திருப்பதி – ஓர் அனுபவம்


கடந்த நான்கு வருட திருமண வாழ்வில் (அதற்கு முந்தைய காதல்/நட்பு வாழ்வையும் தனியாகச் சேர்த்தாலும் கூட) அதிக பட்சமாய் நான் பாலாவிடம் திட்டு வாங்கியது முந்தாநாள்தான். இதோ இருக்கும் திருப்பதிக்கு ஏழு மணி நேரம் கார் ஓட்டிச்சென்ற டிரைவர் முதல் ஆரம்பித்தது பிரச்சனை. (பூந்தமல்லி- திருவள்ளூர்- திருத்தணி வழியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வருடத்திற்கு இந்த பாதையை யாரும் பயன்படுத்தாதீர்) மூணரை மணி நேரம் கூண்டில் மாட்டி சித்ரவதை பட்டு கண்ணனுக்கு மொட்டை அடித்தோம். ‘முடி நிக்குபாவருக்கு பணம் கொடுக்காதீர்கள்’ என்று செந்தமிழில் கொட்டை எழுத்தில் தேவஸ்தானம் எழுதி வைத்திருந்தும் கூட டோக்கனையும், பிளேடையும் தொடுவதற்கே மொய் வைத்தே ஆக வேண்டும் என்ற எழுதாவிதியையே மதிக்க வேண்டியிருந்தது. எழுதிப் படிக்கும் எந்த இலக்கியத்தையும் விட எழுதாக் கிளவியான வேதம்தானே நம்ம மரபில் உயர்வானது? :))) மொட்டை அடித்தவர், கூண்டை திறந்து விட்டவர், மொட்டை அடித்ததும் வெந்நீர் எடுத்து ஊற்றியவர், பிரசாதம் கொடுத்தவர், ரூம் காலி செய்யும் போது ரிசப்ஷனில் இருந்தவர் என சகலரும் தலையைச் சொறிந்து கை நீட்டிய போதெல்லாம் கூட சகித்துக் கொள்ள முடிந்தது. ரூமிற்காக கட்டிய காப்புத் தொகையை திருப்பித் தர ஆந்திரா வங்கி ஆரம்பித்திருக்கும் கவுண்டரிலிருப்பவரும் கை நீட்டிய போது நொந்து விட்டோம் – :(((((

நீலச்சட்டை போட்ட (தேவஸ்தான ஊழியர்களில் ஒரு பிரிவினருக்கு இப்படி ஒரு சீருடை போல) ஒரு மனவாடு ஒரு சின்ன பொட்டலத்தை கொண்டு வந்து எங்கள் கையில் வைத்து அழுத்தி தேவுடு பிரசாதமு என்று என்னவோ சுந்தரத் தெலுங்கில் பொரிந்து கொட்டினார். உள்ளே அட்சதை இருப்பது தெரிந்தது. சும்மா வெறும் பம்மாத்து என்று நன்றாகப் புரிந்தாலும் முக தாட்சண்யம் காரணமாக ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினால் அது அவருக்கு பெரிய அவமானமாம் – எது மானம், எது அவமானம் என்று பெரிய குழப்பமே வந்துவிட்டது எனக்கு. எப்படியோ அவரிடமிருந்து தப்பி கூட்டத்தில் நசுங்கி, ஒருசில நிமிடங்கள் வேங்கடவனை தரிசித்து வெளியே வந்து விழுந்தோம்.

எங்கெங்கிலும் தேவஸ்தானம் ஆர்.ஓ தண்ணீர் குழாய்கள் போட்டிருக்கிறார்கள். 50 அடி சுற்றுவட்டாரத்தில் ஒரு இலவச குளியலறை/கழிப்பறை உண்டு – நல்ல தண்ணீர் வசதியுடன். இலவச உணவு உண்டு. இலவச தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கு கண்டிப்பாக இலவச உணவு, நடுவில் பால் எல்லாம் உண்டு. எல்லா தரத்திலும், எல்லா விலையிலும் உணவகங்களும், தங்குமிடங்களும் உண்டு. உண்மையிலேயே நிர்வாகம் மிக அற்புதமான கட்டமைப்புகளை செய்திருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்தும் ஆட்கள்தான் பிய்த்துப் பிடுங்குகிறார்கள். பணம் கேட்பதைக் கூட சகித்துக் கொள்ள முடிகிறது – ஆனால் குறைந்த பட்ச விலை ஒன்று வைத்து அதற்கு குறைந்தால் நம்மை தூசாய் மதிக்கும் மனோபாவத்தைத்தான் தாங்கவே முடியவில்லை. விடுதலை இதழ்களில் குறைந்தபட்ச நன்கொடை என்று போடுவதைப் போல திருமலை ஊழியர்கள் குறைந்த பட்ச லஞ்சத் தொகையை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள். பேசாமல் தேவஸ்தானமே இதையும் போர்டில் எழுதிப் போட்டுவிட்டால் நிம்மதியாகப் போகும்.

கைக்குழந்தையோடு வரும் பெண்கள் கூட குழந்தையை மற்றவரிடம் தந்து விட்டு கம்பியைத் தாண்டி குதித்து பின் குழந்தையை இடைவெளி வழியாக லாவகமாக தூக்கிக் கொள்கிறார்கள். ஒலிம்பிக்கில் க்யூவை உடைப்பதற்கு ஒரு போட்டி வைத்தால் நம்மவர்கள் கோல்ட் மெடலை நிச்சயம் தட்டி விடுவார்கள்.  க்யூ என்றால் அது உடைப்பதற்கானது என்று முடிவு செய்து கொண்டிருக்கும் கும்பல் அராஜகத்தின் முன் கையாலாகாமல் பார்த்துக் கொண்டு நிற்கத்தான் வேண்டியிருந்தது. சாமி கும்பிட வந்தவங்களே ஒழுக்கம்னா கிலோ என்ன விலைன்னு கேக்கறாங்களே, இதையெல்லாம் உங்க சாமி கேக்காதா என்ற பாலாவின் ஏளனமான கேள்விகளையும், லஞ்சம் கொடுக்க நேரிடும் போதெல்லாம் வீசிய உக்கிரமான முறைப்புகளையும் சமாளித்து வீடு வந்து சேர்ந்தேன்.

Advertisements

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம் and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to திருப்பதி – ஓர் அனுபவம்

 1. Nataaj சொல்கிறார்:

  லக்‌ஷ்மி..இந்தியா வர்றேன்..திருப்பதி போகனும்னு ஆசை, ஆனா குஷி தாங்குவாளான்னு தெரியல..இந்த கூண்டு என்பெதென்ன? ரொம்ப நெருக்கியடிக்குமா,மூச்சு முட்டுமா? நெருக்கியடிக்கும் கூட்டத்தில் ரெஸ்ட்ரூம் போகனும்னா வழியிருக்கா?

  • நட்ராஜ், திங்கள் காலை போனால் கூட்டம் இருக்காது என்று சொல்கிறார்கள். அத்தோடு என்.ஆர்.ஐ களுக்கு தனி க்யூ இருப்பதாகவும் கேள்வி. ஆன்லைனில் தங்குமிடம், ஏதேனும் ஒரு சேவை(அரிசி சேவை இல்ல சுப்ரபாத சேவை, கல்யாணோத்சவம் போன்ற ஏதேனுமொன்று 🙂 ) போன்றவை புக் செய்து கொண்டால் கொஞ்சம் எளிது.

 2. உங்கள் தளத்திற்கு முதல வருகை.
  இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

 3. துளசி கோபால் சொல்கிறார்:

  //எப்படியோ அவரிடமிருந்து தப்பி கூட்டத்தில் நசுங்கி, ஒருசில நிமிடங்கள் வேங்கடவனை தரிசித்து வெளியே வந்து விழுந்தோம்.//

  ஒரு சில நிமிடங்களா!!!!!!!!!!!!!

  ஆஹா…….

  அதிகபட்சம் எனக்கு ரெண்டே விநாடிகள்தான்:(

 4. sivaparkavi சொல்கிறார்:

  அப்படி.. இப்படி எப்படி இருந்தாலும், அந்த பணக்கார சாமியை பார்த்துத்தான் தீருவேன் என கும்பல் அம்முவதே …. ஒழுக்ககேட்டிற்கு காரணம்…

  சிவபார்க்கவி
  http://sivaparkavi.wordpress.com/

  • Madhumitha சொல்கிறார்:

   ///விடுதலை இதழ்களில் குறைந்தபட்ச நன்கொடை என்று போடுவதைப் போல திருமலை ஊழியர்கள் குறைந்த பட்ச லஞ்சத் தொகையை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள். பேசாமல் தேவஸ்தானமே இதையும் போர்டில் போர்டில் எழுதிப் போட்டுவிட்டால் நிம்மதியாகப் போகும். ///

   நல்ல ஆலோசனை:)

   கனிக்கு முடி இறக்கியாச்ச்சா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s