ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் பாடல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் மீண்டும் மனதில் பெரியாழ்வாரின் இந்த வரிகள்தான் வந்து மோதின.
ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’
என்ன ஒரு சோகம்… இதைப் படித்த போது ஜெயஸ்ரீயின் மரத்தடி கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் பாசுரத்தில் ஆரம்பித்து மகளைத் திருமணம் செய்து கொடுத்த தந்தையின் மனவலி என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் சரியாக அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
அம்மா இறந்தபோது கலங்காத அப்பா, ராம-லக்ஷ்மணரைப் போல என்று ஊரே மெச்சும்படியான உயிருக்குயிரான அண்ணன் 40 வயதில் காலமான போது கலங்காத அப்பா, புயலில் பயிர் அழிந்தாலும், தண்ணீரில்லாமல் காய்ந்தாலும் என்று எந்ந்த சூழலிலும் கலங்காத அப்பா திருமணம் முடிந்து வேனில் ஏறிய போது “ஆனானப்பட்ட கண்வ மகரிஷி கூட வளத்த பொண்ணு பிரிஞ்சப்ப கலங்கிட்டாராம். நாமெல்லாம் சாதாரண மனுஷங்கதானே ” என்று தழுதழுத்தது நினைவு வந்தது.
ஆனால் போன் பேசி முடிக்கையில் ஒரு விஷயம் உரைத்தது. எப்படிம்மா இருக்கே என்ற விசாரிப்பு கூட இல்லாமல் நேராக கனியைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். பிறகு யோசித்துப் பார்த்ததில் கனி பிறந்தது முதலே அதுதான் நடைமுறை என்பது புரிந்தது.
அன்புதான் எவ்ளவு சுலபமாக மடைமாறி விடுகிறது. :))) :((((
*********
ரிலையன்ஸ் ம்யூச்சுவல் ஃபண்டில் சிப் மூலம் கொஞ்சம் முதலீடு செய்திருந்தோம். தேவை கருதி அதைப் பணமாக்க ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். இத்தனைக்கும் எந்த சேமிப்புக் கணக்கில் இருந்து மாதாமாதம் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்களோ அதே அக்கவுண்டில் பணத்தைப் போட்டுவிடுமாறுதான் கேட்டிருந்தேன். ஒரு வாரத்தில் உங்கள் கையெழுத்து அப்ளிகேஷனில் இருப்பதில் இருந்து வேறுபடுகிறது. எனவே புது விண்ணப்பத்தில் உங்கள் பேங்கரின் அட்டஸ்டேஷன் பெற்று எடுத்துக் கொண்டு ஒரு ஒரிஜினல் ஐடி ப்ரூஃபுடன் அருகிலுள்ள எங்கள் நிறுவனத்திற்கு நேரில் வரவும் என்று ஒரு கடிதம். பேங்க் போய் அட்டெஸ்டேஷன் வாங்க ஒரு நாள், இவங்க அலுவலகத்துக்குப் போய் நாந்தான் நான் அப்படின்னு துண்டு போட்டு தாண்ட ஒரு நாள்னு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு சுத்த யாரால முடியும்? கஸ்டமர் கேர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விளக்கினால் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல நீங்கள் நேரில் வந்தால்தான் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்போம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. ஒரு கட்டத்தில் ரிலையன்ஸில் முதலீடு செய்வது என்பது நான் செய்த படு முட்டாள்தனமான முடிவு என்று புரிகிறது. இனி அந்தத் தவறை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்றெல்லாம் நான் கத்த, பிறகு பெரிய மனது செய்து ஆன்லைனில் ஐடி ஜெனரேட் செய்ய சில வழிமுறைகளைச் சொன்னார். இன்றிலிருந்து ஆறாவது நாள் உங்களால் ஆன்லைனில் லாக் இன் செய்ய முடியும். அதிலேயே ரிடெம்ஷனும் செய்து கொள்ளுங்கள் என்றார். சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டால், நேற்று அதே நிறுவனத்திடமிருந்து ஒரு போன். வெரிஃபிகேஷன் கால் என்றார்கள். இன்னும் ஆறு நாள் ஆகும் என்றும் சொன்னார். தலை சுற்றுகிறது. அமெரிக்க விசா ரேஞ்சுக்கு இவர்களின் வெரிஃபிகேஷன் அழும்பு தாங்க முடியாமல் போகிறது. எரிச்சலாக இருக்கிறது. இனி வங்கி சேமிப்புக் கணக்குகள், ஆர்டி என்று சுலபமான சிக்கலில்லாத முதலீடுகளையே தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறேன். 😦
***********
மரண தண்டனை என்பது முழுக்க முழுக்க ஒரு காட்டுமிராண்டித் தனமான சிந்தனையே. ஒரு நாகரீக சமூகத்தில் சட்டம் என்பது தண்டனையை செய்த தவறை உணர வைக்கும் ஒரு விஷயமாகக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி கண்ணுக்கு கண் என்பது போல் கொலை செய்வதை நியாயப்படுத்தக் கூடியதாக இருக்க கூடாது. ஒரு வேளை திருந்தவே திருந்தாத குற்றவாளி என்றால் கூட சாகும் வரை சிறையிலேயே இருக்கும் வண்ணம் தண்டனை அளிக்கலாமே ஒழிய எந்த உயிரையும் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இருக்க கூடாது. இப்போது ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனை அனேகமாக உறுதி செய்யப்பட்டிருப்பது மிகக் கொடுமையானது.
ஆனால் இதில் இன உணர்வைத் தூண்டுகிறேன் பேர்வழி என்று சிலர் அர்த்தமற்ற விதண்டாவாதங்களை முன் வைப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்களின் தரப்பை நீர்த்துப் போக செய்கிறார்கள். மற்றவர்களிடம் போராடி அல்ல அவர்களுக்கும் இந்த தண்டனை முறை தவறு என்பதை உணர்த்தியே நாம் அதை நிறுத்த வேண்டும். சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டுமல்ல நாளை அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் கூட இந்தக் கொடூரம் நடக்கக் கூடாது. எனவே தமிழர் Vs மற்றவர்கள் என்று இந்த பிரச்சனையைக் குறுக்காமல் மனிதாபிமானமுள்ள அனைவரையும் அணி திரட்டி, நீதி பெற போராடுவதே சரியான அணுகு முறையாக இருக்கும்.
இந்தக் கட்டுரை தெளிவாக வாதங்களை முன்வைக்கிறது. http://www.eegarai.net/t67225-topic
வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்