வருட கடைசி நாளில் இந்த வருடம் என்ன செய்தோம் என்று கணக்கு பார்ப்பதும், அடுத்த வருடத்திற்கான ஒரு சில உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்வதும்(பின் நாலைந்து நாட்களுக்குள் அதை பரணில் தூக்கிப் போடுவதும்) போன்ற சில விஷயங்கள் சம்பிரதாயமாக மாறி வருகிறது. அத்தோடு 31ந்தேதி இரவு 12 மணிக்கு ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவது அல்லது கோவிலுக்குப் போய் நீண்ட வரிசையில் காத்திருந்து கடவுளை ஓவர் டைம் செய்ய வைத்து தரிசிப்பது அதுவுமில்லாவிட்டால் குறைந்த பட்சம் குறுஞ்செய்திகளையாவது கை ஓய தட்டி செல்போன் கம்பெனிக்காரர்களுக்கு லாபம் சேர்த்து கொடுப்பது என்பதெல்லாம் புது வருடக் கொண்டாட்டத்தின் பிரிக்க முடியாத பாகங்கள் ஆகிக் கொண்டு வருகிறது.
இது போன்ற எந்த ஒரு செய்கையையும் எந்த வருடமும் நான் செய்வதில்லை என்று உறுதி கொண்டிருக்கிறேன். வருடப் பிறப்பு என்றில்லை, பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நவீன யுகத்தின் எல்லா பண்டிகை தினங்களுக்கும் இந்த 12 மணி விழிப்பு ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது. ஒரு வேளை இந்த நவீன பண்டிகைகள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வந்ததால் அப்படி ஒரு வழக்கம் ஒட்டிக் கொண்டது போலும். விடியற்காலையில் எழுந்து கொண்டாட வேண்டிய நம்ம ஊர் பண்டிகைகளுக்கே எனக்கு வீட்டில் பெரியவர்கள் நிறைய ஞாபகப்படுத்தல்கள் செய்ய வேண்டியது இருக்கும். கூட பெரியவர்கள் யாருமில்லாமல் வசித்த நாட்களில் நான் எந்த பண்டிகையையும் கொண்டாடியதில்லை. அப்படி இருக்க இது மாதிரி யாரும் கட்டாயப் படுத்தாத, அதிலும் நள்ளிரவு கண்முழித்தல்களை கோரும் பண்டிகைகளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது.
முதல் காரணம் எனக்கு எதையும் விட தூக்கம் முக்கியம். என் வாழ்கையில் யாருக்காகவாவது நான் சந்தோஷமாக தூக்கம் முழிக்கிறேன் என்றால் அது என் குட்டி பையன் ஒருவனுக்காகத்தான். மற்றபடி எனக்கு பசித்தால் கூட கொஞ்ச நேரம் கழித்து பார்த்துக்கலாம் என்று தண்ணீரை குடித்து விட்டு தூங்குகிற பார்ட்டி நான். எனவே 12 மணிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் இருக்குமானால் அந்த பண்டிகைக்கு ஒரு பெரிய கும்பிடு.
அடுத்தது என்னால் ஒரு குறிப்பிட்ட தேதி என்பதற்காக ஒரு நாளை கொண்டாட முடியாது. அதே போல கொண்டாட்டமான மனநிலை என்று வாய்க்குமோ அன்றே எனக்கு பண்டிகை – அதை எக்காரணம் முன்னிட்டும் தள்ளிப் போடுவதுமில்லை. புது உடை வாங்குவதற்கோ, இல்லை ஒரு குறிப்பிட்ட பலகாரத்தை செய்வதற்கோ என் அடி மன ஆசைதான் காரணமாக இருக்க வேண்டுமேயொழிய காலண்டரை பார்த்து அன்று அப்பொருட்கள் வேண்டும் என்று என்னால் முடிவு செய்து கொள்ள முடியாது.
அதிர்ஷ்டவசமாக துணைவரும் இப்படியான சிந்தனைகள் உள்ளவராகவே இருப்பதால் ஒப்புக்கு கூட இந்த நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. 🙂
சம்பிரதாயமாக வந்து சேரும் வாழ்த்துகளுக்கு நன்றி கூறுவதோடு வேலை முடிந்து விடும்.
******************
கடந்த ஐந்து மாதங்களாக பையனின் பெயரைச் சொல்லி விடுமுறையிலிருக்கிறேன் என்பதால் எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை ரொம்ப சொற்பம். எந்த குழுமத்தில் உறுப்பினர் ஆனாலும் உடனடியாக நான் ’No Email’ ஆப்ஷனை தேர்ந்துவிடும் வகையைச் சேர்ந்த ஆள். எனவே பெரும்பாலான நாட்களில் இன்பாக்ஸில் புது மெயில் எதுவுமே இல்லாமல்தான் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த சோர்வை மாற்றும் விஷயம் ‘நேசமுடன் வெங்கடேஷ்’இன் மடல் இதழ்தான். மனிதர் வாரம் ஒரு முறை சளைக்காமல் குறைந்தது மூன்று விஷயங்களையாவது எழுதி அனுப்புகிறார். கிட்டத்தட்ட 63 கட்டுரைகள் சென்ற ஆண்டு எழுதியிருப்பதாகவும், இவ்வருடம் வாரம் இரு முறை இதழாக மாற்ற உத்தேசித்திருப்பதாகவும் இவ்வருடத்தின் கடைசி இதழில் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு இதழையும் படிக்கும் போது, இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கும் அதே நேரம் எனது சோம்பேறித்தனத்தையும் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
இது போன்ற மனசாட்சி தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கவேனும் நீண்ட நாட்களாக நான் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் எழுத வேண்டும் என்று நான் நினைக்கும் சில விஷயங்களை கூடிய் விரைவில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
எப்போதுமே ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிகம் ஒட்டுவார்கள் என்பது உலக இயல்பு. இடிப்பஸ் காம்ப்ளக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் போன்ற கடினமான பதப் பிரயோகங்கள் எதுவும் தேவையின்றி எல்லோருமே உணர்ந்திருக்கும் ஒரு விஷயம்தான் இது. எத்தனையோ ஆண் எழுத்தாளர்கள் தங்களது கோணத்தில் தாய் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள். ஆனால் அதே அளவுக்கு பெண் எழுத்தாளர்கள் தங்கள் தந்தை பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்களா என்றால் அதிகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெகு நாட்களாகவே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. அதிலும் இன்று நான் இருக்கும் நிலைக்கு நிறைய விதத்தில் காரணகர்த்தாவாக இருந்து, எப்போதும் நான் சரி என்று நினைப்பதை மட்டுமே துணிந்து செய்ய தைரியம் கொடுத்து வரும் என் அப்பாவை பற்றி கொஞ்சமேனும் எழுத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்று ஆசை.
அடுத்ததாக ஊர் மற்றும் ஆறு பற்றிய என் நினைவுகள். சிறு வயதில் நான் வாழ்ந்த காவிரிக்கரையோர சிற்றூரை பற்றிய நினைவுகளை எழுத்திலேனும் பதிந்து வைக்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு முறை ஊர் போகும் போதும் உணர்கிறேன் – அந்த அளவுக்கு ஒவ்வொரு முறையும் மாற்றங்கள் முகத்திலறைகின்றன. புகைப்படம் எடுத்து பதிவாக்கி வைக்காத குறையை எழுத்திலாவது தீர்த்தாக வேண்டும்.
இது இரண்டும் பெரிய திட்டங்கள். மற்றபடி சாதாரணமாக கூட நான் எழுதும் வேகம் ரொம்ப குறைவு என்று பாலாவுக்கு வருத்தமதிகம். என் எழுத்து சோம்பேறித்தனத்தை நீக்க அவரும் அவராலான வரை அவ்வப்போது முயற்சிக்கவே செய்கிறார். தலைவரின் பொறுமையை ரொம்பவே சோதித்துக் கொண்டிருக்கிறேன் – அவர் கடுப்பாகும் முன் எதாவது செய்து கொஞ்சம் குளிர செய்ய வேண்டியதிருக்கிறது. எனவே வாரம் ஒரு பதிவு கண்டிப்பாய் போடுவது என்று முடிவு செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் முடிவு செய்தா அதை நானே கேக்கற வழக்கமில்லை என்பதால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. வாரம் ஒன்று லட்சியம், மாதம் ஒன்று நிச்சயம். :)))
**************************
பாராவின் இந்த மற்றும் இந்த பதிவுகளை படிக்கும் போது ரொம்பவே மகிழ்சியாக இருக்கிறது. அவரது பதிப்பகத்தின் தேவை காரணமாகத்தான் இதையெல்லாம் செய்கிறார் என்று சொல்லிவிட முடியாது. இதற்கெல்லாம் முன்னரே கூட அவர் சிறுகதை எழுதுவது எப்படி என்றெல்லாம் சிலருக்கு(பிரகாஷுக்கு என்று நினைவு) வகுப்பெடுத்து அது வலையுலகிலும் வெளி வந்ததுண்டு. எனவே எப்போதும் புது எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறவர் என்று அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. சுஜாதாவால் அடையாளம் காட்டப்பட்ட, உற்சாகப் படுத்தப்பட்ட எழுத்தாளர்களும் அநேகம் பேர் உண்டு.
இதையெல்லாம் பார்க்கும் போது புதியவர்களை வரவேற்கும் இந்த வெகுஜன/வணிக எழுத்தாளர்களின் போக்கு ஏன் பெரிய பெரிய ஒளிவட்டங்கள தங்களைச் சுற்றுவதாக கற்பனை செய்து கொள்ளும் இலக்கியவாதிகளுக்கு கொஞ்சம் கூட இருப்பதில்லை என்ற கேள்வி வருகிறது. அதிலும் வலைப்பதிவு வந்து எழுதுவது என்பதை கிட்டத்தட்ட தமிழில் தட்டச்ச தெரிந்த அத்தனை பேருக்கும் ஜனநாயகமயமாக்கிய பின்னர் இந்த பெத்த எழுத்தாளர்களின் புலம்பல் ரொம்பவே அதிகரித்துவிட்டது.
புது எழுத்தாளர்களை இல்லை சக எழுத்தாளர்களையே கேட்க காது கூசும் வகையில் திட்டி தீர்க்கும் இவர்கள் தங்களின் தொண்டரடிப் பொடிகளின் கூட்டம் ஒன்றை மட்டும் உருவாக்கி, பட்டுத் துணி மறைவுக்குள் பிரம்மோபதேசம் செய்து அவர்களை மட்டும் போனால் போகிறது என்று அங்கீகரித்துக் கொள்வார்கள். அந்த தொண்டர்களும் தேவதா விஸ்வாசத்துடன் இவர்களின் புகழ் பாடுவார்கள். மற்றவர்களை கூசிச் சுருங்கும் சிற்றுயிர்கள் என்கிறார் ஒருவர். இன்னொருவர் இந்த சராசரி மனிதர்களுடன் பழகுவதே பெரிய தலைவலி என்று அலுத்துக் கொள்கிறார். இன்னொருவர் எல்லோரும் எழுத்தாளர் ஆகிவிட்டால் வாசகர்களே இல்லாமல் போய் விடுவார்களே என்று கவலை தெரிவிக்கிறார்.
எனக்கு இவர்களின் தன்னம்பிக்கையை பார்க்கையில் உண்மையில் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்புகிற குருமார்களோ இல்லை நம்பாத கடவுளோ இவர்களுக்கு கொஞ்சம் தன்னம்பிக்கையை தந்து மற்ற மனிதர்களையும் மதிக்க கற்றுக் கொடுத்தால் நல்லது. இலக்கியம் படைப்பதை விட சக மனிதனை மதிப்பது ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா?
*******
கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
எனவே 12 மணிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் இருக்குமானால் அந்த பண்டிகைக்கு ஒரு பெரிய கும்பிடு.
அடுத்தது என்னால் ஒரு குறிப்பிட்ட தேதி என்பதற்காக ஒரு நாளை கொண்டாட முடியாது. அதே போல கொண்டாட்டமான மனநிலை என்று வாய்க்குமோ அன்றே எனக்கு பண்டிகை
nice and nitharsanamaana words ya
i love the first paragraph of the blog machchi !
🙂
சற்றே(!) தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணி…