ஆசிரியர் தினம் – 2019


வாழ்வில் வழிகாட்டும் நல்லாசிரியர்கள் அமைவது ஒரு வரம். வாழ்வெங்கும் ஆசிரியர்கள் உடன் வருவது நல்லூழ். நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் என்னை வழிநடத்திய அப்பா தொழில்முறையிலும் ஒரு ஆசிரியர். தனது மாணவர்களுக்கும், எனக்கும் எப்போதும் எல்லாவற்றையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமுமே கற்பித்துக் கொண்டிருந்த ஞானகுரு என் அப்பா. இன்றைய என் தமிழார்வம், வாசிப்பு என எல்லாவற்றுக்கும் அஸ்திவாரம் அமைத்துத் தந்தவர் அவரே.
கனியின் ஆட்டிச நிலையைப் பற்றி யாரிடமும் முன் வைக்கத் தயங்காத நான் அப்பாவிடம் மட்டும் அதைச் சொல்லத் தயங்கினேன். வயதால் தளர்ந்து, சிறிய கிராமத்தில் இருக்கும் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ, மனம் வருந்துவாரோ, ஒவ்வாத வழிகள் எதையேனும் சொல்லி நம்மை தர்மசங்கடத்திற்குள்ளாக்குவாரோ என்றெல்லாம் தயங்கிக் கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்க்குப் பிறகு அவரிடம் மெதுவாய் சுற்றி வளைத்து இதைப் பற்றி பேசியபோது அவர் சொன்ன பதிலில் நான் எவ்வளவு அறியாமையில் உழன்றிருந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
“அதெல்லாம் பயப்பட ஒன்னுமில்ல கண்ணம்மா. ஸ்கூல் போனால் போதும், கும்கி யானை காட்டு யானைய பழக்கறாப்ல மத்த பசங்க இவன மாத்திடுவாங்க. மத்த குழந்தைகளோட சேர்ந்து விளையாடறதுதான் இவனுக்கு மருந்தே.
அப்புறம், நாங்க டீச்சர் ட்ரெயினிங் போறப்ப கும்பகோணத்துல மாண்டிசோரி ஸ்கூல் ஒன்னு இருக்கு, அங்க கூட்டிண்டு போய் அந்த மெத்தட் பத்தில்லாம் சொல்லித் தந்தாங்க. அதாவது ஒவ்வொரு டேஸ்ட் பத்தியும் வார்த்தையா சொல்லாம ஒரு டப்பால உப்புக் கரைசல், இன்னொன்னுல புளிப்பு ஜலம், இன்னொன்னுல சக்கரைக் கரைசல்னு வச்சு குழந்தைக்கு கொடுத்துட்டு அந்தந்தப் பேரை சொல்லித் தரது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் செஞ்சு காமிச்சு சொல்லித்தரதுதான் இந்தக் குழந்தைகளுக்கு முக்கியம். இது ரெண்டும் பண்ணினாலே அவன் ஜம்முனு வந்துருவான் கண்ணம்மா ” என்றார்.
அதுவரை பல நாட்களாக நாங்கள் தெரப்பிஸ்டுகளையும், மருத்துவர்களையும் தேடியலைந்தும், படித்தும் கற்றுக் கொண்டிருந்த அத்தனை விஷயங்களையும் கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்தது போல் சொன்னவரைப் பார்த்து கண்ணீர் மல்க அமர்ந்திருந்தேன்.
அத்தனை வருடம் நெருங்கிப் பழகியும் அவரது எளிய தோற்றத்தையும், கிராமத்து வைதீக பின்புலத்தையும் வைத்து அவரைக் குறைத்து எடை போட்ட என் மடமையை எண்ணி நான் விட்ட கண்ணீர் அது. அவரிடம் ஆரம்பத்திலேயே பேசியிருந்தால் காசையும் கொட்டிக் கொடுத்து, அலைந்து, திரிந்து, அல்லலும் அவமானமும் பட்டுப் புரிந்து கொண்ட உண்மைகள் எப்போதோ புரிந்திருக்கும். என்ன செய்ய, எப்போதும் கலங்கிய பின்னர்தான் தெளிவு கிட்டுமென்பது உலகப் பொதுவிதி.
ஆசிரியர் தினம் என்றல்ல, எல்லா நாளுமே அவரது வழிகாட்டல்களை நினைவில் கொண்டே வாழ்கிறேன்.
அப்பாவைப் போல தொழில் முறை ஆசிரியர் இல்லாவிட்டாலும் கூட எனக்கான பிரத்யேக நல்லாசிரியனாய்,நண்பனாய், மந்திரியாய் எப்போதும் துணைவரும் சக வாழ்கைப் பயணியான பாலாவுக்கும், புதிது புதிதாய் மீறல்கள் செய்து அதன் மூலம் என்னை தினமும் கற்க வைக்கும் ஞானாசிரியனான என் மகன் கனிவமுதனுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
சக ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in அனுபவம், அப்பா, எண்ணம் and tagged , , . Bookmark the permalink.

1 Response to ஆசிரியர் தினம் – 2019

 1. revathi narasimhan says:

  அன்பு லக்ஷ்மி ஆசிரியர் தின வாழ்த்துகள் உனக்கும் பாலாவுக்கும்.
  அன்பு அப்பாவுக்கு என் மனமார்ந்த நமஸ்காரங்கள். மாதா பிதா குரு தெய்வம்
  இதுதானே நம் வழி.
  உங்கள் வாழ்க்கையில் கனியும்
  கற்றுத்தருபவன் ஆகிவிட்டான். இல்லை என்றால் எங்களுக்கெல்லாம்
  இத்தனை நல்ல விஷயங்கள் தெரிந்திருக்குமா.
  அவன் தானே ஆசிரியப் பயிற்சிக்கு ஊன்று கோல்.

  வாழ்க்கைதான் எத்தனை மகத்தானது.
  அப்பா ஒரு ஆசிரியர்
  மகன் இன்னோரு ஆசிரியர்.
  ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்வு என்று சொல்லலாம்.
  கற்கும்போது இடைஞ்சல் வரலாம். ஆனால் அடையப் போகும் எல்லை மகத்தானது.
  என் அன்பும் நன்றி யும் அம்மா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s