படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்


முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் தோன்றலாம். அதே போல் கண் முன்னால் பாழ்பட்டு போகும் குடும்பத்தைப் பார்த்து சிலருக்கு வேதனை மிகலாம். அல்லது சிலருக்கோ “எனக்கு அப்பவே தெரியும், இப்படி தல கால் புரியாம ஆடினா இப்படித்தான் ஆகும்னு” என்ற கொடூரமான திருப்தியாகவும் இருக்கலாம்.

ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசும் ஒரு நாவல். துருக்கித் தொப்பியணிந்து செல்வாக்குடன் நடமாடிய எட்டுக்கல் பதித்த வீட்டின் தலைவர் கேபிஷே தன் தொப்பியைத் துறந்து, தன் பரந்த வழுக்கைத் தலைக்கு சற்றும் பொருந்தாத துண்டைத் தலையில் போர்த்திக் கொண்டு, ஊரை விட்டே செல்வதைப் பற்றி பேசுகிறது.

கவுரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்ட அந்தத் துருக்கித் தொப்பி, தன் நிறமிழந்து வெளிறி, புறக்கணிக்கப் பட்டு, வேம்பின் கிளையில் தூக்கி வீசப் படுகிறது.

எந்த குழந்தைக்கு பெரியம்மை போட்டதால் தன்னால் பால் கொடுக்க முடியாமல் போனதே என்று கதறித் தவித்தாளோ, எந்தக் குழந்தைக்காக மாமியாரோடு பெரும் சண்டையிட்டு பித்துப் பிடித்தவள் போல் தெருவிலிறங்கி நடந்தாளோ அதே ரகமத்துல்லாவைக் கடும் வெறுப்புடனும், குரோதத்துடனும் பெற்ற தாயான நூர்ஜஹானே தூஷிக்க நேர்கிறது.

எட்டுக்கல் பதித்த வீட்டின் மூத்த வேம்பில் கட்டி வைத்து கேபிஷேவால் அடிக்கப்பட்ட மரம் வெட்டி சாம்பானின் பேரனே வந்து அந்த மூத்த வேம்பை வெட்டிச் சாய்க்கிறான்.

பள்ளிக் கூடத்து மணிக்கட்டைக்கு வேலுக்குட்டி ஜோசியனிடம் போய் ஜோசியம் கேட்குமளவு வெகுளியாகவும், ஒட்டைக் கால்பந்தை பாகிஸ்தானாக உருவகித்து உதைத்து தள்ளுமளவு புத்திசாலியாகவும் இருக்கும் ரகமத்துல்லா பதின்ம வயதிலேயே காமக் குரோத அபிலாஷைகளோடு அலைவதும், வயதுக்கு மீறிய பக்குவத்தோடு ரூபன் தன் தாயை வட்டமிடுவதைப் புரிந்து கொள்வதும், அதை அப்பாவுக்குத் தெரிவிக்க தவிப்பதுமாக தன் பால்யத்தை இழப்பதைப் பற்றி பேசுகிறது.
சொந்தப் பேரனுடனேயே ஓரினச் சேர்க்கை கொள்ள விழையும் கேபிஷே, பதின்மத்தின் சிடுக்கான மனநிலையில் பெற்ற தாயையே காமக் கண் கொண்டு பார்க்கும் ரகமத்துல்லா, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ரூபனின் போலியான புகழ்சிகளை நோக்கமுணர்ந்தும் கூட அனுமதிக்கும் நூர்ஜஹான் என மனித மனத்தின் அழுக்கான பக்கங்களைப் பற்றியும் மிக இயல்பாக, யாரையும் கொடூரமாகக் காண்பிக்காமல், துளியும் மிகையாகப் போய்விடாமல் தேவையான விவரணைகளுக்கு மேல் போகாமல் கோட்டோவியமாய் தீட்டிக் கொண்டே போய் விடுகிறார் ஜாகிர் ராஜா.
ரகமத்துல்லா தன் தாத்தாவோடு பழனிக்குப் போகையில் இரவின் மயக்கத்தில் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் சர்ச்சுக்குள்ளிருக்கும் இயேசுவோடு நடத்தும் உரையாடல் ஒரு அற்புதமான கவிதை போல விரிகிறது.

அவனது பாரங்களை இறக்கி வைத்ததும் தேவகுமாரனே அயர்ந்து போய் தன் ஆட்டுக் குட்டியை தொலைத்துவிடும் அளவுக்கு அவை மலை போல் குவிகிறது. பின்னிரவின் பனிப் போர்வைக்குள் இயேசுவுடன் ரகமத்துல்லா பகிர்ந்து கொள்ளும் சோகங்கள் எல்லோருக்கும் தன்னால் இளைப்பாறுதல் தந்துவிட முடியுமென்று உலகுக்கே அறைகூவல் விடுத்த இயேசுவையே மலைக்க வைக்கிறது.

எனக்கு இந்நாவலில் குறைகள் என்று படும் சில உண்டு. தி.மு.கவின் வரலாற்றை எட்டுக்கல் பதித்த வீட்டு வாரிசான அத்தாவுல்லாவின் வரலாற்றோடு சேர்த்துச் சொல்லும் முயற்சி ஒட்டாமல் நிற்கிறது. வரலாற்றுத் தகவல்கள் ஆங்காங்கே தூவினாற்ப் போல துருத்திக் கொண்டு தெரிகிறது. அத்தாவுல்லாவின் கட்சிப் பற்று அவனது சொத்தை அழிப்பதோடு நூர்ஜஹானின் கருகமணி தவிர்த்து நகைகள் அனைத்தையும் முழுங்குவது பற்றிய சித்திரத்தை ஏற்படுத்த திமுகவின் வருட வாரியான வரலாற்றுத் தகவல்கள் தேவையே இல்லை என்றே நம்புகிறேன். வருடம், பெயர் போன்ற விவரங்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது போலவே தென்னாடு ஹோட்டல் பற்றிய விவரணைகளில் அதில் அத்தாவுல்லாவின் பங்கு என்ன என்றே புரியவில்லை.

இது வரை அதிகம் பேசப்பட்டிராத இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்கை முறையும் துளியும் மிகையின்றி சித்தரிக்கப் பட்டிருப்பது இந்த நாவலின் பெரும் பலம். அன்ன முகம்மதுவை பல்லால் மெல்லக் கூடாது. அப்படியே விழுங்க வேண்டும் என்பது போன்ற வினோதமான நம்பிக்கைகளும், மார்க்க கல்யாணம் என்று சொல்லப்படும் சுன்னத் சடங்கின் நடைமுறைகளும் என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாத ஒரு உலகை தன் எழுத்தினால் அழகாக கட்டியமைக்கிறார் ஜாகிர் ராஜா. ஆனால் இவரது வெளிப்படையான எழுத்து முறையே நிச்சயம் மூடிய சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் பல எதிர்ப்புகளை பெற்றுத் தரும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காகவெல்லாம் அஞ்சாமல் நேர்மையான முறையில் தான் மிக நெருக்கமாக இருந்து அவதானித்த ஒரு குடும்பத்தின் கதையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.

கோலம் போடுகையில் பெரிய அளவு புள்ளி வைத்துப் போடும் போது ஒரே கோணத்தில் மொத்தக் கோலத்தையும் போட்டு முடித்துவிட முடியாது. முதலில் புள்ளிகளை அடுக்கிக் கொண்டு பின் ஒவ்வொரு திசையிலிருந்தும் கையெட்டும் வரை போட்டுக் கொண்டே வந்தால் கோலம் விறுவிறுவென முற்றுப் பெற்றுவிடும். குறைந்தது பத்து மார்கழியாவது பார்த்த அக்காக்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பிக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு திசையிலிருந்தும் கோலத்தின் கோடுகள் வந்து இணையும் நேர்த்தி பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த பனிபோர்த்திய விடிகாலைப் பொழுதுகளை நினைவூட்டுவது போலவே வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கதை சொல்லும் பாங்கில் நாவலின் அத்தியாயங்கள் தொகுக்கப் பட்டிருக்கும் விதம் அருமையாய் இருக்கிறது.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் நாஞ்சில் நாடனின் கூற்றுப் படி ‘ஒரு வசமான கை’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இது வரை வாசித்த இவரின் எல்லா எழுத்துக்களும் உள்ளன. எழுதுவதற்கான நியாயம் இருக்கிறதென்று தீர்மானமாக அறிந்து கொண்டபின் எழுதுவதைத் தவிர மனதில் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது என்று தன் முன்னுரையில் சொல்கிறார் ஜாகிர் ராஜா. அவரது எழுத்திற்கான நியாயம் அவரது அனுபவங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது.. அது காயாத வரை இது போன்ற அருமையான பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். எதிர் காலத்தில் மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடியவராகவும் தெரிகிறார்.

பெயர்: துருக்கித் தொப்பி

ஆசிரியர்: கீரனூர் ஜாகிர் ராஜா

பதிப்பகம்: அகல், 342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14

முதல் பதிப்பு: டிசம்பர், 2008

விலை: ரூ. 125.

—-

நூலாசிரியர்: வலைப்பக்கம்


About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது, விமர்சனம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- நாவல்

  1. பகிர்விற்கு நன்றி அண்ணி. கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்களை வாசிக்க ஆவல் மிகுகிறது.

  2. புருனோ says:

    //முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு.//

    சனி ஒரு சுற்று சுற்றி வரும் கணக்கு அது !!

  3. சென்ஷி, புருனோ – நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s