எனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., முன்பெல்லாம் படித்தால் எதைப் பற்றியும் பேச என் சுற்றுவட்டத்தில் அதிகம் ஆட்கள் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உடனுக்குடன் பாலாவுடன் விவாதித்து விடுவதால் பதிவு போடும் பழக்கம் விட்டுப் போயிற்று என்று தோன்றுகிறது.
இந்த வருடத்தில் இனி முன் போல படிக்கும் புத்தகங்களில் நான்கில் ஒன்றுக்கேனும் விமர்சனப் பதிவு போடுவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதே போல கொஞ்சம் முழு மூச்சாக புனைவு, புனைவற்றவை என ஏதேனும் ஒன்றைப் பற்றி என வாரம் குறைந்தபட்சம் ஒரு பதிவேனும் எழுத வேண்டும். பார்ப்போம்..
அதே போல புது வருடத்தில் திரட்டிகளில் இருந்து விலகி விட்டேன். எனக்கான வாசகர்கள் என்று அதிகமில்லை என்பது தெரிந்தாலும் கூட இந்த போதையிலிருந்து என்றேனும் ஒரு நாள் விலகியே ஆக வேண்டும் என்பதால் இந்த முடிவு. ஏற்கனவே வோர்ட்பிரஸ் என்பதால் மறுமொழியப்பட்ட பட்டியலில் வராது. இனி முகப்புப் பக்கத்திலும் வராது. அது போல ஏற்கனவே மகளிர் திரட்டியிலும் எனது புது பதிவு இல்லை. எனவே ரீடர் மூலம் வருபவர்கள் மட்டுமே எனக்கு இனி சாத்தியம். ஆதலால் வாசகர்களே, உடனடியாக ஆர்.எஸ்.எஸ் மூலம் சப்ஸ்க்ரைப் செய்து விடுங்கள் (க்கும்… அப்படியாவது உன்னைப் படிச்சே ஆகணுமா என்று முணுமுணுப்பது கேட்குது.. விடுங்க பாஸூ, இப்படியாச்சும் சந்தாதாரர்கள் எண்ணிக்கைய கூட்டிக்கலாம்னு ஒரு அல்ப ஆசைதான். :))) )
************
நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி. கொஞ்ச நாட்களாக இவரது ஒரு வினோதப் பழக்கத்தை கவனிக்கத் துவங்கியிருக்கிறேன். எதைப் பற்றிப் பேசினாலும் அதான் எனக்குத் தெரியுமே என்று பதில் சொல்வதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். எந்தப் புத்தகத்தைப் பற்றி நட்பு வட்டத்தில் பேச்சு வந்தாலும் அதை கரைத்துக் குடித்தவர் மாதிரி சில நிமிடங்களுக்குப் பேசுகிறார். ஆரம்பத்திலெல்லாம் சரி, உண்மையிலேயே நிறையப் படிக்கிறார் போலும் என்று சற்றே வியப்புடனும், மரியாதையுடனும் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நானும் படித்த சில புத்தகங்களைப் பற்றியும் அம்மணி கதைக்கத் தொடங்குகையில்தான் உண்மை பிடிபட்டது – வருகின்ற விமர்சனப் பதிவுகள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுதான் அம்மையார் பில்டப்பை கொடுத்து வருகிறார் என்பது. புத்தகம் என்றில்லை, ஆன்மீகம், அரசியல் என எதுவானாலும் இப்படி இரவல் கருத்திலேயே காலம் தள்ளும் ஆட்களை நினைத்தால் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
************
திருவான்மியூரிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி எஸ்.ஆர்.பி டூல்ஸ் வழியாக வண்டியில் வந்து கொண்டிருந்தோம். சென்னைப் பல்கலைக்கழக வளாகம் ஒன்று தரமணியில் உள்ளது. அந்த வளாகத்தின் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது – சேக்கிழார் வளாகம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மக்கள் சேக்கிழார், நக்கீரன் என்று மேலாகத் தெரியும் பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, நெடும்பல்லியத்தனார், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் இது போன்ற பழந்தமிழ்ப் பெயர்களையெல்லாம் ஏன் யாரும் உபயோகிப்பதில்லை?
கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித் தொப்பி நாவலில்- தென்பட்ட ஒரு கட்சிப்பிரமுகர் கதாபாத்திரத்தின் வீட்டுப் பெண் குழந்தையின் பெயர் திராவிட ராணி. ஆனால் நாவல் பேசுவது 47 – 70 காலகட்டத்தை. இப்போது கட்சித் தலைமை குடும்பங்களிலேயே ஆதித்யா என்பது போலெல்லாம் தூய தமிழ்ப் பெயர்கள் புழங்கத் துவங்கியாயிற்று. கனிவமுதனின் பெயரைக் கேட்கும் எல்லோரும் ஒரு முறையாவது இது உச்சரிக்க சற்று சிரமமாக இருப்பதாக சொல்லாமல் இருப்பதில்லை. கேட்கும் போதே எரிச்சலாக இருக்கிறது – தமிழ்ப் பெயர் எப்படி நம்மவர்களுக்கு உச்சரிக்க சிரமமாக இருக்க முடியும் என்று. எல்லாம் மக்களின் மனப்பிராந்திதான்…
******
சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் உணவுக்கு மஸ்த் கலந்தர் என்ற உணவகம் சென்றிருந்தோம். முழுக்க முழுக்க வட இந்திய உணவு வகைகள் – சுத்த சைவம். நியாயமான விலையில், நல்ல தரமான உணவு. சாஸ்திரி நகரில், பெசண்ட் நகர் நோக்கி செல்லும் முக்கிய சாலையில்(கோவை பழமுதிர்ச்சோலை எதிரில்) அமைந்திருக்கும் இந்த உணவகத்தை உடன் வேலை பார்க்கும் வட இந்தியத் தோழி ஒருவர் சொல்லி அறிந்திருந்தேன். பாலாவுடன் சென்ற வாரயிறுதியில் சென்றபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப் போனது. தோழியை உடனே அழைத்து நன்றி சொன்னேன். அந்த ஏரியாவில் வெளியில் சாப்பிட திட்டமிடுவோர் இந்த உணவகத்தையும் யோசிக்கலாம்.
******
சமீபத்தில் ஒரு மாலைப் பொழுதில் முன்னாள் ட்ரைவ் இன்னும், இன்றைய செம்மொழிப் பூங்காவாகவும் திகழும் (போண்டோ) புகழ் பெற்ற இடத்தில் தோழிகள் சிலர் சந்தித்தோம். செம்மொழிப் பூங்கா அருமையாக இருக்கிறது. ஐந்தே ரூபாய் நுழைவுக் கட்டணம். நகரின் மத்தியில்(தூய தமிழில் நடு செண்ட்டர்) இருப்பதால் சுற்றிவர ஏகத்துக்கும் போக்குவரத்து நெருக்கடி. அது ஒன்றுதான் சிக்கல். மற்றபடி பதிவர் சந்திப்பு போன்ற முறைசாரா சந்திப்புகளுக்கு ஏற்ற இடம். காலை முதல் மாலை வரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உள்ளே இருக்கலாம் என்பது காதலர்களுக்கு வசதியான விஷயம். முன்னெல்லாம் கொளுத்தும் வெய்யிலிலும் துப்பட்டா உபயத்துடன் சென்னை கடற்கரையில் ஜோடிகள் காலந்தள்ளுவதுண்டு. அவர்கள் இனி நிழலில் நிம்மதியாக உட்காரது சத் விஷயங்களைப் பற்றிப் பேசலாம். :))))
அதே போல காலை நடைப் பயிற்சிக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தி(ரூ. 150/-) பயன் பெறலாம். காலை 6 முதல் 8 மணி வரை அனுமதியாம். அந்த சுற்று வட்டாரத்திலிருப்பவர் என்றால் உபயோகித்துக் கொள்ளலாம்.
இன்னிக்கு உதிரிப்பூக்கள் அருமையாக இருக்கிறது.
//வருகின்ற விமர்சனப் பதிவுகள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுதான் அம்மையார் பில்டப்பை கொடுத்து வருகிறார் என்பது. புத்தகம் என்றில்லை, ஆன்மீகம், அரசியல் என எதுவானாலும் இப்படி இரவல் கருத்திலேயே காலம் தள்ளும் ஆட்களை நினைத்தால் ஆச்சரியமாகவும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. //
:))
காதலர்களுக்கு வசதியான பூங்கா நன்றி லஷ்மி 🙂
அப்படியே வேளாச்சேரி ஹோட்டல் பத்தியும் எழுதியிருக்கலாம் :))) பாலா சந்தோசப்பட்டிருப்பார் :)))))))))))))))
நன்றி சென்ஷி.
காதலர்களுக்கு வசதியான பூங்கான்னு தகவல் சொன்னா நீங்க ஏன் நன்றி சொல்றீங்க கென்? கையெழுத்துப் போட்ட அன்னிக்கே காதலன் பட்டம் பறி போய் கணவன் பட்டம் வந்து ஒட்டிக்கிச்சுன்றதை மறக்க வேண்டாம். :))))) வேணும்னா புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கும்னு ஒரு வரி சேத்துடறேன், அதுக்கு நன்றி சொல்லிக்குங்க.
நல்லா இருக்குங்க!
மட்டறுத்தலா அல்லது மட்டுறுத்தலா
யாருன்னு சொல்லாமலே புரிஞ்சுக்கிற சென்ஷிக்குப் பாராட்டுகள்.:)
செம்மொழிப் பூங்கா நடை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். கூட்டம் தான் ஏகம்.
அதான் அழகாக் ”கனி”ன்னு கூப்பிடலாமே.இல்லாட்ட அமுதன்னும் சொல்லலாம்.
புத்தாண்டு தீர்மானம் நல்லா இருக்கு.
அருணையடி, நன்றி. மட்டுறுத்தல்-தான் சரின்னு நினைக்கறேன்.
வல்லிம்மா – நன்றி.