மகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர யுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான்.
அதே சமயம் கிருபருக்குப் பின் கௌரவ சேனாதிபதியான கர்ணனின் தலைமையில் நடைபெற்ற மூன்றுநாள் யுத்தத்தில் ஒரு சிறு விதிமீறல் கூட கௌரவர் தரப்பில் அனுமதிக்கப்படவில்லை. அதில கர்ணன் மிகவும் கடுமையாகவே இருந்தான். துரியோதனன் பிதாமகர் பீஷ்மரே சிற்சில அதர்மங்களை கண்டுகொள்ளாதுவிட்டாரே, நீ ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்கிறாய் என்று கேட்டதற்கு கர்ணன் சொன்ன பதில் – “நண்பா, பீஷ்மரோ துரோணரோ செய்யும் தவறுகள் முதலில் பெரிதாக பேசப்படமாட்டாது. அப்படியே பேசினாலும் அதை தனிப்பட்ட பீஷ்மரின், துரோணரின் தவறுகளாகவே இந்த உலகம் பார்க்கும். ஆனால் சூத புத்திரனாகிய என் தலைமையில் நடக்கும் தவறுகள் உடனே கவனம்பெறும். கீழானவர்களுக்கு அதிகாரம் தந்தால் இப்படித்தான் அதர்மவழியில் போவார்கள் என்று இந்த உலகம் என் மொத்த இனத்தையும் பழிக்கும். எனவே நான் அதிகப்படி கவனத்துடந்தான் இருந்தாக வேண்டும். கவலைப்படாதே நண்பா. தர்ம யுத்தத்திலேயே நான் உனக்கு வெற்றியை ஈட்டித்தருகிறேன் ” என்றான்.
உண்மையில் கிருஷ்ணனின் குயுக்திகள் இல்லாதிருந்தால், அவன் அப்படி ஒரு வெற்றியை ஈட்டி தன் நண்பனின் காலடியில் சமர்ப்பித்திருக்கவும் கூடும்.
ஒடுக்கப்பட்ட பிரிவினர் யாராயினும் அரசியலோ இல்லை வேறு எந்தத்துறையிலும் உயர்பதவிகளை அடையும்போது அவசியம் மனதில் நிறுத்த வேண்டிய விஷயம் இது.
இந்தக் கதை இப்போது எதற்கு என்றால்….
கனிமொழியின் அரசியல் பிரவேசம் குறித்து நான் முன்பு எழுதிய பதிவு இது. ராப்ரி போன்ற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அரசியல்வாதியாகவோ இல்லை மாயாவதி/ஜெயலலிதா போன்ற அராஜகவாதியாகவோ இல்லாமல் ஒரு தெளிவான நல்ல பெண் அரசியல்வாதியாக வருவார் என்ற என் எதிர்பார்ப்பில் மண். அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல – லாரி லாரியாக மண்.
அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறுமா பெறாதா அல்லது கைதாவாரா மாட்டாரா என்பதல்ல இங்கே முக்கியம். அது அரசியல் சதுரங்கத்தின் ஆட்டத்தைப் பொறுத்த விஷயம். ஆனால் இப்படி பெயரைக் கெடுத்துக்கொண்டதே ஒரு பெரிய பின்னடைவு என்றே எண்ணுகிறேன்.
ஏலம் விடாமல் ஒரே நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை வழங்கிய மன்மோகன் சிங் மீது இல்லாத ஆர்ப்பாட்டம் ஏலம் விடாமல் 2G அலைக்கற்றை வழங்கிய ஆ.ராசா மீது ஏன் என்று குழம்பி போயிருந்தேன் . . . . .. // “நண்பா, பீஷ்மரோ துரோணரோ செய்யும் தவறுகள் முதலில் பெரிதாக பேசப்படமாட்டாது. அப்படியே பேசினாலும் அதை தனிப்பட்ட பீஷ்மரின், துரோணரின் தவறுகளாகவே இந்த உலகம் பார்க்கும். ஆனால் சூத புத்திரனாகிய என் தலைமையில் நடக்கும் தவறுகள் உடனே கவனம்பெறும். கீழானவர்களுக்கு அதிகாரம் தந்தால் இப்படித்தான் அதர்மவழியில் போவார்கள் என்று இந்த உலகம் என் மொத்த இனத்தையும் பழிக்கும். // . . . . . .. இப்ப ஏதோ புரிவது போலிருக்கிறது 🙂 🙂