இலங்கை மன்னன் ராவணனின் தம்பியான கும்பகர்ணன் தவமிருந்து பிரம்மாவிடம் வரம் கேட்கப் போகையில் ‘நித்யத்துவம்’(மரணமற்ற நிரந்தர வாழ்வு) வேண்டும் என்று கேட்க எண்ணி வாய் தவறி ‘நித்ரத்துவம்’(எப்போதும் தூங்கும் நிலை) கேட்டுவிட, அவரது வாழ்வே மாறிப் போன கதையை ராமாயண காவியம் கூறுகிறது. எந்த மொழியாக இருப்பினும் உச்சரிப்பு சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.
பொதுவாக மொழிபெயர்ப்பில் பெயர்ச் சொற்களை(nouns) அப்படியேதான் உபயோகிக்க வேண்டும் என்பது விதி. அதாவது மனிதர்களின் பெயர்கள், ஊர்ப் பெயர்கள் போன்றவற்றை மொழிபெயர்க்கக் கூடாது, அப்படியே பயன்படுத்த வேண்டியதுதான். ஆனால் திருச்சி, தூத்துக்குடி, திருவல்லிக்கேணி போன்ற ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் ட்ரிச்சி(Trichy), டூட்டுக்குரைன்(Tuticorin), ட்ரிப்ளிகேன்(Triplicane) என்றே எழுதுகிறோம். ஏனென்றால் குளிர்ப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயர்களால் தமிழ் மொழிப் பெயர்களை இந்தளவுக்குத்தான் உச்சரிக்க முடிந்தது. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அவர்கள் கிளம்பிப் போய் 60 வருடம் கழித்தும் நாமும் அது போன்றே உச்சரித்தாக வேண்டும் என்று நினைக்கிறோம். அது சரியா தவறா என்ற கேள்விக்குள் போவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இப்படி அடுத்தவர்களின் மொழியையே அவர்களைப் போல உச்சரிப்பு சுத்தத்தோடு பேச வேண்டும் என்று எண்ணும் நாம், நமது தாய் மொழியையும் அப்படியே பேச வேண்டும் அல்லவா?
தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தொடங்கி சாதாரணர் வரை இன்று பெரும்பகுதி ஆங்கிலம் வார்த்தைகளைக் கலந்தும், உச்சரிப்புக் குறைபாடுகளுடனும்தான் தமிழைப் பேசுகின்றனர். தமிழ் உயர்தனிச் செம்மொழியாகக் கருதப் படுவதன் முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று அது பல்லாயிரம் ஆண்டுப் பழமையான இலக்கண, இலக்கிய செழுமை கொண்ட மொழி. மற்றொரு முக்கியக் காரணி அத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் பெருமளவு வேறுபாடுகளின்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு நம் மொழி கொண்டுள்ள தொடர்ச்சி ஆகும். உச்சரிப்பில் கோட்டை விட்டு பெயரளவுக்கு தமிழ் டாக் பண்ணிக் கொண்டிருந்தால் அடுத்த தலைமுறையினரிடம் இத்தொடர்ச்சி விட்டுப் போகக் கூடும். எனவே குழந்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைச் சொல்லிக் கொடுப்பதோடு உச்சரிப்பையும் சரியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோராகிய நமது கடமை.
தமிழ் எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்க்கும் நேரடித் தொடர்பு உள்ள மொழி – அதாவது பொனிட்டிக் என்று முழுமையாகச் சொல்லத் தக்க மொழி. எனவே இங்கு உச்சரிப்புகளைக் கற்றுக் கொள்வது மிகவும் எளிது. எழுத்துக்களையும், அதன் உச்சரிப்பு உருவாகும் முறையையும் எளிதாகப் புரிந்து கொள்ள அந்த எழுத்துக்களின் உச்சரிப்பு உருவாகும் இடத்தையும், வெளிப்படுத்தும் இடத்தையும் அறிய வேண்டும். இந்த அட்டவணை ஒவ்வொரு எழுத்தும் எப்படி உருவாகிறது என்பதை விளக்கும்.
எழுத்துக்கள் | உருவாகும் இடம் | வெளிப்படும் இடம் |
வல்லின மெய்யெழுத்துக்கள் | மார்பு | க – அடி நாக்கு, அடி அண்ணத்தைத் தொடவேண்டும் ச – நாக்கின் நடுப்பகுதி, அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடவேண்டும் ட – நாக்கின் நுனிப்பகுதி, அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொடவேண்டும் த – மேல் பல்லின் அடிப்பாகத்தை, நாக்கின் நுனி அழுத்தவேண்டும் ப – உதடுகள் இரண்டும் அழுந்தப் பொருந்தவேண்டும் ற : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தில் நன்றாகப் பொருந்தவேண்டும் |
உயிரெழுத்துக்கள் இடையின மெய்யெழுத்துக்கள் |
கழுத்து | உயிரெழுத்துக்கள்: அ, ஆ – உதடுகளை நன்கு பிரித்து வாயை திறக்க வேண்டும். இ, ஈ, எ, ஏ, ஐ – உதடுகளை நன்கு பிரிக்கவேண்டும், அதேசமயம், நாக்கு மேல்பல்லின் அடியைத் தொடவேண்டும் உ, ஊ, ஒ, ஓ, ஔ – உதடுகளைக் குவிக்க வேண்டும். இடையின மெய்யெழுத்துக்கள்: ய : நாக்கின் அடிப்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடவேண்டும் ர, ழ : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தைத் தடவவேண்டும் ல : நாக்கின் விளிம்பு தடித்துக்கொண்டு, மேல் பல்லின் அடியைத் தொடவேண்டும் ள : நாக்கின் விளிம்பு மடித்துக்கொண்டு, அண்ணத்தைத் தொடவேண்டும் வ : மேல் பல் கீழ் உதட்டைத் தொடவேண்டும் |
மெல்லின மெய்யெழுத்துக்கள் | மூக்கு | ங : அடி நாக்கு, அடி அண்ணத்தைத் தொடவேண்டும் ஞ : நாக்கின் நடுப்பகுதி, அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடவேண்டும் ண : நாக்கின் நுனிப்பகுதி, அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொடவேண்டும் ந : மேல் பல்லின் அடிப்பாகத்தை, நாக்கின் நுனி அழுத்தவேண்டும் ம : உதடுகள் இரண்டும் அழுந்தப் பொருந்தவேண்டும் ன : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தில் நன்றாகப் பொருந்தவேண்டும் |
ஆய்த எழுத்து | தலை | ஃ – உதடுகளைத் திறந்து, நாக்கை சற்று வளைத்து தூக்க வேண்டும். |
தமிழில் எல்லா எழுத்துக்களையும் விட அதிகமும் உச்சரிப்புக் குழப்பத்துக்கு ஆளாகும் எழுத்துக்கள் ல,ள, ழ ஆகிய மூன்றும்தான். இந்த படம் அந்த உச்சரிப்புக் குழப்பத்தைப் போக்கும்.
மேலும் ல, ள இரண்டிற்கும் வேறுபடுத்த குண்டு ள, ஒல்லி ல என்று சிலர் கூறுவர். அதற்கு பதிலாக அதன் சரியான பெயர்களை நினைவு வைத்துக் கொண்டாலே உச்சரிப்பு சரியாகி விடும். ஆம்..
ல – நா நுனி ல
ள – நா மடி ள
என்ற பெயர்களை நினைவில் கொண்டாலே உச்சரிப்பும் சரியாக அமைந்துவிடும் அல்லவா?
மேலும் குழந்தைகளுக்கு உச்சரிப்பு மேம்பட சில பயிற்சி சொலவடைகள் உண்டு. ஆங்கிலத்தில் டங் ட்விஸ்டர் என்று அழைக்கப்படும் இது போன்றவற்றை அடிக்கடி விளையாட்டாக சொல்ல வைத்தாலே குழந்தைகளின் உச்சரிப்பு தெளிவாகும். உதாரணத்திற்கு சில நா சுழற்றிகள் இங்கே:
- ஏழைக் கிழவன் வாழைப் பழத்தோல் வழுக்கிக் கீழே விழுந்தான்
- ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி, கிழ நரி முதுகுல ஒரு முடி நரை முடி
- கடலோரம் உரல் உருளுது.
- யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை
இது போன்ற விளையாட்டுக்களின் மூலம் நம் பிள்ளைகளின் உச்சரிப்புகளைச் சீராக்கி தமிழின் இனிமையைக் காப்போம் என்ற உறுதி மொழியை இந்த தாய் மொழி தினத்தில் மேற்கொள்வோம்.