மனுஷ்ய புத்திரனின் தேவி கவிதையை குறித்த என் எதிர் வினைகளின் தொகுப்பு
*********
மனுஷ்யபுத்திரனின் தேவி கவிதையை அது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான ஆதி பராசக்தியை குறித்து எழுதியது எனும் பட்சத்தில் மட்டுமே ஆதரிக்கிறேன். தெய்வ நிலையில் இருக்கும் தேவியைக் குறிக்கையில் மட்டுமே அது கவிதையாக இருக்கும். இப்போது பிரச்சனையான பின்னர் மனுஷ் ஜகா வாங்கிச் சொல்லும் சப்பைக்கட்டின் படி ஏதோ ஒரு மனிதப் பெண்ணான தேவியை குறிப்பதாகக் கொண்டால் ஒரு கவிதை எனும் வகையில் அது படு அபத்தம். ஆனாலும் கூட அந்த அபத்த கவிதையை எழுதவும் அவருக்கு உரிமையுண்டு – ஃபேஸ்புக் மொக்கைகளையே புத்தகமாக்கி தள்ளும் இந்த உலகில் மனுஷுக்கு மட்டும் அந்த உரிமையில்லையா என்ன?
ஏற்கனவே மனுஷ் நடிகை கஸ்தூரியை கிண்டலடித்து ஒரு கவிதையை எழுத, அவரும் பதிலுக்கு கவிதை எனும் பெயரில் கமல் போல எதையோ எழுதி வைக்க, உடனே இவர் கஸ்தூரி என்பது பொதுவான பெயர்தானே என்று ஜகா வாங்கினார். இப்படியே போனால் காக்கை பாடினியார், வெள்ளிவீதியார் போல பழம் பெரும் பெயர் கொண்டவர்களை மட்டும்தான் மனுஷ் விட்டு வைப்பார் போல..
தனக்கு வீரன் எனும் பிம்பமும் வேண்டும், கோர்ட் கேஸ் என்று போனால் மாட்டிக் கொண்டுவிடவும் கூடாது என்று விலாங்கு மீனாக இவர் செய்யும் சர்க்கஸ் வேலைகளுக்கு இலக்கியம் என்று பெயர் வேறு.
முகம்மது நபி கார்ட்டூன் விவகாரத்தில் மத சுதந்திரம், மெல்லுணர்வு என்றெல்லாம் பேசியவர் இப்போது கருத்துரிமையைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். நல்லதுதான் என்றாலும் அவ்வுரிமை எப்போதும் அடுத்தவரை உள் குத்தாக குத்தவே அவருக்கு தேவைப் படுகிறது என்பதுதான் எரிச்சல்.
இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் அதை அவருக்கு கொடுப்பதே ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால் நமக்கு மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி அந்தக் கொடுப்பினை இல்லையே.. என்ன செய்வது?
அதைவிட மிகப் பெரிய அபாயம் – இந்த பிரச்சனையில் ஸ்டாலினோ கனிமொழியோ அவரை ஆதரித்து இன்னமும் அதிகம் பேசாமலிருப்பதுதான். வட்டமிடும் கழுகுகள் கட்டியம் கூறும் இழவெடுத்த கூட்டணி வந்தே தொலைந்து விடுமோ என்று ஒரு கிலியைத் தருது இந்த மௌனம்.
******************
ஆதி சக்தியாகிய தேவியின் அல்குல், கொங்கை பற்றி எல்லாம் விதவிதமாக வர்ணித்து எழுதித் தள்ளியிருக்கும் அயோக்கியப் பயல்களின் லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன் – இந்து மதம் காக்கப் புறப்பட்டிருக்கும் போர்வாள் எச். ராஜா வசம் சேர்ப்பிக்க. அப்புறம் அவர் பாத்து நடவடிக்கைக எடுத்துட்டார்னா இந்து மதம் உய்யோ உய்னு உய்வடைந்துரும். :)))
பிகு: இந்த டேகில் இடுகைகள் தொடரும்
******************
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
==========
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
===========
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.
==============
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே
=============
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
இந்த ஒரு பாட்டுக்கு அர்த்தம் சொல்லிட்டு இந்து மதத்தை காக்க புறப்பட்டு தொலைங்கப்பா போர்வாளுகளா…
இலக்கியமும் தெரியாது, பக்தியும் கிடையாது, தத்துவங்களும் புரியாது.. ஆனா மதத்தை காக்க கிளம்பிர வேண்டியது.. போய் பிரியாணி அண்டாக்களை தூக்கற வேலைய ஒழுங்கா பாருங்க.. அவங்கவங்க மனசிலிருக்கும் தேவிய அவங்கவங்களே காப்பாத்திப்போம் அல்லது வைஸ் வெர்சாவா நடந்துட்டு போவுது..
==============
இதெல்லாம் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியிலிருந்து எடுக்கப் பட்ட பாடல்கள்.
*********************
அடுத்து எங்காளு – பாரதியின் தோத்திர பாடல்களில் சில.
தோத்திரப் பாடல்கள்
மூன்று காதல்
முதலாவது — சரஸ்வதி காதல்
[ராகம் — சரஸ்வதி மனோஹரி] [தாளம் — திஸ்ர ஏகம்]
பிள்ளைப் பிராயத்திலே — அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே — மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் — அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் — கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா! 1
ஆடிவரு கையிலே — அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், — அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், — பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ? மென்றால், — விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!
2
ஆற்றங் கரைதனிலே — தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், — அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே ?அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, — இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! 3
சித்தந் தளர்ந்ததுண்டோ? — கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் — பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் — பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் — வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4
இரண்டாவது — லக்ஷ்மி காதல்
[ராகம்-ஸ்ரீ ராகம்] [தாளம்-திஸ்ர ஏகம்]
இந்த நிலையினிலே — அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் — அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் — அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தின முதலா — நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! 5
புன்னகை செய்திடுவாள், — அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சறறென்
முன்னின்று பார்த்திடுவாள், — அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர்
என்ன பிழைகள் கண்டோ — அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள் அங்கு
சின்னமும் பின்னமுமா — மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! 6
காட்டு வழிகளிலே, — மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே
நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே, — சில
வீரரிடத்திலும், வேந்தரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் — கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா! 7
மூன்றாவது — காளி காதல்
[ராகம் — புன்னாகவராளி] [தாளம்-திஸ்ர ஏகம்]
பின்னொர் இராவினிலே — கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே — களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! — இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! — பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8
செல்வங்கள் பொங்கிவரும்; — நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே — இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை — இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை — நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
===========================
தோத்திரப் பாடல்கள்
திருவே நினைக்காதல் கொண்டேனே — நினது திரு
உருவே மறவா திருந்தேனே — பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே — நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே — அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே — மிகவும்நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே — இடைம்நடுவில்
பையச் சதிகள்செய் தாயே — அதனிலுமென்
மையல் வளர்தல்கண் டாயே — அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே — நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே — பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே — அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே — அடியெனது
தேனே, எனதிரு கண்ணே, — எனையுகந்து
தானே வருந்திருப் — பெண்ணே!
(இந்தக் காதல் மட்டும் அந்தாளுக்கு கடைசி வரை கைகூடவே இல்லை.. அது இந்த நாட்டின் துர்பாக்கியம். வேறென்ன?)
******************
வரலக்ஷ்மிக்குப் பிரார்த்தனைகள் நம் லக்ஷ்மி வழியாகச் செய்தாச்சு. அருமைத் தமிழ்,அபிராமித் தமிழ்,பாரதியின் தமிழ் எல்லாம் என் பாக்கியமாக வந்தது.
இதில் பஸ்மாசுரனையெல்லாம் பற்றிக் கவலைப் பட மறந்தே போய்விட்டது.