”ஒரே கடவுள்தான், உருவ வழிபாடு கூடாது” – ஹீரோ
”வீட்ட விட்டு வெளில போடா நாயே..” – ஹீரோ ஃபேமிலி
”ஆஹா, என் இனமடா நீ… எங்க மதத்துக்கு வந்துரு ராசா” – பாதிரியார்கள்
”பலவீனமான என் மதத்தை விட்டு, இன்னொரு பலவீனமான உங்க மதத்துக்கு நான் ஏன் வரணும்” – ஹீரோ
”ஆஹா, மதவெறியண்டா நீ..” – பாதிரிமார்கள்
”வேதங்களையும், உபநிடதங்களையும் ஆங்கிலத்திலும், வங்காளத்திலும் மொழி பெயர்க்கப் போகிறேன்” – ஹீரோ
”ஐயோ, நீச பாஷைல வேதமா? நீ ஹிந்துமதத் துரோகி” – சனாதனிகள்
”புத்தர் கடவுளையே ஒத்துக்கல, அவர் பேரை சொல்லிட்டிருக்கும் மதத்தில் ஒரு மனிதரான தலாய்லாமாவை ஏன் கடவுளா கும்பிடணும்?” – ஹீரோ
”கொல்லுங்கடா அவனை” – அன்பே உருவான புத்த பிக்குகள்
இப்படி போகுமிடமெல்லாம் அடிவாங்கிய ஹீரோ ராஜாராம் மோகன் ராய். 1773ல் ராதாநகரில் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜாராம். உருவ வழிபாடு, பல கடவுள் கொள்கை போன்றவை தவறு என்று சொன்னதற்காக 12 வயதிலேயே தந்தையால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
கல்வி என்றாலே மத சாஸ்திரங்கள் மட்டுமே என்றிருந்த நிலையில் நவீன உலகின் தொடர்பு மொழியாக ஆங்கிலம்தான் இருக்கும் என்பதை உணர்ந்து பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரது தொடர் கோரிக்கைகளாலேயே 1835ல் கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பெண்டிங் ஆங்கிலப் படிப்புக்கு வழி செய்தார். கல்கத்தாவில் கல்லூரி ஒன்றும் துவங்கப்பட்டது.
டப் என்ற இங்கிலீஷ் பாதிரியார் ஆங்கிலப் பள்ளிக் கூடம் துவங்க விரும்பினார். பிரம்ம சமாஜத்தின் ஆலயத்தையே பள்ளியாக மாற்றிக் கொள்ளச் சொல்லி கொடுத்துவிட்டார் ராஜாராம். ஆலயம் பதினாயிரம் நாட்டலை விட எழுத்தறிவித்தலே முக்கியம் என்று உணர்ந்த நவீன சிந்தனையாளர். வேதாந்தம், உபநிஷதம் போன்றவற்றின் சாரம்சங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்த அதே நேரத்தில் மேற்குலகின் நவீனக் கல்வியையும் அனைவருக்கும் பரப்ப முயற்சிகளை முன்னெடுத்தவர்.
கணவன் இறந்தால் அவனது சிதையிலேயே மனைவியையும் ஏற்றிவிடும் கொடூரமான சதி புழக்கத்திலிருந்த காலம். தனது அண்ணி கண் முன்னால் அச்சதியில் பலியாவதைக் கண்ட ராஜாராம் அம்மூடப் பழக்கத்தை ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டார். எங்கேனும் சதி நடக்கப் போகிறதென்றால் அங்கு போய் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்வார். சிலர் அவர் பேச்சைக் கேட்டு மாறுவார்கள், பெரும்பாலானவர்கள் அவரை புறந்தள்ளிவிட்டு சதி மாதாவைக் கொளுத்தி சனாதன தர்ம பரிபாலனம் செய்து வந்தார்கள்.
அதற்கு எதிராக வங்காளியிலும், ஆங்கிலத்திலும் சிறு புத்தகங்களை எழுதி அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்தார். தொடர்ந்து இக்கருத்தை ராய் ஆங்கில ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தியதன் விளைவே 1829ல் லார்ட் வில்லியம் பெண்டிங் சதியை சட்டவிரோதம் என்று அறிவித்தார்.
பலதார மணத் தடை, விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை என பெண்ணுரிமைக்குத் தேவையான எல்லா நவீன சிந்தனைகளையும் முன் வைத்து பிரச்சாரங்கள் மேற்கொண்டார். ஆங்கில அரசிடம் இவற்றை வலியுறுத்தி தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டே இருந்தார்.
இந்திய தேசியப் பத்திரிக்கைகளில் தந்தை என்றே ராஜாராமை சொல்லலாம். நவீன வங்காள உரைநடைக்கு அவரே முன்னோடி. 1823ல் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த பத்திரிக்கை கட்டுப்பாட்டு சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து எழுதி வந்தார். அதன் விளைவாக 1835ல் அச்சட்டத்தில் அரசு பல திருத்தங்களைக் கொண்டு வந்தது.
இவர் தொடங்கிய ஆத்மீய சபை என்னும் அமைப்பே பின்னாளில் வளர்ந்து பிரம்ம ஞான சபையாக மலர்ந்தது. தாகூர் உட்பட பல்வேறு அறிஞர்களை உருவாக்கியதில், நவீன இந்தியாவின் சிந்தனை வளத்திற்கு அடித்தளமிட்டதில் அவ்வியக்கத்தின் பங்கு முக்கியமானது. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராய் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
#மீள்
2018 மே 22 – ராஜாராம் மோகன் ராயின் பிறந்த நாளை ஒட்டி எழுதிய முகநூல் பதிவின் விரிவாக்கம்.