நீங்கள் ஒரு படைப்பாளி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ வெளியிடுகிறீர்கள். வெளியீட்டு விழா நிகழ்வு. அல்லது நீங்கள் ஒரு ஓவியர் எனில் உங்களது ஓவியங்களின் கண்காட்சி. அந்த நிகழ்வுக்கு எல் & டியின் ஜி.எம்மோ அல்லது கெவின்கேர் சி ஈ ஓவோ அல்லது ஒரு பெரிய திரைத்துறை பிரபலமோ வருகிறார் என்று வையுங்கள். நாம் என்ன செய்வோம்? கையிலிருப்பதை போட்டுவிட்டு அவரை வரவேற்கப் போய் நிற்போம். மனங்கொள்ளா மகிழ்வுடன் நம் படைப்பை அவர் பாராட்டுவதை எதிர்நோக்கி நிற்போம். அந்த பாராட்டை காது குளிர கேட்டு ரசிப்போம். அவரை சரியாக உபசரித்து, விடை கொடுத்து அனுப்புவோம்.
மாறாக ஒருவர் அப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்ததையோ போனதையோ லட்சியம் செய்யாமல் கம்பீரமாய் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தால் அதை வித்யா கர்வம் என்போம். அப்படி உட்கார்ந்திருப்பவர் அச்சமயம் டீயோ இல்லை சமோசாவோ வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தால்? அவரை என்னவென்று சொல்வீர்கள்? புதிரானவர் என்றா? ஆம்… அப்படியான ஒரு புதிர்ப் பெண்ணைப் பற்றிய புத்தகம்தான் இது.
பீச். பீட்டர் சார். லாலிபாப்… இந்த மூன்று வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்ட ஒரு க்ரைம் நாவல். 90 பக்கங்களில் சுருக்கமாகவும், நேரடியாகவும், விறுவிறுப்பாகவும் செல்லும் கதை. குறுநாவல் என்றே சொல்லும்படியான அளவுக்கு அளவான கதாபாத்திரங்களுடன் ரொம்பவும் பரந்து விரியாமல் இரண்டு இணைகோடுகளாக பயணிக்கும் நேரடியான கதை.
எனில் இந்நூலின் முக்கியத்துவம் என்ன? எத்தனையோ த்ரில்லர், க்ரைம் கதைகளை நாம் படித்திருக்க முடியும். இதையும் அது போன்றதொரு சாதாரணக் கதை என ஒதுக்கிவிட முடியாது போவது ஏன்?
வாழ்வில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாளும் அனுபவங்களின் வழி நாம் கற்றுக்கொள்வதைப் பொறுத்தது. எல்லாவகை அனுபவங்களையும் சொந்தமாக அனுபவித்தே கற்றுக் கொள்வது என்பது மனிதனின் வாழ்நாளுக்குள் சாத்தியமில்லை எனும் பேராவலே அவனை அடுத்தவரின் அனுபவங்களையும் கடன் வாங்கிக் கற்றுக் கொள்ளச் செய்கிறது. நமது தாத்தா பாட்டியிடம் இருந்து கதை கேட்டு அதன் மூலம் அவர்களது அனுபவத்தின் சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் துவங்கும் இந்தத் தேடலே நம்மை இலக்கியத்தை நோக்கி நகர்த்துகிறது.
எல்லா அனுபவங்களும் முக்கியத்துவம் பெற்ற படைப்புகளாக ஆகிவிடுமா என்றால் இல்லை. எல்லோருக்கும் ஒன்று போல் ஏற்படும் அனுபவங்களை அப்படியே பேசும் நாவல்களோ சினிமாவோ வெறும் கேளிக்கை அம்சத்துடன் நின்றுவிடும். ஐந்து பாடல், இரண்டு சண்டை, ஒர் உணர்ச்சி மயமான சுபம் போடும் க்ளைமாக்ஸ் என இருக்கும் சினிமாக்களும், அதற்கொப்பான டெம்ப்ளேட் மாத/வார நாவல்களும் இவ்வகை. இவையும் தேவைதானென்றாலும் தனித்துவமின்மை காரணமாக அவற்றுக்கு கிடைக்கும் உடனடி வரவேற்பு காற்றில் கரைந்துவிட நாட்கள் அதிகம் ஆவதில்லை. மாறாக தனித்துவம் மிக்க ஒரு அனுபவத்தை படைப்பாக ஆக்கும் போதே அது சிறப்பான அந்தஸ்தைப் பெறுகிறது.
அந்த வகையில் இந்த நாவலில் திருமதி. லக்ஷ்மி மோகன் ஆட்டிச நிலையாளர் ஒருவரின் வாழ்வையும், அக்குழந்தையை அரவணைக்கும் குடும்பத்தின் அனுபவங்களையும் கதையின் சாரமாக்கி வைத்திருக்கிறார். ஊடாக அக்குழந்தையின் அபரிமிதமான புதிர்களை கோர்க்கும் திறனை இந்த சமூகம் எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றொரு கற்பனையை விறுவிறுப்புக்காக சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த துப்பறியும் பகுதியை ஒரு மாத்திரையின் சர்க்கரைப் பூச்சாக கொண்டால் அந்த மாத்திரையின் உள்ளீடாக ஆட்டிச நிலையாளர்களின் வாழ்வும், அவர்களை வீடும், சமூகமும் அரவணைக்க வேண்டிய விதத்தையும் அழகாக விவரிக்கிறார். ரத்தமும் சதமுமாக நம்முடன் நடமாடும் ஐஸ்வர்யா எனும் புதிர் ராணியின் வாழ்விலிருந்து சாரத்தை எடுத்து அதனுடன் தன் கற்பனை கொஞ்சம் கலந்து இப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் லக்ஷ்மி.
பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் இப்புத்தகத்தின் முன்னுரையில் சொல்லியிருப்பது போல பிரச்சாரம் என்பது இலக்கியத்துக்கு ஆகாத வேலையாக இன்று நிறுவப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் சிறுவயதில் கேட்ட பஞ்சதந்திரக் கதை முதல் நம் மண்ணின் மகா காவியங்களான ராமாயண மகாபாரதம் வரை காலம் தாண்டி நிற்கும் எல்லா படைப்புகளுமே ஏதேனும் கருத்தைச் சொல்லியே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஆட்டிச நிலையாளர்கள் பற்றிய அதிக புனைகதைகள் இல்லாத சூழலில் இப்புத்தகம் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. இன்று இச்சமூகத்திற்கு தேவையான ஒரு அவசியமான கருத்தை தன் கதையின் வாயிலாக சொல்ல முனைந்திருக்கிறார் நூலாசிரியர்.
நம் மாநிலத்தின் ஊனமுற்றோருக்கான நலவாரிய அலுவலகம் லிஃப்ட் இல்லாத ஒரு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்படுகிறது என்று சில வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. என்ன செய்வது, நம் பொது புத்தியில் சராசரியான ஒரு மனிதனின் தேவையைத் தாண்டி, ஒரு சின்ன வித்யாசம் இருக்கும் மனிதர்களின் தேவையைப் பற்றிய பிரக்ஞை கூட நமக்கு கிடையாது. சக்கரநாற்காலிகள் புழங்க வசதியான சாய்வுப் பாதைகள் உள்ள கட்டிடங்கள் மொத்தம் எத்தனை இது வரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? விரல் விட்டு எண்ணிவிட முடியுமில்லையா? ஆனால் பொதுமக்கள் புழங்கும் படியான கட்டிடங்கள், வணிக வளாகங்களில் சாய்வுப்பாதைகள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பது அரசின் விதி. இந்த அரசு தான் இவர்களுக்கான அலுவகத்தை இரண்டாம் தளத்தில் வைத்து செயல்படுத்தி வந்தது. வெளிப்படையாகத் தெரியும், அனுதாபத்தைத் தூண்டக்கூடிய புற உடல் சார்ந்த ஊனங்களுக்கே இந்த நிலை என்றால்.. பார்வைக்கு எந்த வித்யாசமும் இல்லாத, ஆனால் நடவடிக்கைகளில் மட்டும் மாறுபாடான ஆட்டிச நிலையாளர்களின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?
இவ்ளோ வாலா இருக்கானே, புள்ள வளக்கத் தெரியாட்டி வெளீல கூட்டி வந்து எங்க உயிர ஏன் சார் வாங்கறீங்க என்பது போன்ற வார்த்தைகளை தினம் தினம் கேட்டு நொந்திருக்கும் எத்தனையோ பெற்றோர்கள் இங்கே உண்டு. ஆட்டிசம் என்று சொன்னால், ஓ… லூஸா, அப்ப ஏன் சார் வெளீல கூட்டிட்டு வர்ரீங்க, இவங்களுக்குன்னு ஆஸ்பிட்டல் இருக்குமில்ல, அங்க கொண்டு போய் சேத்துர வேண்டியதுதானே என்பது போன்ற ஆலோசனை மூட்டைகளை அள்ளி வீசுவதற்கு தயாராக உள்ளனர். சொல்லிப் புரியவைக்கவும் முடியாமல், பேசாது போனால் திமிர்ப் பட்டங்கள் என்று ஆட்டிச நிலைக்குழந்தைகளை அரவணைத்து நிற்கும் குடும்பத்தினர் எதிர் கொள்ளும் எத்தனையோ சிக்கல்கள் உண்டு. இதற்கு காரணம் சுற்றியிருப்போர் எல்லோரும் கல் நெஞ்சுக்காரர்கள் என்பதல்ல, அவர்களுக்கு இப்படியான மனிதர்களைப் பற்றிய புரிதல் இல்லை என்பதுதான்.
இப்படியான நிலையிலிருந்து நம் சமூகமும் குடிமையுணர்வுள்ள ஒன்றாக மாறி, எல்லாவகை மனிதர்களுக்கும் வாழ்வுரிமை உண்டு என்று உணர்ந்து, எல்லாருக்கும் ஏற்ற வகையில் கட்டமைப்புகளோடும், அவர்களை வித்யாசமாக பார்க்காத புரிந்துணர்வோடும் முன்னேற வேண்டுமானால், பிரச்சாரம் இருந்தாலும் இது போன்ற நூல்கள் அதிகமாக வந்தாக வேண்டும்.