சார்பு நிலையும், அதன் எல்லைகளும்


நான் எந்த ஒரு கொள்கைக்கும் தாலி கட்டிக் கொண்டவனில்லை – இது எழுத்தாளர் ஜெயகாந்தன் அடிக்கடி தன் படைப்புகளிலும், அதன் முன்னுரைகளிலும் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொள்ளும் இன்னும் சொல்லப் போனாம் மார்தட்டிக் கொள்ளும் ஒரு விஷயம். அவரது ஒரு கதையில் வரும் கதாபாத்திரம்(சமூகம் என்பது நாலு பேரில் வரும் முத்துவேலர் என்று நினைக்கிறேன், சரியாக நினைவிலில்லை) தன்னைப் பற்றி இப்படி சொல்லிக் கொள்வார் – நேற்று வரை நான் பீடத்திலேற்றி வைத்து வணங்கிய எந்தக் கொள்கையையும் தவறு என்று தோன்றிய மாத்திரத்தில் அடித்து நொறுக்கி விட்டு, சரியென்று மனதுக்குப் படும் புதுக் கொள்கையை அதே பீடத்திலேற்றி வணங்கத் தயாராக இருக்கும் நேர்மையாளன்.

இந்த நேர்மை என்பது சட்டென பார்க்கையில் பெரிய விஷயமில்லை போலத் தோன்றினாலும் உண்மையில் நடைமுறைப் படுத்த வருகையில் மிகக் கடினமானதுதான். நாம் ரொம்ப மதிக்கும் ஒருவர் தவறு செய்கையில் உள்ளுக்குள் எவ்வளவு உறுத்தல் இருந்தாலும் அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்பதுதான் சிறந்த செய்கையென நாம் நம்புகிறோம். அது அவர்களிடம் நமக்கு இருக்கும் விசுவாசம் என்று ஆறுதல் சொல்லிக் கொள்கிறோம் – அதிக பட்சம் போனால் நீ தவறு செய்கிறாய் என்று அவர்களிடம் நேரிடையாக ஆனால் மற்றவர் கண்ணுக்குப் புலனாகாமல் சொல்லுவதோடு நம் நேர்மை முடிந்துவிடுகிறது. இதற்கு நாம் சொல்லிக்கொள்ளும் பெயர் விசுவாசம். நன்றி மறவாமை. இப்படிச் செய்வதே கூட தவறுதான். ஆனாலும் இது நெடுநாட்களாக நம் மரபணுக்களிலேயே பதிந்து விட்டதால் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ராமாயணத்தில் ராவணனின் தவறை வெகுவாக விமர்சித்தாலும் கூட, தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பின்னும் செஞ்சோற்றுக் கடனுக்காக அண்ணனுடன் நின்று வீழ்ந்த கும்பகர்ணனே ராவணனின் தவற்றுக்காக அவனிடமிருந்து விலகி ராமரைச் சேர்ந்த விபீஷணனை விடவும் உயர்வாக கொண்டாடப் படுவது நம் சமூகத்தில் மரபு. அதை விடவும் விபீஷணன் போன்றவர்களை துரோகியாகவே பார்க்கும் அளவுக்கு இத்தகைய சார்பு நிலைகளைத் தீவிரமாகப் பார்க்கும் சிலரும் நம்மில் உண்டு.

எது எப்படியாயினும் நமக்கு வேண்டியவர்கள் செய்தாலும் அது தவறு என்று ஒப்புக்கொள்ளப் படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மற்றவரிடம் ஒப்புக் கொள்வது இருக்கட்டும், தன் மனசாட்சியிடமே கூட இப்படித் நமக்குப் பிடித்த, நம்மால் வழிபடப் பெறுபவரின் தவறுகளை ஒப்புக் கொள்ள முடியாத அளவு ஒருவரால் செல்ல முடியுமெனில் அது மூன்று வகையினரிடம் மட்டுமே காணப்படும் இயல்பு – தாய், அரசியல் கட்சித் தலைவர்/தலைவியின் ரத்தத்தின் ரத்தங்கள் மற்றும் நடிகர்களின் ரசிக கண்மணிகள். முன்பெல்லாம் இது போன்றவர்களின் சார்பு நிலையையும், அதை தாங்கிப் பிடிக்க இவர்கள் அடிக்கும் கூத்துகளையும் பார்க்கையில் எரிச்சல் வரும். ஆனால் இப்போதெல்லாம் பரிதாபம்தான் பொங்குகிறது.

ஒரு வழக்கறிஞர் தன் கட்சி காரரை காப்பாற்ற முயற்சிப்பதில் (அது அவர் மனசாட்சிக்கு விரோதமானதாக இருந்தாலும் கூட) ஏதேனும் பொருளியல் காரணங்களாவது உண்டு. ஒரு தாய் அப்படி நடந்து கொள்வதாவது ரத்த பாசத்தால் என்று சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் எந்த பிரதிபலனும் இல்லாமல், ரத்த உறவும் இல்லாமல்(வெறுமனே உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, இதயமே என்றெல்லாம் அழைப்பது பெரிய விஷயமா என்ன) இவர்கள் ஏன் தங்கள் தலைவனின் காலடி மண்ணையும் எடுத்து திருநீறாய் அணியும் மனநிலைக்குப் போகிறார்கள்?

தன்னெஞ்சறிந்து பொய்யான சப்பைக் கட்டுகளை எடுத்து வைத்தும், அர்த்தமில்லாத வாதங்களை கூறி பிறரது கேலிக்கு ஆளாகியும் கூட தங்களின் விசுவாசத்தை வெறி என்கிற அளவில் கொண்டு சென்று வைத்திருக்கும் இவர்களும் பரிதாபத்துக்குரிய மனநோயாளிகள் என்றே தோன்றுகிறது. அதுவும் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில், அரசியல் அந்தர்பல்டிகள் நிமிடத்திற்கொன்றாய் அரங்கேறி வரும் நிலையில் இந்த உடன்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும், கண்மணிகளும், இதயங்களும், நுரையீரல்களும், இன்ன பிறவும் அடிக்கும் கூத்துக்களைப் பார்க்க பார்க்க இவ்வளவுதான் முடியுமா, இல்லை இதற்கும் மேல் போக முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in எண்ணம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s