உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012


கலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா டீச்சர் நடனம் கற்றுத் தருவார். விழாவன்று ரெஜினா டீச்சரும், செல்வராஜ் சாரும் மைக்கில் பாடல்களைப் பாட நாங்கள் மேடையில் ஆடுவோம். நாடகங்கள் என்றால் முழுப் பொறுப்பும் கலைச்செல்வன் சார்தான். கவிதைப் புத்தகங்கள் எழுதி வெளியிடுதல், திருக்குறள் மன்றங்கள் என்று நிறைய இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்.

நேற்று அப்பா தொலைபேசியில் அழைத்து புதிய தலைமுறை பத்திரிக்கைல நீ எதுனா எழுதியிருக்கயாம்மா என்று கேட்டார். ஆச்சரியத்துடன் ஆமாப்பா, நீங்கதான் புத்தகம்லாம் படிக்கறதில்லையேன்னு சொல்லலை. உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டேன்.

காலைல கலைச்செல்வன் கால் பண்ணி சார், நம்ம லக்ஷ்மி எழுதின கட்டுரை புதிய தலைமுறைல வந்திருக்கு. ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிருங்கன்னு சொன்னார்மா என்றார்.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கினா மாதிரி மகிழ்வா இருக்கு. புதிய தலைமுறை இதழுக்கு நன்றி.

*******

நண்பன் படம் பார்த்தோம். நான் இதன் இந்தி வெர்சன் பார்க்கவில்லையென்பதால் எந்த ஒப்பீடும், உறுத்தல்களும் இல்லாமல் படம் பார்த்தேன். அதனாலோ என்னவோ ரொம்பவே பிடித்தது. ஷங்கரின் வழக்கமான அரைத்த மாவான ராபின் ஹூட் கதையல்லாமல் ஒரு நல்ல கதை. ரீ மேக்தான் என்றாலும் கூட அதிலும் ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தை தேர்ந்தெடுத்த தைரியத்திற்கே ஷங்கரை பாராட்டலாம்.

எனக்கு படத்தில் பிடித்த அம்சங்கள்:

1. பஞ்ச் டயலாக்குகள், ஒப்பனிங் சாங்க், ஃபைட் என்று எதுவுமே இல்லாத ஒரு மிகச்சாதாரண படத்தில் நடிக்கும் தைரியம் இத்தனை வருடங்களுக்குப் பின்னாவது விஜய்க்கு வந்திருப்பது பாராட்டப் பட வேண்டிய முக்கிய விஷயம்.

2. ஜீவாவின் அருமையான நடிப்பு. அதிலும் அவர் தனது தற்கொலை முயற்சிக்குப் பின் தைரியமும், முதிர்ச்சியும் பெற்றுவிட்டதை பாடி லாங்குவேஜ் மூலமே வெளிப்படுத்துவது அபாரம்.

3. சத்யனின் நடிப்பு – பள்ளி, கல்லூரிகளில் அநேகமாய் எல்லோருமே இது போல ஒரு கேரக்டரை சந்தித்திருப்போம். ஒவ்வொருவருக்கும் இது யாரையோ நினைவு படுத்தும் கேரக்டராகவே இருக்கும். எனக்கு இளநிலை வகுப்பில் என்னுடன் படித்த ஒரு பெண்ணை நினைவு படுத்தியது. பிரமாதப் படுத்தியிருக்கிறார் சத்தியன்.

4. ஒரு பாடல் காட்சியில் தன் படங்களைத் தானே பகடி செய்து கொள்ளும் ஷங்கரின் துணிவு. க்ளாப் பலகையில் ஃபாரீன் சாங்க், ராஜா சாங்க், மாடர்ன் சாங்க், குத்துப் பாட்டு என எழுதுவதும், ஷூட்டிங்க் ஸ்பாட்டையும் காட்சிப் படுத்துவதுமாக நல்ல முயற்சி.

5. கல்வி முறையின் மீதான விமர்சனங்கள் சரியான காட்சியமைப்போடு, தெளிவாக பட்டியலிடப் பட்டிருக்கிறது. பிறந்தவுடனேயே வெங்கட்ராமகிருஷ்ணன், பி.ஈ என்று பெயர் சூட்டும் பெற்றோர்கள் ஆகட்டும், மனப்பாடம் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் ஆகட்டும், தமிழ் மீடியத்திலிருந்து இங்கிலீஷ் மீடியத்திற்குள் நுழைவதில் உள்ள சிக்கல்கள் என அநேகமாய் எல்லா பிரச்சனைகளையும் தீவிரமாக இல்லையெனினும் தொட்டுக் காட்டவாவது செய்திருக்கிறது இப்படம்.

6. கற்பிப்பு/கற்பழிப்பு, கொள்கை/கொங்கை போன்ற வார்த்தை விளையாட்டுகள் மூலம் சிரிக்க வைக்கும் ஐந்து நிமிடக் காட்சி கலக்கல்.

7.  ஸ்ரீகாந்த் தனது கனவை சொன்னதும், முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டுப் பின் இந்த லேப்டாப்பை கொடுத்துவிட்டு உனக்கு ஒரு காமிரா வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் அப்பா கேரக்டர் – நெகிழ வைக்கிறது.

8. அதே போல வசந்த் & கோ வாரிசான விஜய் வரும் காட்சிகள் ரொம்ப இயல்பாகவும், நெகிழ வைப்பதாகவும் இருக்கிறது. அவரும் சரி, அவரது தந்தையாக வரும் ராமுவும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.

குறைகள்:

1. இலியானா.

2. விஜய், சத்யராஜ் என அனைவருமே வேறு விதமாய் நடிப்பதாக நினைத்து செய்யும் சில சேஷ்டைகள் சகிக்கவில்லை. விஜய் எப்போதும் காலால் பாலை உதைப்பது போன்ற பாவனையில் தத்தித் தத்தி நடப்பதும், எச்சில் தெறிக்க சத்யராஜ் பேசுவதும் தாங்கவில்லை.

3. இந்திப் படத்தில் வந்தது என்பதற்காக ஏழ்மையான ஜீவா வீட்டிலும் சப்பாத்தி பரிமாறுவதும், மூன்று ரூபாய்க்கு கோதுமை கிடைப்பதை அதன் காரணமாகச் சொல்வதும். ஏன், அதே மூணு ரூபாய்க்குத்தானே ரேஷனில் அரிசியும் கிடைக்கிறது? சப்பாத்திக்கு பதில் சிம்பிளாக தோசை என்று சொல்லியிருந்தால் என்ன குறைந்து விடும் என்று புரியவில்லை. இப்படியான அபத்தங்கள் படம் நெடுக உண்டு.

இலியானா கல்யாணக் கோலத்தில் டிசைனர் புடவையும், ஃபேஷன் ஜுவல்லரியுமாக வருவது என்ன லாஜிக்கோ புரியவில்லை.

அதே போல் ஏழை கிராமத்து இளைஞனா வசந்த் & கோ விஜய்- சோகத்தில் கிடார் வைத்துக் கொண்டு பாடுவதும் துளியும் நம்பும் படியாக இல்லை. பாடுவதும் முழுக்க வெஸ்டர்ன் ஸ்டைலில். ஈயடிச்சான் காப்பி என்பது இதுதான் போல.

4. என் வரையில் படத்தில் ஒரு பாட்டு கூட தேறவில்லை. என் ப்ரெண்டைப் போல யாரு மச்சான் பாடல் மட்டுமே தேவலாம் ரகம் – அதுவும் கூட ஏர்டெல்லின் ஓவ்வொரு ப்ரண்டும் தேவை மச்சான் பாட்டை நினைவு படுத்துகிறது.

5. ஷங்கரின் படத்தில் வரும் கருப்புப் பெண்கள் எல்லோருமே ஏன் இவ்வளவு பயங்கரமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை. பொதுவாக கருப்பாக இருப்பதும், அழகில்லாமல் இருப்பது வேறு. எப்போதும் ஷங்கர் அழகின்மை என்பதை கருப்பு என்பதாகவே காட்டுவதும், அதற்காக கூடுதலான கருப்பு பூசுவதும் உண்மையில் அவரது நோய்க்கூறு மனநிலையையே காட்டுகிறது. ஜீவாவின் அக்கா, இலியானா வீட்டு பணிப்பெண் என அங்கவை சங்கவைகள் இதிலும் தொடர்கிறார்கள். ஷங்கரை சக்ரா கோல்ட் டீ குடிக்க சொல்லுங்க – அப்படியாவது மனசு விசாலமாகுதான்னு பாக்கலாம்.

குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடுதல் என்கிற அடிப்படையில் எனக்குப் இப்படம் பிடித்தே இருக்கிறது..

***********

 

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to உதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012

  1. Bruno சொல்கிறார்:

    Good review about Nanban

  2. நிர்மல் சொல்கிறார்:

    நீங்கள் பாபநாசம் வித்யா பாடசாலையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s