ஆன்மீகச் சொற்பொழிவு என்பது மேடைப் பேச்சில் ஒரு முக்கியமான பிரிவாகவே தமிழில் இருக்கிறது. வெட்டிப் பேச்சை கேட்க விருப்பமில்லாதவர்கள் கூட சாமி சமாச்சாரம் என்று வந்து உட்கார்வதால், அவர்களை பிடித்து இலக்கியச் சுவையையும் வெளித்தெரியாமல் ஊட்டி விடுவதாகவே ஒரு காலத்தில் இந்த சொற்பொழிவுகள் இருந்தன. வாரியார் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தையும், திருப்புகழையும், திருமுருகாற்றுப் படையையும் நிறைய இடையிடையே சொல்வது, சிறுவர் சிறுமிகளை நோக்கி கேள்வி கேட்டு பதில் சொல்லுபவர்களை பாராட்டுவது என்று மிகவும் ரசமான ஒரு துறையாக வைத்திருந்த இந்த சொற்பொழிவுகள் இன்றைக்கு இருக்கும் நிலை மிக மோசம்.
வீட்டிற்கு அடுத்தாற் போல் இருக்கும் கோவிலில் நாகை முகுந்தனின் சொற்பொழிவு. சமையலறையில் நின்று வேலை செய்கையில் கவனிக்க கூடாது என்ற நமது உறுதியையும் மீறி நம் காதில் வந்து மோதும் அபத்தத்தை தவிர்க்க முடியவில்லை. கவியரங்கம் போல எல்லா வாக்கியத்தையும் இரண்டிரண்டு முறை பேசுவது, பேசும் போது ஒவ்வொரு வாக்கியத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல கையை தட்டுவது, நிகழ்சியை ஏற்பாடு செய்த கோவில் நிர்வாகியை கூச்சமேயில்லாமல் ஆஹா ஓஹோவெனப் புகழ்வது என அருவெறுக்கத் தக்க முறையில் நீண்டது அந்தப் பேச்சு. இரவுணவை நான் தயார் செய்து முடித்த அரை மணி நேரத்தில் எதைப் பற்றிப் பேசுகிறார் என ஒரு துளியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் அதன் உச்சபட்ச சிறப்பு. 🙂
இதே போல் திருச்சி கல்யாண ராமன் என்று ஒருவர் – பேசும் போதே கண்ணீராகி கசிந்துருகி கொடுக்கும் காசுக்கு கூடுதலாகவே கூவுவார். சமீபத்தில் பெண்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லக் கூடாது, அப்படி சொன்னதால்தான் எம். எஸ். சுப்புலக்ஷ்மிக்கு சர்கரை நோய் வந்தது என்றெல்லாம் திருவாய் மலர்ந்தருளினார். சமீபத்தில் ஒரு மேடையில் முதல்வர் கருணாநிதியை வாலி வைரமுத்து ரேஞ்சுக்குப் புகழ்ந்து மேடையில் மடிப்பிச்சை கேட்டு ஆன்மீகச் சொற்பொழிவுகளின் தரத்தை தன் பங்குக்கு சிலபல இஞ்சுகளாவது தூக்கி நிறுத்தினார்.
இது போல நீளும் பட்டியலில் கொஞ்சமேனும் ஆசுவாசம் தருபவர்கள் சிலர் உண்டு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் மென்மையான, அலட்டலில்லாத அளவான பேச்சு பொதிகையில் வந்தால் கூட அவருக்கென ப்ரத்யேக ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை உறவு/நட்பு வட்டாரங்களில் உணர முடிகிறது – இத்தனைக்கும் இவர் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பு ரொம்பவே தத்துவார்த்தமானது – கீதை. கதை அல்லாத டாபிக்கில் அதிக நேரம் ஓட்டுவது மிகச் சிரமம் என்பதால், அதிலும் அதிகம் பேரைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது இவரது தனித் திறமை.
அதே போல் பொதிகையில் அறிமுகமாகி இன்று சன், விஜய் முதலிய சானல்களிலும் தோன்றத் தொடங்கியிருக்கும் இன்னொரு நல்ல, நாகரீகமான ஆன்மீகப் பேச்சாளர் திருமதி. தேச மங்கையர்க்கரசி. வாரியாரின் மாணவியாம். நல்ல தேர்ந்தெடுத்த, உறுத்தாத உடையலங்காரம் இவரது இன்னொரு ப்ளஸ்.
*******
சில நாட்களாக நான் அலுவலகப் பேருந்துக்காக காத்திருக்கையில் ஒரு விஷயத்தை தினமும் கவனிக்க நேர்கிறது. நான் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் எதிர்த் திசையில் உள்ள நிறுத்தத்தில் ஒரு நடுவயது மனிதர் தினமும் சரியாக ஒரே நேரத்துக்கு ஆஜராவார். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அவர் வந்து காத்திருப்பது எந்த பேருந்துக்காகவும் இல்லை. அந்த வழியில் தனியாகப் போகும் எல்லா இரு சக்கர வாகன ஓட்டிகளையும் நிறுத்தி சளைக்காமல் லிஃப்ட் கேட்பார். ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை, மாதம் முப்பது நாளுமே லிஃப்ட் கேட்டே அலுவலகம்(!) சென்று வரும் இவரது கடமையுணர்ச்சியும், சிக்கன நோக்கமும் கண்டால் சிலிர்க்கிறது. (ஒரு நாள் லிப்ட் கொடுத்தவர் அடுத்த நாளும் இவரைக்கண்டால் என்ன நினைப்பார்?)
இவர்தான் இப்படி என்றால் இன்னொருவர் இவரையும் மிஞ்சி விட்டார். ஒக்கியம் துரைப்பாக்கம் சிக்னலில் (200 அடி ரோடு வந்து ஒ.எம்.ஆர் அதாவது ராஜீவ் காந்தி சாலையைத் தொடும் இடத்தில்) காத்திருக்கையில் வலது புறம் திரும்பும் ஒரு இரு சக்கர வாகனத்தின் பின்னாலிருந்து இறங்கி, இடது புறம் (சோழிங்கநல்லூர் நோக்கிப் போகும் பாதை) திரும்பக் காத்திருக்கும் வாகனங்களை நெருங்கி, ஒவ்வொருவரிடமாக லிஃப்ட் கேட்டு வந்தபடியிருந்தார். ஒவ்வொரு வாகனமாய் அணுகி பேசிய நேரத்துக்கு ரோட்டைக் கிராஸ் செய்து நடக்கத் துவங்கியிருந்தால், வண்டிகள் ஒவ்வொரு சிக்னலிலும் நின்று நின்று வருவதற்குள்ளாகவே கூட அவர் சேரிடம் சேர்ந்திருக்கலாம்.
இப்படிச் சொல்வதால் சிக்கனமாக இருப்பதை நான் கிண்டலடிப்பதாக பொருள் இல்லை. சிக்கனமாக இருப்பது என்பதற்கும் கஞ்சத்தனத்திற்கும் ஒரு நூலிழை வேறுபாடு உண்டு. அனாவசிய செலவுகளை மட்டும் குறைத்தால் அது சிக்கனம். அத்யாவசியமான செலவுகளையும் குறைக்க முற்பட்டால் அது கஞ்சத்தனம். அதுவும் இப்படியெல்லாம் அடுத்தவரை நம்பியாவது தன் அத்யாவசியத் தேவைகளையும் தீர்த்துக் கொள்ள முயன்றால் அது அல்பத்தனம் என்றே எண்ணுகிறேன்.
காலை வேளையில் எரிச்சலடைவதைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காக இனி பாலையா கார்டன் பேருந்து நிறுத்தத்திற்கு பதிலாய் வலப்புறமிருக்கும் சதாசிவ நகர் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லலாமென இருக்கிறேன் – அங்கும் யாரும் இது போல் வந்து சேராதிருக்க எல்லாம் வல்ல இயற்கையை வேண்டியபடி. 🙂
***********
64வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் முடிந்தாயிற்று. பிரதமர் பேசிக் கொண்டிருந்த குண்டு புகா கண்ணாடியால் அமைக்கப்பட்ட கூண்டின் மேல் கொடியிலிருந்து விழுந்த பூவிதழ்கள் கிடந்தன. ஒருசில வினாடிகள் கூட பிரதமரின் தலையை/தலைப்பாகையைத் தொட முடியாமல் போன அந்தப் பூவிதழ்களைப் பார்த்தால் பாரதமாதா ஏதும் ஃபீல் பண்ண மாட்டாங்களா? என்னமோ போங்க.. காமன்வெல்த் போட்டிகள தேசியக் கொண்டாட்டமா நினைக்கணுமாம் – தலப்பா அய்யா சொல்றாரு.. ஆமாங்க, தேசியக் கொண்டாட்டம்தான், இல்லியா பின்ன… கோடி கோடியா கொள்ளையடிக்கற கல்மாடி மாதிரி ஆட்கள் எல்லாம் தேசியவாதிகள்தானே? கொள்ளையிலும் இது சுதேசிக் கொள்ளைன்றதால கொண்டாடணுமோ என்னவோ?
இந்த மாதிரியான அற்புத தருணத்துல மங்கையின் இந்தப் பதிவு (http://manggai.blogspot.com/2010/08/blog-post_15.html) கண்ணுல பட்டுது. இந்தியா மாதிரி சொர்க்கத்துல, வல்லரசுல உக்காந்துகிட்டு இது போன்ற அற்ப விஷயங்களைப் பத்தியெல்லாம் கவலப்பட்டா சாமி கண்ணக் குத்திறாது? போங்க, போய் தேசிய கொண்டாட்டத்தை கொண்டாடுங்க… இன்னும் சில பல கோடிகள சுருட்ட கல்மாடி அய்யா காத்துகிட்டிருக்கார்.
—-
கஞ்சத்தனம் பற்றி ஒரு ஜோக்
பையன் : அப்பா, கஞ்சன்னா யாருப்பா
அப்பா : கஞ்சன்னா காசை கண்ணுல காட்டாதவன்
பையன் : அப்பா, காசுன்னு என்னப்பா
எப்பொழுதோ கேள்வி பட்டது. உங்கள் இடுகையை படித்தவுடன் நினைவில் வந்தது
//இது போல நீளும் பட்டியலில் கொஞ்சமேனும் ஆசுவாசம் தருபவர்கள் சிலர் உண்டு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் மென்மையான, அலட்டலில்லாத அளவான பேச்சு பொதிகையில் வந்தால் கூட அவருக்கென ப்ரத்யேக ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை உறவு/நட்பு வட்டாரங்களில் உணர முடிகிறது.//
அவருடைய சீனிவாச கல்யாணமும் சுந்தர காண்டமும் (DVD) கூட மிக அருமை. அவர் ஒரு CA, ICWA என்பது உபரித் தகவல்.
தினமும் ஒரு திவ்யநாமம் நிகழ்ச்சியில் வரும் அனந்த பத்மநாபாச்சாரியாரும் நன்றாகவே சொல்லுகிறார்.
தேசமங்கையர்கரசி அழகான சுத்தமான சொல்லுக்கு சொந்தக்காரர். அவங்க அப்பா அம்மாவுக்கு நீண்ட வருடம் குழந்தை இல்லாமல் ரொம்ப தாமதமான வரவாம் அந்த பெண். அவங்க பிளஸ் பாயிண்ட்டே அந்த குரல் தான். தவிர சொல்ல வரும் கருத்தை நோக்கியே தன் கவனத்தை வைத்திருப்பதோடு நம்மையும் கூட்டிச்செல்லும் பாங்கு. சமீபத்தைல் அழகிய ரெட்டை குழந்தைகளை பெற்ற அம்மணி அவங்க. வாழ்த்துக்கள் தேச மங்கையர்கரசி!
நீங்க அந்த கால கீரன் முதல் சேர்த்து விமர்சனம் செய்யுங்க லெஷ்மி. வேளுக்குடிய திடீர்ன்னு நாகை முகுந்தன் கூட சேர்த்து போட்டா இதை படிக்கும் எல்லோருக்கும் இவங்க ரெண்டு பேரையும் தான் எப்போதும் கம்பேர் செஞ்சு பார்க்கும் ஒரு மனப்பான்மை வந்துடும். இரண்டும் வேற வேற கோணம்.
நல்ல வேளை திருச்சி கல்யாணராமனை பத்தி எழுதும் போது நல்லா இருக்குன்னு சொல்லிடுவீங்களோ என பக்கு பக்குன்னு சீட்டு முனைக்கே வந்துட்டேன். நல்லா காட்டுறீங்கப்பா பயம்:-))