சமையலறை சங்கடங்கள்


திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது – ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம் அப்படின்னு மனசுல பதிஞ்சதா இருக்கலாம்.

எங்க ஊரில் அப்பல்லாம் மொத்தமே 2 டீக்கடை, ஒரு இட்லி கடை, ஒரு முனியாண்டி விலாஸ் மிலிட்டிரி ஹோட்டல் – அவ்ளோதான். இதுல எங்கேர்ந்து வெளில போய் சாப்பிடறது? அத்தோட இல்லாம இன்னமும் எங்க ஊர் ஒருத்தர் வீட்டில் குடும்பத் தலைவிக்கு உடம்பு முடியலைன்னால் பக்கத்து வீட்டிலிருந்து சின்ன சின்ன கிண்ணங்களில் நாலுவகை கறிகாய்களோடு சாதமும் சாம்பாரும் வாழை இலை போட்டு மூடி பின்கட்டு வழியாவே கொண்டு வந்து வச்சுட்டுப் போற அளவிலான கிராமமாவேதான் இருக்கு.

ஒரு அவசரத்துக்கு கூட வெளியே பர்கர், பிட்சா என்றெல்லாம் ஒப்பேத்த நான் தயாராக இருந்ததில்லை. வீட்டிலும் நூடுல்ஸ் போன்றவைகள் பிடிக்காது. அதிக வேலையினாலோ இல்லை சோம்பலாலோ எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்றாலுமே கூட குக்கர் மட்டும் வைத்து மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டேனும் ஒப்பேற்றியிருக்கிறேன். ஆனால் நாம் சமைத்துப் போடுவதையும் ஒரு ஜீவன் நம்பி சாப்பிடத் தயார்னு ஆனபின்னாடியும் நாம கொஞ்சம் ஒழுங்கு முறையா சமைக்கலைன்னா நல்லா இருக்காதேன்னு கொஞ்சம் என் சமையல் முறைகளை ஒழுங்கு செய்துக்கணும்னு இப்பத்தான் ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி முடிவு செஞ்சேன்.

சமையலுக்கு முதல் தேவை அடுப்பு இல்லையா? எனக்கோ வீட்டில் கேஸ் கனெக்ஷன் கிடையாது. ஏன்னு கேட்டா, ரேஷன் கார்டு கிடையாது. ஏன்னு கேட்டா ஊர்ல ரேஷன் கார்டில் என் பெயர் இருக்கு. அதை காமிச்சு இங்க கனெக்ஷன் வாங்க முடியாது. சரி, அங்கேர்ந்து பேரை நீக்கிட்டு இங்க புது கார்டு வாங்கலாம்னு ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்டதுக்கு ஒத்தை ஆளுக்கெல்லாம் இங்க ரேஷன் கார்டு கொடுக்கப் பட மாட்டாதுன்னு சொல்லீட்டாங்க. இதுக்காக ஊர்லேர்ந்து குடும்பத்தையே இங்க கட்டி இழுக்க முடியுமா? இல்லை இந்த கேஸ் கனெக்ஷனுக்காக கல்யாணம்தான் கட்டிக்க முடியுமா? இது வேலைக்காகாதுன்னு எல்லாத்தையும் தூக்கி மூட்டை கட்டிட்டு ரொட்டேஷன்ல கிடைக்கற சிலிண்டரை வைத்து வாழ்க்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

அக்கா, சித்தி, மாமான்னு லோக்கலில் இருக்கும் எல்லோரும் இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ளவங்களா இருந்ததாலும், எனக்கு மூன்று மாதத்துக்கு ஒரு சிலிண்டர் போதுமானதா இருந்ததாலும் (காபி, டீ, பெரும்பாலும் தயிர் சாதம், என்னிக்காவது ஒரு நாள் சம்பிரதாயமான சாப்பாடு – இது பெரும்பாலும் என் தங்கை குடும்பத்தோடு 3 மாசத்துக்கு ஒரு தரம் ஊரிலிருந்து வரும் போது நிகழ்வது. இந்த மெனுவுக்கு ஒரு சிலிண்டர் 3 மாசம் தாங்காதா என்ன?) என் பிழைப்பு நல்லாவே ஓடிகிட்டிருந்தது.

இப்ப குடும்பம் பெருசாயிடுச்சு 😉 அத்தோட ரொட்டேஷனுக்கு சிலிண்டர் புக் பண்ணி கொடுங்கன்னு கேக்கற நிலமைல நம்ம சொந்த பந்தங்களும் இப்ப ஒட்டுறவோட இல்லை. அதுனால மறுபடி கேஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு வேலைகளை தூசு தட்ட ஆரம்பிச்சோம். இப்ப ஒத்தையா போய் க்யூவில் நிக்கற நிலமை இல்லை. அட்லீஸ்ட் சும்மா நிக்கற நேரத்துல சண்டையாவது போடலாம், டைம் பாஸ் ஆகும்ன்ற குறைந்த பட்ச உத்ரவாதம் இருக்கு.

எதுக்கு சண்டையா – இதெல்லாம் ஒரு கேள்வியா? ஜெயமோகன்/ஞானி/சாரு இது மாதிரி யாருனா ஒருத்தரை பிடிச்சு அமுக்கி அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, ரெண்டாவது நிமிஷமே ஒரு பிரமாதமான சண்டை நிச்சயம். நீங்கல்லாம் போலி அறிவுஜீவிகள்ன்னு அர்ச்சனைய ஆரம்பிச்சார்னு வைங்க, அரை மணி என்ன, நாள் முழுக்க வேணும்னாலும் சண்டை நீண்டுகிட்டே போகும். இப்படியா இன்ட்ரஸ்டிங்கான டைம்பாஸ் கைவசம் இருக்கறப்ப க்யூவுல நிக்கறதைப் பத்தி என்ன பிரச்சனைன்னு நானும் எங்க ரெண்டு பேர் பேரையுமே ரேஷன் கார்டுலேர்ந்து நீக்கி சான்றிதழை அனுப்பி வைக்கச் சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்புறம் பாத்தா கேஸ் கனெக்ஷனுக்கு ரேஷன் கார்டு அவசியமில்லைன்னு பேப்பர்ல செய்தி.

அந்நேரம் பாத்து நாங்க ஊர்ல இல்லை. சோ, வந்தவுடனே இன்டேன், பாரத் கேஸ் ஏஜென்ஸின்னு எல்லா இடத்துக்கும் படையெடுத்தோம். எங்களுக்கு இன்னும் சர்குலர் வரலை சார்னு ஒரே பதில் எல்லா இடத்திலயும். விடாம வராவாரம் போய் அவங்களை நச்சரிச்சதுல ஒரு வழியாய் போன வாரம் பதிவு செஞ்சாச்சு. அனுமதி வரதுக்கு 30 முதல் 45 நாள் வரை ஆகலாம்னு எங்க ஏரியா இண்டேன் ஏஜென்சிக்கார அம்மா சொன்னாங்க. இதுக்கு நடுவுல போன மாசமே என்னிடமிருந்து ஒரே ஒரு சிலிண்டர் காலி. சரின்னு ஆபத்பாந்தவனா நான் நினைச்சுகிட்டிருக்கும் கிளிக்ஸ் அடுப்பை எடுத்து என் கைவரிசைய காட்டத் துவங்கினேன்.

எனக்கு வழக்கமா 10 – 15 நாள் வரை வரும் அந்த இரண்டரைக் கிலோ சிலிண்டர். அது பழைய கணக்குன்றதால, எதுக்கும் ரிஸ்க் வேண்டாம்னு சாப்பாட்டு மூட்டை கட்டறதெல்லாம் நிப்பாட்டி தலைவருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிடும் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.

டீ/காபி, இரவு உணவு மட்டும்னு எங்கள் மெனு சுருங்கியது. அப்படியும் நான்காவது நாளே கிளிக்ஸ் காலை வாரியது – காஸ் காலி. போன் பண்ணி கேட்டால் சித்தி நடுவுல ஒரு 10 நாள் போல அதுலதான் வெந்நீர் போட்டுக் குளிச்சேன்னு கூலா சொல்றாங்க. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நான் உடனடியாவே ரீஃபில் செய்திருப்பேன். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

மறுநாள் காலை காபி/டீ போடவே வழியில்லை. எங்க வீட்டுக்குப் பக்கத்துல எதும் நல்ல ஹோட்டலும் இல்லை. ஒரு டீக்கடை வேணும்னால் கூட இந்தப் பக்கம் பொன்னியம்மன் கோவிலுக்கோ இல்லை அந்தப் பக்கம் விஜயநகருக்கோதான் போக வேண்டியிருக்கும். சோ, கூட் ரோடு பக்கமிருக்கும் ஒரு எலக்டிரிக்கல் பொருட்கள் விற்கும் கடையில் அன்று மாலையே ஒரு எலக்டிரிக் காயில் ஸ்டவ் வாங்கினேன்(1400 ரூபாய் காலி). எடுத்து வந்து மாலை டீ தயாரித்து முடித்தேன்.

மறுநாள் காலை டீக்கு தண்ணீர் வைத்தால் அது வெந்நீராகவே இல்லை. அந்த அடுப்பில் ரெகுலேட்டர் இருந்தாலுமே கூட ஆன்/ஆஃப் என்பதைக் காட்ட எந்த இண்டிகேட்டரும் இல்லை. அத்தோடு ரெகுலேட்டரும் இரண்டு பக்கத்திலும் திருப்பக் கூடியதாக இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம் – ஒரு வேளை நான் தவறான திசையில் திருப்புகிறேனோ எனறு. எனவே இரண்டு பக்கமும் நன்றாக சாத்துகுடியெல்லாம் ஜூஸ் பிழிய திருகுவோமே, அது போலத் திருகித் திருகி ஒவ்வொரு பொசிஷனிலும் 5 நிமிடம் வைத்துப் பார்த்தாலும் அடுப்பென்னவோ மோனப் புன்னகையோடு நிச்சலனமாய் வீற்றிருந்தது. பிறகு என்னிடமிருந்த எலக்ட்ரிக் குக்கரில் பாலை காய்ச்சி, இருந்த இன்ஸ்டண்ட் காப்பித் தூளைக் கொண்டு அன்றைய காலைப் பொழுதை ஓட்டினேன்.

பிறகு மாலையில் காயில் அடுப்பை ரிப்பேர் செய்ய எடுத்துச் சென்றால், இரண்டு நாளாகுமாம் ரெடியாக. சரி என்று இன்னொரு கிளிக்ஸ் வாங்க முடிவு செய்து மடிப்பாக்கம் கூட் ரோடில் இருக்கும் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினோம். எங்கும் கேஸ் பற்றாக்குறையால் அந்த அடுப்பு கையிருப்பில் இல்லை என்றே பதில் வந்தது. அப்படியே முன்னேறி நங்கநல்லூரின் பாலசுப்ரமணியம் மெட்டல் ஸ்டோருக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த சேல்ஸ் மேன் உப்பில்லை என்றால் புளி இருக்கு என்று சொல்வது போல எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிக்கோங்க என்றார். நானோ காயில் அடுப்பில் நொந்த கதையைச் சொல்லி மறுமுறை ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை என்று சொல்ல, அவரோ சளைக்காமல் எலக்ட்ரோ மேக்னடிக் ஸ்டவ்னு ஒன்னு இருக்கு மேடம் என்று ஆரம்பித்தார். நான் மறுக்க மறுக்க வழக்கம் போல பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று 😉 விளைவு – நாங்கள் அந்த அடுப்புடந்தான் வீடு திரும்பினோம்.

பட்டர்ஃப்ளை நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மின்காந்த அடுப்பில் மூன்று மோட் உள்ளது. இதில் ஹீட்டிங்க்தான் டிஃபால்ட் மோட். ஒன்றிலிருந்து பத்து நிலைகள் வரை சூடு செய்யலாம். அநேகமாய் நம்ம சமையலுக்கு 2லிருந்து 5 நிலைகளே போதுமானதா இருக்கு. 2ல் நம் சாதாரண அடுப்பை சிம்மில் வைப்பது போலவும் 5 நம்ம சாதா அடுப்பின் ஹையில் வைப்பது போலவும் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட நிலைகளை தண்ணீர் அதிகம் உள்ள பொருட்களுக்கு மட்டுமே உபயோகிக்கவும் – இல்லையெனில் கண்டிப்பாகத் தீய்ந்து விடுகிறது.

இது தவிர குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரை செட் செய்து கொள்ளலாம். அது போலவே டைமரையும் வேண்டும் நேரத்துக்கு செட் செய்து கொள்ளலாம். இந்த டைமரையும் டெம்ப்ரேச்சர் ஆப்ஷனையும் சேர்த்தும் ப்ரொகிராம் செய்து கொள்ள முடிகிறது – இட்லி வேக வைப்பது போன்றவற்றிற்கு இந்த காம்போ மோட் ரொம்பவும் உதவி.

இந்த அடுப்பில் ஒரே ஒரு பிரச்சனை – மேக்னடிக் பேஸ் உள்ள பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரும்பு தோசைக்கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. ஆனால் காப்பர் பாட்டம் உள்ள் பாத்திரங்கள், அலுமினியம் பேஸ்டு குக்கர் போன்றவற்றை உபயோகிக்க முடிவதில்லை. என்னிடம் ஸ்டீல் குக்கர் இல்லாததால், இன்னமும் குக்கர் வைக்க மட்டும் கிளிக்ஸ் அடுப்பையே நம்பியிருக்கிறேன். மற்றபடி மொத்த சமையலும் இதிலேயே அழகாக முடிந்து விடுகிறது. தற்காலிக நிம்மதி என்றாலும் கூட முழுக்க சந்தோஷப்பட முடியவில்லை – அடுத்த மாத மின்சார பில் எப்படி இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே வந்து வந்து போகிறது….!

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

23 Responses to சமையலறை சங்கடங்கள்

 1. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  //அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, // ஏங்க, கல்யாணத்துக்கு அப்புறமாவது வேற ஏதாச்சும் நல்ல விறுவிறுப்பான சண்டையா போட மாட்டீங்களா? ஏன் இப்படி நுண்ணரசியல் நூலரசியல்னு.. ம்ஹும்..

 2. இராகி சொல்கிறார்:

  ayyayo, ungka kadhaiya kedda engkaLai madhiri bachelorku kalyaaNam pannanum kra aasai poidum… ippalaam kalyaanadhdhukku ponnu kidaikkidho illaiyo, aanaa chennaila kudi irukka veedu dheda veNdirukku.. adhukku munnaadi gas connection vaangkanum…

 3. இராகி சொல்கிறார்:

  ungkaLudaiya kadhaiya keddaal … aanaa onnu sollungka evlothan periya aaLaa irunthaalum, intha gas, ration card, birth/death certificate vaangkradhukku poy nikkanumna adhai vida kodumai illai… ippalaam chennaivaasikaL, kalyaanam panradhukku munnaadi ponnu kidaikkudho illaiyo, nalla veedum, gas connection um vaangka vendiyirukku… inime varadhadsanai kekura pasangka ponnu gas connetion oda dhaan venum nu sonnaalum aachariya paduvadhaRkillai…

 4. அதிஷா சொல்கிறார்:

  ஏன்ங்க இது பாலசுப்ரமணியம் மெட்டல் ஸ்டோரு விளம்பரமா இல்லஅந்த மின்காந்த அடுப்பின் விளம்பரமா?எது எப்படியோ உங்க பதிவு மூலமா நான் தெரிஞ்சிகிட்ட ஒரே மேட்டரு இன்னானாகல்யாணத்துக்கு முன்னால ஒழுங்க ஒரு கேஸ் கனெக்சன் வாங்கிடனும்னு இல்லாட்டி நம்மள ஆராய்ச்சிக்கூட எலியாக்கீருவீங்க போலருக்கேஅருமையான பதிவு ஏ….ஜீப்பரப்பு

 5. துளசி கோபால் சொல்கிறார்:

  ஆஹா…… வாங்க வாங்க. ஜாய்ன் த க்ளப்:-)முதலில் நீங்க செய்யவேண்டிய ‘கடமை’ ஒன்னு இருக்கு. ரங்குவை நம்ம பெனத்தலாரின் இல்லறத்தியல் வகுப்புக்கு அனுப்பிப் படிக்கவைப்பது.22 மணி நேரம் பவர் கட் நிலையில் மின்சார அடுப்பு பயந்தருதா?( பாருங்களேன் பயன் தருதா? ன்னு அடிச்சா எப்படி விழுந்துருக்குன்னு!!)எனக்குக் கரி அடுப்பு, இல்லேன்னா மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்னு காஸ் ஸ்டவ் போலவே வருதாமே அது இருந்தால் கொள்ளாம்னு இருக்கு. ஆமாம்…மண்ணெண்ணெய் கிடைக்குதா?

 6. ♥ தூயா ♥ Thooya ♥ சொல்கிறார்:

  //நான் மறுக்க மறுக்க வழக்கம் போல பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று //Anni, balannakku rompa thairiyam..vidathinga(sorry, no thamizh font)

 7. சென்ஷி சொல்கிறார்:

  //எது எப்படியோ உங்க பதிவு மூலமா நான் தெரிஞ்சிகிட்ட ஒரே மேட்டரு இன்னானாகல்யாணத்துக்கு முன்னால ஒழுங்க ஒரு கேஸ் கனெக்சன் வாங்கிடனும்னு //repeatey :))// பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று 😉 //appa thalathan ini daily samaiyala 😦

 8. ஆயில்யன் சொல்கிறார்:

  //பொன்ஸ்~~Poorna said… //அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, //ஏங்க, கல்யாணத்துக்கு அப்புறமாவது வேற ஏதாச்சும் நல்ல விறுவிறுப்பான சண்டையா போட மாட்டீங்களா? ஏன் இப்படி நுண்ணரசியல் நூலரசியல்னு.. ம்ஹும்..///ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய்!!!! :))

 9. நந்தா சொல்கிறார்:

  பொன்ஸ் வேற எந்த சண்டைடயில இவ்வளவு விறுவிறுப்பு இருக்கும். அடப் போங்க. இந்த அறிவு ஜீவிசண்டையை பாலா கிட்ட போட்டம்னா நல்லா பொழுது போகும். அதெல்லாம் அனுபவிச்சாதான் டெரியும்.ஊரைத் தாண்டி, ஆத்தைத் தாண்டி அந்தப் பக்கம் போய் உக்காந்துக்கிட்டா எப்படி தெரியும். 🙂

 10. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  பொன்ஸூ விறுவிறுப்பான சண்டையா அது என்னா .. இப்ப போடற சண்ட அவங்களூக்கே சுவாரசியமா இருக்குதாம் நீங்க சொல்ற சண்டன்னா நமக்குத்தானே சுவாரசியமா இருக்கும்.. 🙂மின்சார அடுப்பை நம்பி சமைக்கிறீங்கன்னா உங்கூர்ல நல்லா கரெண்ட் இருக்கும் போல …ஆற்காட்டாரை திட்டறதெல்லாம் வதந்தியா..

 11. Naresh சொல்கிறார்:

  ஏம்பா நந்தா, அறிவு ஜீவி சண்டையில உனக்கு என்ன வேலை??? (இரும்பு அடிக்கற இடத்துல ஈ க்கு என்ன வேலை?)லக்ஷ்மி அத்தனை விஷயம் சொல்லியிருக்காங்க, அதுல சண்டையைப் பத்தி மட்டும் எல்லாம் பேசிக்கிட்டு…யார் சொன்னாலும் சரி நீங்க சண்டை போடறதை மட்டும் ஓ சாரி சாரி சமையல் செய்யறதை மட்டும் விடாதீங்க…:)

 12. லக்ஷ்மி சொல்கிறார்:

  பொன்ஸ், ஆயில்யன் – நுண்ணரசியல் சண்டை ஒரு சாம்பிளுக்குத்தான். எந்த டாபிக்கை எடுத்தாலும் அதிலிருந்து ஒரு சண்டைய உருவாக்கறது எப்படின்னு தலகிட்டதான் கத்துக்கணும். அதுல ஐயா P.hdயாக்கும்….குட்டி, அதிஷா, சென்ஷி – அடுத்தவங்க அனுபவத்திலிருந்து நமக்கான படிப்பினைய கத்துக்கறதுதான் நல்ல பிள்ளைங்களுக்கு அழகு. Keep it up. 🙂துளசி, முத்து – எங்க ஏரியாவுல கரண்ட் கட்டுக்கான நேரம் மத்தியான நேரம். அதுனால நாங்க சமையலறையில் குப்பை கொட்டும் காலையும் மாலையும் மின்சாரம் ஒப்பேத்திடுது. மண்ணெண்ணை கிடைக்க ரேஷன் கார்டு வேணுமே, அதுக்கு படற பாட்டையும் தான் பதிவுலேயே சொல்லியிருக்கேனே டீச்சர்… 😦தூயா – விடாம என்ன செய்யறது? க.பி (கல்யாணத்திற்கு பின்) வாழ்கை இப்படித்தான் – சமரசங்களால் ஆனது. பழகிக்க வேண்டியதுதான். 😦சென்ஷி – பாலாவை சமைக்க சொல்லி சாப்பிடுமளவு எனக்கு இன்னும் வாழ்கை வெறுத்துடலை. உங்க ஆர்வத்தை பார்த்தால் என்னிக்காவது நீங்க வீட்டுக்கு வரும்போது மட்டும் பாலாவை சமைக்க சொல்லிடலாம் போலிருக்கே? ஒக்கேவா?நந்தா – பாம்பறியும் பாம்பின் கால். 🙂நரேஷ் – நந்தா அறிவுஜீவி சண்டைய பத்தி மட்டும் பேசக் காரணம் இருக்கு. ஏன்னா அவரும் என்னை மாதிரியே பாலாவின் இந்த அறிவுஜீவின்ற அர்ச்சனைக்கு அடிக்கடி ஆளாகும் நபர். அதுனாலதான் ஒரு புரிந்துணர்வு. 🙂

 13. சென்ஷி சொல்கிறார்:

  //சென்ஷி – பாலாவை சமைக்க சொல்லி சாப்பிடுமளவு எனக்கு இன்னும் வாழ்கை வெறுத்துடலை. உங்க ஆர்வத்தை பார்த்தால் என்னிக்காவது நீங்க வீட்டுக்கு வரும்போது மட்டும் பாலாவை சமைக்க சொல்லிடலாம் போலிருக்கே? ஒக்கேவா?//அப்ப தலைவரு சமையலறை பதிவுல பேரு போட்டிருக்கறது சங்கத்து ஆளுங்கள பயமுறுத்துறதுக்கா 😦நோ சான்ஸ்.. மீ எஸ்கேப்ப்பு :))

 14. Naresh சொல்கிறார்:

  //நரேஷ் – நந்தா அறிவுஜீவி சண்டைய பத்தி மட்டும் பேசக் காரணம் இருக்கு. ஏன்னா அவரும் என்னை மாதிரியே பாலாவின் இந்த அறிவுஜீவின்ற அர்ச்சனைக்கு அடிக்கடி ஆளாகும் நபர். அதுனாலதான் ஒரு புரிந்துணர்வு. :)//ஒரு கதை ஞாபகத்திற்கு வருது லக்‌ஷ்மி,ஒரு ஊருல ரெண்டு பேருக்கு பயங்கர மூளைக் காய்ச்சலாம், அவங்களும் என்னென்ன மாத்திரையோ சாப்பிட்டு பாத்துட்டு கேக்காம, பட்டணத்துல இருக்கற பெரிய ஆஸ்பித்திரிக்கு போனாங்களாம்.அங்க டாக்டர் ரெண்டு பேரையும் நல்லா டெஸ்ட் பண்ணி பாத்துட்டு அதுல புத்திசாலியை டாக்டர் கூப்பிட்டு, ஏம்பா ஒரு விஷயம் எனக்கு புரியலை, உனக்கு மூளைக் காய்ச்சல் வந்தது சரி, ஆனா அந்த இனொருத்தருக்கு எப்படி மூளைக் காய்ச்சல் வந்ததுன்னு கேட்டாராம்.அந்த புத்திசாலி ஏன் டாக்டர்னு புரியாம கேட்க, அதுக்கு அந்த டாக்ட, இல்லைப்பா, தலைன்னு ஒன்னு இருந்தாதான தலை வலி வரும் அப்படின்னாராம் (சத்தியமா நான் உங்க தலையை சொல்லலை).அதே மாதிரி பாலா உங்களை அறிவு ஜீவின்னு சொன்னது சரி, நந்தாவை எப்படி…. என்னமோ போங்க (அப்பா, எப்டியெல்லாம் டிப்ளமேட்டிக்கா பேசி தப்பிக்க வேண்டியிருக்கு)

 15. நொந்தகுமாரன் சொல்கிறார்:

  ரேசன் அட்டையை பொறுத்தவரை, கேஸ் இணைப்புக்கு ரேசன் அட்டை தேவையில்லை என்கிறார்கள். அது அறிக்கைக்காக சும்மா பேசுகிறார்கள். ரேசன் கார்டு வாங்கிவிட்டால்,எளிதாக வாங்கிவிடலாம். நிறைய அலையவிடுகிறார்கள்.அலைந்து திரிந்து நீங்கள் நொந்து நூடுல்ஸாகி ஒரு வழியாய் கார்டு வாங்கும் பொழுது, ஒரு சிலிண்டர் இருப்பதாக அதில் பிரிண்ட் ஆகியிருக்கும். என் நண்பனுக்காக அப்படி வந்திருந்த்தது. உஷார்.இந்திய சமையல் முறை வீட்டுக்கு ஒருவரை பலி கொண்டுவிடுகிறது. சமையலை பொறுத்தவரை கெமிஸ்டரி தொழிற்சாலை தான். பொறுமையும், கவனமும் இருந்தால் சமையல் கத்துக் கொள்ளலாம். இல்லையெனில் பலரை கொல்லலாம்.என் தோழி அடிக்கடி சொல்வார் “ஆண்கள் சமையலில் ஈடுபட்டிருந்தால், இன்றைக்கு சமையலில் டெக்கினிக்கலாக நிறைய முன்னேறியிருக்கும்” என்பார். பேன்ட், சேலை மாதிரி.

 16. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  அடுப்பு பார்க்க சூப்பரா இருக்கே.தலயோட சாய்ஸ், லக்ஷ்மியைத் தேர்ந்தெடுத்த மாதிரி ,அடுப்பையும் அழகாத் தேர்ந்தெடுத்துஇருக்கார்,கிராமம்னு ஒண்ணு,அதில உதவி செய்கிற மனிதர்கள்னு ஒண்ணு. ரெண்டு கான்ஸெப்டுமே அருமையா இருக்கு லக்ஷ்மி.உடனே அங்க போய்விடணும்னு தோணுகிறது.எப்படியோ சவாலே சமாளி…செய்துட்டீங்க.:)ஒரு மீனாட்சி அம்மாள் புத்தகமும் வாங்கிடுங்க. சமைலையலறை இன்னும் லட்சுமிகரமாயிடும்!!!

 17. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  //அப்ப தலைவரு சமையலறை பதிவுல பேரு போட்டிருக்கறது சங்கத்து ஆளுங்கள பயமுறுத்துறதுக்கா :(// இல்ல சென்ஷி, பழிவாங்குறதுக்கு 😀

 18. லெனின் பொன்னுசாமி சொல்கிறார்:

  ஓ.. நீங்கள்தானா என் அண்ணி? 🙂ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேங்க. அண்ணன் ரொம்ப நல்லவர். கண்கலங்காம பாத்துக்கோங்க..:)-லெனின் பொன்னுசாமி.

 19. லக்ஷ்மி சொல்கிறார்:

  சென்ஷி – உங்க தல போன வாரம் நான் ஊருக்குப் போயிருந்தப்ப ஒரு மேகி நூடுல்ஸ் ஒன்னு செஞ்சாரு. அதை சாப்பிட ஃபயர் சர்வீஸ் ஆட்களையெல்லாம் கூப்பிடலாமான்னு அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் யோசிச்சாங்களாம். அதோட ரெசிப்பிய கொஞ்சம் சமையலறைப் பதிவுல வலையேத்த சொல்லி கேட்டுகிட்டிருக்கேன். அப்பத் தெரியும் உங்களுக்கு அவரோட சமையல் திறமை…. 🙂நரேஷ் – நகச(நந்தாவை கலாய்ப்போர் சங்கம்) ரொம்ப தீவிரமா ஆரம்பிச்சிருக்கீங்க போலிருக்கு. உறுப்பினர் பதவிக்கு இப்பவே அப்ளிகேஷன் போட்டுக்கறேன்பா… //அலைந்து திரிந்து நீங்கள் நொந்து நூடுல்ஸாகி ஒரு வழியாய் கார்டு வாங்கும் பொழுது, ஒரு சிலிண்டர் இருப்பதாக அதில் பிரிண்ட் ஆகியிருக்கும். என் நண்பனுக்காக அப்படி வந்திருந்த்தது. உஷார்//நொந்தகுமாரன் – ஆகா, இப்படி வேறு ஒரு அபாயம் இருக்கா? 😦//லக்ஷ்மியைத் தேர்ந்தெடுத்த மாதிரி ,அடுப்பையும் அழகாத் தேர்ந்தெடுத்துஇருக்கார்,// ஆகா, இப்படி சொல்லி அவரை குத்தம் சொல்ல முடியாதபடி வாயடைச்சுட்டீங்களே, நியாயமா? லெனின் – கவலையே படாதீங்க. உங்க அண்ணனை வெங்காயம் கூட உரிக்க சொல்ல மாட்டேன். ஆனா என் சமையலை சாப்பிட்டு அவருக்கு ஆனந்தக் கண்ணீர்(அப்படித்தான் சொல்லிக்கறார்) மட்டும் அடிக்கடி வருது, அது பரவாயில்லைதானே?

 20. மதுமிதா சொல்கிறார்:

  தல தீபாவளி முடிஞ்சதா லக்ஷ்மி… என்ன ஸ்பெஷல்…‘சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன்னு’ ஒரு பாடல் இருக்கிறது மாதிரி, ‘நல்ல சமையல் தெரிகிறது ஆனால் சங்கீத‌ம் தெரியவில்லை’ன்னு ஒரு பாடல் இருக்கு. இதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம்பா. பின்னால ஒருக்கா கொசுவத்தி சுத்தறப்போ சுவையா இருக்கணும். சரியா..அந்த கீரை, வடை, சாம்பார் மேட்டரையெல்லாம் நானும் ஒரு பதிவு போட்டுவிடவா லக்ஷ்மி:)

 21. முத்துகுமரன் சொல்கிறார்:

  அண்ணியாருக்கு விரைவில் ஒரு டன் சமையல் எரிவாயு அனுப்பி வைக்க அமீரக பாகச முடிவெடுத்திருக்கிறது. விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

 22. புருனோ Bruno சொல்கிறார்:

  இன்று தான் வாசித்தேன். 🙂 🙂//மறுநாள் காலை டீக்கு தண்ணீர் வைத்தால் அது வெந்நீராகவே இல்லை. //ஒரு நாள் தான் வேலை செய்ததா 😦

 23. வடுவூர் குமார் சொல்கிறார்:

  மின்சாரத்துக்கு ஒரு சோலர் பேனல் வாங்கிடவேண்டியது தானே??எனக்கும் வெளியில் சாப்பிடுவது என்றாலே கோபமாக வரும் என்ன செய்வது! சில சமயம் விட்டுக்கொடுத்து போகவேண்டியுள்ளதே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s