மூடநம்பிக்கைகளும், மொழி பெயர்ப்பு மோசடிகளும்..


அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பட்டமளிப்பு விழாவில் அங்கியை கழட்டிப் போட்டுவிட்டு, வீரவசனம் பேசியது பப்ளிசிட்டிக்கான ஸ்டண்ட்தான் என்றாலும் கூட அதிலிருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை. சுதந்திரம் அடைந்து 50 வருடங்களுக்குப் பின்னும் நம்மிடம் நிலைத்து விட்ட எத்தனையோ அர்த்தமற்ற சடங்குகளை பிரிட்டிஷாரின் சொத்தாக இன்னமும் சுமந்தலைகிறோம்.

* பிரிட்டிஷ் ஆட்சி முறையில் நீதி நிர்வாகத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷாரே. அவர்களால் நம் நாட்டின் கோடையை தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் வருடத்தில் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை நீதிமன்றங்களுக்கு வழங்கப் பட்டது. வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வளர்ந்த நம்மவர்களே முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் இந்நாளிலும் கூட இந்த இரண்டு மாத கோடை விடுமுறை எனும் நேர விரயம் நமக்குத் தேவையா – அதிலும் லட்ச கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் இன்றைய நிலையில்?

* காவல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை ஆர்டர்லி என்கிற பெயரில் வீட்டு வேலைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளுவது – காலனி நாடுகளின் மனித வளத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்ட அதே கேவலம் இன்னமும் தொடரத்தான் வேண்டுமா?

* 2000 ஆண்டு வரைக்குமே கூட நமது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மாலை 5 மணிக்குத்தான் சமர்ப்பிக்கப் பட்டு வந்தது. ஏனெனில் பிரிட்டனில் மதியம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், மாலை இங்கே தாக்கல் செய்வது என்னும் வழக்கமே அது வரை தொடர்ந்தது. 2001ல் யஷ்வந்த் சின்ஹாதான் முதன் முதலில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கினார்.

இப்படி வரிசையாக சொல்லலாம். இப்படியான வெற்றுச் சடங்குகள் ஒழிக்கப் பட வேண்டியவையே.

****************

இப்ப ஒரு இலக்கிய விவகாரம். சாரு நிவேதிதா தன்னோட தளத்துல ஒரு இந்தி படத்தோட விமர்சனத்தை கொடுத்திருந்தார். அதை இங்க சுருக்கி கொடுத்திருக்கேன்.

இஷ்கியா என்ற இந்திப் படம்.  51 வயது காலூஜான் (நஸ்ருத்தீன் ஷா), 32 வயது பப்பன் (அர்ஷத் வர்ஸி) இருவரும் திருடர்கள். அவர்களின் தலைவனான முஷ்டாக்குக்கு சேர வேண்டிய 20 லட்சத்தை செலவு செய்து விட்டு அவனிடமிருந்து தப்பி ஓடுகிறார்கள்.  முஷ்டாக்கைப் பகைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லாததால் இருவரும் பதுங்குவதற்கு இடமே கிடைக்கவில்லை.  கடைசியில் அவர்களுடைய பழைய சகாவான வர்மாவின் வீட்டுக்கு வருகிறார்கள்.  வர்மா இறந்து விட்டதை அறிகிறார்கள். வர்மாவின் மனைவி கிருஷ்ணா (வித்யா பாலன்) அவர்கள் இருவருக்கும் தங்க இடம் தருகிறாள்.  அந்த இருவருக்கும் கிருஷ்ணாவின் மீது காதல் ஏற்படுகிறது. கிருஷ்ணா எந்தப் பாகுபாடும் இல்லாமல் இருவரையும் காதலிக்கிறாள்.

காலூஜானும், பப்பனும் முஷ்டாக்குக்குக் கொடுக்க வேண்டிய 20 லட்சத்துக்காக ஒரு தொழிலதிபரைக் கடத்த முடிவு செய்கிறார்கள்.  அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறாள் கிருஷ்ணா.  கிருஷ்ணாவை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பி விடலாம் என்கிறான் காலூஜான். “சுடு” என்று சொல்லி பிஸ்டலை பப்பனிடம் கொடுக்கிறான்.  பப்பன் கிருஷ்ணாவின் அருகே பிஸ்டலைக் கொண்டு செல்கிறான்.  அவனால் சுட முடியவில்லை.  பிஸ்டலை காலூஜானிடமே கொடுத்து “நீயே சுடு” என்கிறான் பப்பன்.

“அந்தப் பேச்சுக்கே இடமில்லை.”

“ஏன்?”

“நான் அவளைக் காதலித்தேன்.”

“நீயாவது  காதலித்தாய்; நான் செக்ஸே வைத்துக் கொண்டேன்.” (க்யா மாமு, துமாரா இஷ்க் இஷ்க்; ஹமாரா இஷ்க் செக்ஸ்?)

கடைசியில் பல குழப்பங்கள்  நிகழ்ந்து வில்லன்கள் சாக, கிருஷ்ணா தனது இரண்டு காதலர்களுடனும் நடந்து செல்கிறாள்.

**

இது வெளியான மறு நாள் அவரது வாசகர் ஒருவர் இவருக்கு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் கொடுத்திருக்கும் அதே இஷ்கியா படத்தின் கதை இது:

அந்தப் படத்தின் மையமான விஷயம் என்னவென்றால், பப்பனுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையேயான காதல் அல்ல. கிருஷ்ணாவின் கணவன் வர்மாவுக்கும் அவளுக்கும் உள்ள காதல்தான்.  ஆனால் அவளுடைய யோசனையைக் கேட்டு அவன் போலீசில் சரணடைய முடியவில்லை.  அவன் அவளை ஏமாற்றி விட்டான் என்பதையும், அவன் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறான் என்பதையும் அவள் அறிந்து கொள்ளும் போது அவனைக் கண்டு பிடித்து அவனோடு சாக வேண்டும் என்றே திட்டமிடுகிறாள்.

அவளுக்கு பப்பன் மீதோ கல்லூஜான் மீதோ உண்மையில் காதல் இல்லை.  அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு – அதாவது, அவர்களைக் காதலிப்பது போல் நடித்து – தன்னுடைய உண்மையான காதலனான வர்மாவை அடைவதே அவள் திட்டம். ஆனால் அதையும் மீறி சில பலஹீனமான தருணங்களில் பப்பன் அவளையே எடுத்துக் கொள்ள அனுமதித்து விடுகிறாள்.

அதேபோல் பப்பனும், கல்லூஜானும் அவளைச் சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கும் போது பப்பன் சொல்லும் வசனத்தின் (க்யா மாமு, துமாரா இஷ்க் இஷ்க்; ஹமாரா இஷ்க் செக்ஸ்?)மொழிபெயர்ப்பு நீங்கள் சொல்வது போல் அல்ல.  அதன் சரியான மொழிபெயர்ப்பு இதுதான்: (என்ன மாமா, உன் காதல் மட்டும்தான் காதல்; என் காதல் செக்ஸா?)

***

எந்த கூச்சமும் இல்லாமல் இந்த கடிதத்தையும் வெளியிட்டு விட்டு நான் படம் பார்த்து ரொம்ப நாள் கழித்து எழுதியதால் சில விஷயங்கள் விடுபட்டு போயிருக்கலாம் என்று வேறு சப்பை கட்டு. சரி, எல்லாவற்றையும் விடுங்கள்.

“க்யா மாமு, துமாரா இஷ்க் இஷ்க்; ஹமாரா இஷ்க் செக்ஸ்?” இந்த  ஒற்றை வரிக்கு இவர் கொடுத்திருக்கும் மொழி பெயர்ப்புக்கும், இரண்டாவதாக உள்ள மொழி பெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

நீயாவது  காதலித்தாய்; நான் செக்ஸே வைத்துக் கொண்டேன்

என்ன மாமா, உன் காதல் மட்டும்தான் காதல்; என் காதல் செக்ஸா?

மலைக்கும் மடுவுக்கும் உல்ள வித்தியாசமில்லையா இது? இங்கே இருக்கும் ஹிந்திப் படமே இவ்வளவுக்குத்தான் இவருக்குப் புரிகிறது, இந்த லட்சணத்தில்தான் இவரது மொழி பெயர்ப்பு இருக்கிறது என்றால், இவர் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும், அரபி பாடல்களையும் பற்றி பேசுவதையெல்லாம் என்னவென்று சொல்வது? கூரையேறி கோழி பிடிக்கவே தெரியாதவன், வானத்தை கிழித்து வைகுண்டம் காண்பித்த கதைதான் போல….

***********

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

7 Responses to மூடநம்பிக்கைகளும், மொழி பெயர்ப்பு மோசடிகளும்..

 1. சென்ஷி சொல்கிறார்:

  //கூரையேறி கோழி பிடிக்கவே தெரியாதவன், வானத்தை கிழித்து வைகுண்டம் காண்பித்த கதைதான் போல….//

  வானத்தைக் கிழிச்சு வைகுண்டத்தைக் காட்டுறதுக்கு கூரையேறி கோழி பிடிக்கக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணுமா ??? 🙂

 2. KVR சொல்கிறார்:

  //இங்கே இருக்கும் ஹிந்திப் படமே இவ்வளவுக்குத்தான் இவருக்குப் புரிகிறது, //

  நான் டெல்லில இருந்தப்போ ஹிந்தியைத் தலைக்கீழா கரைச்சுக் குடிச்சவனாக்கும்ன்னு டயலாக் விடுறவரை இப்படிச் சொல்லிட்டிங்களே 🙂

 3. செல்வேந்திரன் சொல்கிறார்:

  வாசக அறிவைப் பற்றி சாருவிற்கு இருக்கும் மட்டமான அபிப்ராயத்தை அவர் மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். என்ன வேண்டுமானாலும் எழுதித் தப்பிவிட முடியாத அறிவெல்லையில் வாசகன் நிற்கையில் எழுதும் முன் உழைக்கவும், யோசிக்கவும் வேண்டும்.

 4. மா சிவகுமார் சொல்கிறார்:

  படிப்பதை எல்லாம் உண்மையாக நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு , இது போன்ற வெளிச்சம் காட்டல்கள் மிகவும் தேவை.

  ஆனாலும், சாருநிவேதிதா இவ்வளவு அடிபட வேண்டாம்!

 5. புருனோ சொல்கிறார்:

  //* பிரிட்டிஷ் ஆட்சி முறையில் நீதி நிர்வாகத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷாரே. அவர்களால் நம் நாட்டின் கோடையை தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் வருடத்தில் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை நீதிமன்றங்களுக்கு வழங்கப் பட்டது. வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வளர்ந்த நம்மவர்களே முழுக்க முழுக்க நிறைந்திருக்கும் இந்நாளிலும் கூட இந்த இரண்டு மாத கோடை விடுமுறை எனும் நேர விரயம் நமக்குத் தேவையா – அதிலும் லட்ச கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் இன்றைய நிலையில்?//

  குடியுரிமை நீதிமன்றங்களுக்கு மட்டும் தானே விடுமுறை

  குற்றவியல் நீதிமன்றங்கள் தொடர்ந்து கொண்டு தானே உள்ளன

 6. புருனோ சொல்கிறார்:

  //* காவல் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை ஆர்டர்லி என்கிற பெயரில் வீட்டு வேலைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளுவது – காலனி நாடுகளின் மனித வளத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்ட அதே கேவலம் இன்னமும் தொடரத்தான் வேண்டுமா?//

  ஏன் அந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியுமா 🙂 🙂 🙂

 7. புருனோ சொல்கிறார்:

  அடுத்த சந்தேகம்

  இந்தி தெரிந்த பின்னர் தான் இசுபானிசு (ஸ்பானிஷ்) அல்லது அரபி தெரிய வேண்டுமா

  இந்தி தெரியாத தமிழர் ஒருவர் அரபி அல்லது இசுபானிசு கற்க முடியாதா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s