கலையே என் வாழ்கையின் திசை மாற்றினாய் என்றொரு பழைய பாடல் உண்டு. அது போல இசை எங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
எங்கள் வாழ்வின் நம்பிக்கை ஒளி கனிவமுதன் என்றால் அவன் வாழ்வின் அச்சாணி இசைதான். இரண்டரை வயதிலிருந்தே சின்னஞ்சிறு பஜனோ ஆயர்பாடி மாளிகையில், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற பெரிய பாடல்களோ எதுவானாலும் பாடுவான். கைக்குக் கிடைக்கும் எல்லாப் பரப்புகளிலும் தட்டி ஒலியெழுப்பி தாளங்களைக் கற்றுக் கொள்வான்.
ஆனால் எல்லாமே அவனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே தவிர வேறெதற்கும் அல்ல என்பதில் தெளிவாக இருப்பான். நாம் கைதட்டி உற்சாகப் படுத்தினால் மகிழ்வான் என்றாலும் அதற்காகக் கூட நாம் கேட்கையில் பாடவோ வாசிக்கவோ மாட்டான். சித்தம் போக்கு சிவன் போக்கு என்பதாகத்தான் அவனது இசை வெளிப்பாடுகள் இருக்கும்.
எனவே அவன் நல்ல மனதோடு பாடும் நேரங்களில் அவசர அவசரமாக நாங்கள் ஓடோடி பதிவு செய்வோம் சில சமயங்களில் பதிவு செய்வது தெரிந்துவிட்டால் உடனே பாடுவதை நிறுத்தி விடுவான். எனவே அவன் நன்றாக பாடும் சந்தர்ப்பங்களில் நாங்களும் சரியாக பதிவு செய்திருந்தால் மட்டுமே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.
அப்படி பதிவு செய்யும் பாடல்களை ஓரிடத்தில் தொகுத்து வைக்கும் முயற்சியே இந்த youtube சேனல். அவன் எந்தெந்த வயதில் எப்படி பாடியிருக்கிறான் என்று அவன் வளர்ச்சியை பின்னோக்கித் திரும்பிப் பார்க்கவும் இது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இனி கூடுமானவரையில் இங்கு அடிக்கடி கனியின் பாடல்களை வலையேற்ற உத்தேசம்.
எப்போதும் எங்களுக்கு துணை நிற்கும், கனியின் வளர்ச்சியை ஆவலோடு பார்த்து வாழ்த்தும் நல்லுள்ளங்களின் ஆதரவை எதிர்நோக்கிப் பயணிக்கிறோம். வாழ்த்துங்கள் நண்பர்களே.