உதிரிப் பூக்கள் – 4/09/10


ஜேபிஜே நிறுவனத்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்காரர்கள் டிவியில் விளம்பரம் செய்வது நல்ல வழி என்று கண்டு கொண்டுவிட்டார்கள் போலும். அதிலும் விஜய் டிவியில் விளம்பரங்கள் சில வினாடிகள் – நிமிடங்கள் என்று இல்லாமல் மணிக் கணக்கில் வருகிறது. திண்டிவனம் தாண்டி மைலம் போகும் வழியில் ஏதோ ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டியாம். அங்கே இல்லாத வசதி இந்த பூலோகத்தில் வேறு எங்குமே கிடையாதாம். பத்தடியில் தண்ணீர் வருகிறதாம். கையாலேயே தோண்டிப் போர் போட்டுவிடலாம் போல. கொலுவில் பார்க் கட்டும் போது பார்க் என்று ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை இரண்டு ஈர்க்குச்சியில் ஒட்டி நட்டு வைப்போம் – இல்லைன்னா அது பார்க்குனு பாக்கறவங்களுக்கு எப்படித் தெரியும்? அதே பாணியில் அங்கங்கே டெம்பிள், மாஸ்க், சர்ச், ஸ்கூல் என்றெல்லாம் போர்டு எழுதி அந்த பொட்டல் காட்டில் அங்கங்கே நிறுத்தியிருக்கிறார்கள். பக்கத்தில் கல்லூரிகளாம், பள்ளியாம், மருத்துவமனையாம் – இவர்கள் அடுக்கும் வசதிகளைப் பார்த்தால் டி.நகர், மைலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டையெல்லாம் சின்ன கிராமம் என்று தோன்றுகிறது.
இது விளம்பரம் என்றே சுலபத்தில் உணர முடியாதபடிக்கு தயாரிக்கப் பட்டிருப்பதுதான் ரொம்ப ஆபத்தான விஷயமாகப் படுகிறது. சீரியல் நடிக, நடிகையர் கும்பல் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கதாபாத்திரமாக இல்லாமல் தங்கள் சொந்தப் பெயரிலேயே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதும், இந்தப்பக்கம் காலேஜாம், இந்தப் பக்கம் ஹாஸ்பிட்டலாம் என்று வியப்பதும், பின் வரிசையில் ஓடி நின்று பணத்தை எண்ணிக் கொடுத்து அவசர அவசரமாய் ப்ளாட்டை புக் செய்வதுமாக காட்சிகள் ஓடுகின்றன. தேவிப்பிரியா, திவ்யதர்ஷினி, துர்க்கா, ராஜ்கமல், நிழல்கள் ரவி என்று ஒரு பெரிய கும்பலே இந்த சதித்தனமான விளம்பரத்தில் நடித்திருக்கிறது. பார்க்கும் அப்பாவிகள் பலரும் இவர்கள் எல்லோரும் நிஜமாகவே அங்கே போய் பணத்தை கொட்டுகிறார்கள் போல என்று நம்பிவிடுமளவு இவர்களின் நடிப்பு பிரமாதம். சின்னத்திரை நட்சத்திரங்களின் பக்கத்து வீட்டுக்காரர் ஆகும் வாய்ப்பு என்பதும் ஒரு கூடுதல் தூண்டில். இதெல்லாம் ஏமாற்று என்ற வகையில் வராதா?
*********
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜான்சி ராணி சீரியலி ராணிக்கு கல்யாணமாம். ராவணன், அலைபாயுதே என்று படங்களிலிருந்து எடுத்த பின்னணி இசை முழங்க நிறைய விளம்பரங்கள். உண்மையிலேயே திருமணத்தின் போது மணிகர்ணிகாவுக்கு(லக்ஷ்மி பாயின் பூர்வாசிரமப் பெயர்) 14 வயதுதான். அதனால் ஒரு சிறு பெண்ணை திருமண கோலத்தில் காட்டுகிறார்கள். ஜான்சி ராஜா கங்காதர் ராவாக வரும் நபர் ஒரு முப்பது வயது நபர்(உண்மையில் அவருக்கு திருமணத்தின் போது வயது 50க்கும் மேல் என்று படித்த நினைவு). இந்தத் திருமணக் காட்சியைப் பார்க்கையில் கொஞ்சம் பகீரென்றுதான் இருக்கிறது. மது அருந்தும் காட்சியில் கீழே எச்சரிக்கை வாசகம் போடுவது போல் குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது என்று ஒரு எச்சரிக்கையை இது போன்ற காட்சிகளில் போட்டால் என்ன? உடனே இப்படியே போனால் எல்லா காட்சிக்கும் கீழே சப் டைட்டில் போல ஒரு வரி போட வேண்டி வரும் என்று கமெண்ட் வரும் என்று தெரிந்தாலும் அந்தக் காட்சியைப் பார்த்த போது எழுந்த ஆதங்கத்தை பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியதால் இங்கே எழுதுகிறேன். ))
*********
கனிவமுதனை கடந்த சில நாட்களாக அருகில் உள்ள காப்பகம் ஒன்றில் விட ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பம் என்பதால் இரண்டொரு தினம் அரை நாளுடன் போய் அள்ளிக் கொண்டு வந்து விட்டோம். முதலில் அழுதாலும் பின் அங்கே இவந்தான் ஆகச் சின்னவன் என்பதால் எல்லா குழந்தைகளும் இவனைச் சூழ்ந்து கொண்டு இவனோடு விளையாடுவதால் சீக்கிரமே சமாதானமாகி விடுவதாக காப்பக நிர்வாகி கூறினார். நாங்கள் தான் ரொம்பவே தவித்துப் போகிறோம். நம் ப்லாகர் கவிதாக்கா கொஞ்ச நாள் முன்பு ஒரு குழந்தைகளுக்கான ப்ளே ஸ்கூல் துவங்கினார். பதிவெல்லாம் கூட போட்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் புதுசா ஒரு இடத்துல குழந்தைய விடறதுக்கு பதில் நம்ம பதிவுலக மக்கள்னா கொஞ்சம் ஒரு ஆசுவாசமா இருக்கும்னு எனக்கு ஒரு எண்ணம். ஆகா, மாட்டினாங்கன்னு சந்தோஷமா விசாரிக்கப் போனா, நான் கேக்கப் போன நேரம் அவங்க ஸ்கூலையே தற்காலிகமா நிறுத்திட்டதா சொன்னாங்க.  இப்போ இன்னொரு பதிவர் அந்த முயற்சில இருக்கறதா காத்து வாக்குல தகவல் – ஆர்வத்தோட காத்துகிட்டிருக்கேன் – முதல் போணியா கனிய அங்க அனுப்பத்தான்.
**********

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, பதிவர்கள் and tagged , . Bookmark the permalink.

3 Responses to உதிரிப் பூக்கள் – 4/09/10

  1. \\இது விளம்பரம் என்றே சுலபத்தில் உணர முடியாதபடிக்கு தயாரிக்கப் பட்டிருப்பதுதான் ரொம்ப ஆபத்தான விஷயமாகப் படுகிறது//// 😦

  2. //இதெல்லாம் ஏமாற்று என்ற வகையில் வராதா?//

    வராது !!

  3. AG says:

    குழந்தைகள் காப்பகத்தைப் பற்றி உங்களோட அனுபவங்களை எழுதுங்களேன். ( both baby sitters as well as day care).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s