ஆடிப்பெருக்கு


இன்று ஆடிப் பெருக்கு. மதியம் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண் கொண்டு வந்திருந்த சித்ரான்னங்கள் (கலந்த சாதங்கள் – தமிழில் வெரைட்டி ரைஸ் 🙂  ) சிறு வயது நினைவுகளை கிளறியது. நினைவு தெரிந்த நாளிலிருந்து வளர்ந்ததெல்லாம் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் இருந்த ஒர் ஊர் என்பதால் நதியோடு சம்பந்தப்பட்ட எல்லா கொண்டாட்டங்களும் ரொம்பவே சிறப்பாக இருக்கும்.

ஆடிப் பதினெட்டு அன்று விடியலிலேயே எல்லா அம்மாக்களும் காவிரியை நோக்கி கிளம்புவார்கள். காதோலை கருகமணி(ரோஸ் நிறத்தில் பனையோலையை வட்டமாக மடித்து அதை ஒரு சிறு கருநிற வளையலால் இறுக்கியிருப்பார்கள்), வெற்றிலை பாக்கு மஞ்சள் என மங்கலப் பொருட்களை ஓடிக் கொண்டிருக்கும் நதியில் போட்டுவிட்டு, காவிரித்தாயை வணங்கி குளித்து கரை ஏறுவார்கள். சிலர் காப்புக் கயிறு எனும் மஞ்சள் சரடை கட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

வீட்டுக்கு வந்து கலவை சாதங்களை விதவிதமாக தயாரிக்க ஆரம்பிப்பார்கள். புளிக்காய்ச்சல் போன்ற சில பொருட்கள் முதல் நாளே தயாராகியிருக்கும். அன்று காலையில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம்(இதில் காரம், வெல்லம் ரென்டு வகை உண்டு), தயிர் சாதம், அவியல், உளுந்து/அரிசி அப்பள வகைகள், ஜவ்வரிசி, அரிசி வடாம்கள் என்று பெரிய பட்டியல் உண்டு. மதியமே இவை எல்லாவற்றையும் வீட்டில் ஒரு பிடி பிடித்தாலும் கூட எல்லோரும் மாலைப் பொழுதுக்காகவே காத்திருப்போம். காலையில் ஆற்றுக்குப் போவது குளியலுக்காக என்றால் மாலையில் குதூகலத்துக்காக மீண்டும் ஆற்றுக்குப் படையெடுப்போம். இந்த முறை சிறுவர் சிறுமியர் பிரதானம்.

ஒவ்வொருவரும் சப்பரம் எனப்படும் சிறு தேரை பரணிலிருந்து இறக்கி தூசி தட்டி அலங்கரித்து வைத்திருப்போம். எல்லார் வீட்டிலும் என்றோ ஒரு நாள் வேலைக்கு வந்த தச்சரிடம் செய்து வாங்கிய சப்பரம் இருக்கும்.  அவரவர் திறமையை அல்லது அவரவர் அப்பா/அண்ணனின் கலைத் திறமையை எல்லாம் காட்ட இந்த சப்பரம்தான் பயன்படும். மதியம் மூன்று மணியிலிருந்தே வண்ணக் காகிதங்கள் ஒட்டி, அதனுள் ஏதேனும் ஒரு சாமி படத்தையும் ஒட்டி சணல் அல்லது கயறு கட்டி இழுக்கும் தோதில் தயாராக காத்திருக்கும்.

ஏடுகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் சேர்ந்து விட்ட பழைய ஏடுகளை ஆடிப் பெருக்கன்று ஆற்றில் விடும் வழக்கம் இருந்ததாம். ஏடுகள் சரஸ்வதி ரூபம் நம்பிக்கை இருப்பதால் பழைய ஏடுகளை எரிக்கவோ, குப்பையில் போடவோ முடியாது என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. அந்த பழைய ஏடுகளை எடுத்துச் செல்ல இந்த சப்பரங்களை பயன்படுத்தி வந்தனராம்.

ஏடுகள் மறைந்த பின் இது சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள் ஆகியிருக்கலாம். சிறுவர்கள் சப்பரத்துடனும், பெரியவர்கள் சித்ரான்னங்களோடும் ஆற்றுக்குப் கிளம்பிப் போய் மாலைப் பொழுதை விளையாட்டு, வேடிக்கைப் பேச்சென கழித்துவிட்டு வீடு திரும்புவோம். திரும்பி வரும் போதே இரு கைகளாலும் தலையை சொரிந்து கொள்ள ஆரம்பித்திருப்போம்- ஆடிய ஆட்டத்தில் தலையெல்லாம் ஆற்று மணல் படிந்திருப்பதால் மறுநாள் வீட்டிலேயே அம்மா தலையை அலசி விடும் வரை இந்த சொரிதல் படலம் தொடரும். 🙂

ஆடிப் பெருக்கு முடிந்து சில நாட்களுக்கு அந்த சப்பரத்தை தெருவில் ஓட்டித் தீர்ப்போம். அதிலுள்ள வண்ணக் காகிதங்கள் எல்லாம் பிய்ந்து தொங்கி பார்க்கவே பரிதாபகரமாக மாற வேண்டும், இல்லை வீட்டுப் பெரியவர்கள் யாரேனும் அந்த கடமுட சத்தம் பொறுக்காது அதை தூக்கி பரணில் மீண்டும் போட வேண்டும். இரண்டிலொன்று நடக்கும் வரை இந்த சப்பர ஓட்டம் ஓயாது. இதில் பந்தயமெல்லாம் வேறு நடக்கும்.

இப்போதெல்லாம் யாரும் ஆடிப் பெருக்குக்கு ஆற்றுக்குப் போவதே இல்லயாம். முதல் காரணம் ஆற்றில் தண்ணீர் கிடையாது, எனவே மணற்பரப்பெங்கும் காய்ந்து கிடக்கும் மலக் குவியலும், குப்பை சத்தைகளும் அங்கே உட்கார வழியில்லது ஆக்கி வைத்திருக்கிறது. இரண்டாவது காரணம் மக்களுக்கு அன்றும் தொலைக்காட்சியை விட்டுப் பிரிய மனமில்லாது போனது. எனவே ஆடிப் பெருக்கன்றும் ஆறு ஓய்ந்து போய்தான் கிடக்கிறது.

😦

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், மலரும் நினைவுகள் and tagged , . Bookmark the permalink.

14 Responses to ஆடிப்பெருக்கு

 1. புருனோ சொல்கிறார்:

  நான் நதிக்கரையில் வளர்ந்தது கிடையாது

  ஆனாலும் நான் சிறுவயதில் கொண்டாடிய பல நாட்களும் இதே போல் காலவெள்ளத்தில் தொலைந்து விட்டதால் உங்கள் இடுகையின் அடிநாதத்தை புரிந்து கொள்ள முடிகிறது

 2. தமிழ் பிரியன் சொல்கிறார்:

  ஆடிப் பெருக்கு கல்கியின் மூலம் தான் தெரிந்தது..
  பழைமைகள் தொலைக்காட்சிப்பெட்டிகளால் முழ்கிப் போனது தெரிந்தது தான்… 😦

 3. ஜெ. பாலா சொல்கிறார்:

  உங்களுக்கெல்லாம் இருந்தது என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆறும், ஆற்றின் பெயரும் இருக்கிறது… நான் வளர்ந்த ஊரில் ( கோவை அருகே கிணத்துக்கடவு என்ற ஊர்) தண்ணீருக்கே அவ்வளவு சிரமம. சில சமயங்களில் ஒரு குடம் நீர் 4 ரூபாய் வரை கூட விலை கொடுத்து வாங்கியதுண்டு.. (காசை விட சிக்கனமாய் தண்ணீரை சேமிக்க வேண்டும்) இதை யோசிக்கும் போது நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்ப்பா….

 4. muthuletchumi சொல்கிறார்:

  அது ஒரு காலம்ன்னு தான் எல்லா பதிவிலும் பின்னூட்டிட்டு வரேன். ஆனா கெண த்துக்கடவுக்காரர் சொல்ற மாதிரி நமக்காச்ச்சும் நினைவுகள் .. இருக்கு.

 5. ஆயில்யன் சொல்கிறார்:

  //மங்கலப் பொருட்களை ஓடிக் கொண்டிருக்கும் நதியில் போட்டுவிட்டு//

  ஆஹா அங்கே பூஜையெல்லாம் வீட்டுக்கு பெரியவங்க, புள்ளையார் புடிச்சு வைச்சு பழங்கள் [குறிப்பா பேரிக்கா இருக்கும்] அப்புறம் அரிசி மிக்ஸ்டு வித் வெல்லம்,காவிரி நீர் எல்லாம் வைச்சு படைச்சு பிரமாதமாக இருக்குமே! சித்ரான்னம் வெகு விரைவாக சாப்பாட்டு சப்ஜெக்ட்டுக்குள்ள கொண்டுவந்திருச்சு போல :))

 6. ஆயில்யன் சொல்கிறார்:

  //இப்போதெல்லாம் யாரும் ஆடிப் பெருக்குக்கு ஆற்றுக்குப் போவதே இல்லயாம்./

  உண்மைதான்! காவிரி திறப்பது பற்றியே செய்தியே இல்லாத சூழலிலும் கூட ஏதோ ஒருநம்பிக்கையில் காவிரியினை சென்று பார்த்து,ஏமாந்து திரும்புபவர்களும் உண்டு! அதை பார்க்கும்போது இயல்பாகவே , ஆற்றின் முழு கொள்ளவுக்கும் நீரோடிக்கொண்டிருக்கும் வகையில்,யாரேனும் மாயாஜாலம் செய்துவிடாமாட்டார்களா என நினைக்கதோன்றும் ! 😦

 7. ramji_yahoo சொல்கிறார்:

  மிக அருமை. நன்றிகள்.

  ஆடிப் பெருக்கு மிக மகிழ்ச்சியான நாள்.

 8. vallisimhan சொல்கிறார்:

  ஆடி பதினெட்டை மறக்காமல் கொண்டாடியது இளமைப் பருவத்தில். மணமான பின் திருச்சியில் ஆற்றில் வெள்ளம் பார்த்த நினைவும் உண்டு. இப்போது கங்கை சொம்புகளுக்கு திருமுழுக்காட்டு செய்வதும் ,பால் பாயசமும் ,வடகமும்,தேங்காய் சாதத்தோடு இனிதே பூர்த்தி:)
  லக்ஷ்மியைப் பார்த்தால் மிகப் பொறாமையாக இர்க்கிறது:)

 9. யெஸ்.பாலபாரதி சொல்கிறார்:

  முத்துலெட்சுமி யக்கோவ்வ்வ், கிணத்துக்கடவு பாலா மட்டுமல்ல ராமேஸ்வரத்துகாரனாகிய எனக்கும் கூட எங்கே இதெல்லாம் தெரியும். சினிமாவுலையும், டி.வியிலையும், புக்குல படிச்சு தெரிஞ்சுகிட்டதும் தான்.

  என்னால்.. இதை பற்றி எல்லாம் நினைச்சு பார்க்கக்கூட முடியாது. :((

 10. vidhoosh சொல்கிறார்:

  🙂 நல்லாத்தான் கிண்டி இருக்கீங்க நினைவுகளை :-))

  யதாவது லாட்டரி அடிச்சா ஊருக்கு வெளியே அம்பது வேலி வாங்கி போட்டு, நாமா ஒரு குளத்தை உண்டு பண்ணி கரையில உக்காந்துக்க வேண்டியதுதான்..

 11. ☼ வெயிலான் சொல்கிறார்:

  கொங்கு மண்டலத்தில் ஆடி நோம்பி என்று கொண்டாடுவார்கள். தூரி (ஊஞ்சல்) கட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை ஆடுவார்கள்.

  விடுமுறை என்பதால், நேற்று ஊருக்குச் சென்றிருந்த போது, இதெல்லாமா கொண்டாடுவாய்ங்க என வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டார்கள்.

  நீர்ப்பெருக்கு இருக்குமிடங்களில் தான் இது விழா! கால் கழுவவே தண்ணீரில்லாத எங்க ஊரில் எப்படிக் கொண்டாட முடியும்?

 12. R Gopi சொல்கிறார்:

  //நினைவு தெரிந்த நாளிலிருந்து வளர்ந்ததெல்லாம் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் இருந்த ஒர் ஊர் என்பதால் நதியோடு சம்பந்தப்பட்ட எல்லா கொண்டாட்டங்களும் ரொம்பவே சிறப்பாக இருக்கும்.//

  வாஸ்தவம்தான். எங்க ஊர்ல ரெண்டு ஆறுமே (காவேரி, அரசலாறு) உண்டு. ரொம்பவே நல்லா இருக்கும். இப்பத்தான் ஊருக்கே போக முடியிறதில்ல.

 13. அபிஅப்பா சொல்கிறார்:

  இதிலே லெஷ்மி சொன்னதும் ஆயில்யன் சொன்னதும் 100 சதம் உண்மை. இப்படித்தான் இருக்கும் ஆடிப்பெருக்கு. அது போல பலவருஷம் பின்னே இந்த ஆடிமாதம் மட்டுமே எங்க மாயவரம் காவிரில தண்ணீர் வரலை ஆயில்யா. ஆனா தண்ணீர் திறக்கும் தேதி எல்லாம் சொல்லி கலக்டர் கல்லணைல திறந்து வச்சு கும்பகோணம் வரை வந்தாச்சு. அது போல குப்பகோணம் முதல் மாயவரம் வரை வராம அரசலாறு, வீரசோழன் எல்லாத்திலயும் திறந்து (மாயவரம் பாலம் மற்ரும் சில பாலம் வேலை முடியாமையால் அதை திசை திருப்பி ஆனால் மத்த ஆறுல எல்லாம் தண்ணீர் இருக்கு.

  அருமையான நினைவலைகள். நன்றி

 14. Natarajan Venkatasubramanian சொல்கிறார்:

  நாங்கள் தாமிரபரணிக் கரையில் ஆடிப்பெருக்கை கொண்டாடியிருக்கிறோம்.
  அதன் பின்பு நிலா சாப்பாடும், அரட்டையும் மறக்கமுடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s