ஆண்டாளை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதில் ஆண்டாள் வேடமிட்டு ஒருத்தி மகனாய் பிறந்து பாடலைப் பாடி, மாறுவேடப் போட்டியில் பரிசு பெற்ற காலத்திலிருந்து பிடிக்கும். இறுகப் போடப்பட்ட கொண்டையினாலும், சுவாமி மலையிலிருந்து வாங்கி வந்த (அந்த வயதுக்கு மெகா சைசாக தெரிந்த) பெரிய மாலையின் கனத்தாலும், அடர்த்தியான வாசத்தாலும் அன்றிரவு தலைவலி வந்து அவதிப் பட்டேன்தான். ஆனாலும் அவள் மீதான பாசம் ஒருதுளியும் குறையவில்லை.
அவள் ஐயங்கார் பெண்ணாகவோ, தேவதாசியாகவோ, ,அவளே சொல்லிக் கொண்டபடி இடைச்சியாகவோ, ஏன் ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணாகவோ இருந்தாலும் ஒன்றுமில்லை – அவள் பெண், காதலி, கவிதை எழுதியவள், வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள் வரிசையில் பெண்ணுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த ஒரே புண்ணியவதி, பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் தமிழை படைத்தவள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காதல், கவிதை, பக்தி என மூன்று பேராறுகளை கங்காதரன் போல தனக்குள் அடக்கி நாச்சியார் திருமொழி எனும் ஒற்றை கங்கையாக உலவ விட்டுப் போனவள்.
அவளைப் பற்றிய ஒரு தகராறில் என் கருத்தை பதிவு செய்யாமலிருக்கலாமா? எனவே ஆறின சரக்காக இருந்தாலும் என் கருத்துக்களை எழுதியே தீருவது என்றிருக்கிறேன். இந்த விஷயத்தில் என் கருத்து – வைரமுத்து சொன்னது தவறு, ஆனால் தவறில்லை. நகைச்சுவைக்காக சொல்லவில்லை. தேவரடியாராக இருந்திருக்கலாம் என்ற ஊகத்திற்கு அடிப்படை இல்லை என்பது என் கருத்து. அதே நேரம் அப்படி ஒரு ஊகத்தை முன் வைத்ததாலேயே வைரமுத்து ஆண்டாளை கேவலப்படுத்தி விட்டதாக சொல்வது தவறு. முதலில் இந்த விவகாரத்தில் இருக்கும் அடிப்படையான தரப்புகள் மூன்று.
1. உண்மையிலேயே இப்படி ஒரு கருத்தை மனதால் நினைப்பது கூட பாவம் என்று எண்ணி மருகும் உண்மையான பக்தரகள்(சாமி கும்பிடறவங்க எல்லாருமே பாவிகள், அயோக்கியர்கள், அல்லது அடி முட்டாள்கள் என்று எண்ணுபவர் என்றால் டேக் டைவர்ஷன் ப்ளீஸ், இந்த பதிவு உங்களுக்கானதில்லை)
2. வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், சமூகவியல் பற்றி புரிந்து கொள்ளும் எண்ணத்தில் இந்த விஷயத்தை பார்ப்பவர்கள், பக்தியை ஒதுக்கி வைத்து விட்டு ஆண்டாளின் தமிழை மட்டும் ரசிப்பவர்கள்.
3. இது எவற்றுக்குமே சம்பந்தமே இல்லாது வெறுப்பை விதைக்க இது ஒரு வாய்ப்பு என்று மட்டும் எண்ணி இவ்விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் தரப்பு
முதலில் தேவதாசி, தேவரடியார், பேச்சு வழக்கில் தேவடியாள் – இந்த மரபினரைப் பற்றி என்ன புரிதல் நம் பொதுவெளியில் இருக்கிறது? இன்றைய பாலியல் தொழிலாளர்களின் அன்றைய வடிவம், ஆனால் பிறப்பினடிப்படையில் தனி சாதியாக இருந்தவர்கள், அவர்கள் எல்லோருமே இதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள்…. இது போன்ற பல்வேறு பொதுப் புரிதல்கள் தவறானவை. அதற்காக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் சொன்னது போல் நேரடியாக மோட்சத்திற்கு போவதற்கான வி.ஐ.பி பாஸ் எடுத்துக் கொண்டு பெருமிதத்தோடு வாழ்ந்தவர்களா என்றால் அதுவுமில்லை.
மன்னராட்சி காலகட்டத்தில் பெண் கல்வி வழக்கிலிருந்தது இரண்டே சாதிகளில் மட்டும்தான் – அரச குடும்பத்தினரும், தேவதாசி இனத்துப் பெண்களும் மட்டுமே மொழி, கலை என பல தளங்களிலும் கல்வி கற்க அனுமதிக்கப் பட்டிருந்தனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி இனத்தை சேர்ந்தவர்தான். ஆனால் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தும், அவரே ஏன் இந்த முறையை ஒழிக்கப் போராடினார்? ஏனெனில் மற்றெந்த மரபான விஷயங்களையும் போலவே இந்த அமைப்பிலும் நல்லவையும், அல்லாதவையும் கலந்தே இருந்தன – முத்துலெட்சுமி அம்மா கண்விழித்துப் பார்த்த நேரத்தில் அல்லாதவை மட்டுமே பெருகி வளர்ந்து அந்த அமைப்பே நோய்மை கொண்டு அழுகி, அழித்தொழிக்க வேண்டியதொன்றாக மாறியிருந்தது என்பதே உண்மை.
தேவதாசி முறை என்பது கோவிலில் இருக்கும் இறைவனுக்கே தங்களை முழுதுடைமையாக்கிக் கொண்டு, ஆடல், பாடல் என கலைகளின் மூலம் உபாசிக்கும் உரிமையைக் கடமையாக மேற்கொள்பவர்கள் என்பதுதான் ஏட்டில் இருக்கும் பொருள். இவ்வினத்துப் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, சொத்துரிமை என பல்வேறு உரிமைகளும் இருந்தன. அவர்களுக்கு பாலியல் சுதந்திரமும் இருந்தது. எனவே தங்களுக்கான துணைவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு உறவுக்கும் இவ்வளவு என்று கூலி பெற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒருவரோடு மட்டுமே வாழ்வது என்பதே அவர்களின் நியதி. ஆனால் நிச்சயம் பணம் அதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய கருவியாக இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. அபூர்வமாக வெகுசில பெண்கள் அரசர்களை மணந்ததாக வரலாறு காட்டுகிறது(ராஜராஜன், ஜடாவர்மன்). ஒருவேளை அரசனும் இறைவனே என்ற கணக்கில் அது அனுமதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் நிச்சயம் முறையான திருமண வாழ்வு பெறவில்லை. ஆனால் சமூக அந்தஸ்து என்ற ஒன்றிருந்தது. கலையில் எவ்வளவுக்கு உச்சம் தொடுகிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் விடுதலை பெற்றார்கள் – தங்களுக்கான புரவலர்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை கொண்டிருந்தார்கள். மாதவி கோவலனுக்கு மாலையிட்ட நிகழ்வு ஒரு சுயம்வரத்திற்கு ஒப்பானது என்பதை நினைவு கூரலாம். அல்லாதவர்கள் அம்மா & மாமா கூட்டணியின் பேரங்களை பொறுத்து பொருளியல் லாபங்களை பெற்றார்கள்.
பொதுவாகவே கலைஞர்களின் புகழ், பொருளாதாரம் போன்றவை மேல் கொள்ளும் பொறாமையாலும், அவர்களின் மேதைமையின் முன் சிறுத்துப் போகும் தங்களது சுயமுனைப்பாலும் சமூகத்தின் பெரும்பான்மை அவர்களிடம் விருப்பும் வெறுப்பும் ஒருசேரக் கொள்வது என்றைக்குமான வழக்கம்தானே? ஆனால் அவர்களுக்கு கோவில் நடைமுறைகளில் முக்கியத்துவம் இருந்தது – எனவே ஒரளவு சமூக மதிப்பு இருந்தது. கோவில் மான்யம் எனும் நிலையான வருவாய் இருந்தது – எனவே பொருளாதார பாதுகாப்பும் இருந்தது. இன்றிருக்கும் பாலியல் தொழிலாளர்களின் மோசமான நிலையில் நிச்சயம் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் பாலியல் சுதந்திரம் கொண்டிருந்த ஒரு வகுப்பினரே தவிர பாலியல் தொழிலாளிகள் அல்ல. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கோவில்களின் மானியம் கேள்விக்குரியான போது கலையும், உடலும் மட்டுமே தங்கள் சொத்து என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதனாலேயே 90% தேவதாசி இனப் பெண்கள் நிலச்சுவாந்தார்களின் ஆசை நாயகியராக மாறினர். நடனமோ, இசையோ கச்சேரியை முடித்தபின் தங்களுக்கான சன்மானத்தைப் பெறுவதற்குக் கூட அவர்கள் சந்தனம் பூசுவது போன்ற இழி செயல்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஆனால் அதே பிரிட்டீஷ் கல்வி முறையில் கல்வி பெற்ற முத்துலெட்சுமி அம்மையார் போன்ற அவ்வினத்துப் பெண்கள் இந்த அவமரியாதைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் முடிந்தது. இந்தப் புரிதல்களோடு ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என்ற வைரமுத்துவின் மேற்கோளை அணுகலாம்.
உண்மையான பக்தர்கள்:
ஆண்டாளின் பாசுரங்களை அப்படியே நம்பும் பக்தர்கள், அவளது காதலின் உறுதியை நன்றாகவே உணர முடியும். எனவே அவளது குலத்தை பற்றிய ஆராய்ச்சி பக்தர்களுக்கு தேவையேயில்லை. வைரமுத்து கூறியது சரியோ, தவறோ அதைப்பற்றிய கவலையே உங்களுக்கு தேவையில்லை – யார் பெற்ற மகளாயினும் அவளைப் பெரியாழ்வார் பெற்ற பெண் பிள்ளையாகவே எண்ணி பக்தி செய்துகொண்டிருப்பதில் ஒரு சிக்கலுமில்லை. சீதையைப் பற்றி அவதூறு சொன்ன அயோத்தியின் குடிமக்களைக் கூட ராமன் தண்டித்துவிடவில்லை. அவதூறுகள் என்றும், யாரைப் பற்றியும் எழுந்தவண்ணம்தான் இருக்கும். அதற்கெல்லாம் வருத்தப்படுவதானால் நாட்டுக்குள் வாழவே முடியாது. எனவே அவரவர் கர்மாவின் பலன் அவரவருக்கு என்று எண்ணி தங்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்புவதே உகந்த செயல்.
வரலாற்று நோக்கில் ஆண்டாளின் வரலாறு குறித்து தேடல் உள்ளவர்கள்:
ஆண்டாள் தேவதாசி குலத்துப் பிறந்தவளாக இருக்கலாம் என்ற கருதுகோளை முன்வைப்பவர்கள் அவள் துளசிச் செடியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்ற ஒற்றை காரணத்தையே முன்வைக்கிறார்கள். ஆனால் சீதை, திரௌபதி, மீனாக்ஷி, அலர்மேல்மங்கை உட்பட இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து, பின் தெய்வ நிலையடைந்த அனைவருக்குமே இதே போன்ற கதைகளே கூறப்படுவதை காணலாம். நிலத்தில் கிடைத்த குழந்தை, நெருப்பில் எழுந்து வந்த குழந்தை, பொய்கையில் தாமரையில் கிடைத்த குழந்தை என்றெல்லாம் சொல்லப்படுவது ஆணும் பெண்ணும் முயங்கி உருவான சராசரிப் பெண்ணல்ல என்று காட்டுவதற்கும், தெய்வீகத்தை நிலைநிறுத்துவதற்குமான உத்தியே அன்றி உண்மையாகவே அவர்கள் அப்படி கண்டெடுக்கப் பட்டவர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்பதில்லை. மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி தேவதாசி இனத்தவரை இன்றைய பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. பாலியல் சுரண்டல் உண்டு என்றாலும் கூட ஒரு வகையான சமூக அந்தஸ்தும், புகழும், பொருளாதாரத்தில் குறைந்தபட்ச பாதுகாப்பும் இருந்தது. எனவே ஒருபோதும் ஒரு பெண் குழந்தையை கைவிட வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு எழ வாய்ப்பில்லை. மேலும் தேவதாசி குலத்தினர் அனைவருமே கோவில் பணிக்கும், கலைவாழ்வுக்கும் வந்துவிடுவதில்லை. அவர்களுக்குப் பிறக்கும் ஆண்கள் அச்சாதிக்குள்ளேயே மணமுடித்து முறையான குடும்ப வாழ்வையே வாழ்வர். அந்தக் குடும்பங்களில் பிறக்கும் பெண்கள் பொதுவாழ்வுக்கு வருவதில்லை – மாறாக பிற தேவதாசியருக்கு பிறக்கும் ஆண்களுக்கு மனைவியாகி குடும்ப வாழ்வை வாழ்வர். அண்ணன் தம்பிகளுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளில் அபூர்வமான அழகும், கலைத்திறனும் வாய்த்திருப்பது கண்டால் அத்தைமார்கள் அக்குழந்தைகளை சுவீகாரம் எடுத்துக் கொள்வதும் உண்டு(வைதீக முறைப்படி குழந்தைகளை ஸ்வீகாரம் கொள்ளும் உரிமையும் பிற எந்த வகுப்பு பெண்களுக்கும் கிடையாது – தேவதாசியினருக்கும், அரசகுலப் பெண்களுக்கும் மட்டுமே உரித்தான உரிமையது). மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இத்தகைய ஆண்வழிக் குடும்பத்தில் பிறந்தாலும் அழகின் காரணமாக அத்தையால் ஸ்வீகாரம் கொள்ளப்பட்டவரே. எனவே மன்னர்களின் காலகட்டத்தில் எந்தவொரு தேவதாசிப் பெண்ணும் இவ்வளவு அழகான பெண் குழந்தையை அனாதையாக்கி இருக்க மாட்டார். எனவே ஆண்டாள் தேவதாசி இனத்துப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஊகத்தின் அடிப்படையே தவறு.
இப்பிரச்சனையில் குளிர்காய நினைக்கும் வெறுப்பரசியல் வியாதிகள்
இவர்களுக்கு தமிழும் தெரியாது, கவிதையும் புரியாது, பக்தியும் சுட்டுப் போட்டாலும் வராது. வெறுமனே தங்களுக்கு முக்கியத்துவம் தேடிக் கொள்ளவே இவ்விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இரண்டொரு நாள் முன்பு நியூஸ் 7 விவாதத்தில் வந்த ஒரு ஆண்டாள் பக்தர் ’ஆண்டாள் தமிழை’ என்ற கட்டுரையை என்று ஆரம்பித்தார். நெறியாளர் குறுக்கிட்டு அந்த கட்டுரையின் தலைப்பு ‘தமிழை ஆண்டாள்’ என்று திருத்தியபோது அதுக்கென்னா இப்போ என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மொக்கை வாதத்தை தொடர்ந்தார். ஒரு போதும் இவர்களது மண்டை ஓட்டை தாண்டி எந்த விவாதமும் உள்நுழையப் போவதில்லை. இப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுகிறதாம். இதெல்லாம் மெல்ல மெல்ல ஃபத்வா மனநிலைக்கு சமூகத்தை இழுத்துச் செல்லும் வேலை. வைரமுத்து இன்னமும் சற்று கடினமாக இவர்களுக்கு பதிலளித்திருக்க வேண்டும். பெருமாள் முருகன் போல சட்டரீதியாக எதிர்கொண்டிருக்கலாம். அவரோ விருதுகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கோலும் உடையாமல், பாம்பும் சாகாமல் மன்னிப்பு கேட்கும் படலத்தை தொடர்கிறார். அவரே குனிந்து போகும் நிலையில் மற்றவர்களும் அவருக்காக குரல் கொடுக்க முடியாது போகிறது. இப்படியே போனால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் முன் கட்டுரைகளையும், புனைவுகளையும் திருமடங்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டியாதாகி வரும்.
ஒன்னும் சொல்றதுக்கில்லை….. அந்த ஆண்டாளே ‘போதுண்டா சாமி’ன்னு ஆகி இருப்பாள்…
மிகச் சரியான புரிதல்.
அவராவது ஒரு தடவை சொன்னார்.
இவர்கள் அத்தனை பேரும்
எத்தனை தடவை சொன்னார்களோ. மிக வருத்தம்.