ஏதேதோ சாமான்களை இறைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கனி. எந்த வேலையின் போதும் எதையேனும் பாடியபடி இருப்பது அவனது சமீப காலத்துப் பழக்கம். குறையொன்றுமில்லை கண்ணா பாடலுடன் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ”மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை” என்ற வரியைப் பாடும் போது கருணைக் கடயன்னை என்று பாடினான். நான் கவனித்தாலும் சரி, மழலைதானே என்று பேசாமல் இருந்தேன். சட்டென பாடுவதை நிறுத்தி விட்டு மீண்டும் மலையப்பா உன் மார்பில் என்று ஆரம்பித்தான். இந்த முறை கருணைக் கடலென்னை ( என் காதில் கடலெண்ணெய்னு விழுந்தது) என்றான். பிறகு மீண்டும் முயற்சித்து மூன்றாவது முறை சரியாக கடல் அன்னை என்று பாடிய பின்புதான் அடுத்த வரிக்கு நகர்ந்தான். Perfectionist(செம்மையாளர்னு சொல்லலாமோ) என்பதை ஒவ்வொரு செய்கையிலும் உணர்த்தியபடியே இருக்கிறான்.
—
இன்று காலையில் கரும்பலகையும்,சாக்பீஸுமாக பாலா கனியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். எழுத்துக்கள், வடிவங்கள் என்று எல்லாவற்றையும் எழுதப் பழகுவதில் ஆரம்ப நிலையிருக்கிறார் கனி. சர்க்கிள் போடு என்றார் பாலா. கனியும் வட்டம் போன்ற ஒன்றைப் வரைந்தார். வெரி குட் என்றார் பாலா. கனியோ சற்றே சுண்டிய முகத்துடன் அவரிடம் நிமிர்ந்து “ஒவல்” என்று சொல்லிவிட்டு வெகுதீவிரமாய் மீண்டும் ஒரு வட்டம் வரைய முயற்சித்தார். பிறகுதான் புரிந்தது முதல் வட்டம் சற்றே நீண்டு போயிருந்தது என்பது. இரண்டாவது வட்டம் கோடுகள் சற்று முன் பின்னாக இருந்தபோதும் வட்டமாகவே இருந்தது. இப்போது நிமிர்ந்து சிரிப்போடு சொன்னார் “சர்க்கிள்”..
—-
கனிக்கு அவனது ஆசிரியை இப்போது விலங்குகளின் படங்களைக் காட்டி பெயர்களைச் சொல்லித்தர ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். வீட்டில் விலங்குகளின் படம் கொண்ட ஒரு கலரிங் புத்தகம் இருந்தது. விலங்குகளின் படத்தை பெயருடன் போட்டு அவுட்லைனுக்குள் கொடுக்க வேண்டிய நிறமும் எழுதப் பட்டிருந்தது. அதை எடுத்து விரித்து வைத்து ஒவ்வொன்றாய் காட்டி இதென்ன, இதென்ன என்று வரிசையாக கேட்டு வந்தேன். அனேகமாக எல்லாவற்றையும் சரியாகச் சொன்னான். ஒட்டகத்தை காட்டியபோது brown என்றான். முதலில் எனக்குப் புரியவில்லை. ஒட்டகத்தின் உடலுக்குள் என்ன நிறம் தரவேண்டும் என்று குறிப்பிட brown என்று போட்டிருந்தார்கள். Camel தெரியவில்லை என்று சொல்லாமல் தெரிந்த நிறத்தை படித்து சமாளித்திருக்கிறான் என்று பிறகுதான் புரிபட்டது.
அழகு
:)))
தொடர் போல எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
அனைவருக்கும் நன்றி.
ரசிக்க வைத்தது…