இஸ்லாமிய விளிம்புநிலை வாழ்வின் பிரதிமைகள்


படித்ததில் பிடித்தது..

மீன்குகைவாசிகள்

ஆசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா

ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை – 24

பக்:192 | ரூ.140 போன்: 044\2372 2939

எங்கள் ஊரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். ஊரின் நடுவில் கம்பீரமாக

வெண்ணிறச் சுவர்களுடன் எழுந்து நிற்கும் பள்ளிவாசலை என்னவென்று கேட்ட போது என்

அப்பா சொன்னார் ‘‘அது முஸ்லீம்களோட கோவில். நம்ம மாதிரி சிலையோ படமோ வச்சு கும்பிடாம அவங்க நபியோட ஊரான மெக்கா இருக்குற மேற்கு திசையை நோக்கித் தொழுவாங்க. அவங்க ஸ்லோகமெல்லாம் அரபு மொழியில் இருக்கும். தொழுகைக்கான அழைப்பைத்தான் ஐந்து வேளையும் மைக்குல சொல்றாங்க. இந்த கோவிலுக்கு வரமுடியாத

பெண்களெல்லாம் வீட்டுலேர்ந்தே அதகேட்டு தொழுதுப்பாங்க’’ இவ்வளவுதான் இஸ்லாமியர்களின் ஆன்மீக உலகம்பற்றி எனக்கு சிறு வயதில் இருந்த அறிமுகம்.

சற்றே வளர்ந்த பின் நாகூர் சந்தனக்கூடு ஊர்வலம் பற்றி செய்தித்தாளில் படித்தபோது குழப்பம்

கொண்டேன். மறுபடி அப்பாவிடம் தான் போய் நின்றேன். ‘‘முக்கியமான மகான் நாகூர் ஆண்டவர்னு ஒருத்தர். அவர் சமாதிய ஒட்டி கட்டின தர்கா அது. இந்தத் தேர்ல வச்சு எடுத்துட்டுப் போற சந்தனத்தை அவரோட சமாதில பூசுவாங்க’’ என்றார் அப்பா.

அதன் பின்னர் பள்ளியில் எனக்கு வாய்த்த பெரிய நட்பு வட்டத்தில் நிறைய இஸ்லாமியப் பெண்களும் உண்டு. என்றாலும் வாப்பா, உம்மா போன்ற சொல்லாடல்களுக்கு மேல் அவர்களது வாழ்க்கைமுறை குறித்து ஒன்றும் பெரிதாக அறிந்து கொள்ள முடியவில்லை.

மற்ற சமூகங்களைக் குறித்து இலக்கியவெளியில் இருக்கும் பிரதிகளோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய சமூகம் குறித்த பதிவுகள் சொற்பமே. ஜாகிர்ராஜா போன்ற படைப்பாளிகளே மூடுண்ட சமூகமாய் காட்சிதரும் இஸ்லாமிய சமூகத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். குறிப்பாக இஸ்லாம் சமூகத்திற்கு எதிரான கருத்துக்கள் சினிமா உள்ளிட்ட வெகுஜன

ஊடகங்களில் முள்ளாகத் தைக்கும் வேளையில், சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் விஷவித்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்பட்டு வரும் தருணத்தில் அச்சமூகம் தன்னைச் சுற்றியிருக்கும் திரைகளை

விலக்கி எல்லோருடனும் கைகோர்த்து நெருங்கி நிற்பதே சரியான வழிமுறையாக இருக்கும். அதற்கு மிக முக்கியமான பங்களிப்பு இலக்கிய உலகிலிருந்தே கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஹெச்.ஜி.ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா போன்று ஃபத்வாக்களுக்கு அஞ்சாது உண்மையை உரத்துக்கூற முனையும் எழுத்தாளர்களிடமிருந்தே கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் பலப்படுத்துகிறது இந்த மீன்குகை வாசிகள் நாவல்.

முஸ்லிம்கள் என்றால் அன்னியர்கள் என்னும் கற்பிதம் திட்டமிட்டு நம்மவர்களின் மேல்

விதிக்கப்பட்டுள்ளது. அச்சமூகத்தின் உள்ளிருக்கும் மக்களுக்கே அப்படி ஒரு வம்சாவழிப் பெருமிதமுமிருக்கிறது. உண்மையில் தமிழ் முஸ்லிம்கள் எல்லோரும் இங்கே இருந்த தொன்மக்குடிகள்தான். மாலிக்காபூரின் படையெடுப்பை ஒட்டிய இஸ்லாமிய அரசின் தாக்கத்

தாலோ அரேபிய வணிகர்களின் சகவாசத்தாலோ இவர்கள் மதம் மாறியிருக்கலாம். பல முஸ்லீம்

குடும்பங்களை நெருங்கிப்பார்த்தால் தெரியும் -அவர்களில் பலருக்குத் தாய்மொழியே தமிழ்தான்

என்பது. தமிழ்நிலத்தில் வேர்கொண்ட மக்களே அவர்களும் என்பதற்கான நிறைய தடயங்கள் இந்த நாவலில் கிடைக்கின்றன. மிக முக்கியமாக இந்துக்களின் சிறு தெய்வ வழிபாட்டோடு ஒப்பிட்டு நோக்கத் தக்கதான அவர்களின் தர்கா கலாச்சாரம். நம்மில் ஒருவராக வாழ்ந்து மறைந்த நம் முன்னோரையே நம் மக்களில் பலரும் குலதெய்வமாக வழிபட்டு வருவது வழக்கம். மகான்களுக்கு மட்டுமல்ல, வாழ வேண்டிய வயதில் வயிற்றுப் பிள்ளையுடன் அகாலமாக

மரணித்த பெண்ணுக்கும் கூட மீன்குகை வாசிகளில் ஒரு தர்கா எழுகிறது. அப்பெண்ணின் மீது அற்புதங்கள் புனையப்படுகின்றன. ஏழ்மையில் உழலும் மக்களுக்கு எப்போதுமே அற்புதங்களின் தேவை இருக்கிறது. கை சுழட்டலில் கணையாழி வரவழைக்கும் அற்புதங்கள்

எல்லாம்வேண்டாம். நள்ளிரவில் ஒலிக்கும் நெஞ்சையுருக்கும் ஈருசுருக்காரியின் அந்த தாலாட்டுப்

பாடலே அவர்களுக்குப் போதும்.

தனது முதல் நாவலான மீன்காரத் தெருவின் நீட்சியாக இந்த ஐந்தாவது நாவலை எழுதியிருக்கிறார் ஜாகிர்ராஜா. ஒரு தனி நாவலாக எந்த சிக்கலுமின்றி வாசிக்க முடியும் என்ற உறுதியை அவரே முன்னுரையில் தரவும் செய்கிறார். நானும் முதல் நாவலைப் படிக்காமலேயே இதை எந்த சிக்கலுமின்றி வாசிக்க முடிந்தது.

ரமீஜா எனும் பெண் தரகர், கூனன் லியாக் போன்ற கதாபாத்திரங்கள் அவரது முதல் நாவலின்

தொடர்ச்சிகளே. அந்த பாத்திரங்களையும், அவர்களின் பிரச்சனைகளையும் முதல் சில அத்தியாயங்களுக் குள்ளாகவே நிர்ணயித்துவிடும் ஜாகிர்ராஜா புதிய இந்நாவலின் மையச்சரடாக எடுத்துக் கொண்டிருப்பது மதம் மாறினாலும் இஸ்லாத்தில் அங்கீகாரமற்று இருக்கும் தாழ்த்தப்பட்டோரையும், தர்காக்களில் அடக்கமாகி இருக்கும் மகான்களை தரிசிப்பதை

இழித்துப்பேசி கடைசியில் தர்காக்களையே இடிக்க முயற்சிக்கும் அடிப்படை மனோபாவத்தின் மீதான எதிர்ப்பையும்தான். தர்கா கலாச்சாரத்தைப் புறக்கணிக்கும் தவ்ஹீதுகளுக்குப் பெரும் எதிர்

வினையாகவே இந்த நாவல் இயங்குவதாக எனக்குப்படுகிறது.

பங்களாத் தெரு பணக்காரர்கள் வாழும் தெரு. அங்கே பெரும்பாலானவர்களுக்கு மலையாளத்துப்பக்கம் சம்பாத்தியத்துக்கான தொழிலும் சிலருக்கு உபரியாக இன்னொரு குடும்பமும் இருக்கும். மீன்காரத் தெரு ஊருக்கு நடுவிலிருக்கும் ஆலங்குளத்தில் மீன் பிடித்து விற்பதை ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொண்ட தெரு. இரு வேறு துருவம் போன்ற இடங்கள். ஆனால் இருதரப்பு மனிதர்களும் ஒருவரோடு ஒருவர் ஊடாடாமல் வாழவும் முடியாது. ஒரே மதம், ஒரே கடவுள் என்றாலும் இருவரும் சமமா என்றால் எங்கும் போல இங்கும் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

மீன்பிடி குடும்பங்களுக்கும் கீழான நலிவுற்ற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவிதர்கள்,குறவர்கள் என அவர்களோடும் புழங்கித்தான் தீர வேண்டியிருக்கிறது இந்த மீங்காரர்களுக்கு. நாவிதராக இருந்து பின் இஸ்லாம் ஆனவனான சண்முகத்துக்குத் துணையாக மீன்காரத் தெருவின் நைனா நாவலின் இறுதியில் பள்ளிவாசலுக்குள் நுழைய முடிவெடுக்கின்றான். அதற்கும் முன்னரே அவர்களுக்கும் ஆன்மீகத் தேடல் உண்டு என்பதைச் சொல்லும் விதமாக கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த ஈருசுருக்காரி தர்கா தகர்க்கப் படும் செய்தி வருகிறது. நிதர்சனத்தை அவர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார்கள்? வாசகர்கள் எப்படிவேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளும் இடைவெளியுடன் கதை முடிகிறது.

மீன்காரத்தெரு வீட்டின் இருட்டு மூலையில் தஞ்சம் புகுந்த ஆமீனா வறுமையின் காரணமாக பங்களாத் தெருவிலிருக்கும் வேறு ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போகிறாள். அங்கே அவள் எதிர்கொள்ளும் முதலாளியின் மைந்தன் புதுவிதமானவன். கால்கள் முடங்கினாலும் மனதால் சஞ்சரிக்கப் பழகியவன்.

இஸ்லாம் ஹராம் என்று வரையறுக்கும் கலைவடிவங்களை நேசிக்கும் மனம் கொண்டவன்.

குரான் ஓதுகையில் அதன் தமிழ் விளக்க உரையையும் படித்து எல்லாக் காட்சிகளுக்கும் உருவம் தந்து அதை சித்திரக் குரான் என்பதாகப் புனைந்து அலமாரியில் சேகரித்து வைத்திருப்பவன். ஆமீனாவின் மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றும் மருந்தாகவும், அவளுக்கும் கலையுணர்வோடு உலகைப் பார்க்க கற்றுத் தரும் ஆசானாகவும் அமையும் நசீர் மீது ஆமினாவுக்கு மெல்ல மலரும் நேசமும் நாவலில் ஒரு தனிச் சரடாக செல்கிறது.

கலைஉள்ளம் கொண்ட ஒருவன் இறைத் தூதர்களைக் காட்சிப் படுத்துவது எனும் பேராவல்

ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் எதிர்ப்படுவது எனக்குத் தெரிந்து இது இரண்டாவது முறை.

அவருடைய கருத்த லெப்பை நாவலின் மையப்புள்ளியே அதுதான். ஜாகிரின் அகமனது விழையும் ஒரு பெருங்கனவு என்றே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரம் இதற்கு புற உலகின் எதிர்ப்புகள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கக் கூடும் என்ற யதார்த்தமும் திகைக்க வைக்கிறது.

 

இஸ்லாமிய ஆண்கள் எளிதாக தலாக் என்ற சொல்லை மூன்று முறை சொல்லி பெண்களை

விவாகரத்து செய்துவிட முடியும். தொலைபேசியில் கூட அதை எளிதாக நிறைவேற்றலாம். அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு இஸ்லாம் காட்டும் நிவர்த்தி ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? குல்உ எனப்படும் அம்முறையால் பெண்களும் மணவாழ்விலிருந்து விலக்குப் பெறலாம்.

கணவனிடமிருந்து காதலுக்குப் பதில் வன்முறைகளையே தொடர்ந்து பெறும் ஒரு அபலைப் பெண் துணிந்து குல்உ முறையால் கணவனிடமிருந்து வெளியேறி மறுமணம் செய்து கொள்வதைப் பற்றியும் இந்நாவல் விரித்துப் பேசுகிறது.

இந்த நாவலையும் தொடர்ந்தெழுதும் எண்ணமிருப்பதாக ஜாகிர்ராஜா முன்னுரையில் குறிப்பிடுகிறார். எனவே நாவிதனாய் இருந்து இஸ்லாத்துக்கு மாறிய சண்முகத்துக்கு தன்  சினேகிதன் நைனா சொல்வது போல தண்ணியூத்தி வெளுத்த துணி மாத்தி ஜம்முண்டு தொப்பி வச்சுகுட்டு அத்தர் பூசிகிட்டு சுருமா வச்சுகிட்டு தொழுகைக்கிப் போகும் கனவு எவ்வளவு தூரம் பலித்தது என்பதையும் ஆமினா என்னும் பெண்ணின் மறுமலர்ச்சியையும் இதே போன்ற ஒரு அருமையான நாவல் வடிவில் விரைவில் படிக்க முடியும் என்று நம்புகிறேன்.

(புத்தகம் பேசுகிறது ஏப்ரல் 2011 இதழில் வெளியானது.)

 

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in இலக்கியம், படித்ததில் பிடித்தது. Bookmark the permalink.

3 Responses to இஸ்லாமிய விளிம்புநிலை வாழ்வின் பிரதிமைகள்

 1. வெகு சுவாரசியமான நடை.

  பகிர்ந்ததிற்கு நன்றி லக்ஷ்மி. யாராயிருந்தாலும் மனிதர்களுக்கான இன்பது

  ன்பம் ஒன்றுதான்.

 2. Tulsi Gopal says:

  Good one! Thanks Lakshmi

 3. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D நாவல்கள் வாசித்துள்ளீர்களா

  நான் வாசித்தது ஒரு கடலோரக் கிராமத்தின் கதை மட்டுமே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s