ஆட்டிசம் என்பது ஒரு குழந்தையின் முதல் மூன்று வருடங்களுக்குள் உருவாகி, வாழ்நாள் முழுமைக்கும் நீடித்து இருக்கக் கூடிய ஒரு வளர்ச்சி நிலைக் குறைபாடு. புறஉலகைப் புரிந்து கொள்ளும் விதம், தகவல் தொடர்பு, கற்பனை வளம் ஆகியவற்றை பாதிக்கும் இக்குறைபாட்டினை குழந்தையின் 18வது மாதத்திலிருந்து கண்டுபிடிக்க முடியும்.
இவர்களுக்கு பார்த்தல், கேட்டல், தொடு உணர்ச்சி போன்ற உணர்வுகளின் மூலம் பெறும் தகவல்களை தொகுத்து புரிந்து கொள்வதில் (sensory processing) இவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இருக்கும். எனவே எந்த வகையிலும் மற்றவர்களோடு தகவல் தொடர்பு கொள்வது இவர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். மற்றவர்களை கவனிக்காது தங்களது உலகிலேயே மூழ்கியிருக்க விரும்பும் இவர்களுக்கு உலகுடன் தொடர்பை ஏற்படுத்தும் பொறுப்பு முழுமையும் பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
சராசரியான குழந்தை(Neuro Typical) வளர்ப்பு என்பதிலும் நிறைய படிநிலைகள் உண்டு. அவர்களின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு தர வேண்டும். நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். படிப்பில் பின் தங்கியிருந்தால் தனிப்பயிற்சி வகுப்புகள் அனுப்பலாம். இசை, ஓவியம், விளையாட்டு என ஏதேனும் துறையில் ஆர்வமிருந்தால் அதற்கான பயிற்சி வகுப்புகள் அனுப்பலாம். அதே போல சிறப்புக் குழந்தைகள், அதிலும் ஆட்டிச நிலையாளர்களான குழந்தைகளை வளர்ப்பதிலும் பல்வேறு படிநிலைகள் உள்ளன. எல்லாக் குழந்தைகளையும் போல உடல்நலம் பேணுதல் தவிர்த்து அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய வழிகாட்டல்களை நான்காகப் பிரிக்கலாம்.
- தகவல் தொடர்பு திறனை வலிமையாக்குதல்
- தினசரி வாழ்வுக்குத் தேவையான செயல்களில் தற்சார்பு ஏற்படுத்துதல்
- அறிவு வளர்ச்சிக்குத் தேவையான கல்வி அளித்தல்.
- எதிர்கால வாழ்வுக்கு ஆதாரமாக தொழிற்பயிற்சி அளித்தல்
இவற்றில் தகவல் தொடர்புத் திறனை வலிமையாக்குதல் என்பதே மற்ற மூன்று செயல்களுக்கும் கூட அடிப்படையாக அமையும் என்பதால் அதில் வெற்றி பெற்ற சில பெற்றோரின் வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஆட்டிச நிலையாளர்களுக்கு மொழிப்பயிற்சி என்பது தனியாக ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ போர்டு/பேப்பர் மற்றும் பென்சில் என்று அமர்ந்து சொல்லித்தரும் விஷயம் அல்ல. அது ஒரு தொடர் செயல்.
உதாரணத்திற்கு ஆங்கிலம் தெரியாத ஓர் ஊருக்குச் சென்று அங்கு பேசப்படும் மொழியை நீங்கள் கற்பதை நினைத்துப் பாருங்கள். அதாவது அவர்கள் மொழி உங்களுக்கும், உங்கள் மொழி அவர்களுக்கும் தெரியாது. பொதுவான மொழியும் எதுவுமில்லாத சூழலில் முதலில் பொருட்களைப் பார்த்து அதற்கு அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிப்பீர்கள். அதாவது தண்ணீருக்கு அம்மொழியில் என்ன பெயர், பாலுக்கு என்ன பெயர் என்றெல்லாம் வரிசையாக கண்டுபிடித்துக் கொள்வோம். பிறகு செயல்களுக்கு அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கண்டுபிடிப்போம். அதன்பிறகு உணர்வுகளைச் சொல்லும் வார்த்தைகளைக் ஒரளவு கற்றுக்கொள்ள முடியும்.
இதே நிலைதான் ஆட்டிச நிலையாளர்களுடையதும். முதலில் அவர்களுக்குப் பொருள் – பெயர் தொடர்பைக் கற்றுத்தரலாம் . ஒவ்வொரு பொருளையும் காட்டி அதன் பெயர்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் நேரடியாகக் காட்டி சொல்லித் தர முடியாது என்பதால் படங்களைக் காட்டி பெயர்களை சொல்லித் தரலாம். இதற்கு Picture book,flash card போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது நாமே நோட்டுப் புத்தகத்தில் வரைந்தும் சொல்லித்தரலாம்.
அடுத்தது வினைச்சொற்கள், அதற்குப் பிறகு உணர்ச்சிகளைச் சொல்வதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு இணை பேச்சு(Parllael Talk) என்ற முறை பயனுள்ளது. அதாவது எல்லா செயல்களின் போதும் பின்னணியில் பேசிக் கொண்டே இருப்பது. அதாவது குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது என எல்லாச் செயல்களின்போதும் அச்செயல்களின் வர்ணனையை கொடுத்துக் கொண்டே இருப்பது குழந்தைகளின் மொழி வளர்ச்சியை அதிகரிக்கும்.
குரல் எழும்பாத ஆட்டிச நிலையாளர்களுக்கும் (non verbal) இதே வரிசையில் மொழியை கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர்கள் எழுதவோ, தட்டச்சு செய்யவோ கற்றுக்கொள்ளும்போது இந்த மொழியறிவைக்கொண்டு அவர்கள் நம்முடன் உரையாடத் தொடங்குவர்.
முற்றிலும் பேச முடியாத, ஆனால் எழுதியோ,தட்டச்சு செய்வதன் மூலமோ தன் உணர்வுகளைப் பதிவுசெய்யும் பல சாதனையாளர்கள் இங்குண்டு. எனவே மொழிப்பயிற்சி என்பதை இடைவிடாத ஒரு செயலாக தளராத நம்பிக்கையோடு நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
ஒரளவு மொழியின் அடிப்படைகளை கற்பித்த பின்னர் படம்காட்டிக் கதைசொல்லும் முறையில் மொழிப் பயிற்சியினைத் தொடரலாம். அடுத்த கட்டமாக நேரடியாக அவர்களையே புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கலாம். அல்லது நாம் புத்தகத்தை அவர்களுக்குப் படித்துக் காட்டலாம்.
பேசத் துவங்கினாலும் கூட ஆரம்ப நிலையில் ஆட்டிச நிலையாளர்கள் பெரும்பாலும் பெயர் சொற்களாகவே பேசுவர். அப்படி ஒற்றை வார்த்தையாகப் பேசினாலும் நாம் இடைவிடாமல் முழு வாக்கியத்தையும் சொல்லிய பின்னரே அப்பொருளை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ”தண்ணி” என்று குழந்தை சொன்னால் உடனே நாம் நீரை எடுத்து கொடுத்துவிடும் போது அவர்கள் இந்த ஒற்றை வார்த்தையே போதும் என்று நினைப்பர். எனவே “கண்ணனுக்கு தண்ணி வேணுமா? இரு, அம்மா எடுத்துத் தரேன்” என்பதாக நீளமாகப் பேசுவதன் மூலம் அவர்களின் பேச்சை வளப்படுத்தலாம். அடுத்த கட்டத்தில் அவர்கள் நாம் சொல்வதை அப்படியே பிரதிபலிப்பர். “கண்ணாவுக்கு தண்ணி வேணுமா?”, “கண்ணாவுக்கு மூச்சா வருதா?” என்பது போல சொல்லுவார்கள். அப்போது மீண்டும் வார்த்தைகளை திருத்த வேண்டும். ”எனக்கு தண்ணி வேணும்”, “மூச்சா போகணும்” என்று சொல்ல வைப்பதன் மூலம் அவர்களின் பேச்சை செம்மைப்படுத்தலாம்.
வெவ்வேறு கதைகளைப் படித்துக் காட்டுவதன் மூலம் வாழ்வில் ஏற்படக் கூடிய பல்வேறு சந்தர்ப்ப சூழல்கள், அவற்றில் நாம் பேச வேண்டிய வாக்கியங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்கிறோம். எனவே இதுவும் அவர்களின் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத செயலாகும்.
அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆட்டிச நிலையாளர் கிருஷ்ணா நாராயணனுக்கு பேச முடியாத போதும் இது வரை 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தனது சுயசரிதை நூலில் 23வது வயதில் தான் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த 23 ஆண்டுகளும அவரது பெற்றோர் அவரது கல்வியை நிறுத்தவே இல்லை என்பதுதான் அவர் இன்று அடைந்துள்ள உயரத்திற்குக் காரணம். எழுத்துக்களையும், வார்த்தைகளையும் கற்பித்த அவரது தாய் ஒரு கட்டத்திற்குப் பின் கதைப் புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக் காண்பிக்க ஆரம்பித்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தியக் காவியங்களையும், சமகால இலக்கியங்களையும் படித்துக் காண்பித்த போது தன் மகனின் கண்களில் தெரியும் ஒளியே அவனுக்குப் புரிகிறது என்று காட்டியது என்கிறார் அவரது தாய் ஜலஜா நாராயணன். அந்தக் கல்வியே நீண்ட முயற்சிக்குப் பின் எழுதும் திறன் பெற்ற கிருஷ்ணாவை ஒரு எழுத்தாளராக மாற்றியது.
எனக்குத் தெரிந்த தாய் ஒருவர் கல்வியில் ஆர்வம் காட்டாத தன் மகனுக்கு கணிணியில் கேம் விளையாடுவதில் இருக்கும் ஆர்வத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். அவனுக்கு கணிணி தேவைப்படுகையில் அதற்கான கடவுச் சொல்லை அம்மாவிடம் கேட்பான். அதை ஒரு காகிதத்தில் எழுதி, சுவற்றில் ஒட்டினார் அந்தத் தாய். முதலில் ஒரு 10 நாட்களுக்கு அவனது பெயரே கடவுச் சொல்லாக இருந்தது. அவ்வார்த்தையின் ஸ்பெல்லிங்கை அவன் கற்றுக் கொண்டபிறகு அடுத்து ஆப்பிள், பால் என அகர வரிசையில் புதுப் புது வார்த்தைகளாக கடவுச் சொற்களை மாற்றியே வாசிக்கும் அளவுக்கு அவனை மாற்றியிருக்கிறார் அவனது தாய்.
எனவே கற்பனை வளத்தோடும், குழந்தை எப்படியும் கற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையோடும் இடைவிடாது கற்பித்துக் கொண்டே இருப்பது நம் கடமை. அது போலவே முழுமையாக அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலை வரும் வரையில் அவர்களது பேச்சற்ற மொழியை நாமும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உடல் மொழியைப் புரிந்து கொள்வது, வார்த்தைகளை அரைகுறையாக அவர்கள் சொன்னாலும் பின்னணியை வைத்து அதை ஊகிப்பது என்று அவர்களைத் மனதால் பின் தொடர்வது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ஐஸ்வர்யா ஸ்ரீராம் எனும் ஆட்டிச நிலையாளர் புதிர்(puzzle)களை அடுக்குவதில் தனித்துவமான திறன் கொண்டவர். 500, 1000 துண்டுகளாக்கப்பட்ட புதிர்களையும் சில மணி நேரங்களில் அனாயசமாகப் பொருத்திவிடும் திறன் பெற்றவர். இவரது அன்றாடச் செயல்பாடுகளை நாட்குறிப்பாக எழுதும்படி அவரது பெற்றோர் தூண்டினர். ஆரம்பத்தில் தினசரி நடவடிக்கைகளை வாக்கியங்களாக அவரது அம்மாவோ அப்பாவோ சொல்லச் சொல்ல எழுதியவர், பின்னர் தானாகவே தனது நாட்குறிப்பை எழுதத் தொடங்கினார். அவளுக்கென்று ஒரு மனம் என்ற பெயரில் இந்நூல் இரு வருடங்களுக்கு முன்பு வெளியிடப் பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்நூல் ஆட்டிச நிலையாளர்களுக்கு உணர்ச்சிகள் இல்லை என்ற மாயையை அடித்து நொறுக்குகிறது. அப்பெண்ணின் நகைச்சுவை, கோபம், வருத்தம் போன்றவையும், நம் உலகில் பயனற்றவை என்று நாம் நினைக்கும் சின்னஞ்சிறு பொருட்கள் அவளுக்கு எவ்வளவு அருமையானவையாக உள்ளது என்பதையும் இந்நூல தன் மழலை மொழியில் விவரிக்கிறது.
இவர்களைப் போன்று எழுத/பேசத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, எவ்வித சிறப்பான ஆற்றலையும் வெளிப்படுத்தாத சராசரியான ஆட்டிச நிலையாளர்களும் கூட நம் எல்லோரையும் போன்றே ரத்தமும் சதையுமான மனிதர்கள்தான். எனவே நமக்கிருக்கும் எல்லா உணர்வுகளும், ஆசாபாசங்களும் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் மௌனம் கலைப்போம்.
2019 ஏப்ரல் மாத செல்லமே இதழ்