பதிவின் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் வாசங்களைச் சொல்லியிருக்கிறார் அந்த பாசமிகு தந்தை.

சரி, இது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்திதானே என்று அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். அதே கட்டுரையில் கீழே தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனரிடமும் மாவட்ட சமூக நல அலுவலரிடமும் எடுக்கப் பட்ட பேட்டி தரப்பட்டுள்ளது. அதையும் இங்கே தருகிறேன்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான‘பொதிகை’ அமைப்பின் இயக்குநர் லதாவிடம் பேசினோம். ‘‘தர்மபுரியில் பெண் சிசுக்கொலை ஒழிஞ்சிட்டுதுனு சொல்றது எல்லாம் சும்மா. நாங்க தினமும் ஃபீல்டுக்குப் போறப்ப ஜனங்க கதைகதையாச் சொல்றாங்க. பெண் குழந்தைனா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தவுடனே அதுக்கு பூ, பொட்டு எல்லாம் வெச்சு, பிறகு படுக்கையில் அதை கவுத்துப் போட்டுப் படுக்க வெச்சுட்டுப் போயிடறாங்க. அரை மணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா குழந்தை புரள முடியாம மூச்சு முட்டி செத்துப் போயிருக்கும். இந்த விஷயமெல்லாம் வெளியே வர்றதில்லை…’’ என்றார்.

தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலர் சாய்லட்சுமியிடம் பேசியபோது, ‘‘நாங்க ஊர்ஊரா விழிப்பு உணர்வுக் கூட்டம் போட்டதுல பொம்பளைங்க எல்லாம் மாறிட்டாங்க. ஆனா, இந்த ஆம்பளைங்கதான் பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவு சொன்னாலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் பண்ணிக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, கொள்ளி போட ஆண் வாரிசு வேணுமாம். குழந்தைகளுக்கு படிப்புக்கு ஏற்பாடு பண்றதோ சொத்து சேர்த்து வைக்கிறதோ இல்லை. கொள்ளி போட மட்டும் ஆம்புளைப் புள்ளை வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. முன்னைக்கு நிலைமை இப்ப பரவாயில்லை. நான் இங்க பொறுப்புக்கு வந்ததுக்கப்புறம் நடந்த முதல் சம்பவம் இதுதான். மத்தபடி பெரும்பாலும் பெண் குழந்தை பொறந்தா தொட்டில் குழந்தைகள் திட்டத்துல வந்து சேர்த்துடுவாங்க. இதுவரைக்கும் 996 குழந்தைங்களைத் தொட்டில் குழந்தை கள் திட்டத்துல சேர்த்திருக்காங்க. ரவி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஆண் வாரிசுன்னு சொல்லிக்கறதுக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளை இருக்கு. இருந்தும், கூடுதலா ஒரு பொட்டைப் பிள்ளையை பெத்துட்டோம்ங்கற கோபத்துல இப்படி நடந்துகிட்டது கொடூரமாத்தான் இருக்கு’’ என்றார்.

சமூக நல அலுவலரான சாய்லட்சுமியின் பேட்டியில் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்கிற வரியைப் பார்த்து கூட மகிழ்ந்துவிட முடியவில்லை. ஏனெனில் அதன் உண்மையான பொருள் – முன் அளவு இப்போது பெண் சிசுக் கொலை நடக்கவில்லைதான். ஆனால் அதற்காக எல்லாப் பெற்றோரும் ஆணும் பென்ணும் சமமெனக் கருதி பெண் குழந்தைகளை கொஞ்சி சீராட்டிட ஆரம்பித்துவிடவில்லை. கொலை செய்யும் பாவத்தைச் செய்யாது தொட்டில் குழந்தை திட்டத்தில் விட்டுச் செல்கின்றனர் – அனாதைகளாக. அதாவது பெண் குழந்தை ஒரு பாரமென்று கருதும் மனப்போக்கு மாறிடவில்லை. கொலைகள் அரசின் தலையீட்டால் தடுக்கப் பட்டு வருகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கூட அந்தத் தந்தை குடிபோதையில் இல்லாதிருந்திருந்தால் கொலைக்கு பதிலாக தாய்க்குத் தெரியாது அக்குழந்தையைக் கொண்டு போய அரசுத் தொட்டிலில் சேர்த்திருக்கும் ஆபத்தில்லாத வழியைத் தேர்ந்தெடுத்திருந்திருப்பார். அரசே குழந்தைகளை வளர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வாக வேண்டுமானால் இருக்கலாம். சரியான, நிரந்தர தீர்வு என்பது ஒவ்வொருவரும் ஆண் பெண் குழந்தைகளிடையே எந்த பேதமும் இல்லை என்பதை உணர்ந்து எந்தக் குழந்தை பிறந்தாலும் ஒன்றே எனக்கருதும் நாளல்லவா?

நான் பெரிய மாநகரில் மூன்று தொழிலதிபர்களையும், அவர்களின் மேனேஜர்களையும், அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் க்ளார்க்குள் நால்வரையும் அறிவேன். நான் பிறந்த சிற்றூரில் 15 குடும்பங்களை அறிவேன். அதற்கும் அடுத்த ஊரில் ஒரு 5 நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பெண் குழந்தைகளை பாராட்டி சீராட்டி வளர்க்கிறார்களாக்கும். எத்தனை வகை மனிதர்கள், எல்லாத் தரப்புக்கும் பிரதிநிதித்துவமிருக்கும்படித்தானே சாம்பிள் எடுத்துப் பார்த்துச் சொல்கிறேன், பெண் குழந்தைகளை வெறுக்கும் போக்கு மறைந்து விட்டது என்று? இன்னமும் ஏன் பெண்ணுரிமை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் மேடம் என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். என்ன செய்யட்டும் இது போலெல்லாம் பெருத்த நண்பர் வட்டமோ பரந்த உலக அறிவோ இல்லாத எனக்கு எங்கேனும் ஒரு மூலையிலிருந்தாவது இன்னமும் இது போன்ற கருத்தம்மாக்களின் கதை கதை காதில் விழுந்து தொலைக்கிறதே?

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

26 Responses to இன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி?

 1. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  😦 குப்புற போட்டு வைப்பாங்களா அடக்கொடுமையே.. எப்படிப்பட்ட மனசு அவங்களுக்கு… -\\என்ன செய்யட்டும் இது போலெல்லாம் பெருத்த நண்பர் வட்டமோ பரந்த உலக அறிவோ இல்லாத எனக்கு எங்கேனும் ஒரு மூலையிலிருந்தாவது இன்னமும் இது போன்ற கருத்தம்மாக்களின் கதை கதை காதில் விழுந்து தொலைக்கிறதே?//🙂

 2. லக்ஷ்மி சொல்கிறார்:

  படிக்கும் போதே குலை நடுங்குதில்ல, முத்து? கொடுமை…

 3. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  ரவி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஆண் வாரிசுன்னு சொல்லிக்கறதுக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளை இருக்கு. இருந்தும், கூடுதலா ஒரு பொட்டைப் பிள்ளையை பெத்துட்டோம்ங்கற கோபத்துல இப்படி நடந்துகிட்டது கொடூரமாத்தான் இருக்கு’’ //கொடுமை…அந்த ஆளுக்கு உடனடியாக ஆண்மையை அறவே நீக்கி அறுவை சிகிச்சை பண்ணிவிடனும். இல்லாவிட்டால் இதே போல் அடுத்தும் பண்ணுவான்.****பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு கிடைத்து…ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை சமூகத்தால் ‘உணரப்படும்’ போதுதான் இதெற்கெல்லாம் விடிவுகாலம் வரும்.

 4. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன். //பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு கிடைத்து…ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை சமூகத்தால் ‘உணரப்படும்’ போதுதான் இதெற்கெல்லாம் விடிவுகாலம் வரும்// ரொம்ப சரியான கருத்து. ஆனா அதுக்கு நாம போக வேண்டிய தொலைவு அதிகம். ஆனா இங்க அதைப் பத்தி ரொம்ப பேர் பேசக்கூட விரும்பலை – அப்புறம் எங்கேர்ந்து உணர்ந்து, திருந்தி….ஹ்ம்ம்…. பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு..

 5. மாசிலா சொல்கிறார்:

  உங்கள் பதிவின் முதல் பத்தியை படித்து மேற்கொண்டு தொடர்ந்து படிக்க தைரியமில்லாமல் …கண்களில் நீர் மல்க …கொடுமை. குலை நடுங்குகிறது. படிப்பறிவு என்பதைவிட பொது அறிவின்மையே இதன் அடிப்படை காரணம். இவர்களின் மனப்பிரம்மைகளுக்கு பச்சை குழந்தை என்ன செய்ய முடியும்?பாவம்!!!இது போன்ற கேள்விகளோடு நம் வாதங்களை முடித்துக்கொள்ள போகிறோமா? செயலில் இறங்குவோமா? இந்த 21ஆம் நூ.ஆ.டில் இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டு வருவதற்கு சமுதாயத்தின் அங்கததினரான நாம் அனைவருமே பொறுப்பேற்கவேண்டும்.😦

 6. Premalatha சொல்கிறார்:

  http://kathambamaalai.wordpress.com/2007/11/05/feminism-needed-or-not/நீங்க கதம்ப மாலை படிப்பீங்களான்னு எனக்குத் தெரியாது. அதான் உங்களுக்கு சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.

 7. பத்மா அர்விந்த் சொல்கிறார்:

  நான் இது போன்ற ஒரு சம்பவத்தை கேட்டிருக்கிறேன். எட்டாவதாகப் பிரசவிக்கும் போதே அம்மா இறந்துவிட, பெண் குழந்தையைஎப்படி வளர்ப்பது என்று ஒரு நாளே ஆன குழந்தையின் மூக்கில் நெல்மணியைத் திணித்து, ஈரத்தூணி போட்டு கொலை செய்த ஒரு சமபவம். என்னை ஆச்சரிய மூட்டுவது என்னவென்றால், இது போன்ற சமபவ்ங்களை காவல் துறை கண்டுகொள்வதில்லை என்பது. சமீபத்தில் அவள் விகடனில் பெண் குழந்தையை பெற்ற போது மருத்துவ சிக்கலால் கருப்பையை இழக்கவேண்டிய பெண், ஆண் வாரிசை பெற்றுத்தர முடியாததால் தன் வாழ்க்கையை இழக்க வேண்டி வருமோ என்ற அச்சத்தில் இருக்கும் பெண் நிலை.இதைப் பாருங்கள் http://reallogic.org/thenthuli/?p=189கருத்தரிப்பதில் பெண்களின் நிலை பற்றி என் கருத்துக்கள் இங்கே http://reallogic.org/thenthuli/?p=157.

 8. லக்ஷ்மி சொல்கிறார்:

  //இந்த 21ஆம் நூ.ஆ.டில் இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டு வருவதற்கு சமுதாயத்தின் அங்கததினரான நாம் அனைவருமே பொறுப்பேற்கவேண்டும்.// 100% சரியான கருத்து மாசிலா. ரொம்ப நன்றி பிரேமலதா. ஸ்பெஷலான ரெசிப்பியெல்லம் ஒன்னுமில்லைங்க. யாராச்சும் செஞ்சு கொடுத்தா, சாப்பிடத் கூடிய சகலத்தையும் நல்லா சப்புக்கொட்டி சாப்பிடுவேன் – நானா சமைச்சுக்கணும்னா, வெறும் பாலும் பழமும் சாப்பிட்டு சமத்தா தூங்கிடுவேன். ஹிஹி… அவ்ளோ சோம்பல். பத்மா, ஆச்சரியம் என்னான்னா பெண் தெய்வம் அப்படி இப்படினெல்லாம் பேசுற நம்ம நாட்டுல இது மாதிரி விஷயங்களில் மட்டும் எப்படி நெஞ்சில் ஈரமில்லாம செயல்படறாங்கன்றதுதான்… மொத்த சமூகத்துக்குமே ஹிப்போக்ரசி வியாதி முத்திப் போச்சு. அவ்ளோதான்.

 9. Premalatha சொல்கிறார்:

  லக்ஷ்மி,பிடிக்காம பெண்ணைப் பெத்து, வளர்க்கும்போது ஒவ்வொரு வினாடியும் “நீ பெண்”, “நீ பெண்” அப்படின்னு பலவகையில கொடுமை கொடுக்கிறத விட கொன்னுடறதோ அனாதையா வேற யாராவது பிடிச்சு வளர்க்கிறவங்க வளர்த்துட்டுப் போகட்டும்னு கொடுத்திடறதோ அவங்க அந்த குழந்தைக்கு செய்யும் ஒரு நல்ல விசயமா தோணல உங்களுக்கு? எனக்கென்னமோ பிடிக்காத பெற்றோர்கிட்ட வளர்ற பெண் குழந்தைகளை விட கொல்லப்படற அல்லது அனாதையான பெண்குழந்தைகள் betterனு தோணுது.

 10. லக்ஷ்மி சொல்கிறார்:

  பிரேமலதா, கண்டிப்பா பிடிக்காதவங்க கிட்ட வளருவதை விட அனாதையா வளருவது தேவலாம்தான். ஏன்னா அது அவளோட உயிரை இல்லை ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லும் விஷயம். ஆனா உயிர் போறது எதை விடவும் நிச்சயம் மேலானதாயிருக்க முடியாதுன்னு நான் நம்புறேன். உயிரோடிருக்கும் வரை எந்த நிலையிலும் அந்தப் பெண்ணுக்கே சுயமரியாதை உணர்வோ இல்லை சுற்றியிருக்கறவங்களுக்கு வயசான பின் ஒரு மனமாற்றமோ வருவதற்கான சாத்தியக்கூறு உண்டில்லையா? கருத்தம்மால கூட அந்த தகப்பனுக்கு கடைசிகாலத்துல தன்னை பொறுப்பா பாத்துக்கற பொண்ணைப் பார்த்து ஒரு குற்ற உணர்ச்சி வருமில்லையா, அதுவானும் கிடைக்க வாய்ப்பிருக்கே?

 11. Premalatha சொல்கிறார்:

  கருத்தம்மாக்களோட அப்பாக்களுக்கு குற்ற உணர்ச்சி வர்றதுக்காக எத்தனை கருத்தம்மாக்கள் தன் வாழ்க்கையோட போராடணும், when men are talking about சமூக சிந்தனை, மற்றும் இன்ன பிற? கருத்தம்மாக்களால பெண்ணியம் பத்தியோ சமையல் பத்தியோதான பேச முடியும்? ஒரு கம்பெனி ஆரம்பிச்சு நடத்த முடியுமா? எதுக்கு அந்த போராட்ட வாழ்க்கை? சாவு நல்லதில்லையா? என்னான்னு அறிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே கிடைக்கிற சாவு தெய்வாதீனம் இல்லையா?(I am generally too theoretical, so ignore me. 🙂 )btw, my recent post on < HREF="http://thenormalself.wordpress.com/2007/11/05/the-girl-child-issue/" REL="nofollow"> girl child issue about the so called modern/forward-minded people<> and my old post on < HREF="http://premalathakombaitamil.wordpress.com/2006/03/29/born-and-named/" REL="nofollow">people’s reaction (different kinds) when a girl child arrives in their family<>.

 12. தமிழ்நதி சொல்கிறார்:

  வர வர நாம் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பதைப்புடன் நினைவுகூரவேண்டியிருக்கிறது. லஷ்மி!நீங்கள் சொன்னது மாதிரிதான்… ‘பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்..?அப்படியொன்று இருக்கிறதா என்ன?’என்றொரு நண்பர் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் கேட்டார். பிறகு கேட்டார் ‘நீங்கள் ஏன் முன்னேறிவரும் பெண்களைப் பற்றி எழுதக்கூடாது?’இவர்கள் கண்,காதையெல்லாம் மூடிவைத்துக்கொண்டிருக்கிறார்களா என்னவென்று தெரியவில்லை. அவர் சொன்னதன்படி பார்த்தால் பெண்களாகிய நாம் மிகவும் சுபிட்சமான வாழ்வு வாழ்கிறோம்… பெண்ணியம் பேசுவதெல்லாம் கொழுப்பெடுத்த வேலை என்றே பொருளாகிறது. இருக்கிற பிரச்சனையையே இல்லை என்று மூடிமறைப்பவர்களிடம் எதைத்தான் பேசுவது..? ‘பெண் சிசுக்கொலையா…? இந்தியாவிலா…?’என்று யாராவது வந்து கேட்டாலும் ஆச்சரியப்படாதீர்கள் லஷ்மி!

 13. வவ்வால் சொல்கிறார்:

  லஷ்மி,நீங்க ரொம்ப நாளா தூக்கத்தில இருந்திங்களா, இந்தியாவில் இந்த கொடுமை எத்தனைக்காலமாக நடந்துக்கிட்டு இருக்கு, ஆனா புதுசா கேள்விப்படுவது போல இத்தனை அதிர்ச்சியாகறிங்க.இந்த பெண் சிசுக்கொலை அதிர்ச்சியானது தான் ஆனால் உங்கள் அதிர்ச்சி முதன் முதலாக கேள்விப்படுவது போன்ற அதிர்ச்சியாக இருப்பதால் சொன்னேன். இப்படி அடிக்கடி செய்திகள் பார்த்து அதிர்ச்சியாவதே இல்லை இப்பொழுதெல்லாம்!கருத்தம்மா என்று பாரதிராசா எடுத்த படம் கூட பெண் சிசுக்கொலையை தான் பிரதானமாக பேசும்.படம் பார்த்து கையை தட்டிட்டுட்டு அதோடு மக்கள் மறந்தும் விட்டார்கள்!ஜீவியில் இந்த கட்டுரையை நானும் படித்தேன் , எனக்கு தெரிந்து இதே போன்று கடந்த இரண்டு மாதத்திலேயெ ஒரு நான்கைந்து பெண் சிசுக்கொலைப்பற்றியக்கட்டுரை வந்து விட்டது.பெரும்பாலும் செய்தி வரும், அதோடு சரி, அரசின் சார்பில் பெண் சிசுக்கொலை இல்லை, அல்லது குறைந்து விட்டது என்று வழக்கம் போல புள்ளி விவரம் மட்டும் தருவார்கள்!//மத்தபடி பெரும்பாலும் பெண் குழந்தை பொறந்தா தொட்டில் குழந்தைகள் திட்டத்துல வந்து சேர்த்துடுவாங்க. இதுவரைக்கும் 996 குழந்தைங்களைத் தொட்டில் குழந்தை கள் திட்டத்துல சேர்த்திருக்காங்க.//தொட்டில் குழந்தை திட்டம் தற்போது நடக்கவில்லை , ஆட்சி மாறியதும் ஆதரவும் இல்லை அத்திட்டத்திற்கு என்று, இதே ஜீவியில் முன்னர் ஒரு கட்டுரைப்போட்டார்களே, முன்னர் தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்ட குழந்தைகளை இப்போது பல தனியார், அரசு அனாதை விடுதிகளில் வைத்து வளர்க்கிறார்கள், பெரும்பாலும் அரசு சார்பில் பண உதவி எதுவும் அளிக்கப்படவில்லை.கவனிப்பார் அற்று இருப்பதாக ஜீவியில் போட்டார்கள்.இப்போது பல அரசு மருத்துவமனைகளிலும் தொட்டில் குழந்தை திட்டத்திற்க்கான தொட்டிலையேப்பார்க்க முடிவதில்லை.உண்மை என்னவென்று யாராவது உள்விவகாரங்கள் தெரிந்தவர்கள் சொன்னால் தான் உண்டு.

 14. ramachandranusha(உஷா) சொல்கிறார்:

  லஷ்மி, இவை எல்லாம் மாறி வருகின்றன. அடி தட்டு மக்களிடம் பேச்சு கொடுக்கும்பொழுது, பெண் பிள்ளை என்றாலும்இரண்டுடன் நிறுத்திக் கொள்வது, ஆண் பிள்ளைக்கு இணையாய் பெண்ணையும் படிக்க வைக்க வேண்டும் என்றஎண்ணம், கம்ப்யூட்டர் படிப்பு பற்றி விசாரிப்பது என்று பலரிடம் விழிப்புணர்ச்சி பெருகிவருகிறது. இவை எல்லாம் குறைவுஎன்று நினைக்காதீர்கள். மாற்றம் வரும்பொழுது ஆரம்பத்தில் மிக குறைவாய் கண்ணில் படும், பிறகு எந்த தலைவரோ, அரசாங்கமோ வழி நடத்தாமல் வெள்ளம் போல பெருகும் என்பது என் கருத்து.இந்த விஷயத்தில், அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து, தண்டனை கொடுத்தால் குறையும் இல்லையா?

 15. லக்ஷ்மி சொல்கிறார்:

  வவ்வால், இது முதல் முறையா கேள்விப்படற அதிர்ச்சியில்லை. இப்படியெல்லாம் நடக்கும் போது கூட இன்னமும் சில படித்த அதிமேதாவிகளே ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள்ன்ற எண்ணமிருப்பதா நினைப்பதே அசட்டுத்தனமாக்கும்னு சொல்லிகிட்டுத் திரியுறாங்களே அப்படின்ற ஆதங்கம் இது. //உண்மை என்னவென்று யாராவது உள்விவகாரங்கள் தெரிந்தவர்கள் சொன்னால் தான் உண்டு.// அதென்னவோ 100% கரெக்ட். எந்தப் புள்ளி விவரம் உண்மைன்னு சொல்றவங்களுக்கே சரியாத் தெரியாது போல..பிரேமா, பெற்றோரின் மனமாற்றம்தான் சரியான, நிரந்தர தீர்வுன்றதுல எனக்கும் இரண்டாவது கருத்தில்லை. அது கிடைக்கற வரை ஒயாம இந்த புடலங்காய்ப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியேயாக வேண்டியதின் அவசியத்தைப் பற்றித்தான் நான் புலம்பிகிட்டிருக்கேன். அங்கங்க திரும்பவும் அப்பாவி மாதிரி மக்கள் எதுக்கு இதையெல்லாம் பத்திப் பேசணும்னு கேக்கறாங்க பாருங்க, அப்பதான் எனக்குப் பத்திகிட்டு வருது.//இவர்கள் கண்,காதையெல்லாம் மூடிவைத்துக்கொண்டிருக்கிறார்களா என்னவென்று தெரியவில்லை// இல்லை தமிழ்நதி – உண்மையை உணர மறுத்து இவர்கள் இதயத்தைத்தான் மூடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையைக் கண்ணாரக் காணும்போது கூட அதை ஒப்புக்கொள்ள இவர்களது ஊதிப்பெருத்த ஈகோ தடுக்கிறது. அதுதான் பிரச்சனையே. மாற்றமே இல்லையென்று நான் நிச்சயமாய்ச் சொல்ல மாட்டேன் உஷா. ஆனால் அதான் கொஞ்சம் மாறிடுச்சே, இனித் தானே எல்லாம் சரியாயிடும், நீ பேசாமா உன் வேலையப் பாத்துகிட்டுப் போன்னு சொல்றதைத்தான் தாங்கிக்க முடியலை. நிச்சயமாய் கல்வி அறிவும் விழிப்புணர்ச்சியும் கீழ்த்தட்டு மக்கள்கிட்ட போய்ச்சேர ஆரம்பிச்சுடுச்சுதான். ஆனா அதை ஊதிப் பெருசாக்க வேண்டியது நம் கடமையில்லையா? அரசின் தண்டனை மட்டுமில்லாது ஓயாத விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அவசியம்.

 16. கையேடு சொல்கிறார்:

  தொடர்ந்து பேசுங்கள். முழுவதுமாக ஒழிந்தால் கூட மீண்டும் தலையெடுக்காமலிருக்க தொடர்ந்து பேசப்படவேண்டியது அவசியம்.

 17. லக்ஷ்மி சொல்கிறார்:

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கையேடு.

 18. ramachandranusha(உஷா) சொல்கிறார்:

  லஷ்மி, சரியாய் சொல்லுகிறேனா என்று தெரியாமல் ஆரம்பிக்கிறேன். இந்த செய்தியும் அதன் தாக்கமும் பெண்ணீயம் என்றதலைப்பில் இடுவதே தவறு. இந்த கொடுமையை கேட்டதும் அல்லது படித்ததும் ஆண், பெண் பேதமில்லாமல் படிக்கும்அனைத்து வாசகர்களுக்கும் மனம் கொதிக்கும்.இன்றும் உலகில் பல இடங்களில், பல இனங்களில், சமூகங்களில் பெண்தாழ்ந்தவள், சமமில்லை என்று ஆணுக்கு தாழ்ந்தவளாய் நடத்தப்படுகிறாள். நேற்றிரவு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுக்கதை தொகுப்புபடித்துக்கொண்டிருந்தேன். ஆப்கானிஸ்தான சிறுமியின் கதை, வீட்டில் ஆண்களும், சிறுவர்கள் சாப்பிட்டவுடன் பெண்கள் குழந்தைகள் உட்ப்ட சாப்பிட வேண்டுமாம்.விருந்தினர் வந்தால், பெண்களுக்கு இருக்கும் உணவை வைத்துவிடுவார்களாம். ஆக, அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும்.சாப்பாட்டு சமயத்தில் விருந்தினர்கள் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருப்பார்களாம். இது ஒரு பக்கம் என்றால், நம் நாட்டில் இந்த வித்தியாசம் குறைந்துக் கொண்டு வருகிறது. கல்வியும், அது தரும் தன்னபிக்கையும், பொருளாதாரசுதந்திரமும் நாளுக்கு நாள் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.கட்டாயம் தருமபுரி கேஸ்கள் குறையும் என்ற நம்பிக்கைஇருக்கிறது.

 19. லக்ஷ்மி சொல்கிறார்:

  உஷா – //இந்த கொடுமையை கேட்டதும் அல்லது படித்ததும் ஆண், பெண் பேதமில்லாமல் படிக்கும்அனைத்து வாசகர்களுக்கும் மனம் கொதிக்கும்.// நான் நிச்சயம் மறுக்கவில்லை. மனிதாபிமானமுள்ள யாருக்கும் குலைநடுங்க வைக்கும் ஒரு செயலிது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நான் ஒரு போதும் ஆண்கள் எல்லோரும்/ஆண்கள் மட்டுமே ஆணாதிக்கவாதிகள் என்றும் பெண்கள் எல்லோரும் சுயமரியாதைப் புலிகள் என்றும் கூறியதில்லை.//இன்றும் உலகில் பல இடங்களில், பல இனங்களில், சமூகங்களில் பெண்தாழ்ந்தவள், சமமில்லை என்று ஆணுக்கு தாழ்ந்தவளாய் நடத்தப்படுகிறாள். // இந்த சிந்தனை இருபாலருக்கும் இருக்கும். ஆண்களில் பலர் இதை நம்புவதும், தூக்கிப் பிடிப்பதும் அவர்கள் அடையும் சுயலாபத்துக்காக என்றால் பெண்களிலும் பெரும்பான்மையானோரும் இதே கருத்தை அழுத்தந்திருத்தமாகவே நம்புகின்றனர்/பரப்புகின்றனர் – பழகிய பாதையே பாதுகாப்பானதென்பதால். இரண்டுமே மாற்றப்பட வேண்டிய போக்குகள்தான் உஷா. ஆனால் இந்தப் பதிவில் நான் பேசமுற்பட்டிருப்பது இது பற்றியெல்லாம் இல்லை – இன்னமும் பெண்ணுரிமை பற்றிப் பேசி ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று யாருக்காவது நிரூபிக்க வேண்டிய தேவையிருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியே நான் சொல்ல வருகிறேன். பெண் சிசுக்கொலையின் ஆணிவேர் வரதட்சிணைப் பழக்கத்திலிருக்கிறது. அதன் மூல காரணமோ திருமணம் என்பது இருமனத்தின் இசைவு என்பதை விட ஒரு பெண்ணுக்கு ஆணொருவன் வாழ்வு தருதல் என்ற அனர்த்தத்திலிருக்கிறது. இவையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமின்றி இச்சமுதாயத்தினின்றும் களையப்படும் வரையில் இங்கே பெண்ணீயம் பித்தளை போன்றவற்றைப் பற்றியும் பேசியே தீர வேண்டிய தேவையிருக்கிறதென்றே நான் சொல்ல வருகிறேன்.

 20. Premalatha சொல்கிறார்:

  //இவையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமின்றி இச்சமுதாயத்தினின்றும் களையப்படும் வரையில் இங்கே பெண்ணீயம் பித்தளை போன்றவற்றைப் பற்றியும் பேசியே தீர வேண்டிய தேவையிருக்கிறதென்றே நான் சொல்ல வருகிறேன்.//தெளிவா இருக்கீங்க?! வாழ்க.

 21. கெக்கே பிக்குணி சொல்கிறார்:

  //இன்றும் உலகில் பல இடங்களில், பல இனங்களில், சமூகங்களில் பெண்தாழ்ந்தவள், சமமில்லை என்று ஆணுக்கு தாழ்ந்தவளாய் நடத்தப்படுகிறாள்// ஆஃப்கனிஸ்தான் என்று இல்லை, முன்னேறியதாகக் கருதப்படும் வட அமெரிக்காவிலும் பெண்கள் சமமில்லை தான். ஊடகங்களும் பல பதிவர்களும் பதிந்தது தான்.//இங்கே பெண்ணீயம் பித்தளை போன்றவற்றைப் பற்றியும் பேசியே தீர வேண்டிய தேவையிருக்கிற//து! ஆம்! மறுகருத்தில்லை. பசி, பட்டினிச்சாவு, ஜாதீயம், கொலை, கொள்ளை எவ்வளவோ கொடுமைகள் இருக்கின்றன. இவற்றுக்காகக் குரல் எழுப்புவதில் எவ்வளவு தேவையோ, அதேபோல் பெண்ணுரிமைக்கும் குரல் எழுப்புவது தேவையாக இருக்கிறது.இதில் பச்சை குழந்தை(அய்யோ, அதைப் படிக்கவே கஷ்டமாக இருந்தது) – என்ன சொல்வேன்! :-((((((((

 22. apu சொல்கிறார்:

  Tragic 😦As you have rightly pointed out, while government intervention is a temporary solution, until underlying attitudes change, there will be no permanent solution.And sorry for the comment in english – while I can read, my tamizh is not good enough to write..

 23. Hip Grandma சொல்கிறார்:

  I came here from apu’s.I don’t have a Tamil font installed in my comp.So I have to write in english.This menace can be curtailed to some extent by empowering women.Empowerment has to be at the emotional level as well.I have known ladies who earn in lacs per annum but are still not confident enough to decide on financial matters however justified.The female half of society has been fine tuned to think that they are unimportant and dispensable.this has to change first.A women who does not realize her own worth cannot stand up for her daughter.

 24. புரட்சித் தமிழன் சொல்கிறார்:

  நெருப்பு என்பது எரியத்தான் செய்யும் கற்ப்பூரம் என்பதால் கற்ப்பூரத்தீ பட்டு குடிசை எரியாமல் நின்றுபோகாது. பெண்பிள்ளை கொல்லிபோட்டால் பினம் எரியாமல் போகிறதா? செத்துப்போனவனுக்கு யார் கொல்லிபோட்டால் என்ன? சிசுகொலை செய்தவனை நகர் நடுவில் கட்டிவைத்து போகிர வருகிறவர்கள் எல்லாம் எச்சில் துப்பி எச்சிலால் குளுப்பாட்டி தொலைக்காட்ச்சியில் ஒருமுறை ஒளிபரப்பினால் எவனுக்கும் இந்த ஈனத்தனமான எண்ணம் தோன்றாது.

 25. கண்மணி/kanmani சொல்கிறார்:

  லஷ்மி பெண்சிசுக்கொலை ஏன் ஏற்பட்டது.மூணாவதா பையன் பொறக்காம இந்த மூதேவி பொறந்துட்டா எப்படி வளர்ப்பதுன்னு தெரியாம கொன்னுட்டேன்னு சொல்றான்.அப்ப மூணாவது மட்டுமில்லை நாலாவது அஞ்சாவது பையனாப் பொறந்தாலும் வளர்க்கவும்,படிக்க வைக்கவும் சோறு போடவும் முடியும்.ஆனா பொண்ணுன்னா முடியாதா?.எத்தனைப்புள்ளைங்க பொறந்தாலும் வசதி இருப்பவங்க படிக்க வைக்கிறாங்க.இல்லாதவங்க வேலைவெட்டிக்கு அனுப்பறாங்க.இதிலும் பெண் புள்ளைங்கதான் பொறுப்பா வேலைக்குப் போவுது வீட்டையும் பாத்துக்குது.அப்படியிருக்க ஏன் ஆண்பிள்ளைகள் மட்டும் பிரச்சினையாவதில்லை.இதன் அடி நாதம் என்ன?திருமணமும் சட்டதிட்டங்களும் தான்.திருமணம் என்று வரும்போது பொண்ணுன்னா செலவுன்னும் ஆணென்றால் வரவும்னு ஆகிப் போனதாலதான் பெண்கள் பாரமாகிப் போகிறார்கள்.வரதட்சணை ஒழிப்பு இருந்தாலும் இன்னும் கடுமையாக்கப் படனும்.இதில் கேலிக் கூத்து என்னென்னா அமெரிக்கா போய் சம்பாதிக்கும் மாப்பிள்ளைதான் வரதட்சணை போதலைன்னு காரிலிருந்து [ஜெனிலா]பிடித்துத் தள்ளுகிறான்.ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்,டாக்டர் இவர்கள் வீட்டில்தான் இந்தக் கதைகள் சிரிப்பாய் சிரிக்கிறது.பெண்சிசுக்களை ஆதரிக்கும் அரசு தொட்டில் கழந்தைகள் திட்டத்திற்கு பதில் திருமண சட்டதிட்டங்களை முறைப் படுத்தி வரதட்சணைக்கான தண்டனையைக் கடுமை யாக்கினால் பெண்களின் எதிர்காலம் பற்றிய பயம் பெத்தவங்களுக்கு குறையும்.பெண்சிசுக் கொலைகளும் குறையும் என்பது நிச்சயம்.

 26. லக்ஷ்மி சொல்கிறார்:

  எல்லோருமே என்னோட தாமதமான பதில்களுக்கு மன்னிக்கணும். //பசி, பட்டினிச்சாவு, ஜாதீயம், கொலை, கொள்ளை எவ்வளவோ கொடுமைகள் இருக்கின்றன. இவற்றுக்காகக் குரல் எழுப்புவதில் எவ்வளவு தேவையோ, அதேபோல் பெண்ணுரிமைக்கும் குரல் எழுப்புவது தேவையாக இருக்கிறது//ரொம்பவே சரியா சொல்லிட்டீங்க கெக்கேபிக்குணி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படியே தாமதமான பதிலிற்காக மன்னிப்பும்.//பெண்பிள்ளை கொல்லிபோட்டால் பினம் எரியாமல் போகிறதா? செத்துப்போனவனுக்கு யார் கொல்லிபோட்டால் என்ன? // புரட்சித்தமிழன், சரியான கேள்விகள்தான். இது போல அறிவுகெட்டவர்களுக்கெல்லாம் எப்போதான் இது போன்ற நிதர்சனங்கள் புரியப் போகுதோ தெரியல. இது போன்ற செய்திகளை படிச்சு முடிச்சதும் வரும் ஆத்திரத்துல நீங்க சொல்வது போன்ற தண்டனைகள்தான் மனசுல தோணுது. ஹ்ம்ம்…கண்மணி, படிப்பு புத்திசாலித்தனத்தை மட்டுமே கொடுக்கும். அடிப்படை குணங்களான மனிதாபிமானம், நேர்மை, நல்ல சிந்தனை போன்றவற்றை இருந்தா அதை மேலும் மெருகேற்றும் – இவங்களுக்கெல்லாம் அடிப்படிலயே அதெல்லாம் இல்லை. அதுதான் பிரச்சனையே. படிச்ச படிப்பையே ஒரு மூலதனமா இல்ல உபயோகிக்கறாங்க, அமெரிக்கா மாப்பிள்ளைன்னாலே தனி ரேட்டாமில்ல மார்க்கெட்டுல? அப்புறம் வேற எப்படி இவங்கல்லாம் நடந்துப்பாங்களாம்?apu & grandma, thanks for your comments.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s