அது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய நாமும் ஒருப்பட்டோமாகி, இந்த விடுதலைக்கு பாடுபட வேண்டும். கூடித் தொழில் செய்யவேண்டும். ஒற்றை ஸ்திரீயால் நடக்கக்கூடிய கார்யத்தைக் காட்டிலும் பத்து ஸ்திரீகள் சேர்ந்து செய்யக் கூடிய கார்யம் எத்தனை மடங்கு அதிக வலிமை கொண்டது, பத்து மடங்கு வலிமையுடையதென்று சிலர் நினைக்கக் கூடும். அது சரியன்று. பதிறாயிரம் மடங்கு அதிக வலிமையுடையதாகும்.
நாம் சேர்ந்து உண்மையோடு விடுதலைக்கு பாடுபட்டால் பிறகு நமக்கு ஆண்மக்களும் உதவி செய்வார்கள்; கடவுளும் உதவி செய்வார். எனவே, இவ்வித விடுதலை எய்தும் பொருட்டு உழைத்து வரும் இந்த சங்கமும், இது போன்ற பிறவும் பெரிய வெற்றி எய்தும்படி அருள் செய்யுமாறு கடவுளின் பாதமலர்களை வேண்டுகிறேன்.
-பாரதியார்
(இது வரை அச்சில் வெளிவராத கையெழுத்துப் பிரதியின் பகுதி)
தமிழ் நாட்டு மாதருக்கு – எனும் நூலில் இருந்து.
நல்ல பகிர்வு.