கனி அப்டேட்ஸ் – 41


கனியோடு செல்வதென்றால் பொதுப் போக்குவரத்துகளில்  ரயில் பயணம் மட்டுமே முன்பெல்லாம் என் தேர்வாக இருந்தது. சமீப காலமாக பேருந்திலும் அவனை ஏற்றி இறக்க ஆரம்பித்திருக்கிறேன். அதில் ஏற்படும் ஆரம்பகட்ட அல்லல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

வேகமாக வாசிப்பவன் என்பதால் பேருந்தின் படிக்கட்டில் பின்புறம் ’ஏறும் வழி’என்றும், முன்புறம் ’இறங்கும் வழி’ என்றும் எழுதப்பட்டிருப்பதை ஆரம்பத்திலேயே படித்துவிட்டான். பொதுவாகவே ஆட்டிச நிலையாளர்கள் செம்மையாளர்கள்(Perfectionist) என்பதால் விதிகளின் படியே வாழ முயற்சிக்கும் அரிய வகையினராக இருப்பார்கள். இறங்குகையில் பிரச்சனை இல்லை, எத்தனை கூட்டமிருந்தாலும் முந்தைய நிறுத்தத்தில் இருந்து பேருந்து நகரத் துவங்கும் போதே எழுந்து, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தாவது முன்புற படிக்கட்டிற்கருகில் வந்துவிடுவோம்.

ஏறும் போதுதான் சிக்கல். நிறுத்தத்திற்கு பத்தடி தொலைவிலேயே வண்டியை நிறுத்துதல், வளைத்து சுழற்றி ஏற்கனவே நிற்கும் பேருந்தை முந்திச் சென்று நிற்பது என பல்வேறு சாகசங்களை பேருந்து ஓட்டுனர்கள் செய்யும் போது நாம் மட்டும் மிகச்சரியாக பின்னம்படிக்கட்டை நோக்கி ஓடினால் நாம் ஏறும் வரை காத்திருக்க இவன் மாமனாரா வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்? எனவே அருகாமையில் இருக்கும் படிக்கட்டில் ஏறித்தான் ஆக வேண்டும் என்று நான் இழுக்க, ஏறும் வழி, ஏறும் வழி என்று கதறிக் கொண்டே அவன் பின் புறப் படிக்கட்டை நோக்கி இழுக்க நல்லதொரு நகைச்சுவைக் காட்சியை அரங்கேற்றியபடியே வண்டி ஏறுவோம்.

நிறுத்தத்தில் காத்திருக்கும்போதே கதை அப்படியென்றால் நேற்றோ நாங்கள் மெயின்ரோட்டில் ஏறும் போதே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டது. இவனையும் வைத்துக் கொண்டு ஓடிப் போய் பிடிக்க முடியுமா என்று யோசித்து நான் குழம்பிக் கொண்டிருக்க இவனோ என்னை பிடித்து இழுத்தபடி ஓட ஆரம்பித்தான். அதுவும் என்னிடம் “சீக்கிரம், நேராப் போங்க” என்று கட்டளையிட்டபடி. பரவாயில்லையே, கழுத்தில் கத்தி வைத்தால் தன் சொற்சிக்கனத்தை மீறி சிலபல வார்த்தைகளை வெளியிலெடுக்கிறானே நம் பயல் என்ற மகிழ்வுடன் ஓடிப் பேருந்தை நெருங்கினோம். பின்புற வாசலைப் பார்த்தபடி ஒரிரு வினாடிகள் தயங்கினாலும் அவசரத்தைப் புரிந்து கொண்டு முன்புறப் படிக்கட்டு வழியாகவே உள்ளே ஏறிவிட்டான் கனி.

ஆஹா, தேவையென்றால் விதிகளை மீறலாம் என்ற நம் சமூக வாழ்கையின் பாலபாடங்களில் ஒன்றை அழகாகக் கற்றுக் கொண்டுவிட்டானே என்று நிறைவாக இருந்தது. 🙂

About லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

சொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)
This entry was posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s