2014 May
ஹாலில் கணிணியில் வேலையாக இருந்தேன். வீடு முழுக்க ஓடியாடிக் கொண்டிருந்த குட்டிப் புயல் திடீரென சமையற்கட்டிற்குள் மையம் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தது. ஓயாமல் ஒலிக்கும் பாட்டு/விளம்பர வாசகங்கள் கொண்ட பின்னணி இசையும் நின்று விட்டிருந்தது. மௌனம் சர்வார்த்த சாதகம் என்பது பொது வழக்கு. ஆனால் கனியின் கள்ள மௌனம் சர்வநாசம் என்பதே எங்கள் வீட்டு விதி என்பதால் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற பீதியோடு ஓரக் கண்ணால் பார்த்தேன். படு நிதானமாக சமையற்கட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது என்றாலும் அப்படி என்னதான் செய்கிறான் என்று சுவாரசியம் கூடியது.
அருகில் சென்று பார்த்தால் பூஜை அலமாரிக்கும் சமையல் மேடை மேல் இருக்கும் எண்ணெய் ட்ரேக்குமாக நடை பயணம். எண்ணெய்யை பாட்டிலில் இருந்து சின்னக் கிண்ணத்தில் ஊற்றி வைத்து அதை சமையலுக்குப் பயன்படுத்துவது எங்கள் வீட்டு வழக்கம். உள்ளே சிறிய குழிவான ஸ்பூனை வைத்தே மூடுவது போன்ற பொருத்தமான மூடியுடன் கூடிய அப்பாத்திரம் பார்க்கவே அழகாக இருக்கும்.
அதிலிருந்து ஒவ்வொரு ஸ்பூனாக எண்ணெய்யை எடுத்துப் போய் பூஜை அலமாரியில் இருக்கும் குத்து விளக்கில் ஊற்றும் முயற்சியில் இருந்திருக்கிறான். ஜனகரின் சபையை சுற்றிய சுக முனிவர் போல் ஐம்புலன்களையும் குவித்து ஆயில் அண்ட் ஸ்பூன் விளையாடியதினால்தான் அத்தனை கனத்த மௌனம் என்பது புரிந்தது.
தரை முழுக்க சொட்டுச் சொட்டாக எண்ணெய். நல்ல வேளையாக கிண்ணத்தில் எண்ணெய் குறைவாகத்தான் இருந்தது. காலையிலேயே கவனித்திருந்தேன் என்றாலும் பிறகு நிரப்பிக் கொள்ளலாம் என்றதில் மறந்து போனது. கறை மட்டுமல்ல மறதியும் சமயங்களில் நல்லது போல என்று நினைத்துக் கொண்டே ஏண்டா இப்படி பண்ற என்றேன். தீபம் விளக்கேற்றும் எண்ணெய் என்று பதில் சொல்கிறான்.
அதாவது அந்த தீபம் விளக்கேற்றும் எண்ணெய்க்கான விளம்பரத்தில் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றுகிறார்களே என்று தானும் ஊற்றிப் பார்த்திருக்கிறான். நல்லவேளையாக அடுத்த கட்டமாக விளக்கை ஏற்றிப் பார்க்கும் யோசனையெல்லாம் வரமாற் போனது நான் செய்த தவப்பயன் என்று நினைத்துக் கொண்டேன்.
விளக்கு நாச்சியார் ஆன கண்ணன். விளக்கு நாயகன்.
எண்ணெய் சிந்தி வழுக்கி விழாமல் இதைச் செய்ய எத்தனை சாமர்த்தியம்
வேணும் இல்லையா லக்ஷ்மி.
சமத்துடா செல்லம்.