ஷங்கரம் சிவ ஷங்கரம்!”


நன்றி: ஆனந்த விகடன்
கதிர்பாரதி, படங்கள்: ப.சரவணக்குமார்
 

சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ஒரு பஸில் குயின்!

மோனலிசா ஓவியத்தையும் ஈஃபிள் டவர் ஓவியத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸில் துண்டுகளாக்கி ஐஸ்வர்யா கையில் கொடுத்தால், சில மணி நேரங்களில் அந்தத் தனித்தனி துண்டுகளை அடுக்கி ஒரிஜினல் ஓவியத்தை கண் முன் கொண்டுவந்துவிடுகிறார். இத்தனைக்கும் அந்த ஓவியங்களை அவர் முன்-பின் பார்த்திருக்க வில்லை. தன்னிடம் அளிக்கப்பட்ட பஸில் துண்டுகளில் மோனலிசா, ஈஃபிள் டவர் ஓவியங்கள்தான் ஒளிந்திருக்கின்றன என்ற ரகசியமும் அவருக்குத் தெரியாது!

‘அமெரிக்கப் பள்ளிகளில் இந்த பஸில் விளையாட்டை ஒரு பாடமாகவே வைத்திருக் கிறார்களே… பள்ளிக் குழந்தைகள் செய்யும்போது 32 வயது ஐஸ்வர்யாவால் அதைச் செய்ய முடியாதா..?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.  ஐஸ்வர்யாவின் உடலுக்குத்தான் 32 வயது; மனசுக்கு மூன்று வயது! ஆம்… ஐஸ்வர்யா ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை. இப்போது செய்தி அது அல்ல!

‘பீச்… பீட்டர் சார்… லாலி பாப்!’ என்ற குழந்தைகள் நாவலில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின். ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை ஒன்றின் திறமை களையும், அவர்களின் உலகையும் விறுவிறுவென விவரிக்கும் முதல் தமிழ் நாவல் இது. இதன் ஆசிரியர் லெஷ்மி மோகன். இவர்தான் ஐஸ்வர்யாவின் மியூசிக் தெரப்பிஸ்ட்டும்கூட. ஐஸ்வர்யாவின் கதை சொல்லத் தொடங்கினார் லெஷ்மி.

”ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான 60 குழந்தைகள் என்கிட்ட மியூசிக் தெரப்பி எடுத்துக்கிறாங்க. அவங்கள்ல வயசுல மூத்தவள் மட்டுமில்லை… ரொம்பவும் வித்தியாசமானவள் ஐஸ்வர்யா. அவள் என் வீட்டுக்கு வந்த முதல் நாள் செஞ்ச வேலை, ஃபிரிஜ்ஜைத் திறந்து உள்ளே இருந்த பொருள்களை எல்லாம் கீழே வெச்சுட்டு, மறுபடியும் இருந்த இடத்துலேயே எல்லாப் பொருள்களையும் கச்சிதமா அடுக்கி வெச்சதுதான். அப்பதான் ஐஸ்வர்யாவின் பஸில் திறமைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உலகின் பிரபல பஸில் ஓவியங்களை ஐஸ்வர்யா ஒண்ணு சேர்த்திருக்காங்க. அந்த ஓவியங்களை வெச்சு பல கண்காட்சிகள் நடத்தியிருக்கோம்.

‘எல் அண்ட் டி’ மாதிரியான பல நிறுவனங்கள் இவளோட பஸில் ஓவியங்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.

ஐஸ்வர்யா, பஸில் குயின் மட்டுமல்ல; மியூசிக் தெரப்பி மூலமாக அவளுக்குச் சில ஸ்லோகன்களையும் சொல்லிக் கொடுத்தேன். ரெண்டு, மூணு வாரங்கள்ல அந்த ஸ்லோகன்களை கரெக்ட்டாப் பிடிச்சுக்கிட்டு என்கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சிட்டா. நாலைஞ்சு வார்த்தைகளைச் சேர்த்துக் கோர்வையாப் பேச முடியாத பொண்ணு, என்னோடு சேர்ந்து பாடினதுல எல்லாருக்கும் சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்கலை!” என்று நெகிழும் லெஷ்மி, ஐஸ்வர்யாவின் முகத்தைக் கைகளால் வருடி முத்தம் கொடுத்துவிட்டு, அவரது வலது கையை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொள்கிறார்.

”ஐஸுக்குட்டி… என் செல்லம்ல… அங்கிளுக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டுப் பாடிக் காட்டலாமா?’ என்று சன்னமாகப் பாடுகிறார் லெஷ்மி.

”ஷங்கரம் சிவ ஷங்கரம்
ஷங்கரம் சிவ ஷங்கரம்…
போலோநாத் உமாபதே ஹர
ஜோதிலிங்கம் ஷங்கரம்…” என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, ”ஐஸுக்கு மில்க் ஷேக்… ஐஸுக்கு மில்க் ஷேக்” என்று சொல்லியபடியே லெஷ்மியின் மடியில் படுத்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா. ”மில்க் ஷேக் கொடுத்தாத்தான் பாடுவாளாம்…” என்று சொன்ன லெஷ்மி, ”ஐஸு… அங்கிளுக்குப் பாட்டுப் பாடுவியா.. மாட்டியா? பாட்டுப் பாடினாத்தான் அக்கா உன்கூடப் பேசுவேன்” என்று சொன்னாலும், ”ஐஸுக்கு மில்க் ஷேக்… ஐஸுக்கு மில்க் ஷேக்…” என்று மறுபடியும் சொல்ல, ”நீ பாட்டுப் பாடினாத்தான் மில்க் ஷேக்…” என்று லெஷ்மி கண்டிப்பு காட்ட, ஐஸ்வர்யா பாட ஆரம்பித்தார்.

”ஷங்கரம் சிவ ஷங்கரம்
ஷங்கரம் சிவ ஷங்கரம்…”

மழலையும் முதிர்ச்சியும் கலந்த ஐஸ்வர்யாவின் குரல் அறையெங்கும் நிறைகிறது. பாடி முடித்ததும் ஐஸ்வர்யாவின் கையில் ஒரு மில்க் ஷேக் பாட்டிலைக் கொடுத்ததும் வாங்கிக்கொண்டாள். மீண்டும் ‘ஷங்கரம் சிவ ஷங்கரம்…’ ஒலிக்கிறது!

லெஷ்மி, மீண்டும் என்னிடம் பேச ஆரம்பித்தார்…

”ஐஸ்வர்யா ஒருநாள் என்னைப் பார்த்து, ‘பூனை ஓடுச்சு… அப்பா எங்கே?’னு கேட்டா. நான் அவ அம்மாகிட்ட, ‘இதையே கேட்டுட்டு இருக்கா’னு சொன்னேன். ‘ஐஸுக்கு நாலு வயசா இருக்கும்போது அவ பெட்ரூம்ல பூனை நுழைஞ்சதாம். அதை அவ இன்னும் மறக்கலை. அதைத்தான் இப்போ வரை சொல்லிட்டு இருக்கா’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம். பஸில் போடுறது, பாட்டுப் பாடறது, அபார ஞாபகசக்தி, போட்டோ ஷாப்ல கடவுள் படங்களை வரையறதுனு ஐஸ்வர்யாவின் பல திறமைகளை வெளியுலகத்துக்குக் காட்டணும்னு தான் ‘பீச்… பீட்டர் சார்… லாலி பாப்!’ என்ற நாவலை எழுத ஆரம்பிச்சேன். இந்த நாவலில் ஐஸ்வர்யா, பஸில் துண்டுகளால் இணைத்த நிறைய ஓவியங்களையும் சேர்த்திருக்கேன்.

மனதளவில் மூன்று வயதான ஐஸ்வர்யா காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை, காய்கறிகளை நறுக்கி தன் தாய் கிரிஜா உதவியோடு மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதுதான். பின்பு, பஸில் போடுவாள். அப்புறம் அவள் டைரியில் அன்னைக்கு என்ன செய்யணும் என்று மழலைக் கையெழுத்தில் மூன்று, நான்கு வரிகள் எழுதுவாள். இன்னைக்குக்கூட, ‘விகடன்லேர்ந்து பார்க்க வர்றாங்க’னு எழுதிருக்கா.

ஆட்டிஸத்தின் தீவிரத்தைக் குறைக்க மருந்து மாத்திரகளோட சேர்ந்து இசையின் பங்கும் அதிகம். இவங்க சந்திக்கிற முதல் பிரச்னையே மன அழுத்தம்தான். அவங்க நினைக்கிறதைச் சொல்ல முடியாது. அதுவே அவங்க மனசுல தங்கித் தங்கி ஸ்ட்ரெஸ்ஸா மாறிடும். அதைத் தாங்க முடியா மத்தான் அவங்க ஒரு இடத்துல நிக்காம அங்கே இங்கேனு ஓடுறது, தங்களைத்தாங்களே கடிச்சுக் காயப்படுத்திக்கிறதுனு ரகளை செய்வாங்க. அவங்க மனசைச் சாந்தப்படுத்தி ஒரு இடத்துல உட்காரவைக்கும் இசை. ரைம்ஸ் போல திரும்பத் திரும்ப வருகிற வார்த்தைகள், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ஸ்ஷேர், பிறவியிலேயே ஆட்டிஸம் பாதிப்புக்கு உள்ளானவர். ஆனா, அபாரமான ஓவியர். எந்த ஒரு காட்சியையும் பார்த்த 10 நிமிஷத்துலேயே எந்தக் குறிப்பும் இல்லாமல் வரைஞ்சிடுவார். இவரோட திறமையைப் பாராட்டி, இங்கிலாந்து அரசவையில் உறுப்பினர் ஆக்கிட்டாங்க.

பாஸ்டனைச் சேர்ந்த டெம்பிள் கிராண்டின், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானவர்னு அவரோட நாலாவது வயசுலதான் கண்டுபிடிச்சாங்க. ஆனா, பெற்றோரின் அரவணைப்பு அவரை விலங்கியல் பாடத்துல முனைவர் பட்டம் வாங்கவெச்சது. ஆட்டிஸம் பாதித்தவர்களில் இப்படி அசாதாரணத் திறமைசாலிகளும் இருக்காங்க. வெளிநாட்டில் இவங்களுக்குத் தோள் கொடுக்க சட்ட திட்டங்களும் அரசாங்க வழிகாட்டுதல்களும் இருக்கு. ஆனா, இந்தியாவில் ஆட்டிஸம் பற்றிய விழிப்பு உணர்வே ரொம்பக் கம்மி. ஏதோ என் பங்குக்கு சின்ன வெளிச்சம் கொடுக்கலாம்னுதான் ‘பீச்… பீட்டர் சார்… லாலி பாப்!’ நாவல் எழுதியிருக்கேன்!” என்கிறார் லெஷ்மி.

பக்கத்து அறையில் எட்டிப் பார்க்கிறேன். கால் மேல் கால் போட்டு சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஓர் ஓவியத்தின் பஸில் துண்டுகளை இணைத்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அந்த ஓவியத்தில், பூக்கூடையில் இருந்து ஒரு பூனைக்குட்டி தாவிக் குதித்து ஓடக் காத்திருக்கிறது.

லெஷ்மி, கொஞ்சம் சத்தமாகவே சொன்னார்…

”ஐஸுக்குட்டி… அங்கிள் கிளம்புறாங்க பாரு… பை சொல்லு…”

ஐஸுக்குட்டி, அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வலது கை விரல்கள் பிடியில் மில்க் ஷேக் இருக்க, இடது கை விரல்கள் பஸில் துண்டுகளை அடுக்கிக் கொண்டிருக்க, உதடுகள் சன்னமாக முணு முணுக்கின்றன…

”ஷங்கரம் சிவ ஷங்கரம்

ஷங்கரம் சிவ ஷங்கரம்…”

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஷங்கரம் சிவ ஷங்கரம்!”

 1. Dear Admin,
  You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

  To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல…
  நம் குரல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s