வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்


ஒரு குட்டி உயிரின் வரவால் நிறைய மாற்றங்கள் வாழ்கை முறையில். விடுப்பிலிருப்பதால் தேதி, கிழமை போன்றவை மனதில் பதிவதேயில்லை. நானும் குழந்தையும் இருக்கும் அறை மாடியிலும், டிவி வீட்டின் கீழ்ப் பகுதியிலும் இருப்பதால் சுத்தமாய் டிவி பார்ப்பதே இல்லை எனலாம். எப்போதேனும் கனிவமுதனின் அழுகையை மாற்ற ஒரு முயற்சியாய் மாடியிலிருந்து கீழே எடுத்துப் போகையில் மட்டுமே டிவி பார்க்கும் (துர்)பாக்கியம் கிடைக்கிறது. மற்றபடி நானும் அவனும் மட்டுமேயான உலகில்தான் பகல் முழுவதும் செல்லுகிறது.

ஜூனியர் இரவில்தான் மிகவும் மும்மரமாக அழுவது, விளையாடுவது என பிசியாக இருப்பார் என்பதால் இரவு தூக்கம் மிகவும் சொற்பமே. எனக்கோ பகலில் இப்போதெல்லாம் சுத்தமாக தூக்கம் வருவதேயில்லை. ஆக மொத்தத்தில் என் தூக்கத்தின் அளவு சரிபாதியாகி விட்டது. இதன் விளைவு என்னவென்றால் கண்கள் ரொம்பவும் சோர்வாக இருப்பதும், அடிக்கடி தலை வலி வருவதுமாக இருக்கிறது. பெரியவர்களோ தூக்கம் வரவில்லையென்றாலும் கண்ணை மூடிக் கொண்டேனும் இரு, அப்போதுதான் தப்பிக்கலாம் என்று அறிவுறுத்துவதால் முன்னளவு ஏன் அதில் பாதியளவு கூட வாசிப்பதற்கு நேரமிருப்பதில்லை.

விடுமுறையிலிருந்தும் அதிகமாக புத்தகம் படிக்காமலிருப்பது என்ற ஒன்று என் வாழ்வில் சாத்தியமா என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னால் யாராவது கேட்டால் சிரித்திருப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது…. ஆனால் அப்படி ஒரு நிலை வந்தும் கூட நான் அதற்காக வருந்தவில்லை என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக் இருக்கிறது. 🙂

அப்படியும் இப்படியுமாக என் குட்டி எஜமானர் பெரிய மனது வைத்து என்னை படிக்க அனுமதித்த இடைவெளிகளில் ஒரு வழியாக ஆழி சூழ் உலகு, டாலர் தேசம், புலி நகக் கொன்றை, எரியும் பனிக்காடு என சில புத்தகங்களை படிக்க முடிந்தது.

அதில் ஆழி சூழ் உலகு விவரிக்கும் உலகம் எனக்கு முற்றிலும் புதிது. மீனவர்களின் வாழ்கை முறை, மீன் பிடித் தொழிலுக்கே உரிய நுட்பங்களின் விவரணை, முற்றிலும் புதியதான வட்டார வழக்கு என படிக்கவே அதிக காலம் எடுத்தது.

புலிநகக் கொன்றை பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில் படிக்க கிடைத்தது. நாவல் என்ற வடிவத்துக்கேற்ற கதையும், கதாபாத்திரங்களின் அணிவகுப்பும். யாரொருவரையும் கதாநாயகனாக கொள்ளாத கதை – உண்டியல் கடைக்காரர் ஒருவரின் வம்சாவளியைத் தொடரும் ஒரு நம்பிக்கையைப் பற்றிய கதை. பொன்னா என்ற தொண்ணூறு கடந்த முதிய பெண்மணியே கதையில் விவரிக்கப் படும் அத்தனை தலைமுறையினருக்கும் நடுவில் தொடரும் சரடு. நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல்.

டாலர் தேசம் என்கிற அமெரிக்காவின் அரசியல் வரலாற்று நூல் முற்றிலும் புதிய விதம். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுடனேயே பணியாற்றியிருந்தும் கூட அந்த தேசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள மெனக்கிட்டதில்லை. க்ளையண்ட் சைட்டிற்கு சென்ற போதும் டாலரின் எக்ஸ்சேஞ் ரேட் பற்றி கவலைப்பட்ட அளவு அத்தேசத்தின் வரலாறு குறித்தெல்லாம் கவலைப் பட்டதில்லை.

ஆனால் ஒரு வல்லரசாக, உலக தாதாவாக தன்னைத் தானே செல்ஃப் அப்பாயிண்ட் செய்து கொள்ளும் ஒரு தேசத்தின் மனப்போக்கின் பின்னணி இந்நூலைப் படிக்கையில் ஒரளவு நமக்கு புரிகிறது.

ஒரு குறுகிய காலத்தில், குடியேறிகளாலேயே உருவாக்கப்பட்ட நாடு முழுக்கு முழுக்க தன் மேலாண்மையை பொருளாதாரம் சார்ந்தே பெற வேண்டியிருப்பதும், அதற்கு அது முழுக்க முழுக்க யுத்தங்களையே நம்பியிருப்பதும் படிப்படியாக இந்நூலில் விளக்கப் படும்போது அமெரிக்கா ஏன் அதன் சுண்டுவிரல் சைசில் இருக்கும் கொரியாவிலும், வியட்நாமிலும் கூடாரம் போட்டு உட்கார்ந்து ரவுடிப்பட்டத்தை சாஸ்வதமாக்கிக் கொண்டது என்பது புரிகிறது.

பா.ராகவனின் சுவாரஸ்யமான உதாரணங்களும், நகைச்சுவை பூசிய வார்த்தைகளும் அரசியல் வரலாறு எனும் பல்கலைக் கழக வாசனை வீசும் சப்ஜெக்டையும் எளிமையானதாக்குகிறது. சில உதாரணங்கள்:

“..ஹேமநாத பாகவதர் முன்னால் சிவாஜி பாடியபோது உலகம் ஒரு முறை நின்று சுழன்றதே, அப்படி அந்த நீதிமன்றம் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டு, பின் சுதாரித்துக் கொண்டது…”

“..இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா என்ற பாரதியார் பாட்டை இங்கிலீஷில் பாடிக் கொண்டு களத்தில் குதித்தார் புஷ்..”

ஆனால் இந்த நூலை படிக்க ஆரம்பித்த போது இரண்டாவது அத்தியாயத்திலேயே ஒரு பெரிய ஆயாசம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு புத்தகத்தை மூடி வைத்திருந்தேன். நம் பள்ளி முதல் பல்கலைகழகம் வரையிலான வரலாற்று பாட புத்தகங்களில் அசோகர் மரம் நட்டார், அக்பர் இராஜபுத்திர பெண்களை மணந்தார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார் என்பது போலவே வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்தார் என்று சொல்லி வைப்பது மரபு.

ஒரு பொருளை கண்டுபிடிப்பது என்றால் ஒன்று அது புதிதாக தயாரிக்கப் படுவதாக இருக்க வேண்டும், இல்லை காணாமல் போயிருக்க வேண்டும். பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு நிலப் பகுதியை, ஏன் வரலாறே இல்லை என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பகுதியை புதிதாக ஒருவர் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஐரோப்பியர்களின் வரலாற்றில் வாஸ்காடகோமா இந்தியாவை கண்டுபிடித்திருக்கலாம், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்திருக்கலாம். ஏனெனில் ஐரோப்பிய வெள்ளைத் தோல் மனிதர்களுக்கு தங்களையன்றி பிறர் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளாகவும், அவர்கள் வசிப்பதெல்லாம் உலகிலேயே சேராத புது பகுதிகள் என்ற எண்ணமிருந்திருக்கலாம். அதனால் அவ்விடங்களுக்கு தாங்களிருக்குமிடத்திலிருந்து செல்வதற்கான பாதையை கண்டுபிடித்ததையே அவர்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளையே கண்டுபிடித்ததாக சொல்லி மகிழலாம். ஆனால் நாமும் ஏன் அப்படியான வார்த்தை பிரயோகங்களையே இன்னமும் பயன்படுத்த வேண்டும்? பாட புத்தகங்களில் மாற்றம் கொண்டு வருவது வேண்டுமானால் இப்போதைக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். பாட புத்தகங்களுக்கு வெளியே வரலாற்றை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வாசிப்பவர்களுக்காகவே எழுதப் படும் இது போன்ற நூல்களிலாவது இத்தகைய அர்த்தமற்ற பதப் பிரயோகங்கள் தவிர்க்கப் பட வேண்டுமில்லையா?

பா.ரா போன்ற பிரபல எழுத்தாளர்களும் இத்தகைய தேய்ந்த, பொருளற்ற வார்த்தைகளையே பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது.

எரியும் பனிக்காடு பற்றி தனியே ஒரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். அவ்வளவுக்கு மனதை உலுக்கிய புத்தகம் அது.

புயலிலே ஒரு தோணி, வண்ணதாசன் சிறுகதைகள் என ஏற்கனவே ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் புத்தகங்களும் என்னை சோம்பேறி என்று ஏசுவது கேட்கிறது. விரைவில் அவைகளையும் படித்து முடிக்க முயற்சிக்க வேண்டும். இப்போதெல்லாம் ’எல்லாம் அவன் செயல்’ என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு – இங்கே என்னுடைய அவன் என் குட்டிப் பையன்தான். அவன்தான் மனது வைக்க வேண்டும். 🙂

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in படித்ததில் பிடித்தது. Bookmark the permalink.

16 Responses to வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்

 1. சென்ஷி சொல்கிறார்:

  🙂

  எல்லாம் பெரிய பெரிய புக்..

  இம்புட்டு புக் படிக்கறீங்கன்னா கனிவமுதன் வம்பு வளர்க்காம இருக்கறதாத்தான் அர்த்தம் அண்ணி..!

 2. லக்ஷ்மி சொல்கிறார்:

  ஆஹா… சென்ஷி, அப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்கப்படாது…. அவன் தூங்குற சொற்ப நேரத்தை தவிர வேறு எப்போதும் நான் வேறு வேலை எதுவுமே செய்ய முடியாது. குளிச்சு சாப்பிட கூட எங்க சித்தி தயவு வேண்டியிருக்கு – அவங்க வந்து பொறுப்பை ஏத்துகிட்டாதான் நான் நகர முடியுது. சோ, அவர் தூங்குற நேரம் மட்டும் கொஞ்சம் பக்கம் புரட்ட முடியுது…

  அதுக்கும் கண்ணு வைக்காதீங்க சாமீ…. 🙂

 3. இளவஞ்சி சொல்கிறார்:

  வாழ்த்துகள்,

  குட்டி எஜமானரும் நீங்களும் நன்றாகத் தூங்கவும்.. சைக்கிள் கேப்பில் புத்தகங்கள் படிப்பதற்கும் 🙂

  இதுபோக, எங்க தலை பாலாவின் மினி இம்சைகளை நீங்கள் எழுதாமல் இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் பகச சார்பில் கண்டிக்கிறோம்!!

 4. சென்ஷி சொல்கிறார்:

  //வன்மையாகக் பகச சார்பில் கண்டிக்கிறோம்!!//

  ஆசானே.. கல்யாணம் ஆனதுக்காகவெல்லாம் காலை உடைக்கக் கூடாது. சொல்லிப்புட்டேன் 🙂

  எப்பவும் பாகசதான் ..

 5. கிளியனூர் இஸ்மத் சொல்கிறார்:

  நல்ல பதிவு…சகோதரி புத்தகத்தை மட்டுமல்ல உங்க செல்லத்தையும் படிங்க நிறைய விசயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்

 6. லக்ஷ்மி சொல்கிறார்:

  இளவஞ்சி, இஸ்மத் – நன்றி. 🙂

  இளவஞ்சி, சென்ஷி – பாகச இன்னும் இருக்கா? அந்த மனுஷனை விடவே மாட்டீங்களா? 😉

 7. துளசி கோபால் சொல்கிறார்:

  பள்ளிக்கூடம் போகும்வரை பிள்ளைகளை ‘கவனிப்பது’ ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம்!!!

  எஞ்சாய் ‘மாடி’:-)

 8. லக்ஷ்மி சொல்கிறார்:

  துளசி, ஆஹா… அப்போ இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்கு இதே நிலைதானா?… அவ்வ்….

 9. கல்வெட்டு சொல்கிறார்:

  பா.ரா எதைச் சொன்னார் என்று தெரியவில்லை.
  கண்டுபிடிப்பு என்பது டிஸ்கவர் என்ற பொருளில் வரும்.

  அமெரிக்கா கண்டம் ..கண்டுபிடிப்பு என்று சொல்லியிருக்கும் பட்சத்தில்….

  கண்டுபிடிப்பு ‍‍> டிஸ்கவர் > அறிந்து கொண்டது > தெரிய வந்ததது …..என்று சொல்லலாம்.

  தொலைந்து போனதையோ அல்லது இல்லாத ஒன்றையோ கண்டுபிடித்ததாக அர்த்தம் செய்தால் சரிவராது. :-)))

  மேலும் இது யாரை யார் கண்டுபிடித்தார்கள் என்று செய்தி சமைப்பதிலும் வரலாறு சமைப்பதிலும் சூட்சுமம் உள்ளது.

  ஆர்க்டிக் பகுதியில் வாழும் ஒரு அதிசிய விலங்கு வழிதவறி அலாஸ்கா வந்துவிட்டால்…

  “அதிசிய மனிதர்களைக் கண்டுபிடித்த விலங்கு” என்று பதிவாகாது.

  “அதிசிய விலங்கை கண்டுபிடித்த டூபாக்க்கூர் கவுண்டி(அலாஸ்கா) மக்கள்” என்றுதான் செய்து வரும்.

  what is discovered and discovered by whom? என்பது எப்போதும் ஒருதரப்புச் செய்தியே.

 10. PPattian : புபட்டியன் சொல்கிறார்:

  வாழ்த்துகள்.. உங்களுக்கும் ஜூனியருக்கும்…

 11. செல்வநாயகி சொல்கிறார்:

  வாழ்த்துகள்.

 12. லக்ஷ்மி சொல்கிறார்:

  செல்வநாயகி, புபட்டியன் – வாழ்த்துகளுக்கு நன்றி.

  கல்வெட்டு – டிஸ்கவரி என்பதற்கு கண்டுபிடித்தல் என்பதை விடவும் கண்டடைதல் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்குமில்லையா? அதிலும் பள்ளிப் பருவத்தில் நிச்சயமாக இவ்வளவுக்கெல்லாம் யோசிக்கத் தோன்றாது – கண்டுபிடித்தல் என்ற வார்த்தையின் எளிய, நேரடியான பொருளையே எடுத்துக் கொள்ளத் தோன்றும் எனும் போது வரலாற்று பாட புத்தகங்களில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.

  //what is discovered and discovered by whom? என்பது எப்போதும் ஒருதரப்புச் செய்தியே// இதை நானும் 100% ஒப்புகிறேன்.

 13. கல்வெட்டு சொல்கிறார்:

  //லக்ஷ்மி said…
  டிஸ்கவரி என்பதற்கு கண்டுபிடித்தல் என்பதை விடவும் கண்டடைதல் என்ற சொல்லே பொருத்தமானதாக இருக்குமில்லையா? //

  லக்ஷ்மி,
  கண்டடைதல் …ஆ இது நல்லாயிருக்கே!

  கண்டடைதல் ‍ ஏற்கனவெ இருக்கும் ஒன்றை தான் இப்பொழுது அறிந்து கொள்ளுதல்.

  நனறி!

  **

  சரிதான். ஆனால் இதெல்லாம் நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது ரொம்ப ஓவர். கதையைப் படிச்சோமா பிள்ளையப் பாத்தோமா என்று இருக்கனும். :-))))

  Discovery :The act or process of finding or learning something that was previously unknown.

  ok..well..who is unknown to whom ? :-))

 14. LK சொல்கிறார்:

  //துளசி, ஆஹா… அப்போ இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்கு இதே நிலைதானா?… அவ்வ்….//

  Ithuke ippadiya.. innum evlo iruku madam.. en ponnu daily mng 4 maniku elunth ennai elupitu ava tungiduva.. enaku appuram tukkam varathu.. elunthum poga mudiyathu.. eluntha koncha nerathula ava aluva

  -LK

  http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post.html

 15. லக்ஷ்மி சொல்கிறார்:

  LK, அப்ப எல்லோருமே why blood – same blood கதையாத்தான் இருக்கோமா? :))))

 16. Naresh Kumar சொல்கிறார்:

  பல நாட்கள் கழித்து மீண்டும் வலையுலகம் புகுந்திருக்கிறீகள்…வாழ்த்துக்கள்!!!

  //வன்மையாகக் பகச சார்பில் கண்டிக்கிறோம்!!//

  கல்யாணம் ஆனதுக்கப்புறம் தலைக்கு கால் உடைஞ்சதுல ஏதானும் உள்குத்து இருக்கான்னு தலையோ, சென்ஷியோ யாராவது சொல்லுங்க???

  ‘கண்டடைதல்’ நல்லதொரு வார்த்தை!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s