என்னதான் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்று நினைத்தாலும் பாலா, மாசி போன்றவர்களே இதை நம்புகிறார்கள் போலத் தெரிவதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்(யாருக்கும் அது ரொம்ப அவசியம் இல்லைன்னாலும் கூட 🙂 )
இவர் கருத்துச் சொல்ல மறுப்பதன் காரணமாக இங்கே காட்டுவது கனிமொழி பெண் என்பதால் ஏற்படும் இரக்கத்தை. ஆனால் உண்மையிலேயே அதுதான் காரணமா? ஊழல் என்பதைப் பற்றிய அவரது கருத்துக்களை இந்தக் கட்டுரையில் காணலாம். அதாவது எப்படி ஜாதியோடு புழங்குதல் அவசியம் என்று அவர் நினைக்கிறாரோ அது போலவே ஊழலோடு புழங்குதலும் அவசியம் என்றே நினைக்கிறார். ஒருவரது உடல் ஊனத்தைச் சொல்லி திட்டினால் அது அநாகரீகம் இல்லையா என்று கேட்டால் மலையாளத்தில் அப்படித்தான் பேசுவோம், அந்த பக்குவம் உங்களுக்கு இல்லை என்பார். ஜாதிப் பெயர் சொல்லி ஒருவரை அழைப்பதும், அந்த ஜாதிக்கு ஒரு புத்தி உண்டு என்று சொல்வதும் ஜாதீய வேறுபாடுகளை தொடர வைக்குமே, அது தவறில்லையா என்றால் மலையாள தேச உதாரணமே மீண்டும் வரும். அதே போல ஊழல் தவறில்லையா என்று கேட்டால், மன்னராட்சியில் இருந்தது, அதனால் அது ஒரு தவிர்க்க முடியாத விஷயம். அரசு என்றால் வன்முறையும், ஊழலும் சேர்ந்ததுதான் என்கிறார். ஏற்கனவே ஊழல் பற்றி பெரிய தார்மீகக் கோபம் இல்லாத ஒருவர் இப்போது செத்த பாம்பை அடிப்பது போல் கனிமொழியை திட்டுவதற்கு பதில் முன்னர் தனக்கு துணை நிற்காத பத்திரிக்கைகளுக்கு ஒரு குட்டு வைக்கவும், தனது இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யும் பண்பை காட்டிக் கொள்ளவுமே இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
*********
பையனுக்கு சாப்பாடு கொடுப்பது தினசரி ஒரு பெரிய போராட்டம். அதில் தினமும் இருவரும் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் பயன்படுத்தும் உத்தியை மறுநாளைக்கு நம்பி செயல்படுத்த முடியாது. அதற்குள் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என கனி கண்டுபிடித்திருப்பான். அது ஒரு தொடர் கதை. அதை விடுங்க. நான் சொல்ல வந்த விஷயம் வேறு ஒன்று. அவனுக்கு சாப்பாடு கொடுக்க நிச்சயமாக ஏதேனும் அவனுக்குப் பிடித்த பாடல் தொலைக்காட்சியில் ஓடியே ஆக வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே ஒவ்வொரு வேளை உணவுக்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தொலைக்காட்சி இசையருவில் அல்லது சன் ம்யூசிக் சேனல் மாறி மாறி ஒடியபடி இருப்பது எங்கள் வீட்டு வழக்கம். வீட்டில் பெரியவர்கள் யாருமே ஏன் தங்க விரும்புவதில்லை என்று இப்போது புரிந்திருக்குமே? 🙂
ஆக அப்படி இந்த சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கையில் நான் கவனித்த சில விஷயங்களில் முக்கியமான ஒன்று – வாரத்தில் ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம் மட்டுமே பெப்சி உங்கள் சாய்ஸ் ஒளிபரப்பான காலத்தில் இருந்த அதே க்ரேஸ் நேயர்களுக்கு இன்னமும் குறையவே இல்லை. வருடம் 365 நாளும், நாளின் பெரும்பகுதி நேரத்துக்கும் போன் செய்து பேச முடியும் என்ற அளவுக்கு இந்த நிகழ்சிகள் மலினப்பட்டுப் போன பின்னரும், லைன் கிடைத்தவுடன் அந்தப் பக்கம் இருக்கும் நேயரின் பரவசத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. நான் முன்பெல்லாம் பெப்சி உங்கள் சாய்ஸின் வெற்றிக்கு உமாவின் குரலும், அவரது தோற்றமும், அவரின் மழலை நிறைந்த சமத்காரமான பேச்சுமே முக்கிய காரணம் என்று நினைத்து வந்தேன். இப்போதுதான் புரிகிறது, அந்த நிகழ்ச்சியின் வெற்றி ஒரு சாதாரணன் தன் குரலை தொலைக்காட்சியில் கேட்க முடிவதின் பரவசத்தினாலேயே நிகழ்கிறது என.
உமாவின் நிகழ்ச்சி பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப் பட்டதனால் வெளிவராத ஒரு சிக்கல் இப்போது நேரடி ஒளிபரப்பில் மக்கள் பேசுகையில் வெளிப்படுகிறது. டிவியில் வரும் தன் குரலைத் தானே கேட்கும் ஆர்வத்தில் பேசுபவர்கள் தன் வீட்டு டிவியின் ஒலி அளவை உச்சத்தில் வைக்க, நேரடி ஒளிபரப்பு ஆகையால் எதிரொலி கூடி பார்வையாளருக்கும், தொகுப்பாளருக்கும் அவர்கள் பேசுவது சுத்தமாக காதில் விழாமல் போகிறது. இது ஏதோ ஒரு முறை இருமுறை இல்லை ஒரு மணி நேரம் தொடரும் நிகழ்ச்சியில் 6 பேர் வரை பேசுகிறார்கள் என்றால் குறைந்தது மூன்று பேராவது இப்படிச் செய்கிறார்கள். ஆச்சரியமான விஷயம் அந்த 6ல் 5 பேர் தினசரி அதே நிகழ்ச்சிக்கு அழைத்து அதே தொகுப்பாளர்களோடு பேசுகிற ஆட்கள்தான். அழைப்பாளரின் குரலைக் கேட்டதுமே சொல்லுங்க சந்துரு என்று அன்னியோன்னியமாகப் பேசுகிறார்கள் இந்த தொகுப்பாளர்கள். ஆனாலும் எப்படித்தான் சளைக்காமல் அதே தப்பை திரும்ப செய்யவும், இவர்களும் சளைக்காமல் “உங்க டிவி வால்யூமை கொஞ்சம் ரெட்யூஸ் பண்ணிட்டு பேசுங்க ப்ளீஸ்”என்று செந்தமிழில் கொஞ்சவும் முடிகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கிறது.
*********
டோமெக்ஸ் டாய்லட் க்ளீனருக்கு ஒரு விளம்பரம் சமீப நாட்களில் வருகிறது. வெள்ளை கோட் அணிந்த ஒரு பெண்மணி தன் மகனோடு லிஃப்டில் வருகிறார். உடன் வரும் பெண்மணி ஒரு கூடை நிறைய வீட்டுக்கான சாமான்கள் வைத்திருக்கிறார். அத்தோடு ஏதோ ஒரு ஆசிட் – டாய்லட் க்ளீன் செய்ய. உடனே இந்த வெள்ளைக் கோட் அணிந்த சுகாதார தேவதை அவரை டாமெக்ஸை விட உங்க க்ளீனர் சக்தி வாய்ந்தது என்றால் உங்களுக்கு ஒரு கோடி பரிசு கிடைக்கும் என்று பீலா விட்டுவிட்டு அந்த பெண்மணியின் வீட்டுக்குப் போய் டோமெக்ஸால் அவர் வீட்டு டாய்லட்டை சுத்தம் செய்து காண்பிக்கிறார். உச்சகட்ட கொடுமை இதற்குப் பிறகுதான்…..
டாய்லெட்டில் கிருமிகள் எதுவுமில்லை என்று நிரூபிக்க, தன் கையை டாய்லெட் பீங்கானில் விட்டு தடவி அந்தக் கையை தன் மகனின் கையில் அடித்துக் காண்பிக்கிறார். இதைப் பார்க்கும் குழந்தைகள் இதே போல் செய்யலாம் போலிருக்கு என்று எண்ண மாட்டார்களா? இப்படியெல்லாம் எப்படி யோசிக்க முடிகிறது? எரிச்சலும், அருவெறுப்பும் ஒன்றாக உண்டாகிறது இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில்.
ekalappai does not do pinnoottam.
so sorry lakshmi.
Glad to hear abt Kani.
when he shows these signs of mini aggressions
I am reminded of mini Bala and kutty lakshmi.
enjoy……