பக்தி இலக்கியங்களில் சைவர்களுக்கு முதன்மையானதாகக் கருதப்படும் தேவாரம் தமிழிசைக்கும் முதன்மையான நூல். அதில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் மூன்றைக் கனி கற்றுக் கொண்டு பாடியுள்ளான்.
முதல் பாடலான திரு அங்க மாலை – சேக்கிழாரால் ’செல்கதி காட்டிடப் போற்றும் திரு அங்கமாலை’ என்றே சிறப்பித்துக் கூறப்பட்டது. அடுத்ததாகப் பாடப்பட்டிருக்கும் பூவினுக்கு அருங்கலம் என்று தொடங்கும் பாடல் நமச்சிவாய திருப்பதிகத்தில் உள்ளது. மகேந்திர பல்லவனால் நீற்றறையில் இடப்பட்ட போது பாடிய பதிகத்தில் இருந்து ‘வாழ்த்த வாயும்’ எனும் பாடலையும் கனி இங்கே பாடியுள்ளான்.
தேவாரப் பாடல்களை தலங்கள் வாரியாக, பாடிய கால வரிசைப்படி என பல்வேறு விதமாக வகைப்படுத்துவார்கள். நாவுக்கரசர் நோயில் இருந்து விடுபட பாடியதால் அவரது பாடல்களை கெஞ்சு தமிழ் என்றும், பால் குடி மாறாத பருவத்தில் இருந்து பாடத் துவங்கியதால் சம்பந்தருடையதை கொஞ்சு தமிழ் என்றும், சிவனையே தன் நண்பனாகக் கருதி அதிகாரமாகப் பாடியதால் சுந்தரரின் பாடல்களை மிஞ்சு தமிழ் என்றும் வகைப்படுத்துவதும் ஒரு முறை. கெஞ்சு தமிழ் பதிகங்களை கொஞ்சு தமிழாக சற்று மழலையோடு பாடி வைத்திருக்கிறான் கனி. பற்றாளர்கள் சற்றே பொறுத்தருள்க.