எழுதாப் பயணம் – எழுத்தாளர் ஜெயமோகனின் நூலறிமுகம்


எழுதாப்பயணம் நூல் வாங்க

 

ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை

 

லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் என்னும் நூலில் அந்தக் காட்சியை வாசித்தபோது கைகள் நடுங்கியது. நம் இன்றைய கல்விமுறை, நமது உணர்வற்ற மொண்ணைத்தனம் ஆகிய அனைத்தையும் காட்டும் ஒரு நிகழ்வு. ஒரு புனிதர் மலையுச்சியிலிருந்து இறங்கி  நம் இல்லத்து வாயிலில் வந்து நின்று நம் பழிகளின் பொருட்டு தன்னை அடித்துக்கொள்வதுபோலத் தோன்றியது. .

 

ஆட்டிசம் பற்றி இப்போது பரவலாகவே விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அதற்கு தாரே ஜமீன்பர் என்னும் படம் ஒரு காரணம். நாளிதழ்கள் செய்திக்கட்டுரைகளை வெளியிடுகின்றன. சிறிய அளவிலேனும் நடுத்தரவர்க்கத்தினர் ஆட்டிசம் உடைய குழந்தைகளை தனியாகக் கவனிக்கவும் பயிற்றுவிக்கவும் முயற்சிகள் எடுத்துக்கொள்கின்றனர்.

 

ஆனால் ஆட்டிஸம் உடைய குழந்தைகள் மீதான பொதுச்சமூகத்தின் உளநிலை பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதாகச் சொல்லமுடியாது. ஆட்டிஸக்குழந்தைகளின் பெற்றோர் அடையும் போராட்டங்களும் உற்றார் உறவினரிடமிருந்து அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களும் புறக்கணிப்புகளும் அப்படியேதான் தொடர்கின்றன. அவை அகல ஒரு தலைமுறைக்காலம் ஆகும்

 

ஆனால் ஆட்டிசம் பற்றிய இந்த விழிப்புணர்வே பொதுவான வாசிப்புப் பழக்கம் இல்லாத நம் சமூகத்தில் மிக அரிதான ஒரு நிகழ்வுதான். அதற்குக் காரணம் கூட்டுக்க்குடும்ப அமைப்பு சிதைந்து குழந்தைகளை மையமாகக் கொண்ட குறுங்குடும்ப அமைப்பு உருவானதும், குழந்தைகளின் படிப்பை ஒரு வகையான போட்டியாக நாம் உருமாற்றிக்கொண்டிருப்பதும்தான்.

 

ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளைப் பற்றி தேவைக்குமேல் பதற்றம் கொண்டிருக்கிறார்கள். சிறிய சிக்கல்களுக்கே கொந்தளிப்படைகிறார்கள். தங்கள் குழந்தை சற்றே வேறுமாதிரி இருந்தால்கூட ஐயம் கொண்டு அலைக்கழிகிறார்கள். அந்தக் கற்பனைப் பதற்றம் வழியாகவே ஆட்டிஸம் மற்றும் கற்றல்குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் சென்றுசேர்கின்றன என நினைக்கிறேன்

 

ஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வை தமிழில் உருவாக்கியமைக்கு எஸ்.பாலபாரதி அவர்களுக்குப் பெரும்பங்குண்டு. அதன்பொருட்டு சென்ற ஆண்டு விகடன் விருதும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரும் இதழாளருமான பாலபாரதியின் குழந்தையான கனி ஆட்டிஸம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கைச்சிக்கலை ஒரு சமூகச்சிக்கலாக புரிந்துகொண்டு தன் மீட்புக்காக மட்டுமன்றி சமூகத்தின் மீட்புக்காகவும் போராடுபவர்கள் மிக அரிதானவர்கள். பாலபாரதி அத்தகையவர்.

 

கனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல்  ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்

 

இத்தகைய நூல்களின் முதன்மைத்தேவை இதை பொதுவான வாசகர்கள் வாசிக்கமுடியும் என்பதே, ஏனென்றால் இது ஒரு வாழ்க்கைக்கதை. ஆட்டிசக் குழந்தையின்பெற்றோர் கூடுதல் செய்திகள் கொண்ட நூல்களை விரும்பக்கூடும். ஆனால் பொதுவானவர்களும் ஆட்டிசம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அது ஓர் ஆட்டிசக்குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டும். ஆட்டிசக்குழந்தையை அடையாளம் கண்டுகொள்வது பெரும்பாலும் கொஞ்சம் விலகிநின்று பார்க்கும் பிறர்தான்.

 

ஆட்டிஸம் கொண்ட குழந்தையின் அன்னையின் முதற்சிக்கலே தன் குழந்தைக்கு ஒரு சிக்கல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்வதுதான். அது உருவாக்கும் கொந்தளிப்பை சுருக்கமாக என்றாலும் ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அதை அறியும்போது முதலில் உருவாவது தாழ்வுணர்ச்சி. பிறர் முன் தன்குழந்தையை முன்வைக்கத் தயங்குதல் ஊரார் பார்வை பற்றிய எண்ணம். அதன்பின் குற்றவுணர்ச்சி.

 

அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மேலும் பெரிய சிக்கல். அந்த அன்னையும் தந்தையும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தங்கள் முழு ஆளுமையையும் மறுவரையறை செய்யவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தக் குழந்தைக்காகவே செலவழிக்கவேண்டியிருக்கிறது. அது உருவாக்கும் உணர்வு அழுத்தங்களை தாங்கவும் அது பிறசெயல்களைப் பாதிக்காமலிருக்கவும் பயிலவேண்டியிருக்கிறது

 

லக்ஷ்மி தன் மகனைப் புரிந்துகொள்ள முயல்கிறார். ஆட்டிசம் பற்றி நிறையப் படிக்கிறார். பயிற்சிவகுப்புகளுக்குச் செல்கிறார். குழந்தையின் ஆட்டிஸத்தையும், அதைமீறி வெளிப்படும் அதன் தனித்தன்மைகளையும் உள்வாங்கிக்கொள்கிறார். இந்நூலின் மிகச்சிறப்பான பகுதி அவர் மெல்லமெல்ல தன் குழந்தையை வரையறைசெய்துகொள்வதுதான். ஆட்டிசம் குறித்த நூல் இது என்பதையும் கடந்து இந்நூலை எழச்செய்வது இந்தக் கூறு.

 

உண்மையில் அத்தனை அன்னையரும் தந்தையரும் இதேயளவுக்கு கூர்ந்துநோக்கி  தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொண்டு வரையறைசெய்ய முயலவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கனி ஆட்டிசம் கொண்ட குழந்தை என்பதனால்தான் அம்னையின் கூர்நோக்கு இந்த அளவுக்கு கிடைக்கிறது. அவனை தன்னைநோக்கி இழுக்காமல் தான் அவனைநோக்கிச் செல்ல லக்ஷ்மி முயல்கிறார். அவ்வாறன்றி அவன் ஒரு ‘சாதாரண’ குழந்தையாக இருந்தானென்றால் இந்த கவனம் அவனுக்குக் கிடைத்திருக்காது. ஏற்கனவே அன்னையும் தந்தையும் வைத்திருக்கும் சட்டகங்களுக்குள் அவனை கொண்டுசென்று அழுத்தி உருமாற்றிப் பூட்டவே நம் குடும்ப அமைப்பும் கல்வியமைப்பும் புரிந்திருக்கும்

 

ஆட்டிஸக் குழந்தையின் சற்றே வேறுபட்ட மூளை வெளியுலகை வேறு ஒரு கோணத்தில் அணுகிப்புரிந்துகொள்வதிலிருக்கும் விந்தைகளை, புதிய வாய்ப்புகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, சொற்களை மிகவிரைவாகக் கற்றுக்கொள்ளும் திறனாகிய ‘ஹைப்பர்லெக்ஸிக். கனிக்கு உள்ளது. அது ஒரு குறைபாடு, ஏனென்றால் அவன் கற்றுக்கொள்வது சொற்கள்தான், சொற்களுடன் பொருளும் சொற்களுக்கிடையேயான தொடர்புகளும் பிடிகிடைப்பதில்லை.

 

இந்நூலில் நம் அமைப்புக்கள் சற்றே வேறுபட்ட குடிமகன்கள்மேல் எத்தனை புறக்கணிப்பான நோக்கு கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். இன்றுகூட சற்று உடல்குறைபாடுள்ளவர், முதியவர் ஏறமுடியாதவையாகவே நம் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் கல்லூரிகள் அனைத்துமே முந்துபவர்களுக்கு மட்டும் உரியவை. சற்று கறுப்புநிறம் கொண்டவர்களே கல்லூரிகளில் சிறுமையடைகிறார்கள். குள்ளமானவர்கள் திக்குவாய்கொண்டவர்கள் தூக்கி மூலையில் வீசப்படுகிறார்கள். ஆட்டிஸம் கொண்டவர்களின் நிலை எதிர்பார்க்கத்தக்கதே

 

பாலகிருஷ்ணனும் லக்ஷ்மியும் பலதொடர்புகள் கொண்டவர்கள். ஆட்டிஸக் குழந்தைகளுக்காக பொதுவாகவே போராடுபவர்கள். சட்டம் அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் கனியை வெவ்வேறு திறன்வாய்ந்த ஆய்வாளர்களிடமும் பயிற்சியாளர்களிடமும் கொண்டுசெல்கிறார்கள். பல்வேறு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் புறக்கணிப்பை, பொறுப்பின்மையை, கூர்மையின்மையையே சந்திக்கிறார்கள்.

 

உதாரணமாக, தனித்தன்மை கொண்ட குழந்தையாகிய கனி தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டுசென்று பயிற்சி அளிக்கப்படுவதை விரும்பவில்லை. அவன் கதறி அழுகிறான். அன்னை உடனிருக்கையில் இயல்பாக இருக்கிறான். அன்னையும் பயிற்சியில் உடனிருப்பதில் பிழையில்லை, அது மிக உதவியானதும்கூட. ஆனால் பல பயிற்சியாளர்கள் இந்தச் சிறிய விஷயத்தைக்கூட கவனிப்பதில்லை. அவனை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்று கதறி அழச்செய்து திருப்பியளிக்கிறார்கள். அந்த அழுகைக்கான காரணத்தைக்கூட புரிந்துகொள்ளவில்லை. இதில் பெரும்பணம் பெற்றுக்கொள்ளும் உயர்நிலை பயிற்சியாளர்களும் உண்டு

லக்ஷ்மியும் பாலகிருஷ்ணனும் கனியை தொடர்ந்து கவனிக்கிறார்கள். அவன் மெய்யாகவே கற்றுக்கொள்கிறானா, அவனைத் துன்புறுத்துகிறார்களா என்பதை அறிந்து அவனை இடமாற்றம் செய்கிறார்கள். அது பல பெற்றோர் செய்யாதது. மெல்லமெல்ல சரியாகிவிடும் என நினைத்து குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனென்றால் உள்ளத்தின் அழுதத்தில் இருந்து விலகிக்கொள்ளவே பெரும்பாலும் மானுடர் முயல்கிறார்கள்.

 

இந்நூல் தனியார்பள்ளிகள் எந்த அளவுக்கு இரக்கமற்றவையாக, பயிற்சியற்ற ஆசிரியர்கள் கொண்டதாக இருக்கின்றன என்பதை காட்டுகிறது. அரசுப்பள்ளிகளில் கனி பயில்கிறான். அங்கே ஆசிரியைகள் பொறுமையின்மை கொண்டிருந்தாலும் குழந்தைகள் அன்பாக இருக்கின்றன.

 

சர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டது. அதனடிப்படையில் எவருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாது. தனித்தன்மைகொண்ட குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளிகளும் இடமளித்தாகவேண்டும், அவர்கள் கற்பிக்கத்தேவையான அனைத்தையும் செய்தாகவேண்டும். ஆனால் தனியார்பள்ளிகள் சட்டத்தைப் பொருட்படுத்துவதில்லை. அரசுப்பள்ளிகள் ஓரளவு ஒத்துழைக்கின்றன

 

இந்நூல் கனி மெல்லமெல்ல எழுவதைச் சித்தரிக்கிறது. மிகமிக மெதுவாக சிறகு கொள்ளும் பறவை. அதற்குப்பின்னால் கிட்டத்தட்ட ஒரு தவம்போல நிகழும் அன்னையின் தந்தையின் அக்கறையும் பேரன்பும் உள்ளது. எந்தத் தவமும் அதற்கான பெறுமதி கொண்டதே. இக்குழந்தையினூடாக அவர்கள் எவ்வகையிலோ தாங்களும் வாழ்க்கையை பொருள்பொதிந்ததாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது

அடி!அடி!அடி!

 

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in ஆட்டிசம், விமர்சனம் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s