அரிச்சந்திர நாடகம் பார்த்துதான் காந்தி சத்தியசீலர் ஆனார் என்று சொல்வது நிஜம்தான் போலிருக்கிறது. காதலனும் காதலியும் பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென பத்து வெள்ளைக் கார ஆண்களும் பெண்களும் பின்னணியில் குத்தாட்டம் போடுவது மாதிரியான மரண மொக்கைப் படங்களை பார்த்துக் கூட நம் மக்கள் திருந்துகிறார்களாம்… நானொரு எம்.சி.பியாக்கும் என்று பெருமிதத்துடன் சொல்லித் திரிந்த, அறிவுஜீவியாகத் தன்னை கட்டமைத்துக் கொள்வதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் இப்போதெல்லாம் “அய்யகோ… இந்த ஆணாதிக்க சமூகத்திலே….”, “என்று ஒழியும் இந்த ஆணாதிக்கம்?” என்றெல்லாம் ஆங்காங்கு கூவி வருகிறார். (மேற்குறிப்பிட்ட செய்தியில் அறிவு ஜீவியாக முயற்சிப்பவர் என்ற க்ளூ சேர்க்கப் பட்டிருப்பது அது ஆசீப் இல்லை என்பதை உணர்த்தவே. :)))) ) குட் ஜாப் Mr. கௌதம் வாசுதேவ மேனன்.
************
சமீபத்தில் படித்த புத்தகம் கீரனூர் ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை. அருமையான நாவல். விரைவில் விரிவான விமர்சனம் எழுத வேண்டும்.(இந்த மாதிரி வேண்டும், வேண்டும்னு நான் போட்டு வச்சிருக்கற லிஸ்ட் அஜித் பட பாட்டை விட நீண்டு போயிரும் போலிருக்கு 😦 ) தமிழிலக்கிய சூழலில் அதிகம் பேசப் பட்டிராத இஸ்லாமியர்களின் வாழ்கை முறை, பேச்சு வழக்கு, அங்கும் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் என எத்தனையோ விஷயங்களை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொல்லிச் செல்லும் எழுத்து ஜாகிர் ராஜாவினுடையது. படித்து முடித்தவுடன் தோன்றிய முதல் எண்ணம்.. எப்படி ஃப்த்வா எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இந்த மனிதர் தப்பித்தார் என்பதுதான்.
********
நாஞ்சில் நாடனுக்கு இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற செய்தி. அநேகமாய் இந்த முறை முணுமுணுப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். புத்தக கண்காட்சியை ஒட்டி அண்ணாச்சிக்கு சென்னையில் பாராட்டு விழா என்று கேள்விப் பட்டேன். அவசியம் கலந்து கொள்ள வேண்டும், பார்க்கலாம்.
************
வெகு நாட்களாக மனதுக்குள் எழுத நினைத்து வைத்திருக்கும் ஒரு விஷயம் – தேவரடியர் குல வரலாறு. அவ்வரிசையில் தனக்கெனத் தனி முத்திரை பெற்றிருந்த ராஜராஜ சோழனின் மனைவிகளில் ஒருவராயிருந்த பஞ்சவன் மாதேவி தொடங்கி, மிகச்சமீபத்தில் ஜொலித்த பெங்களூர் நாகரத்தினம் அம்மாள், பால சரஸ்வதி எனப் பல வியந்து பார்க்க வேண்டிய ஆளுமைகள் உண்டு.
ஊர் ஊராக சென்று மேடை போட்டு சாமி கட்டியதாக நம்பப்படும் பொட்டை(தாலியை) அறுத்து எறிய வைத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் முதல் ’வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களைக் கொண்டு இந்தப் பாரம்பரியத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்த சத்திய மூர்த்தியைப் பார்த்து சீறிய முத்து லெக்ஷ்மி ரெட்டி வரை பல வீராங்கனைகளைப் பற்றியும் பேசியாக வேண்டும். அவ்வப்போது இது சம்பந்தமான விஷயங்களைப் சேகரித்து வருகிறேன் என்றாலும், எப்படி எழுதுவது என்று இன்னும் முடிவு செய்யவே முடியவில்லை. 2011-ல் வேலையை ஆரம்பிக்கவாவது முடிந்தால் நன்றாக இருக்கும். எல்லாம் வல்ல இயற்கையோ இறையோ அருள் புரிந்தால்தான் உண்டு.
—
//(மேற்குறிப்பிட்ட செய்தியில் அறிவு ஜீவியாக முயற்சிப்பவர் என்ற க்ளூ சேர்க்கப் பட்டிருப்பது அது ஆசீப் இல்லை என்பதை உணர்த்தவே. 🙂 ))) ) குட் ஜாப் Mr. கௌதம் வாசுதேவ மேனன்.//
:))
திரைப்படத்தின் பெயரென்ன அண்ணி?
நல்ல படியாக புத்த்தகம் உருவாக வாழ்த்துகள் லக்ஷ்மி.
இந்தப் பொறி எப்பொழுதும் உங்கள் மனதில் இருக்கவேண்டும். எத்தனையோ நபர்களுக்குக் கருத்து இருந்தாலும் சொல்லும் விதம் சில பேருக்கே கைவரும் கலை.
ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அதுவும் முத்துலட்சுமி ரெட்டி பற்றி என் மாமியாரே பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் வழியாக இந்தச் சரித்திரம் கிடைத்தால் சிறப்பாக இருக்க்கும்.
//- தேவரடியர் குல வரலாறு. //
1. வருச நாட்டு சமீன் கதை – விகடன் வெளியீடு (ஜூவியில் தொடராக வந்தது)
2. குமுதத்தில் பிரபஞ்சன் எழுதிய ஆயி (கிருஷ்ண தேவராயர் காலத்தில் நடப்பது)
3. வாரமலர் (அல்லது கதைமலரில்) பிரபஞ்சன் எழுதிய ஒரு தொடர் – பெயர் மறந்து விட்டது
ஆகியவை உங்களுக்கு உதவலாம்
சென்ஷி, வம்புல மாட்டி விடவே கேள்வி கேக்குறாப்புல தெரியுது. வேணும்னா தனி மடலில் சொல்றேன். 🙂
வல்லிம்மா, நன்றி.
புருனோ, நன்றி. பிரபஞ்சனின் தொடர் நக்கீரன்ல வந்ததுன்னு நினைக்கறேன். அவரது மானுடம் வெல்லும் நாவலில் கூட ஒரு கோகிலா என்ற தாசி கதாபாத்திரம் விரிவாகப் பேசப்பட்டிருக்கும்.