பெண்களின் அடிமைத்தனம் – தீர்வு


முன் எச்சரிக்கை: தன்னைத் தானே MCP என்று அறிவித்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு இக்கடிதத்தை படிக்காமலிருப்பது நல்லது.

அன்புள்ள ஏகாம்பரி,

உங்கள் பிரிய தோழியும் ஆல்ட்டர் ஈகோவுமான உஷாக்கா உங்களுக்கு எழுதின கடித்ததை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தாலும் தேர்ந்த இலக்கியவாதியல்லவா? கடித இலக்கியத்தில் அது ஒரு புது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அக்கடிதத்தின் மையக் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்பதை தாழ்வன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லற பாடத்திலும், இலக்கியத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட உஷாக்காவின் கருத்தை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். கட்டற்ற சுதந்திரம் தரும் இணையத்தை பாவிப்பதில் உள்ள சுகமே யாரும் எதையும் மறுக்கலாம், உல்ட்டா அடி அடிக்கலாம், அதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் தேவையில்லை என்பதுதானே? அதை நாம் மட்டும் பயன் படுத்தவில்லையென்றால் எப்படி?

நிற்க(எழுந்தெல்லாம் நின்று விடாதீர்கள், இது கடித மரபில் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவும் முன் போடுகிற ஸ்பீட் ப்ரேக்). ஆண்கள் சமைப்பதில் உள்ள சங்கடங்களை எல்லாம் (அவர்களுக்கு அல்ல, நமக்கு) யக்கா அழகாக பட்டியலிட்டிருந்தார். அதில் எதையும் நான் மறுக்கவில்லை, எங்கள் வீட்டிலும் அத்தகைய களேபரங்கள் அவ்வப்போது நடக்கிறது என்ற இமாலய உண்மையை மறைகக்வுமில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயந்து புதுயுகப் பெண்களான நாம் பின்வாங்கினோமென்றால், அப்புறம் ஆண்களுக்கு மணி கட்டுவது பின் யார்?

இவ்விடத்தில் பினாத்தலார் என்கிற பிரபல பதிவர் ஒரு முறை எழுதிய பதிவொன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். wifology வரிசையில் வேலை செய்யாமல் தப்பிக்க அதை எவ்வளவு மோசமாக செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்வதையும் ஒரு டெக்னிக்காக அடுக்கியிருந்தார். அவரின் ஃபேவரைட் ஐட்டமான உப்புமா செய்வதையே உதாரணமாகக் கொண்டு இந்த டெக்னிக்கை அழகாக விளக்கியிருந்தார். http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html இதொன்றும் அவரது புது கண்டுபிடிப்பல்ல தோழி… காலகாலமாய் இந்த ஆண்கள் நம்மைப் போன்ற பெண்களை ஏமாற்ற பயன்படுத்தி வரும் மாபெரும் சதி நடவடிக்கைதான் அது. நாமும் கூட இதில் ஏமாந்துபோய், போதும் சாமி சமைச்சது என்று சொல்லிவிட்டால் அவர்கள் எல்லாம் உள்ளுக்குள் “இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்” என்று களித்துக் கும்மாளமிடுவார்களே தோழி? விடலாமா இந்த அக்கிரமத்தை நடத்த?

முதலில் உஷாக்கா செய்த ஒரு மாபெரும் தவறைச் செய்வதை நீ கனவிலும் நினைக்காதே – அதாவது ஆரம்பக் காலங்களில் அவர்களை நம் கண்மறைவில் சமைக்க அனுமதிப்பது. ஊருக்குப் போகையில் கிச்சனுக்கு ஒரு நல்ல godrej பூட்டாகத் தேடிப் பார்த்து பூட்டி, சாவியை நமது அம்மாக்களைப் போல தாலிச் சங்கிலியில் கோர்த்துக் கொண்டு போவது நலம். இங்கே ஒரு முறை என் வீட்டுக்காரார் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதாமய் வந்த ஒரு நன்னாளில் Magie நூடுல்ஸ் செய்வதாகச் சொல்லி பாத்திரம் ஒன்றையும்,அதை விட கொடுமையாக புத்தம் புது எலக்ட்ரிக் ஸ்டவ்வையும் சேர்த்துக் கருக்கியது நினைவுக்கு வந்து என் கண்ணில் நீர் ததும்பச் செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இது போன்ற விபத்துக்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடப்பதுதான் என்றாலும், அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது. அதை விட முக்கிய விஷயம், அந்தப் பதற்றத்தில் கூட தவறியும் “அய்யோ, இதுக்குதான் உங்களை கிச்சன் பக்கமே விடறதில்லை, இனி இந்தப் பக்கம் வரவே கூடாது” என்கிற நம் தலையில் நாமே மண்வாரி போட்டுக்கொள்கிற டயலாகை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்க.

இது போன்ற சந்தர்ப்பங்களில் “நீங்க பரவால்லப்பா, நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல வெந்நீர் போடறதுக்கே பாத்திரத்தை கருக்கியிருக்கேனாக்கும்” அப்படின்னு சும்மாவாச்சுக்கும் சொல்லி வைக்க வேண்டும். ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.

“எனக்கெல்லாம் கை அழுந்தாதுப்பா, நீங்களே இந்த ஒரு பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுருங்க ப்ளீஸ்” என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு நிமிடம்தான் முயற்சி நடக்கும். உடனே இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்கித்தரேனேம்மா என்கிற ஆசை வார்த்தைகள் வரும்தான். ஆனால் வைராக்கியமாக அதைத் தாண்ட வேண்டும்.

இப்படி மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரியாமல் போவது. இரண்டாவது, மற்றும் முக்கிய காரணம் அந்த வாக்குறுதியெல்லாம் தேர்தல் வாக்குறுதி போலத்தான். தீய்ந்த பாத்திரத்தை தூக்கிப் போடுவது மட்டும்தான் நடக்குமே ஒழிய, புது பாத்திரம் ஒரு நாளும் வராது. சும்மா அந்த நேரத்துப் பிரச்சனையின் தீவிரத்தை தணிக்கப் பயன்படும் ஒரு சின்ன சமாதானமே அந்த புது பாத்திரம் வாக்குறுதி.

எனவே சற்றும் மனந்தளராது, அம்மா வாங்கித் தந்தது, இல்லை முதன் முதலாக இந்த வீட்டில் வாழ்கைப்பட்டு வந்த (அந்த துரதிர்ஷ்ட தினத்தில்) பால் காய்ச்சியது என்று எதாவது ஒரு சென்ட்டிமென்ட்டை அதன் தலையில் கட்டி, எப்படியேனும் அதை தேய்க்க வைத்துவிட வேண்டும். ஒரு முறை தீய்த்தால் அதை தேய்ப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிந்து விட்டால் அடுத்த முறையிலிருந்து அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இப்படியே சமையலறை மேடையை சுத்தம் செய்வதையும் பழக்கி விட்டோமேயானால் தீர்ந்தது பிரச்சனை.

வேலையை அவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் முக்கிய ஆயுதம் நமது பாராட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, இது என்னங்க பெரிய விஷயம், நானெல்லாம் சமைக்க ஆரம்பிச்சப்ப என்று ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க வேண்டும். பொறுமையிலும், விடா முயற்சியிலும் விக்ரமாதித்தனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து இது போன்ற அஹிம்சா மார்க்கத்தை கடைபிடித்துப் பார்த்தும் தேறவில்லையென்றால்…. பிறகென்ன நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு – அதற்கப்புறம் நமது சமையலின் எந்தக் குறையையும் பற்றி பேசும் உரிமை நமது இல்லத் தலைவருக்கு கனவிலும் கிடையாது என்பதை இமைப்பொழுதும் மறப்பாதிருப்பீராக…

அப்புறம் ஊருக்கெல்லாம் இவ்வளவு உபதேசம் சொல்கிறாயே, உன் வீட்டுக் கதையென்ன கண்மணி என்று கேட்கிறாயா தோழி? @#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# வேறென்னத்த சொல்ல!

அன்புடன்,
லக்ஷ்மி

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

17 Responses to பெண்களின் அடிமைத்தனம் – தீர்வு

 1. தமிழ் பிரியன் சொல்கிறார்:

  :))))

 2. முத்துலெட்சுமி/muthuletchumi சொல்கிறார்:

  வீரமங்கை என்று உங்களை சொல்வதில் தவறேதுமில்லை..நீங்கள் எழுதிய வார்த்தைகள் அத்தனையும் சத்தியம் .. உண்மை.. அடித்து சொல்வேன்..( மறு பாதியைத் தான்)நான் அல்மோரா சென்றபோது அந்த கெஸ்ட் ஹவுஸ் சமையக்காரப்பையன் அந்த இடத்தில் சமையல் நடந்ததா என்று சந்தேகிக்கும்படி வைத்திருந்ததை என் கணவருக்கு கொண்டு போய் காண்பித்துவிட்டுத் தான் மறுவேலை பார்த்தேன்.. லக்ஷ்மி வாழ்க!… 🙂

 3. Sathananthan சொல்கிறார்:

  //ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.//இது ஒவ்வொரு வீட்டிலும் நடந்திருக்கும். (கருக்குவது) ரசித்துச் சிரித்தேன்.

 4. SUREஷ் (பழனியிலிருந்து) சொல்கிறார்:

  :}

 5. ஆ.ஞானசேகரன் சொல்கிறார்:

  :))))

 6. TBCD சொல்கிறார்:

  எம்சிபிக்கள் சார்பாக கண்டனங்கள் !!!

 7. அபி அப்பா சொல்கிறார்:

  எம்மா லெட்சுமி! இப்பல்லாம் பதிவே அதிகம் காணுமே வீட்டுக்கார் கொடுமையோ:-))))))

 8. அபி அப்பா சொல்கிறார்:

  \\அடித்து சொல்வேன்..( மறு பாதியைத் தான்)\\பார்ரா பார்ரா இது என்ன பாகச பதிவா????????????அந்த லெட்சுமிக்கி ஒன்னுன்னு இந்த லெச்சுமிக்கி கோவம் வருது??/

 9. சென்ஷி சொல்கிறார்:

  ஆஹா. அண்ணி.. தல பாகசவுல கலாய்ச்சது இப்ப ரொம்ப கம்மியா தெரியுது.. 🙂//@#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^//இது ரொம்ப நல்லா புரியுது அண்ணி 🙂

 10. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //அபி அப்பா said… எம்மா லெட்சுமி! இப்பல்லாம் பதிவே அதிகம் காணுமே வீட்டுக்கார் கொடுமையோ:-))))))1:37 AM//ரிப்பீட்டே…!

 11. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  தங்க லச்சுமி…. தூள்மா.இன்னும் சட்ட்டியில் மீதி இருக்கும் அறிவுரைகளையும் அள்ளி வழங்க வேண்டியது….காத்திருக்கிறோம். பினாத்தலார் பதிவு பார்த்ததும் ஒரு தார்மீகக் கோபம் வந்தது அப்போ. அதே போல இந்தப் பதிவைப் படித்ததும் மனம் கொள்ளா மகிழ்ச்சி. இந்தத்தலைமுறையின் ஜான்சி ராணிக்கு வாழ்த்துகள்:))))

 12. லக்ஷ்மி சொல்கிறார்:

  தமிழ் பிரியன்,சதானந்தன், ஞானசேகரன், சுரேஷ், டிபிசிடி, கோவி. கண்ணன் – வந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. முத்து, அப்பப்ப இப்படியாப்பட்ட நிரூபணங்கள் கிடைக்கறப்ப அதை வரலாற்றில் பதிந்து வைப்பது ரொம்ப முக்கியம் – ஏன்னா நமக்கு வரலாறு ரொம்ப முக்கியம் பாருங்க. அப்பப்ப அதை நினைவு படுத்திகிட்டே வேற இருக்கணும். அபி அப்பா – இதென்ன அநியாயமா இருக்கு? என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி நான் காலைல ஒன்னு சாயந்திரம் ஒன்னுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போட்டுகிட்டிருந்தா மாதிரி பேசறிங்களே, நியாயமா? என்னிக்குமே நான் எழுதற வேகம் ஆமை வேகந்தானே அண்ணே? இதுல எதுக்கு அந்த அப்பாவிய வேற வம்புக்கு இழுக்கறீங்க? 🙂சென்ஷி – வரிகளுக்கிடையே படிப்பவனே நல்ல வாசகன்னு நிரூபிச்சுட்டீங்க.. :))))வல்லிம்மா – பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

 13. மதுமிதா சொல்கிறார்:

  ///@#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# ///ங்ஙே:(இது என்ன மொழி நிஜமாவே புரியல. கடிதம் தூள்:):)))))

 14. லதானந்த் சொல்கிறார்:

  பெண்ணியம் வாழ்க!

 15. ramachandranusha(உஷா) சொல்கிறார்:

  ஹூம் எனக்கு அந்தக்காலத்தின் வாழ்க்கையின் பாலா ( வார்த்தை உதவி- துளசி), ஐ மீன் பால பாடத்தை யாராவது கற்றுக் கொடுத்து இருந்தால், நானும் உருப்பட்டு இருப்பேன் 😦//@#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^//அதுக்காக சிறு பிள்ளைகளும் உலாவும் இணையத்தில் கெட்ட வார்த்தைகள் பாவிப்பதற்கு என்கண்டனங்கள்.

 16. லக்ஷ்மி சொல்கிறார்:

  மது, உஷாவின் பின்னூட்டத்தில் உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது. 🙂உஷா, :)))))))))))))லதானந்த் – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 17. Premalatha சொல்கிறார்:

  ரசித்தேன். 🙂

  கடைசி வரிகளை மேலும் ரசித்தேன். :-))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s