சுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை கையாடல் செய்து மாட்டிக் கொண்டு அதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். ஏற்கனவே குடி, சீட்டு என்று வீட்டை கவனிக்காதவன், மனைவி அக்கம்பக்கத்து வீடுகளில் காபிப் பொடியிலிருந்து சர்கரை வரை கிண்ணம் கிண்ணமாகக் கடன் வாங்கியும், அதற்காக ரோஷத்தை மழுங்கடித்துக் கொண்டும் குடும்பத்தை ஓட்டி வருகிறாள். அவளுக்கு இவன் தரும் அரைகுறைப் பணமும் இனி வராது என்பது பேரிடி. அவனது அலுவலகத்தில் தனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவரைப் பார்த்து, அவர் மூலம் எம்.டியின் வீட்டை தேடிப் பிடித்து, எம்.டியின் மனைவி காலில் விழுந்து அவனது சஸ்பென்ஷனை வாபஸ் பெற வைக்கிறாள்.
வீடு திரும்பிய கணவன் தான் யூனியன் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியதில் நிர்வாகம் பயந்துவிட்டதாக தன் வீர தீர பிரதாபங்களை அளக்க, மனைவி அப்படியா என்று அவனை வியப்பதாக காண்பித்துக் கொள்வதுடன் கதை முடியும்.
இரண்டாவது கதையில் அதிக வீடுகளில்லாத புறநகர் பகுதியில் தீப்பெட்டி போல வீடுகட்டி குடியேறும் நடுத்தரக் குடும்பம் ஒன்று. தன் சீதன நகைகளை பீரோ லாக்கரில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அரிசிப்பானையில் பத்திரப்படுத்தியிருக்கும் இல்லத்தரசி. நள்ளிரவில் கொள்ளையன் ஒருவன் வீடு புகுந்து மிரட்டுகிறான். இப்போதெல்லாம் பெண்கள் நகைகளை பீரோவில் வைப்பதில்லை என்று அரிசிப்பானையை சரியாக யூகித்து அதை நோக்கி நகர்கையில் ஆவேசம் கொண்ட மனைவி அவன் தலையில் உலக்கையை தூக்கி அடிக்க, அவன் மயங்கியோ இறந்தோ(சரியாக நினைவில்லை) விழுகிறான்.
மறுநாள் போலீசும், பத்திரிக்கையாளர்களும் சூழ்ந்திருக்கும் பொழுதில் கணவன் அசட்டு சிரிப்புடன் அமர்ந்திருக்க, சம்பவத்தை விவரித்துக் கொண்டே வரும் மனைவி கடைசியில் அந்த தாக்குதலை கணவன் செய்ததாகக் கூறி முடிக்க, கணவன் நிம்மதியடைவதோடு முடியும் கதை.
இரண்டு கதைகளிலும் வரும் பெண்களின் சுபாவம் ஒன்றுதான், தேவை வரும் போது போராடி வெல்வதும், அதே சமயம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது கணவனின் ஈகோவை திருப்தி செய்வதையும் மிக இயல்பாக அது ஒரு பெரிய விஷயமில்லை என்பது போல் செய்துவிடும் பக்குவம். அது தரும் பலன் குடும்ப நிம்மதி. நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள் இவ்வகைதான்.
ஏனெனில் பெண் ஆசிரியை என்றால் அவரிடம் பாட்டுக் கற்றுக் கொள்ளப் போக மாட்டேன் என்று சிறுவயதில் மறுத்த ஆட்கள் முதற்கொண்டு, பெண் மேனேஜரிடம் வேலை செய்ய சண்டித்தனம் செய்யும் சக ஊழியர்கள் வரை நிறைய ஈகோவால் வீங்கிய நண்பர்களை சந்தித்திருக்கிறேன் நான்.
அவர்களோடெல்லாம் அமைதியாய் குடும்பம் நடத்தும் பெண்களைக் கண்டு எவ்வளவு சொரணையற்றவர்களாயிருக்க வேண்டும் இவர்கள் என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அது பக்குவம் என்பதையும், அபரிமிதமான மன முதிர்ச்சி அதற்குத் தேவை என்பதையும் நான் புரிந்து கொள்ள இந்தக் கதைகள் உதவின என்றால் அது மிகையில்லை.
வாழ்வில் ஈகோவை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு திரிபவர்கள் அடையும் எந்த மன உளைச்சலையும் இத்தகைய பெண்கள் அடைவதில்லை. அதனால் அவர்களுக்கு ஒரு இழப்புமில்லை. புடலங்காயை சமையல் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத இவர்களும் கூட ஒரு வகையில் பெண்ணியவாதிகள்தான்.
ஊதிப் பெருக்கிய தன் ஈகோவையும் ஒரு எக்ஸ்ட்ரா உறுப்பாக சுமந்தலையும் சில இளம் நண்பர்களைப் பார்க்கையில் எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. இன்னமும் நீங்கள் வாழ்கையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. அதே போல் பெண்களை அடிமைகளாக மட்டுமே பார்க்கும் இவர்களையொத்த சிந்தனையாளர்கள் இவர்களின் சகோதரிக்கோ அல்லது மகளுக்கோ கணவனாக வாய்த்தால் இவர்களின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
இலக்கியம் என்பது புத்தகம் படிப்பது போல் புகைப்படம் எடுத்து போஸ்டர் அடித்துக் கொள்வதற்கும், புத்தகங்களை ஷோகேஸில் அடுக்கி வைத்து வீட்டிற்கு வருபவர்களை மிரட்டுவதற்கும் மட்டுமானது அல்ல – வாழ்கைக்கான பாடங்களை கற்றுத் தருவதற்கும்தான். 🙂
—-
//
பகுப்புகள்: · ஜால்ரா தொல்லை
//
இதுதான் எனக்குப் புரியலை.. 🙂
//இலக்கியம் என்பது புத்தகம் படிப்பது போல் புகைப்படம் எடுத்து போஸ்டர் அடித்துக் கொள்வதற்கும், புத்தகங்களை ஷோகேஸில் அடுக்கி வைத்து வீட்டிற்கு வருபவர்களை மிரட்டுவதற்கும் மட்டுமானது அல்ல – வாழ்கைக்கான பாடங்களை கற்றுத் தருவதற்கும்தான். :)//
திட்டுறீங்க.. யாரையோ திட்டுறீங்கன்னு புரியுது அண்ணி.. அது யாரைன்னுதான் தெரியலை. தலையை தட்டறீங்களோ? 🙂
பதிவு போட்டு திரட்டியில் இணைப்பதற்குள்ளாக பின்னூட்டம் போடும் சென்ஷி…, உனக்கு சம்பளம் கொடுக்கும் மகானுபாவ்ர் யாருப்பா..? எனக்கும் ஒரு வேலை கிடைக்குமான்னு பார்ப்போம். :)))
ரைட்டு.. அப்ப நிச்சயம் தலையைத் தான் திட்டுறீங்கன்னு பாகசவுல அறிவிப்பு கொடுக்கச் சொல்லிடறேன் :))
***
திரட்டியை விட மின் மடலுக்கு இடுகை சீக்கிரம் வந்து சேர்ந்துடுது..
ஒரு சிறிய குறிப்பு: உங்க பதிவை தமிழ்மணத்துல சேர்த்தாச்சு! 🙂
நன்னி. 🙂
// பெண் மேனேஜரிடம் வேலை செய்ய சண்டித்தனம் செய்யும் சக ஊழியர்கள் //
அலுவலக அனுபவமா?! ;)…இது எல்லா பெண் டேமேஜர்களுக்கும் நடப்பதுதானே?!
ஒரே விசயத்தை படிக்கும்போது, ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு மாதிரி தோணும்ங்க.. :)) அதுவா இது ?
சிரிப்பு தாங்க முடியல :0
//இலக்கியம் என்பது புத்தகம் படிப்பது போல் புகைப்படம் எடுத்து போஸ்டர் அடித்துக் கொள்வதற்கும், புத்தகங்களை ஷோகேஸில் அடுக்கி வைத்து வீட்டிற்கு வருபவர்களை மிரட்டுவதற்கும் மட்டுமானது அல்ல – வாழ்கைக்கான பாடங்களை கற்றுத் தருவதற்கும்தான்//
🙂 🙂
அழகாக ஆழமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.