இதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது.
பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் நாட்டின் பிற பகுதிகளும் இதே கருத்துடன், இப்பண்டிகையை மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ இன்னும் விரிவாக முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து, பழங்க்குப்பைகளை அழிப்பதில் தொடங்கி, பொங்கலன்று சூரியனுக்கு பூஜை செய்து, படையலிடுவதோடு அதற்கடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று தங்கள் தொழிலுக்கு உதவும் கால்நடைகளையும் பூஜை செய்து சிறப்பிப்பது வழக்கம். மூன்றாம் நாளான காணும் பொங்கல் நமது உறவுகளைக் கொண்டாடவும், புது உறவுகள் தோன்ற அஸ்திவாரம் இடுவதற்குமாக இரண்டு நோக்கங்களோடு கொண்டாடப் பட்டு வந்தது.
பலவகை சித்ரான்னங்களோடு அருகிலிருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று உறவினர் குடும்பங்களோடு சேர்ந்து அமர்ந்து, உணவை பகிர்ந்து உண்பது என்பது ஏற்கனவே இருந்த உறவுகளை பேணுவதற்கான வழக்கம். வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்களுக்கு சடையில் பூத்தைத்து அலங்கரித்து ஆற்றங்கரையில் நடக்கும் கும்மி, கோலாட்டம் போன்ற பெண்களுக்கான ஆட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்வது அவர்களின் திருமண முயற்சியில் முதற்படியாகும்.
இன்றைப் போல மேட்ரிமோனியல் தளங்களும், தொழில் ரீதியான திருமணத் தரகர்களும் இல்லாத அந்தக் காலத்தில் இப்படியான விழாச் சூழலில்தான் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு தயாராக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாசுக்காக அறிவிப்பது வழக்கம். பஜ்ஜியும் சொஜ்ஜியும் விளம்பி, கடைச் சரக்கினை பார்வையிடுவது போன்ற பெண் பார்க்கும் சடங்குகள் தோன்றுவதற்கெல்லாம் முன்னரே நமக்கேற்ற திருமண உறவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய வசதியோடும், யாரையும் நோகடிக்காத மாண்போடும் நம் விழாக்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.
இந்த நவீன யுகத்தில் சுயம்வரங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. சுத்தமாக காணாமல் போனதென்னவோ உறவுகளைப் பேணும் சங்கதிதான். எனவே ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ சென்று சந்திக்க முடியாத நம் உறவுகளை நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு மெய்நிகர் வெளியிலாவது(Virtual Space) சந்தித்து மகிழ முற்படலாம்.
வாட்சப் போன்ற செயலிகளில் எத்தனையோ குழுமங்களை அமைத்து அதில் நகைச்சுவைத் துணுக்குகளையும், யாரோ உருவாக்கிய குட்டிக் கதைகளையும் சலிப்பின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நாம் ஏன் குடும்ப உறவுகளுக்காக ஒரு குழுவைத் தொடங்கி அதன் மூலம் உறவுகளை பேணக் கூடாது.
ஏற்கனவே சில பல குடும்பங்கள் இது போன்ற குழுக்களை ஆரம்பித்து மிகவும் மகிழ்வோடு உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. குழுமங்களை நம் அனைவருக்கும் பொதுவான மூத்த சந்ததியினரின் பெயரில் ஆரம்பித்து அவர்களின் வாரிசுகள் அனைவரையும் அந்தக் குடையின் கீழ் திரட்டிக் கொள்வதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தலும் ரத்த உறவுகளையும் விட்டுப் போகாமல் தொடரலாம்.
முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏர் போகும் என்று பழமொழி ஒன்றுண்டு. நாமே உறவுகளைப் பேணாவிடில் நம் குழந்தைகளுக்கு நம் வீட்டுச் சுவருக்கு வெளியில் உறவுகள் யாரும் இருப்பதே தெரியாமல் போகக் கூடும். எனவே நம் குழந்தைகளுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழவேனும் நம் சொந்தபந்தங்களைத் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்தாக வேண்டும்.
ஒவ்வொருவரின் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள, பொக்கிஷமாய் இருக்கும் பால்ய புகைப்படங்கள் யாரேனும் ஒருவரிடம் இருந்தால் அதைப் பகிர்ந்து கொள்ள என நம் உறவுகளுக்கு புத்துயிர் ஊட்டும் எத்தனையோ விஷயங்களை இது போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு செய்ய முடியும்.
இந்த காணும் பொங்கல் நாள் முதல் நம் உறவுச் சங்கிலிகளை தொழில்நுட்ப வசதி கொண்டு இணைத்து மகிழ்வோம்.
நன்றி – செல்லமே, ஜனவரி 2016
நீங்கள் சொல்வது போல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது… மேலும் விரிவடைய வேண்டும்…
எங்கள் குடும்பத்திலும் உள்ளது லக்ஷ்மி. உங்கள் உரை போல நடக்கட்டும்.