அபத்த களஞ்சியம்


தோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும்,  சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு என்பதற்காக ஒத்துக் கொண்டதாகவும் சில நாட்கள் முன்பு கூறியிருந்தாள்.

சரி, மேடம் பிஸியாக இருக்க கூடுமே என்று நானும் அவளை வாரயிறுதியில் தொடர்பு கொள்வதை கூட குறைத்திருந்தேன். எதேச்சையாக போன ஞாயிறு அன்று முன்மதியத்தில் போன் செய்து பேசிக் கொண்டிருந்தாள். இந்நேரத்தில் வகுப்பு இல்லையா உனக்கு என்று கேட்டபோது அதை நேரில் பார்க்கையில் சொல்வதாகச் சொன்னாள்.

அதே போல் நேற்று வந்தவள் புலம்பித் தீர்த்து விட்டாள். வகுப்பு எடுக்க ஒப்புக் கொண்டதும் இவள் பாடத்திட்டம்(syllabus), முதன்மை புத்தகங்கள்(text books),  மேலதிக புத்தகங்கள்(reference book) போன்றவற்றை கேட்டிருக்கிறாள்.  பயிற்சி மைய நிர்வாகி ”அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம். பல்கலைக் கழகமே போட்டிருக்கிற புக் ஒன்னு இருக்கு, அதை மட்டும் சொல்லிக் கொடுத்துடுங்க போதும். அதும் இந்த முறை எல்லாமே தமிழ் மீடியம் மாணவர்கள்தான். அதுனால அந்த மெட்டீரியல் மட்டும் இதுல இருக்கு, பாத்துக்குங்க. ” என்று ஒரு கொத்து புத்தகங்களை கொடுத்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்து அதை படித்து குறிப்பெடுக்கலாம் என்று உட்கார்ந்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முறையான கல்வி வாய்ப்புகளை இழந்த, ஆனாலும் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கான இது போன்ற வகுப்புகளுக்கு ஏன் இவ்வளவு அலட்சியமான பாடத்திட்டம் என்று கொதித்து போய் விட்டாள். சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னாள். அதை அப்படியே இங்கே தருகிறேன். படித்துப் பாருங்கள்.

இந்திய சமூக நிறுவனங்கள் என்று ஒரு பாடத்திட்டம். அதில் சமயங்கள், சாதி முறை, இன்றைய நிலை என எல்லாவற்றையும் பற்றி தலா ஒரு ஒரு பாடம். முதல் பாடம் இந்து சமயத்தை பற்றி.

‘புருஷரதாஸ் என்பது இந்து வாழ்கையின் முக்கிய சொல்லாகும்.’

படித்தவுடன் ஏதோ துளசி தாஸ், கபீர் தாஸ் போல ஒரு ஞானி போலும் என்று தோன்றுகிறது தானே? அதுதான் இல்லை.

‘புருஷரதாஸ் நான்கு வகைப் படும். அவை தர்மா, அர்த்தா, காமா & மோட்சா’

இந்த வரியை படித்ததும்தான் அது புருஷார்த்தங்கள் என்பது புரிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ‘purushaarthaas’  – புருஷார்த்தாஸ் என்று எழுதியிருப்பதைத்தான் மொழிபெயர்த்த பிரகஸ்பதி புருஷரதாஸ் என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறார். நான்கு வகைகளை குறிப்பிடுகையிலும் அவற்றின் கடைசி அசை ஆங்கிலத்தில் உள்ளது போலவே இருப்பதை கவனியுங்கள். தமிழில் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்று கூட மாற்றத் தோன்றவில்லை அந்த மகானுபாவருக்கு.

அடுத்து தர்மங்களின் வகைகள். ஸ்த்ரீ தர்மா என்பது பெண்ணுக்குரிய தர்மங்கள் ஆகும். அதை ஸ்ரீ தர்மா என்றும், ஆபத் தர்மா எனப்படும் ஆபத்து/நெருக்கடி காலங்களில் கைகொள்ள வேண்டிய தர்மங்களை அபத்தர்மா என்றும் மொழி பெயர்த்து தன் மொழிப் புலமையை காண்பித்திருக்கிறார்.

ட்ரான்ஸ்லேஷனுக்கும், ட்ரான்ஸ்லிட்ரேஷனுக்கும் இடைப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு குழப்பங்கள் ஒரு பக்கம் என்றால் பாடத்தின் உள்ளடக்கமே சில இடங்களில் மகா கேவலமாக உள்ளது.  ப்ரும்மச்சரிய ஆசிரமத்தை பற்றி விளக்குகையில் ஒரு இடத்தில்

“இந்த பிரம்மச்சரிய ஆசிரமம் மூன்று வர்ணத்தார்க்கு மட்டும் வரையரை செய்யப் பட்டுள்ளது. பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவரும் புனிதமான அறிவுடைய வாழ்வில் கட்டுப்பாட்டுடன் வாழ முன்பே பயிற்சி பெற்றுள்ளனர்”

அந்த மூன்று வர்ணத்தார்க்கு மட்டும் முன்பே புனிதமான வாழ்வில் கட்டுப்பாட்டுடன் வாழ பயிற்சியுள்ளதாம். இந்த வரியில் தொக்கி நிற்கும் பொருள் – நான்காவது வர்ணத்தார்கு இத்தகைய பயிற்சிகள் இல்லை, எனவே இது போன்ற ஆசிரமங்கள் அவர்களுக்கு கிடையாது என்பதுதானே? அப்பட்டமாக ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் இது போன்ற வாக்கியங்கள் எப்படி பாடத்திட்டத்துள் நுழைந்தன? யார் இந்த பாடத்திட்டங்களை வடிவமைப்பு செய்கிறார்கள் என கேள்விகள் எழுகின்றன இல்லையா?

தோழி அது பற்றியே தான் இப்போது தகவல்கள் சேமித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். அதற்காக புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் மூல நூல்களின் பட்டியலை பெற்று அப்புத்தகங்களை இப்போது படித்து வருவதாக சொன்னாள். அதில் எந்த சந்தர்ப்பத்தில் இது போன்ற தகவல்கள் வருகின்றன என்று பார்த்தால் மட்டுமே இவ்வரிகள் அங்கே பயன்படுத்தப் பட்டுள்ள உண்மைக் காரணம் புரியும். ஒரு வேளை இதுவும் மொழிபெயர்ப்பின் குளறுபடியாகவே கூட இருக்கலாம். எனவே எங்கு ஆரம்பித்த குளறுபடி என தான் முழுமையாக புரிந்து கொள்ள முயல்வதாகச் சொன்னாள்.

பல்கலைக் கழகத்துக்கு நேரிடையாக இது குறித்து கடிதம் எழுதி பார்த்து விட்டு, பதில் ஏதுமில்லையென்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதாக கூறினாள். நானும்  அவளது முயற்சியை பாராட்டி விட்டு மற்ற விஷயங்களை தொடர்ந்து பேசினோம்.

புறப்படுகையில் இன்னொரு காமெடி நினைவுக்கு வர அதையும் பகிர்ந்து கொண்டாள். சமூகவியல் ஆராய்ச்சியில் புள்ளியியல் பயன்படும் விதத்தைப் பற்றிய பாடத்திட்டத்தில் ஒரு பகுதி.

“2001 மார்ச் மாத கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையான 1028 மில்லியனில் 495 மில்லியன் பெண்கள் இருக்கின்றனர். அது போல தற்போதைய மக்கள் தொகையான 1.03 பில்லியனில் 528 மில்லியன் பெண்கள் உள்ளனர். ஆனால் 496 மில்லியன் பெண்களே உள்ளனர். 32 மில்லியன் பெண்கள் இந்தியாவில் காணவில்லை. அவர்களில் சிலர் பிறக்காமல் இருந்திருக்கலாம், மற்றவர்கள் இறந்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை.”

பலமுறை படித்தும் எதுவும் புரியவில்லை என்ற தோழி அந்த 32 மில்லியன் பெண்கள் மட்டுமல்ல இந்த பாடபுத்தகத்தை எழுதிய மகானுபாவரும் பிறக்காமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டாள். நானும் கண்ணில் நீர் வரும் வரை சிரித்துக் கொண்டேயிருந்தேன் நெடு நேரம் வரை.

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கல்வி, சமூகம் and tagged , , , . Bookmark the permalink.

7 Responses to அபத்த களஞ்சியம்

 1. அண்டர்டாக் says:

  ”32 மில்லியன் பெண்கள் இந்தியாவில் காணவில்லை. அவர்களில் சிலர் பிறக்காமல் இருந்திருக்கலாம், மற்றவர்கள் இறந்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை.”

  அதாகப்பட்டது கருவிலேயே கொலைச் செய்யப்பட்ட பெண்கள்,பெண் குழந்தை என்பதால் அலட்சியம் செய்யப்பட்டதால்
  இறந்த குழந்தைகள்,5 வயதிற்குள் நோய்/
  பசி/ஊட்டசத்துக்குறைவு போன்றவற்றால் இறந்த பெண் குழந்தைகள்-இதையெல்லாம் சேர்த்தால்
  அவர்கள் ‘காணாமல்’ போனவர்கள் என்பது புரியும்.இதைப் பற்றி அமர்த்தியா சென் Missing
  Millions என்று கட்டுரை எழுதினார்.கூகுள் மூலம் கிடைக்கலாம்.
  அது தவிர பல கட்டுரைகள்,அறிக்கைகள் குறித்து உள்ளன.படித்தால் மனது கனக்கும்.
  தூக்கம வராது.அது இந்தியாவின் இன்னொரு முகம்.
  இந்த புள்ளிவிபரம் பரவலாக அறியப்பட்ட ஒன்று.தமிழில் எழுதியவர் குளறுபடி செய்துவிட்டதால் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை என்று இருக்கிறது. ஆனால் சமூகவியலில் முதுகலைப் படித்தவருக்கு இது சட்டென விளங்கியிருக்க வேண்டும்.அது ஏன் அவருக்கு விளங்கவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. நான் சமூகவியல் மாணாக்கர் அன்று.சமூகம்
  பற்றி அறிந்த யாரும் இதை ஊகித்துவிட முடியும்.

 2. +2 படிக்காமலேயே எம்.ஏ படிக்கும் வாய்ப்பைக் கொடுத்து நல்ல அறுவடை செய்துவிட்டன, பல பல்கலைக்கழகங்கள்.
  அந்த எம்.ஏ பட்டம் வேலைவாய்ப்பு பெற உதவாது(தகுதியற்றது)என்று இப்பொழுது அரசு அறிவிக்கின்றது!
  இந்த அபத்தத்தை எப்படித் தீர்ப்பது?

 3. தமிழ் மொழி வழி கல்வி என கதறும் அன்பர்கள் தமிழில் நூல்கள் இந்த லட்சணத்தில் இருப்பதை உணர்வதில்லை. சமூக இயல் நூல்களுக்கே இந்த கதி என்றால், விஞ்ஞான பாடங்கள் எவ்வாறு இருக்கும் என ஊகிக்கலாம். கோழியா முட்டையா என வாதிடாமல், நூல்களும் வர வேண்டும்; பயிற்று மொழி ஆக முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

 4. புது ப்ளாக்கு புது பேரு கலக்கிறீங்களே லக்ஷ்மி 🙂

 5. முத்து, பேரு மாத்தறதுல உங்களை யாராவது மிஞ்ச முடியுமா? 🙂

  நெற்குப்பை, சிஜி அய்யா – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  அண்டர்டாக், இந்த கட்டுரை பாடபுத்தகத்தின் மொழிநடையை பற்றியதே. புள்ளியியல் குறித்த அந்த வாக்கியம் புரியவில்லை என்பதுதான் அவளது குற்றச்சாட்டு. முதுகலை படித்த அவள் போன்றோருக்கும், தான் மாணவராயில்லாத துறையை கூட கரைத்துக் குடிக்கும் உங்களைப் போன்ற அறிவாளிகளுக்கும் வேண்டுமானால் அந்த வாக்கிய அமைப்பை தாண்டியும் பாடம் சொல்ல வரும் விஷயம் புரியலாம். ஆனால் படிக்க வரும் மாணவர்கள் அனைவருக்கும் அப்படி புரிந்து கொள்ள முடியாதில்லையா, அது பற்றிய ஆதங்கமே இப்பதிவு.

 6. // முத்துலெட்சுமி // December 22, 2009 இல் 3:16 பிற்பகல் | பதில்

  புது ப்ளாக்கு புது பேரு கலக்கிறீங்களே லக்ஷ்மி 🙂
  //

  :)))

 7. karthiyayini.s says:

  enakku samachirkalvi “IV”th std english lessons anaithaiyum tamil paduthi thara yiyaluma? allathu entha websitil kidaikkum enru thagaval thara yiyaluma? mikka udaviyai irukkum.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s