கனி அப்டேட்ஸ் – 15


2018 Apr

கனியோட மொழியில் பெயர்ச் சொற்கள் ஏராளாமா உண்டு. ஆனா வினைச் சொற்கள், வாக்கியத் தொடர்கள் எல்லாம் ரொம்ப குறைவு. ஒரு மூனு வயது குழந்தைக்குரிய அளவுதான் அவனுக்கு வாக்கியங்கள் வரும். அதை வச்சுகிட்டே அவன் வாழ்வை சமாளிக்கும் விதம் அலாதியானது.

சிதம்பரத்தில் நாங்க தங்கியிருந்த ஹோட்டல் சாரதாராமில் வாசலில் ஒரு அழகான செய் நீரூற்று இருந்தது. மாலை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அத போட்டு விடுவார்கள். இரண்டாவது தளத்தில் இருந்து முதல் தளத்தில் விழுந்து, அங்கிருந்து கீழே உள்ள குளத்தில் வந்து தண்ணீர் விழுமாறு வடிவமைக்கப் பட்ட அது கிட்டத்தட்ட ஒரு சின்ன அருவி போலவே இருந்தது.

இவன் ஒரு ஜலப்பிரியன் என்பதால் மாலையில் அதனருகில் கொண்டு வந்து நிற்க வைத்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் இரண்டு நாற்காலிகளை கடன் வாங்கிப் போட்டுக் கொண்டு, இரண்டு நாளும் அங்கேயேதான் இரவுப் பொழுதை கழித்தோம்.

முதல் நாள் தண்ணீரை பார்த்த பரவசத்தில் தண்ணி விழுந்துருச்சு என்றான். சில வினாடிகளில் மீண்டும் தண்ணி டான்ஸ் ஆடுது என்றான். இன்னும் சற்று ஆழமாக சிந்தித்து தண்ணீ ஒடுது என்றான். அதற்கு மேல் எதுவும் தோணல போல, பிரமிச்சுப் போய் பாத்துகிட்டே இருந்தான்.

இத்துனூண்டு வொக்காபுலரிய வச்சுகிட்டே இவ்ளோ வர்ணிக்கறானே, பக்கி பிற்காலத்துல பெரிய கவிஞனாகி கொலையா கொல்லப் போறானோன்னு பயந்து வருது.

2018 Dec

பொதுவாக எல்லா ஆண்களையும் போலவே கனிக்கு அவனது தவறுகளைப் பற்றிப் பேசினால் பிடிக்காது. இன்னும் சராசரி ஆண்களைப் போல எதிராளி மேல் பழி போடக் கற்றுக் கொள்ளவில்லை என்பதனால் பேச்சை துண்டிக்கவே முயற்சி செய்வான். ஆரம்பத்தில் ஃபினிஷ்டு என்ற ஒற்றை சொல்லாலேயே எல்லா எதிர்மறை விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான். அதாவது போதும், நிறுத்துங்கள், வேண்டாம், பிடிக்கவில்லை – இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் ஃபினிஷ்டு என்ற ஒரே மந்திர வார்த்தையை போடுவான். இடம் பொருள் ஏவல் பார்த்து நாம்தான் அதன் பொருளை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறகு சாரி சொல்ல கற்று தந்தவுடன் தன் மீதான குற்றப் பத்திரிக்கைகளை நிறுத்த அந்த வார்த்தையைப் பயன்படுத்துவான். ’சாரி அம்மா’ என்று ரொம்ப அதிகாரமாக சொல்வான். அப்படியும் நாம் அவனது தவறைப் பற்றி மேற்கொண்டு விவரித்தோமாயின் ‘இட்ஸ் ஒகே’ என்பான். அதாவது அவன் சாரி சொன்னதற்கு நாம் உடனடியாக இட்ஸ் ஒகே என்று சொல்ல வேண்டுமாம்.

இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டார். தவறு நடந்து, நாம் திட்டி, அதில் அவன் ரொம்ப வாடிப் போய்விட்டானென்றால் அதற்கு பிறகு கொஞ்சித் தேற்றுவோம்தானே? அப்படித் தேற்றுகையில் நான் சரி,சரி என்பதை சேரி, சேரி, சேரிடி தங்கம் என்றெல்லாம் சொல்வேன். இப்போதெல்லாம் நான் முறைக்கத் துவங்கினாலே சேரி, சேரி என்கிறான். சிரிப்பை அடக்கித் தொலைக்க முடிவதில்லை. மேற்கொண்டு எங்கிருந்து கோபப்படுவது?

அப்பாவிடம் போலவே பிள்ளையிடமும் தவறுகளைப் பற்றி பேசவே முடியவில்லை. பிறகெங்கே திருத்த?

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , . Bookmark the permalink.

1 Response to கனி அப்டேட்ஸ் – 15

  1. Revathi Narasimhan says:

    நாங்களும் இந்த விடுதிக்குப் போயிருக்கிறோம் லக்ஷ்மி.
    அச்சோ இந்தக் கண்ணனின் அழகை என்னவென்று சொல்வது. எத்தனை புத்திசாலிடா நீ.
    எப்படிப் பிடிச்சிக்கறான் பாருங்கோ லக்ஷ்மி.

    அலுக்காமல் சலிக்காமல் அவனைக் கட்டியாளும் அன்னைக்கு என் அணைப்புகள்.
    வளர்ந்துவிட்டான்.நல்ல உயரமாக வருவான் பாருங்கள்.
    எனக்குக் காதில் அருவி விழுவது போல அவன் வார்த்தைகள் ஒலிக்கின்றன.
    அற்புதக் குழந்தை.கோடி கோடி ஆசிகள்.
    ரொம்பப் பிடித்தது உங்கள் நகைச்சுவை வரிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s