கனியை பாட வைத்து, அதை பதிவு செய்வதே ஒரு பெரிய சாகச முயற்சிதான். முழுப்பாடலையும் ஒரே ஒலி அளவில் பாட மாட்டான். மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாததால் சீரான குரலில் பாட முடியாது. மூச்சிழுப்பதும் வெளி விடுவதும் பாட்டை அலையடிக்க வைக்கும். நடுவில் கொட்டாவி விடுவான். இதெதுவும் நடக்காவிட்டாலும் நடுவில் சில வார்த்தைகளை மனதுக்குள்ளேயே பாடிக்கொள்வான், இல்லையென்றால் எதையாவது நினைத்து நடுவில் சிரித்து வைப்பான்.
இது அத்தனைக்கும் நடுவில் அவனது மனக்குரலில் பாடல் தடையற்று ஓடிக் கொண்டிருக்கும் என்பதால் எந்த இடைஞ்சலுக்காகவும் வரிகளைத் திரும்பப் பாட மாட்டான். எனவே ஒரு சின்ன தவறு என்றாலும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஆரம்பிக்க வேண்டியதுதான்.
இதுவரை சிறிய பாடல்களையே பாடி வந்தான் என்பதால் கைபேசியில் இருக்கும் சொற்ப வசதிகளைக் கொண்டு எப்படியோ ஒப்பேற்றி வந்தோம். இந்தமுறை ஹரிவராசனம் 7 நிமிடங்கள் நீளும் பெரிய பாடலென்பதால் கிட்டத்தட்ட பத்து நாட்களாய் முயற்சி செய்து இன்றுதான் ஒருவழியாக ஒரளவு உருப்படியாக பாடலை ஏற்ற முடிந்தது. கேட்டு மகிழுங்கள்.