பள்ளி வேனிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்த சுதாவை நெய் மணம் வரவேற்றது. வேக வேகமாய் ஷூவை கழற்றி வீசிவிட்டு கிச்சனுக்குள் தலையை நீட்டி, “பாட்டி,, இன்னிக்கு என்ன ஸ்பெஷல், ஸ்வீட்டா காரமா” என்று கத்தினாள்.
”ஸ்வீட்தான் குட்டிம்மா. மைசூர்பாகு கிளறியிருக்கேன்” என்றவாறே தட்டில் பரத்திய மாவுக் கலவையில் துண்டமிட வாகாக கோடுகளை கத்தி கொண்டு கீறி விட்டார் பாட்டி.
”நீ மட்டும் எப்படி பாட்டி ஸ்கேல் இல்லாமலே இவ்ளோ ஸ்ட்ரெயிட்டா கோடு போடற” என்று கேட்டவாறே கட்டிக் கொள்ள வந்த சுதாவை சிரித்துக் கொண்டே விலக்கினார் பாட்டி. ”சரிதான், உன் அளப்பெல்லாம் அப்புறம். முதலில் போய் ட்ரெஸ் மாத்தி, கைகால் அலம்பிட்டு, ஸ்வாமி நமஸ்காரம் பண்ணுவயாம். நான் நேத்து செஞ்ச பட்சணமெல்லாம் எடுத்து தருவேனாம், சரியா?” என்றார்.
”அப்ப மைசூர்பாகு” என்றாள் சுதா. ”அது ஆறினப்புறம்தான் வில்லை போட முடியும். எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்” என்றார் பாட்டி.
பாட்டி சொன்னபடி தயாராகி வந்தவள் தட்டில் பலகாரங்களுடன் ஹால் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். அங்கே உட்கார்ந்து அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாத்தாவை பாத்து “வருஷம் முழுக்க வர ஃபங்கஷன்ஸ்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த தீபாவளிதான் தாத்தா” என்றாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ”ஏண்டாம்மா அப்படி?” என்றார் தாத்தா.
“ஆமா, இப்ப பொங்கல்னா… பொங்கல் மட்டும்தான் செய்வாங்க. கார்த்திகைன்னா பொரி உருண்டை மட்டுந்தான். ஆனா தீபாவளின்னா எவ்ளோ வெரைட்டி ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் செய்யறாங்க. அது மட்டும் இல்ல தாத்தா. மத்த பண்டிகைக்கெல்லாம் ரொம்ப நேரம் நீங்க பூஜை பண்ணுவீங்க. அதெல்லாம் முடிச்சப்பறம்தான் சாப்பிடவே முடியும். அதுக்குள்ள சாப்பிடற இண்ட்ரஸ்டே போயிடும். ஆனா தீபாவளிக்கு பாருங்க, அப்பப்ப செஞ்சு, அப்பப்ப சாப்டுகிட்டே இருக்கலாம். ரொம்ப பெரிய பூஜைலாம் கிடையாது. செமயான பண்டிகைன்னா அது இதான் தாத்தா.” என்று பலகாரங்களை ரசித்து சாப்பிட்டபடியே சுதா சொல்வதைக் கேட்டு சிரித்தபடி தலையாட்டினார் தாத்தா.
“தாத்தா, எனக்கொரு சந்தேகம்.. என் கிளாஸ்ல, ஒரு வடநட்டுப் பொண்ணு இருக்கா, டில்லிலேர்ந்து வந்தா. அவ சொல்றா தீபாவளி அன்னிக்கு வீடு முழுக்க விளக்கேத்தி வச்சிருப்பாங்கன்னு.. அப்படியா? நாமெல்லாம் கார்த்திகைக்குத்தானே வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்?”
”ஆமாம்மா… வட இந்தியாவுல தீபாவளி அன்னிக்கு நிறைய விளக்குகளை ஏத்தி வைக்கற வழக்கம் இருக்கு. சொல்லப் போனா இதை நம்மூர் கார்த்திகை மாதிரியே ரெண்டு மூனு நாள் கொண்டாடுவாங்க.”
”அது ஏன் தாத்தா அப்படி? அவங்க மட்டும் ஏன் வித்தியாசமா கொண்டாடறாங்க? அதோட அவ எதோ ராமருக்காக கொண்டாடற பண்டிகைன்னு வேற சொன்னாளே? நாம கிருஷ்ணர் நரகாசுரனை கொன்னதுக்காகத்தானே தீபாவளி கொண்டாடறோம்?”
”வட இந்தியர்களைப் பொறுத்தவரை, ராமர் சீதையை மீட்டுகிட்டு, தன் வனவாசத்தையும் முடிச்சுட்டு அயோத்திக்கு திரும்பி வந்த நாள் இது. அதுனால ராஜாவை வரவேற்க அயோத்தில இருந்த ஜனங்க எல்லாம் வீட்டுல வரிசையா விளேக்கித்தி அலங்காரம் பண்ணினாப்பல இப்பவும் விளக்கேத்தி அலங்காரம் பண்ணி கொண்டாடறாங்க.
இந்துக்கள் மட்டும் இல்ல, சீக்கிய மதத்துக்காரங்களும், சமண மதத்துக்காரங்களும் கூட தீபாவளிய வேறு காரணங்களுக்காக கொண்டாடறாங்க.”
”அப்படியா?”
”ஆமா செல்லம், சீக்கியர்களை பொறுத்தவரைக்கும் ஹர்மந்திர் சாஹிப் அப்படின்ற அவங்களோட புனிதமான கோவில் கட்டத் துவங்கின நாள்னு தீபாவளிய கொண்டாடறாங்க. அந்தக் கோவிலைத்தான் நாம இப்ப பொற்கோவில்னு சொல்றோம். அமிர்தசர்ல இருக்கற இந்தக் கோவில் அவங்களுக்கு ரொம்ப முக்கியமான புனிதத் தலம்.
அதே மாதிரி சமணர்கள்; அதாவது ஜெயின்கள் அவங்களோட 24வது தீர்த்தங்கரரான மகாவீர் முக்தியடைந்த நாள்னு இந்த நாளை கொண்டாடறாங்க.
அன்னிக்குத்தான் மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து பிறந்தாங்க, அதுனால லக்ஷ்மி பூஜை செய்யறது விசேஷம்னும் சொல்வாங்க. கேதார கௌரி விரதம்னு ஒரு பூஜைய பார்வதி செஞ்சு அதன் மூலம் சிவன் உடம்பில் பாதி இடம் வாங்கி அர்த்தநாரீஸ்வரர் ஆனதும் இன்னிக்குத்தான்னும் சில புராணங்கள் சொல்லுது.”
“ஒரே திருவிழாவுக்கு எத்தனை கதைங்க..”
”ஆமா! பொதுவா தீபாவளி வரக்கூடிய ஐப்பசி மாசமும் சரி, திருக்கார்த்திகை வரக்கூடிய கார்த்திகை மாசமும் சரி, நல்ல அடைமழைக்கான மாசங்கள். அந்த சமயத்துல நிறைய தொற்று நோய்கள் எல்லாம் வரும். அந்த நோய்களை தீய சக்திகள்னு உருவகிச்சு, நிறைய விளக்கு ஏற்றி வைக்கறதால அதைத் தடுக்கலாம்ன்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்தான் இதெல்லாமே.
அறிவியல் முன்னேறி, கொள்ளை நோய்கள் எல்லாமே ஒழிஞ்சாச்சு. இரவுக்கும் பகலுக்கும் அதிக வித்தியாசம் இல்லாத அளவுக்கு விளக்குகள் வந்தாச்சு. இருந்தாலும் இப்பவும் நாம அந்த பண்டிகைகளைக் கொண்டாடறோம். நீ சொன்னியே, விதவிதமான பலகாரம் சாப்பிட ஜாலியா இருக்குன்னு, அது ஒரு காரணம். அடுத்தது அந்த சந்தோஷத்தை மத்தவங்களோட பகிர்ந்துக்கலாம்ன்றது இன்னொரு காரணம். வாரம் முழுக்க ஓடிக்கிட்டு இருக்கோம், இந்த மாதிரி பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாருக்கும் ஒரு மாறுதலையும், உற்சாகத்தையும் தரதுக்குத்தான் கொண்டாடறோம்.”
”அப்படின்னா நாம் ஏன் அடிக்கடி தீபாவளியையே கொண்டாடி உற்சாகமாகிக்க கூடாது? ரொம்ப நேரம் வெயிட் பண்ணி சாப்பிடறா மாதிரி பண்டிகையெல்லாம் கூட தீபாவளியா மாத்திடலாமா தாத்தா?” சுதா எதிர்பார்ப்போடு கேட்ட விதத்தில் தாத்தாவுக்கு புரையேறிவிடும் அளவுக்கு சிரிப்பு வந்தது.
சிரித்து முடித்துவிட்டு, ”சரிடா செல்லம். நீ சொல்ல வரது எனக்கு புரியுது. இனி எந்த பூஜைன்னாலும் அதை காலைல சீக்கிரமா முடிச்சுடறேன். நீ ரெடியானதும் உடனே சாப்பிடறா மாதிரி மாத்திக்கறேன், சரியா?” என்றார்.
அதற்குள் தட்டு காலியாகி விட்டிருக்க சந்தோஷமாய் ”சூப்பர் தாத்தா” என்று சொல்லி விட்டு விளையாட பூங்காவுக்கு செல்ல தயாரானாள் சுதா.
***********
டிவியை வெறித்துக் கொண்டிருந்த விஜயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு கேட்டார் “என்னடா கண்ணு, உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விளையாடிட்டு இருக்காங்க. நீ மட்டும் ஏன் போகல?”
“போங்க தாத்தா. எல்லாரும் விளையாடிட்டு இருட்டினதும் பட்டாசு எடுத்துட்டு வருவாங்க. நான் மட்டும் அப்ப வீட்டுக்கு வந்து உக்காந்துக்கணும். ஏண்டா, உன்கிட்ட இல்லைன்னா நாங்க தரோம்னெல்லாம் சொல்வாங்க. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு” என்று சொன்ன பேரனின் தலையை கோதினார்.
“நீ அவங்களுக்கு நாம ஏன் வாங்கறதில்லனு சொல்றதுதானே?” என்றவுடன் சூள் கொட்டிவிட்டு டிவியை வெறித்தான் விஜய்.
“ரொம்ப முக்கியமா டிவில எதுவும் இல்லனா நாம கொஞ்சம் பேசலாமா விஜய்?” என்று மென்மையாக கேட்டார் தாத்தா.
“பேசலாம் தாத்தா. நானும் ரொம்ப நேரமா போரடிச்சுப் போய்தான் உக்காந்திருக்கேன். அந்த பசங்கல்லாம் க்ராக்கர்ஸ் வெடிச்சு முடிச்சுட்டு போனப்புறம்தான் நான் போய் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டலாம்னு இருக்கேன்” என்றபடி டிவியை ரிமொட்டால் அணைத்து விட்டு தாத்தா பக்கம் திரும்பி உட்கார்ந்தான்.
”பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நீ ஒரு சின்ன வேலை செய்யணுமே. ஒரு நாலைஞ்சு மாசம் முன்னாடி, சரியா சொல்லணும்னா ஜூன் மாசம் 5ந்தேதி உலக சுற்றுச் சூழல் நாளுக்காக உங்க ஸ்கூலில் ஒரு ப்ராஜக்ட் செய்ய சொல்லியிருந்தாங்களே, உன் சார்ட்டுக்கு கூட உங்க மிஸ் ஸ்டார் கொடுத்திருந்தாங்களே, அதை தேடி எடுத்துட்டு வரியா? ”
”இதோ எடுத்துட்டு வரேன் தாத்தா” என்றபடி தன் ஸ்டடி ரூமிற்கு சென்று பத்து நிமிடத் தேடலுக்குப் பின் குழல் போல சுருட்டப் பட்டிருந்த மஞ்சள் நிற சார்ட் அட்டையொன்றை எடுத்துக் கொண்டு வந்தான் விஜய்.
”இதுதான் தாத்தா அந்த world environment dayக்கான ப்ராஜக்ட்” என்று தாத்தாவிடம் நீட்டினான்.
அந்த சார்ட்டை சுருள் விரித்து, நேராக்கி, ஓர் அட்டையில் வைத்து ஓரங்களில் கிளிப்புகளைப் போட்டார். இப்போது அதில் இருந்த எழுத்துக்களும், வெட்டி ஒட்டப்பட்டிருந்த படங்களும் தெளிவாக தெரிந்தது.
”சரி, இப்ப இதுல என்ன எழுதிருக்குன்னு பாக்கலாமா” என்று ஆரம்பித்த தாத்தாவிடம் “ஐயோ தாத்தா, இதெல்லாமே எனக்கு நல்லாத் தெரியுமே. நானும் அம்மாவும் சேர்ந்துதானே இந்த சார்ட்டே ரெடி பண்ணினோம். ஒன்னொன்னுத்தையும் அப்பவே அம்மா டீட்டெயிலா எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டாங்க, திரும்ப அதையே சொல்லி போரடிக்காதீங்க.” என்று சொல்லிக் கொண்டே எழப் போனான் விஜய்.
”இதுல இருக்கற எல்லாம் ஏற்கனவே உனக்கு தெரியும்னா நீ இப்படி அப்செட் ஆகி கீழ விளையாடப் போகாம போரடிச்சு உக்கார அவசியமே இல்லையே?” என்று சின்ன சிரிப்போடு கேட்டார் தாத்தா.
“இதுல இருக்கறதுக்கும், நான் விளையாட போகாம இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?” என்று தாத்தாவிடம் கேட்டுக் கொண்டே குழப்பமாக சார்ட்டை பார்த்தான் விஜய்.
”அதுல காற்று மாசு, நீர் மாசு, இப்படி வரிசையாக போட்டிருக்கும் தலைப்புகளில் ஒலி மாசு(noise pollution) அப்படின்றதுக்கு கீழ என்ன போட்ருக்குன்னு பாரு. எதெல்லாம் ஒலி மாசை அதிகரிக்குதுன்னு படி” என்றார் தாத்தா.
“தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களின் ஓசை, விமானம், கார் போன்றவற்றின் ஓசை, ஒலிப் பெருக்கிகள், பட்டாசு” என்று படித்து வந்தவன் “ஓ.. இதை காமிக்கத்தான் இந்த ப்ராஜெக்ட எடுத்துட்டு வர சொன்னீங்களா… இதெல்லாம்தான் அன்னிக்கே அப்பா சொல்லிட்டாரே.. வெடிக்கும் போது சத்தம் வரதால நாய்ஸ் பொல்யூஷன், புகை வரதால ஏர் பொல்யூஷன் எல்லாந்தான் அன்னிக்கே விளக்கிட்டாரே.. நீங்க வேற அதையே சொல்லி போர் அடிக்காதீங்க தாத்தா. பொல்யூஷன்னா அதுக்காக நான் மட்டும் பட்டாசு வெடிக்காம இருந்தா சரியா போயிடுமா? எல்லாரும் செய்யறப்ப நான் மட்டும் செய்யாம இருந்தா என்ன பிரயோஜனமாம்?” செல்ல சிணுங்கலாக பேசிக் கொண்டிருந்த பேரன் முடிக்கும் வரைக்கும் பொறுமையாக காத்திருந்த தாத்தா “நான் ஒரு கதை சொல்லவா” என்றார். கதை என்றதும் உற்சாகமாக பட்டாசு, சார்ட் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தலையாட்டினான் விஜய்.
“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். நாட்ல ஒரு திருவிழா வந்தது. அதுக்கு நிறைய பால் தேவைப்பட்டது. அதுனால ராஜா என்ன செஞ்சானாம் ரெண்டு ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய அண்டா செய்ய சொன்னானாம். அதை எடுத்து அரண்மணைக்கு வெளில வச்சானாம். நாட்ல இருக்கற ஒவ்வொரு குடும்பத்துலேர்ந்தும் ஒரு லிட்டர் பால் கொண்டு வந்து அந்த அண்டால ஊத்தணும்னு ஜனங்க மத்தில தண்டோரா போட சொன்னானாம்.”
“ம், எல்லாரும் கொண்டு வந்து ஊத்தினாங்களா?”
”ஆமா, அங்க பெரிய ஏணி ஒன்னு அந்த அண்டா பக்கத்துல சாத்தி வச்சிருந்தாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருத்தர் ஒரு சொம்புல பால் எடுத்துட்டுபோய் அந்த ஏணி மேல ஏறி, அண்டாக்குள்ள எட்டி பாக்காம சொம்புல கொண்டு வந்த பாலை ஊத்திட்டு வந்தாங்களாம். யார் யார் வந்து ஊத்தறாங்கன்னு ஒரு அமைச்சர் உக்காந்து பதிவு பண்ணிகிட்டிருந்தராம்”
“வாவ், சூப்பர். அப்ப அண்டா நிறைய பால் சேர்ந்திருக்குமே?”
“இரு, அவசரப் படாதே. எல்லாரும் கொண்டு வந்து ஊத்திட்டு போனதும் ராஜா அமைச்சர்கிட்ட கேட்டாராம், நம்ம குடிமக்களில் யாரும் பாக்கி இல்லயேன்னு. இல்ல ராஜா, எல்லாரும் வந்து அண்டால பால ஊத்திட்டாங்கன்னு அமைச்சர் சொன்னதும் சந்தோஷமா ராஜா அரண்மணைல இருந்த உப்பரிகைக்குப் போனாராம்”
“உப்பரிகைன்னா என்ன தாத்தா?”
“நம்ம பால்கனி மாதிரிப்பா.” என்று அவன் சந்தேகத்தை களைந்துவிட்டு கதையைத் தொடர்ந்தார் தாத்தா. “மேலேர்ந்து பெருமிதமா அண்டாவ எட்டிப் பார்த்த ராஜாவுக்கு ஒரே அதிர்ச்சி. ஏன்னா அண்டா முழுக்க தண்ணிதான் ரொம்பியிருந்தது. ஒரு சொட்டு பால் கூட இல்ல”
“ஐயோ, ஏன் அப்படி?”
”ஊர்ல ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு கேட்டப்ப, எல்லாருமே மத்தவங்க எல்லாரும் பால்தானே ஊத்துவாங்க, நாம மட்டும் ஒரு சொம்பு தண்ணி ஊத்தினா தெரியவா போகுதுன்னுதான் அப்படி செஞ்சோம்னு சொன்னாங்களாம்.”
அமைதியாக யோசித்துக் கொண்டிருந்த பேரனின் முகம் தாத்தாவுக்கு தான் நினைத்ததை அவன் புரிந்து கொண்டுவிட்டான் என்று உணர்த்தியது.
“நான் மட்டும் வெடிச்சுக்கறேனே, அதுனால கொஞ்சூண்டு புகைதானே காத்துல கலக்கும், கொஞ்சூண்டு சத்தம்தானேன்னு எல்லாருமே நினைச்சுகிட்டிருந்தா எப்பத்தான் அதுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கறது விஜய்? அது மட்டுமில்லாம பெரும்பாலான பட்டாசு தொழிற்சாலைகளில் சின்னக் குழந்தைகள்தான் வேலை பாக்கறாங்களாம். உன் வயசு, இல்லாட்டி உன்னை விட சின்ன பிள்ளைங்க படிக்கப் போகாம, உழைக்கறத தடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம் இல்லயா?”
“இதெல்லாம் வேண்டா வெறுப்பா இல்லாம மகிழ்சியோட செய்யணும் கண்ணு. மனசார இதெல்லாம் தப்புன்னு நினைச்சாக்க, நாளைலேர்ந்து தைரியமா கீழ விளையாட போ. விளையாடி முடிச்சதும் கிளம்பும் போது உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நாங்க பட்டாசு வாங்கலைன்னு கூசிகிட்டே சொல்லாம அப்பா சொன்ன காரணங்கள் எல்லாத்தையும் அவங்களுக்கும் விளக்கமா சொல்லு. அடுத்தடுத்த வருஷங்களில் அவங்களும் கூட உன்னை மாதிரி மாறும் போது அண்டா முழுக்க பாலா மாறும்டா கண்ணு” என்றார் தாத்தா.
”சரி, தாத்தா நான் அப்ப நாளைக்கு சந்தோஷமா விளையாட போறேன்” என்று சொல்லிவிட்டு தனது சார்ட்டை மீண்டும் சுருட்டி எடுத்த இடத்தில் கொண்டுபோய் வைக்கப் போனான் விஜய்.
நவம்பர் 2018 செல்லமே இதழில் வெளியான கட்டுரை
இரண்டு குழந்தைகளுக்கும் நல்ல தாத்தா பாட்டி அமைந்தது மிக முக்கியம்.
இயல்பாகவே நல்ல குழந்தைகளை நல்வழிப் படுத்துவது
எத்தனை அழகு. பட்சணமும் பட்டாசும் ஜோர் லக்ஷ்மி.