இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்கிறார் வள்ளுவர். அதிகாரம் என்பது கட்டற்றதாக இருந்துவிடக் கூடாது. அது ஒரு போதும் சமூகத்துக்கு நன்மை பயக்காது என்பதுதான் இதன் பொருள். சங்கப் பாடல்களைப் பார்த்தோமேயானால் கோவூர்க் கிழார், பொய்கையார் என மன்னனை இடித்துரைத்த, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய புலவர்கள் பலரைக் காண முடிகிறது. அதிகாரத்தை கேள்வி கேட்கும், வழிநடத்தும் பொறுப்பை அறிவு சார் குழு ஒன்று எப்போதும் நம் சமூகத்தில் செய்தே வந்துள்ளது என்பது நாம் நம் தமிழ் மரபில் பெருமைப் பட்டுக் கொள்ள கிடைக்கும் அம்சங்களில் ஒன்று.
இன்றைய நவீன ஜனநாயக யுகத்தில் அரசை கேள்வி கேட்கும், அதன் தவறுகளை சுட்டிக் காட்டும் தார்மீக உரிமையைக் கைவசம் வைத்திருப்பவை ஊடகங்கள். சரி, அப்படியெனில் அந்த உரிமை சரியான வகையில் கையாளப் படுகிறதா என்பதையும் சீர் தூக்கிப் பார்க்க ஒரு வழிவகை வேண்டுமல்லவா? பத்திரிக்கை தர்மம் என்பது தமிழில் புழங்கும் ஒரு தேய்வழக்கு(cliché). ஆனால் அப்படி ஒன்று இருக்கத்தான் செய்கிறதா என்ற கேள்வி இன்று தொடர்ந்து ஊடகங்களை பார்க்கும் எவருக்கும் எழத்தான் செய்யும். தொலைக்காட்சி அலைவரிசைகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ப்ரத்யேகமாக செய்திக்கு மட்டும் என்றே ஒரு சேனல். அந்த செய்திகளைக் கேட்டால் நமக்கு தலை சுற்றிப் போகும். பத்திரிக்கைகளும் விதிவிலக்கல்ல. இப்போது நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பையும், அதற்கு பின் நம் மாநிலத்தில் போராட்டம் எனும் பெயரில் நடக்கும் கேலி கூத்துக்களையும் கண்டித்து காத்திரமான, நடுநிலையான ஒரு கட்டுரையேனும் எந்தப் பத்திரிக்கையிலாவது வெளி வந்திருக்கிறதா என்ன?
இந்த நிலை மாற வழி என்ன என்று யோசித்தால் பத்திரிக்கைகளையும் வழி நடத்த ஊடக விமர்சனங்கள் எனும் வகைமையில் அதிகமான படைப்புகள் வர வேண்டியது அவசியம். மீடியா வாட்ச் எனும் அமைப்பு இந்தப் பணியை முன்னெடுத்து ஒரு நல்ல ஆரம்பம். இந்த முன்னெடுப்பில் மீனாவின் பங்களிப்பாக வெளிவந்த கட்டுரைகள் இங்கே ஊடக அவதானிப்புகள் எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன.
அதில் குறிப்பாக கவுகாத்தியில் நடந்த பாலியல் வன்முறையையும், அதனை படம் பிடித்து ஒளிபரப்பிய தொலைகாட்சி ஊழியரையும் முன்வைத்து எழுதப் பட்டுள்ள கட்டுரை ஒரு காத்திரமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனிதனாகவே தான் கடைபிடிக்க வேண்டிய அறம் அல்லது ஒழுக்கக் கோட்பாடு என்று ஒன்று உண்டு. செய்யும் தொழில், உறவுகள் போன்றவற்றை முன்னிட்டு ஏற்படும் அறக்கட்டுப்பாடுகள் தனி. இவை ஒன்றோடு ஒன்று முரண்படும் வேளையில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான, முக்கியமான கேள்வி. காலகாலமாக இந்த கேள்வியும், இது சார்ந்த வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்தவண்ணமே உள்ளது.
காவியங்கள் தொடங்கி இன்றுவரை நீளும் இந்த கேள்வித் தொடருக்கு அவ்வப்போது நாம் நம் புரிதலுக்கும், அறிவுத் தேடலின் நீளத்துக்கும் ஏற்ப விடை கண்டு நம் மனசாட்சியைத் திருப்தி செய்து கொள்ள முடியுமே அன்றி அதை எல்லாரையும் ஏற்றுக் கொள்ள செய்துவிட முடியாது.
இந்து நாளிதழில் இந்நிகழ்வை ஒட்டி கரன்சிங்க் தியாகி எழுதிய ஒரு கட்டுரையின் சாராம்சத்தை மொழிபெயர்த்துத் தருகிறார் மீனா. 1994ல் புலிட்சர் பரிசை வென்ற கெலின் கார்ட்டரின் புகைப்படம் சூடானில் பட்டினியாலும் வயிற்றுப் போக்காலும் பாதிக்கப்பட்டு குற்றுயிராக கிடந்த ஒரு சிறுமியை கழுகொன்று கொத்தி தின்பதை பதிவு செய்திருந்தது. அந்தக் குழந்தையை காப்பாற்ற முயற்சிக்காமல், தெளிவாகவும் அழகுனர்ச்சியோடும் அந்தப் படத்தை பதிவு செய்தார் என்று விமர்சிக்கப் பட்டதால் கெலின் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை விவரிக்கும் கரண்சிங்க், அதே போன்ற கேள்வியை இந்த கவுகாத்தி சம்பவத்தை முன்வைத்தும் எழுப்பிக் கொள்கிறார்.
பின் வேறொரு நிகழ்வு. வெள்ளைப் போலீசாரால் கருப்பின குழந்தைகள் சிலர் முரட்டுத் தனமாக தள்ளப்பட்ட போது அவர்களை காக்க ஒடிவந்த பத்திரிக்கையாளரிடம் மார்டின் லூதர் கிங் “நீங்கள் அக்குழந்தைகளை காப்பாற்றுவதை விட இச்சம்பவத்தை உலகத்திற்கு அறிவிப்பதே எங்களுக்கு செய்யும் பேருதவி” என்று சொன்னதையும் கரன்சிங்க் நினைவு கூர்கிறார்.
இந்த இரண்டு வகையான வாதங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் கட்டுரை பின் தன் இறுதிப் பகுதிக்கு வருகிறது. ஒரு பத்திரிக்கையாளராக அந்நிகழ்வை படம் பிடித்தது தவறில்லை. ஆனால் அந்த படக்காட்சி குற்றவாளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கவும் உதவு வகையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நேர்மாறாக காயம்பட்ட பெண்ணை, அவளது அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்தவே அக்காட்சி பயன்படுகிறது என்பது ஒரு நல்ல பத்திரிக்கையாளருக்கோ ஏன் ஒரு தனி மனிதனுக்குமே நியாயமான ஒரு செயல் அல்ல.
கரன்சிங்க் தியாகியின் கட்டுரை இந்த மட்டோடு நிறுத்திக் கொள்ள மீனா அதை மொழியாக்கம் செய்வதோடு நின்று விடாமல் தமிழக அளவில் ஊடகங்கள் இச்செய்தியை எப்படி வெளியிட்டனர் என்பதையும் அலசுகிறார். குறிப்பாக தினமணி தன் தலையங்கத்தில் பெண்களுக்கு புத்திமதிகளை அள்ளிவிட்டிருப்பதை சாடவும் தவறவில்லை. டில்லி நிர்பயா வழக்கிற்கு பிறகும் தினமணி இதே போன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அந்த பஸ்ஸில் எத்தனை பேர் இருக்கிறார்கள், குறிப்பாக வேறு பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றெல்லாம் பார்த்துவிட்டு ஏறியிருக்க வேண்டுமாம். யாரேனும் ஒரு பெண் முன்கூட்டியே ஏறியிருந்தால்தான் மற்ற பெண்கள் ஏற வேண்டும் என்றால் அந்த முதல் பெண் எப்படி வண்டிக்குள் ஏறமுடியும்? இப்படியாக தினமணி தொடங்கி இப்போது ஜேசுதாஸ் வரைக்கும் எல்லோரும் பெண்களுக்கு அறிவுரைகளாக அள்ளி வீசிய வண்ணம்தான் இருக்கிறார்கள்.
சமச்சீர் கல்வி பற்றிய மீனாவின் கட்டுரை முக்கியமான ஒன்று. பாடத்திட்டம்(syllabus) ஒன்றாவதால் மட்டுமே முழுமையான சமச்சீர் கல்வி சமூகம் முழுமைக்கும் கிடைத்துவிடாது என்பதை ஒப்புக் கொள்ளும் மீனா அதே நேரம் இந்த புது பாட புத்தகங்கள் நிச்சயம் ஒரு அந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் என்பதையும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாட புத்தகத்தையும் அலசி ஆராய்ந்து இன்னமும் மிச்சமிருக்கும் பழமையான கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறார். பன்மைத்துவ சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் பெயர்களில் சிறுபான்மையினப் பெயர்களும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம், கற்பனையை வளர்க்க உருவாக்கப் பட்டிருக்கும் பகுதிகளான இப்படி இருந்தால் எனும் பகுதி இன்னமும் நேர்மறை எண்ணங்களை குழந்தைகளிடம் விதைக்கும் படி இருக்க வேண்டும் என்பது போன்ற நல்ல அவதானிப்புகளைக் கொண்ட கட்டுரை இது.
அதேநேரம் ஆதிமனித வாழ்வைப் பற்றி பேசும் பாடத்தில் அது ஆண்மைய வாசகங்களைக் கொண்டிருப்பது கண்டு மீனா பொங்கியிருப்பது கொஞ்சம் அதிகப்படியாக தோன்றுகிறது. இன்னமும் நம் சமூகத்தில் பெரும்பான்மை சொல்லாடல்கள் ஆண்மைய வார்த்தைகளாகத்தான் உள்ளது. வரலாறே இங்கே இன்னமும் ஹிஸ்டரிதான், ஹர்ஸ்டோரி அல்ல. எனவே புழக்கத்திலிருக்கும் அதே சொற்களை பாடநூலிலும் காண்பது தவறுதான் என்றாலும் கூட அது எதோ திட்டமிட்ட சதி என்பது போல் நாம் எடுத்துக் கொள்ளவும், உணர்ச்சிவயப்படவும் தேவையில்லை. அதற்காக அதை சுட்டிக் காட்டக் கூடாது என்பதில்லை.
ராதிகா சாந்தவனம் – பெண்ணுடலும் பாலியல் வேட்கையும், ஒரு முன்மாதிரி எனும் கட்டுரையும் குறிப்பிடத்தக்க ஒரு ஆக்கம். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துப் பழனி எனும் தேவதாசி ஒருவரால் இயற்றப்பட்ட இந்தக் காவியத்திலிருந்து சில கவிதைகளை மொழிபெயர்த்து தந்திருக்கும் மீனா அவற்றின் சிறப்புகளை முன்வைக்கிறார். இன்றும் ஒரு ஆண் எழுதும் போது அதில் அவரது அனுபவம் எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்ற விகிதாச்சாரத்தைப் பற்றி கேள்வி கேட்போர் யாருமில்லை. ஆனால் அதுவே எழுதுவது பெண்ணென்றால் அதுவும் எழுதப்படுவது பாலியல் சார்ந்த விஷயங்களென்றால் முதலில் பெரும்பான்மை வாசகர்கள் அறிய விரும்புவது அதெல்லாம் எழுத்தாளரின் சொந்த அனுபவமா என்பதையே. ஆமென்றால் உடனே நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதே அடுத்த கேள்வியாக இருக்கும். இப்படியான சூழலில் மராட்டிய காலகட்டத்தில் தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் இப்படி பாலியல் சார்ந்த கதையாடல்களை, அதுவும் பெண்ணை முக்கியத்துவப்படுத்தும் பிரதி ஒன்றை எழுதியிருக்கிறார் என்பது அவரது வித்யா கர்வத்தையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஆனால் கீத கோவிந்தம் எனும் சிருங்கார ரச காவியத்தைக் கொண்டாடும் பக்தி மரபுதான் முத்துப் பழனியின் இந்த நூலை தனது நிலவறைக்குள் கைமறதியாக சொருகி வைத்துவிட்டு அமைதியானது. ஏனெனில் முன்னதை எழுதியவர் ஜெயதேவர் எனும் ஆண் அல்லவா? மீண்டும் அந்த நூலை கைப்பற்றி அச்சுக்கு கொண்டு வந்தவர் தேவதாசி சமூகத்திலிருந்து வந்த இன்னொரு பெண்மணி – வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம் அம்மாள். அவர் அந்த நூலை அச்சிட்டு வெளியிட்ட போது பெற்ற வசைகளும், கண்டனங்களும் கணக்கிலடங்காதவை. முத்துப் பழனி, நாகரத்னம் – இருவருக்கும் மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? இருவருமே தேவதாசி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் போது நம்மை புதிதாக என்ன இழிவு செய்துவிட முடியும் என்ற துணிச்சலோ அது என்று தோன்றுகிறது.
வ.வே.சு ஐயரைப் பற்றிய நம் மன பிம்பங்களை அசைத்துப் பார்க்கும் கட்டுரையும் மீனா பன்மைத் தன்மை என்பதில் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் என்பதைக் காட்டுகிறது. அதில் ஐயர் இறந்தபோது பெரியார் எழுதிய இரங்கற் செய்தியை மேற்கோளிட்டிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இஸ்லாமியர்களையும் உள்ளடக்கிய அவரது தேசியம் குறித்த சிந்தனைகளும், ஆயுதப் போராட்டத்திலிருந்து அகிம்சையை நோக்கித் திரும்பிய அவரது பார்வையையும் அழகாக நிறுவும் இந்தக் கட்டுரை இப்புத்தகத்தின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.
பொதுவாக இந்த புத்தகத்தின் கருத்துக்களோடு ஒத்துப் போக முடியும் என்னால் சில இடங்களில் அவரது மொழியோடு ஒத்துப் போக முடியவில்லை. ஒருவருக்கு ஒருவர் மட்டும் கருத்துப் பரிமாறுவதற்கும் ஒருவர் ஒரு கூட்டத்தோடு உரையாடுவதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் பேசும் போது நாம் கொள்ளும் அதே உணர்வை எதிராளியும் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம். நான் கோபமாக பேசினால் எதிராளியும் கோபமடைவார். ஆனால் ஒருவர் கூட்டத்திடம் உரையாடும் போது இந்த மனநிலை பெரும்பாலும் நேரெதிராகவே பரவுகிறது. நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அது கூட்டத்தினரிடம் எதிரொலிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த உணர்ச்சி வசப்பட்ட மொழியும், உடல்மொழியுமே கூட அவர்களை எரிச்சலடையவோ அல்லது என்னை நக்கலாக பார்க்கவோ வைத்துவிடும் அபாயம் உண்டு. அதே போல நிதானமான ஆனால் அழுத்தமான பேச்சு கூட எதிரிலிருக்கும் கூட்டத்தை வெறியேற்றவும் முடியும். இரண்டாம் வகைப் பேச்சுக்கு ஹிட்லரின் பேச்சை உவமை கூறுவதுண்டு. சமகாலத்தில் வேண்டுமானால் நாம் இப்போது பால்தாக்ரேவையும், நரேந்திர மோடியையும் உவமை கூறலாம்.
அதே போலவே எழுத்திலும் சற்று மென்மையாக எழுதும் போது நாம் சொல்ல வரும் கருத்தை வாசகருக்கு சரியாக கடத்த முடியும். சிவந்த நிறமாய் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்பது போலவே உணர்ச்சி வசப்படாமல் பேசுபவர்களும், எழுதுபவர்களும் அறிவாளிகள் என்று நம்பும் சமூகம் நம்முடையது. எனவே மீனாவும் தனது நடையை கொஞ்சம் தளர்த்தி உணர்வு வயப்பட்ட வார்த்தைகளை தவிர்த்து எழுதுவாரேயானால் வாசகர்களுக்கு தனது கருத்துக்களை கடத்துவதில் 100% வெற்றிபெறுவார் என்பதில் ஐயமில்லை.
**********
புத்தகம்: சித்திரம் பேசேல்
ஆசிரியர்: மீனா
பதிப்பகம்: எதிர் வெளியீடு
முதல் பதிப்பு – ஆகஸ்டு 2013
***********
11.10.2014 அன்று மிளிர் இலக்கிய அமைப்பு நடத்திய விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட மதிப்புரை.