அவன் இவன் விமர்சனங்கள் பல படித்தேன் .ஒரு முக்கியமான விஷயத்தை யாரும் அதிகம் பேசவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. படத்தில் எல்லோரும் புகழும் ஒரு விஷயம் விஷாலின் அர்பணிப்புணர்வுடன் கூடிய நடிப்பு –பெண் தன்மையோடு பல இடங்களில் பேசுகிறார். இதன் காரணமாக படத்தில் சொல்லப்படுவது என்ன? இயல்பில் அவர் பெண் தன்மை கொண்டவர் என்றா? இல்லை. அப்படியாயின் அவருக்கு ஒரு ஹீரோயினும், அவருடனான காதலும் வரவாய்ப்பில்லையே. முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர் ஒரு ஸ்த்ரீபார்ட் நடிகர் என்பது தான்.
ஸ்த்ரீபார்ட் என்பது என்ன? அந்த காலத்தில் நாடகத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பெண்கள் தயங்குவார்கள். அதிகமும் நடிகைகள் இல்லாத காலத்தில் குரல் உடையாத சிறுவர்களைப் பெரும்பாலும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பார்கள். இவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வேறு எந்த வகை கதாபாத்திரமும் ஏற்கமாட்டார்கள் அல்லது கொடுக்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்பர்.
சரி,அவன் இவன் படத்தில் மொத்தம் எத்தனை நாடகக் காட்சிகள் வருகின்றன? ஒரு நாடகக் கலைஞனை, அதுவும் ஸ்த்ரீபார்ட் வேடத்துக்கான தன் இயல்பையே மாற்றிக் கொண்டு வாழும் கலைஞனை மையமாகக் கொண்ட கதையில் நாடகக் காட்சிகள் மொத்தமே இரண்டு தான். அதுவும் ஒரு பாட்டில் இரண்டு துண்டு காட்சிகள். அதற்கு முன் ஒத்திகைக்காட்சிகள் இரண்டு. மேடையில் சூர்யா முன்னிலையில் நவரசத்தையும் கசக்கிப்பிழிந்து சாறு எடுப்பதையும் சேர்த்துக் கொண்டாலும் மொத்தம் ஐந்து துணுக்குகள் தான்.
சரி, பரவாயில்லை. படத்தின் மையம் அந்த ஜமீந்தாருக்கும் நாயகர்களுக்குமான பாசப்பிணைப்பைப் பற்றியது என்பதால் காட்சிகளின் எண்ணிக்கையைக் கூடவிட்டு விடலாம்.
அந்தக் காட்சிகளில் விஷால் ஏற்கும் பாத்திரங்கள் என்ன? நாடகக் காட்சிகள் இரண்டிலுமே ஆண்வேடம். ஆம் நண்பர்களே – ஒன்றில்சிவன், இன்னொன்றில் முருகன். ஆண் வேடங்களில் நடிக்க எதற்கு விஷாலின் பாத்திரம் இப்படி படைக்கப்படவேண்டும் என்ற கேள்வி ஒருவருக்குமேவா தோன்றவில்லை? இவ்வளவு பெரியலாஜிக் ஓட்டையுடன் காமெடிப்படம் எடுக்க சுந்தர்.சி போதுமே? பாலா எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.
இந்த லாஜிக் ஓட்டைக்கு மேல் இன்னும் நிறைய குளறுபடிகள். அதிலும் சேது டெம்ப்ளேட்டில் வரும் ஆர்யாவின் காதல் காட்சிகள் கொடுமை. பாலாவின் கதாநாயகிகள் எல்லோருக்கும் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் இருக்கும் போல… பெரும்பாலும் தமிழ் சினிமாவின் எல்லாக் கதாநாயகிகளுக்குமான சாபம் இது. அதிலும் பாலாவின் நாயகிகள் தான் அதில் உச்சம். தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறவன், ஏமாற்றி மிரட்டிப் பணம் பண்ணும் தெருப் பொறுக்கி கம் ப்ராட் வகையறாக்களை எல்லாம் காதலித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
பாலாவின் வழக்கமான குரூரங்கள் இந்த படத்தில் குறைவு தான். அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது. குற்றப்பரம்பரையினரை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் பாலா அவர்களது பின்னணியை, அவர்கள் வாழ்வின் வலியை எங்காவது மறந்தும் பேசியிருக்கிறாரா என்று தேடினால் இல்லை என்பது தான் பதில். போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தால் எச்சரிக்கை செய்ய குடியிருப்பின் வாசலில் ஒரு மணி இருக்கிறதே, அதைத் தவிர்த்து அந்த மக்களைப் பற்றி என்ன காண்பிக்கப்படுகிறது படத்தில்?
அதுசரி, எடுத்துக் கொள்ளும் பின்னணிக்கு கதை நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தமிழில் படம் பார்க்க முடியுமா என்ன? மணிரத்னம் மாதிரியானவங்களையே பார்த்துட்டோம் – பாலாவிடமா பெரிய ஏமாற்றம் வந்து விடப் போகிறது? ஜமீந்தார் திருட்டை குலத்தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் இருந்து இரண்டு பேரை தன் அபிமான புத்திரர்களாக வளர்க்கிறார். அவர்கள் குடும்பத்தில் வந்து உணவருந்துகிறார். தன் பரம்பரைக் கோவிலில் அந்தக் குடும்பத்தை பொங்கலிட அனுமதிக்கிறார். அந்தப் பையன்களில் ஒருவரின் காதலுக்காக தன்னை ஏமாற்றிய பங்காளிக்கே தன் சொத்துக்களை எல்லாம் விட்டுக் கொடுக்கிறார்… சமர சசன் மார்க்க சொர்க்க வாழ்கைதான் போங்கள். இதில் எல்லாம் லாஜிக் தேடினால் நாந்தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
சரி, படத்தில் உருப்படியான ஒரே ஒரு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன் – அந்த ஜமீந்தாராக வரும் பெரியவர் ஜி.எம்.குமாரின்நடிப்பு. அற்புதமாக நடித்திருக்கிறார். என்னைக் கேட்டால் படத்தின் உண்மையான மையக் கதாபாத்திரம் இவர் தான். கலக்கி எடுத்திருக்கிறார்.
மற்றபடி படம் ஒரு பாலாவின் டெம்ப்ளேட் குப்பை. இன்னும் ரெண்டு படம் இதே ரீதியில் எடுத்தால் போதும் பாலா ரிட்டையர் ஆக. சீக்கிரமா வேறு எதாவது புதுசா பண்ணுங்க சார். தாங்கமுடியலை.
—